சிறப்புக்கட்டுரைகள்

கொம்பேறி மூக்கன்

எஸ்.எஸ். சிவசங்கர்

கோபால் பதறிக் கொண்டு ஓடி வந்தார். ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. பேச்சு வரவில்லை. அவர் கோலத்தை பார்த்ததுமே நினைத்தேன். அதே தான். பாம்பு. ‘பின்னாடி பாம்பு’ என்று சொல்லும் போதே முகம் வெளிறியது.

அரியலூரில் வீட்டின் பின் கதவை திறந்து காலை வெளியில் வைத்திருக்கிறார். ஜஸ்ட் மிஸ், பாம்பு கடந்திருக்கிறது. தவறியிருந்தால் பாம்பு மீது கால் வைத்திருப்பார் போலும். பின் பக்கம் விரைந்தேன். பின் கதவை திறந்து ஜாக்கிரதையாக பார்த்து வெளியில் சென்றேன். பின்னால் திரும்பிப் பார்த்தால் ஒருவரையும் காணோம்.

கதிரவனும், கோபாலும் மிகப் பாதுகாப்பான தூரத்தில் வந்துக் கொண்டிருந்தனர். ரொம்ப ஜாக்கிரதை. கிணற்று மேட்டை சுற்றிப் பார்த்தேன். இப்போது அங்கு வந்த கோபால் பதறினார். ‘அண்ணா, ஜீப்புக்கு கீழ பாருங்க’. போன தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டு ஓய்வில் இருக்கும் ஜீப்பின் கீழ் இருந்த பாம்பு தலையை திருப்பியது.

மெல்லிய, நீண்ட உடல் கொண்ட பாம்பு. எங்கள் பக்கம் பார்த்து இருந்த பாம்பு இப்போது யூ-டர்ன் எடுத்தது. மின்னல் வேகம். யோசிப்பதற்குள் வேகமெடுத்தது. வேப்ப மரத்தை ஒரு சுற்று சுற்றி கடந்தது. ஜாக்கிசான் பட வேகம் தான். இப்போது பயத்தை மீறி ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

சற்றே கரும்பச்சை நிறம். நல்ல பாம்பு வகையறா இல்லை. வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் நடைபாதையில் விரைந்தது. அதன் பின்னால் ஓடினேன். இவர்கள் இருவரையும் காணவில்லை. பாம்பை அடிக்க ஆயுதம் தேடிக் கொண்டிருந்தார்கள். நான் பாம்பைத் தேடிக் கொண்டிருந்தேன்.

அந்த இடத்தில்  வெட்டப்பட்டிருந்த முருங்கை மரத்தின் அடிப்பாகம் இருந்தது. அதில் இருந்து குருத்து தழைத்து, ஒரு கிளை காம்பவுண்ட் சுவர் உயரத்திற்கு இருந்தது. முருங்கைக்கும் தண்ணீர் தொட்டிக்கும் இடையில் இருந்து எட்டிப் பார்த்தது பாம்பு. கதிரவன் ஒரு பிளாஸ்டிக் பைப்பை கொண்டு வந்து கையில் திணித்தார். மெல்லிய, தக்கையான பைப். அடித்தால் பாம்புக்கு ஒன்றும் ஆகாது, பைப் தான் உடையும்.

திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம். பாதுகாப்பான தூரத்தில் இருந்து, ‘நமக்கு பாம்புன்னா அலர்ஜி அண்ணா‘ என்று சுய சான்றிதழ் கொடுத்துக் கொண்டார். கோபால் இன்னும் குச்சித் தேடிக் கொண்டிருந்தார்.

இதற்குள் முருங்கை மரத்தில் லாகவகமாக ஏற ஆரம்பித்தார் பாம்பார். ஒரு கிளையில் இருந்து தன் உடலை நீட்டி, அடுத்தக் கிளை கிடைக்கும் வரை தேடினார். கிடைத்தவுடன் அந்தக் கிளை மீது உடலை வைத்து ஸ்டடி செய்தார். பிறகு மெதுவாக உடலை அசைத்து, அசைத்து அந்த கிளைக்கு தாவினார். ஒரு சர்க்கஸ் பார்க்கிற உணர்வு ஏற்பட்டது. உடல் எடை தாங்காமல்  கிளை அசைந்த உடன், சற்றே நிதானித்து நகர்ந்தது, தேர்ந்த நடவடிக்கையாக இருந்தது. மெல்ல, நிதானமாக நுனிக்கு சென்றது. அங்கிருந்து ஒரு பார்வை சுற்றிலும் பார்த்தது. கொஞ்சம் அலட்சிய லுக்காகவே இருந்தது. நான் இப்போது அதன் ரசிகனாகவே ஆகியிருந்தேன். அடுத்து மெல்ல காம்பவுண்ட் சுவருக்கு தவழ்ந்து தாவியது. திரும்பி அங்கிருந்து ஒரு பார்வை. எங்களைப் பார்த்தது போல் ஒரு பிரம்மை. சுவரில் இருந்து அந்தப் பக்கம் இருந்த டென்னிஸ் கிரவுண்டை பார்த்தது. அங்கிருந்த மரத்தை தொட்டது. அடுத்த நொடி காணவில்லை.

இப்போது கதிரவன், கோபால் இருவரும் வெளியில் ஓட, நானும் ஓடினேன். துணைக்கு இருவர் கிடைத்தனர். பாம்பு எப்படி இருந்தது என்று விளக்கியவுடன், ‘கொம்பேறி மூக்கன்‘ என்றார் ஒருவர். அப்போது தான் அருஞ்சொற்பொருள் விளக்கம் கிடைத்தது. ‘கொம்பு + ஏறி +மூக்கன்‘.  செயல்முறை விளக்கமும் பார்த்தாச்சு. ‘இதுக்கு விஷம் கிடையாது’, என்று கூடுதல் தகவல் கொடுத்தார். மூக்கன் கண்ணில் படவில்லை, எஸ்கேப் ஆகிவிட்டார்.

பணி நிமித்தமாக இரண்டு நாட்கள் சென்னை பயணம். ஊர் திரும்பிய பிறகு, காலை நடைப்பயிற்சியில் தான் கவனித்தேன். மூக்கன் ஏறிய முருங்கை கொம்பை காணவில்லை. ‘என்ன ஆச்சு ?’ என்றேன். ‘ஒரே கம்பளிப் பூச்சி அண்ணே. வெட்டிட்டோம்’. மூக்கனுக்கு பயந்து கொம்பை வெட்டியாச்சி. திரும்ப எப்போ கொம்பனை பார்ப்பேன்?

(கட்டுரையாளர் குன்னம் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர்)

ஏப்ரல், 2016.