சிறப்புக்கட்டுரைகள்

கொங்கு நாட்டு எளிய சம்சாரி!

மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்

பவா. செல்வதுரை

சென்னை அண்ணாசலையில் உள்ள   ஒரு நட்சத்திர விடுதியில் அக்கூடுகை நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் பல திசைகளிலிருந்தும் சுயநிதிக் கல்லூரிகளின் முதல்வர்களும், தலைவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். நடிகர் சூர்யாவும், கார்த்தியும் அவர்கள் ஒவ்வொருவரையும், கைகுலுக்கி, கைபிடித்து அழைத்துவந்து இருக்கைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்நிகழ்வின் நிறைவுரையை ஆற்ற நான் அழைக்கப்பட்டேன். முன்னகர்த்தப்பட்ட ஒரு தனி நாற்காலியில் சிவக்குமார் சார் உட்கார்ந்திருந்தார்.

நான் காமராஜரிலிருந்து துவங்கினேன். காமராஜர் முதல்வரானவுடன் நடந்த மிக முக்கிய கூட்டம் அது. தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்து, கல்வித்துறை இயக்குநர்கள் வரை முதல்வர் முன் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து காமராஜர் பொதுவாகக் கேட்கிறார்.

 “ 10 மைல்களுக்கு ஒரு அரசு துவக்கப்பள்ளி ஆரம்பித்தால் எத்தனை ஸ்கூல் ஆரம்பிக்க முடியும்? எவ்வளவு செலவாகும்?”

பல ஐ.ஏ.எஸ் மூளைகள் கணக்கு போட்டன. மேஜைக் கணக்குகளிலும், புள்ளி விவரங்களிலும் தானே இவர்கள் காலமே கழிகிறது.

 “அது முடியாது அய்யா?”  “ஏன் முடியாதுன்றேன்?”

 “ஒரு ஸ்கூல் ஆரம்பிக்க அறுபதாயிரம் ஆகும். ரெண்டு வாத்தியாருங்களுக்கு சம்பளம் தரணும். அதுக்கெல்லாம் கஜானாவுல பட்ஜெட் இல்ல” காமராஜருக்கு கோபம் தலைக்கேறுகிறது. குரலை அப்படியே உயர்த்தி,”இல்ல,  இல்லன்றதுக்கு எதுக்குய்யா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்?”

அக்கோபத்துடனே திரும்பி  “சுந்தரவடிவேலு இப்பதானே ரஷ்யா போய்ட்டு வந்தீங்க? இவைகளை ஆரம்பிக்க ஏதாவது சாத்தியம் உண்டா?”

 “உண்டு அய்யா”  “எப்படி?” அவர் விளக்குகிறார். பள்ளிகளை நிறுவனங்களோ, தனியார்களோ கட்டித்தருவது. ஆசிரியர்களின் சம்பளத்தில் பாதியை மட்டும் அரசு தருவது. ‘மீதியை?’ ‘தனியார்களோ, நிறுவனங்களோ தருவது!’

‘ஸ்கூல் அவனுங்களதா ஆயிடாதா?’

‘ஆகாது அய்யா, முழுக் கண்ட்ரோலும் நம்ம கையிலதான். அதுக்கு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்ன்னு பேரு’ ‘எவ்வளவு செலவு’ ‘மொத்த செலவே இரண்டு கோடிக்கும் கீழே’ காமராஜர் தலைமைச் செயலர் பூர்ணலிங்கத்தைப் பார்க்கிறார்.

‘அப்புறம் என்னா பூர்ணலிங்கம் ஃபைலை சுந்தரவடிவேலுக்கிட்ட குடுத்துட்டு நீ கௌம்பு’

தன் பிள்ளை எப்படியாவது படித்து விட வேண்டுமென்ற ஒரு தகப்பனின் வேட்கை அது. அதன் தொடர்ச்சி தான் ‘அகரம்’

நான் பேசி முடித்து எனக்கு இரண்டடி தூரத்திலிருந்த சிவக்குமாரைப் பார்த்தேன். கண்கள் கலங்கி, அப்பொது இடத்தில் அழுது கொண்டிருந்தார். சட்டென இருக்கையை விட்டெழுந்து என் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அநியாயத்திற்கு வலித்தது.

அதனூடே என் கையைப் பிடித்து, ‘அன்பாலே அடிச்சதுடா, வலிக்குதா’ என என் கன்னம் தடவினார்.இப்படித்தான் சிவக்குமார் என்ற கலைஞனை நான் முதன் முதலில் அறிந்தது. ஆனால் அவர் குடும்பத்துடன் ஏதோ ஒரு வகையில் செயல்பாட்டு தொடர்பிருந்தது.

‘அகரம்’ சார்பில் விஜய் தொலைக்காட்சியில் அரைநாள் பிரமாண்டமான நேரலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வண்ண விளக்குகளான அம்மேடை முன் கேலரியில் ஆயிரம் மாணவ மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். அவர்களின் அப்பா அம்மா அகரம். அதுவே அவர்களை கல்லுடைக்கும் குவாரிகளிலிருந்து, கிணறு வெட்டும் ஆழத்திலிருந்து ஆடு மேய்க்கும் சிறு காடுகளிலிருந்து, இரவு புரோட்டா கடை வாசலிலிருந்து மீட்டு கொண்டு வந்து, மருத்துவ கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க வைத்தது.

அந்நிகழ்வில் நானும் பேராசிரியர் கல்யாணியும் கூட சிறப்பு அழைப்பாளர்கள். இடையில் ஒரு தேநீர் இடை வேளைக்காக நானும் ஷைலஜாவும் வெளியே வந்தபோது, சவுக்கு மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன் இருட்டு பின்னணியில் நடிகர் சூர்யா ஒரு மர ஸ்டூலில் உட்கார்ந்து நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

எங்களைக் கண்டவுடன் பாலா எழுந்து நின்று சூர்யாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னான பல தருணங்களில் நாங்கள் இருவரும் கட்டி அணைத்து எங்கள் பிரியத்தை கடத்தியிருக்கிறோம். விடுபட்ட மாணவர்களின்  விடிதலுக்காக பல மணி நேரங்கள் உரையாடியிருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாகவே  சமீபத்தில் ஒரு காலையில் சிவக்குமார் சார் கூப்பிட்டார். ஓரிரு வார்த்தைகளை எதிர்பார்த்துத் தொலைபேசியை எடுத்தேன். பேசி முடிக்க ஒருமணி நேரமானது. கோடைக் காலங்களில் மல்லாட்டைக்கு நீர்பாய்ச்சும்போது பார்த்திருக்கிறேன். மடையை ஒரு மண்வெட்டியால் வெட்டித் திருப்பும்போது வாய்க்கால் நீர் பாய்ந்தோடும். நம் கால் நனைக்கும். பாய்தலை மண்கொண்டு தடுத்து வைத்திருக்கும் உடைத்தலின் வெறி அதற்கு. அதேதான் சிவக்குமார் சாரின் பேச்சும்.அவர் பேசப்பேச தூரத்தில் நின்று ஒரு இளைஞன் தன் வயலினை வாசித்துக் கொண்டிருக்கும் இசை அப்பேச்சின் பின்னணியில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

சங்க இலக்கியப் பாடல்களில் துவங்கி மகாபாரதம், கம்பராமாயணம், குறள், என வழியெங்கும் நொப்பும் நுரையுமாக வளைந்து வளைந்து நவீன இலக்கிய வாசிப்பின் வாசல்வரை வந்து பாய்ந்தது.

அலுவலகத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் போக முடிந்தது. அங்கேயும்கூட சிவக்குமார் சாரின் பேச்சே சுழன்று கொண்டிருந்தது.

வீட்டிற்குத் திரும்பியவுடன் வாட்ஸ் அப்ஐ திறந்தால் அடுத்த ஒருமணி நேரம் எதுவும் செய்ய முடியவில்லை. அவருடைய புகழ்பெற்ற காந்தியின் ஓவியத்தில் ஆரம்பித்து பெரியார், காமராஜர், சிவாஜி, சரோஜாதேவி, நாகேஷ் எனப்பல ஆளுமைகள் அவரின் அற்புதமான கோடுகளாலும், கலவையிலும் உயிர்பெற்றிருந்த ஓவியங்களை அனுப்பியிருந்தார். செயலற்று அப்படியே அவைகளைத் திரும்ப, திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் ஆதர்சம் ஓவியர் சந்தானராஜின் ஓவியக் கல்லூரி மாணவன் அவர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிவக்குமார் வரைந்த காந்தியின் போர்ட்ரைட்டை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,

“உன்னைத் தவிர வேறு யாராலும் இதை வரைய முடியாது மேன்” என அவர் தோள் தட்டிப் பாராட்டியிருக்கிறார். சந்தானராஜ் சாரிடம் அப்படி ஒரு பாராட்டை யாரும் எளிதில் பெற்றுவிட முடியாதென்பது ஓவிய உலகம் அறிந்தது. அவ்வார்த்தைகளே மேலும் மேலும் வரைவதற்கு ஆதூரமானவை என அப்படியே அதை நினைவு கூர்ந்தார்.

திருவண்ணாமலை பெரிய கோவில் கோபுரங்களை, மக்கள் நடமாட்டம் எப்போதுமுள்ள சரிந்த சன்னதித் தெருவின் நெரிசலை மிக அற்புதமான கோடுகளால் வரைந்திருந்ததை மீண்டும் அனுப்பினார். இவைகளை எங்கிருந்து கொண்டு வரைந்திருப்பாரென பல கோணங்களில் நான் என் மூளையைத் திருகிக் கொண்டிருக்கையில் மீண்டும் அவரே கூப்பிட்டார்.

“படங்கள் பார்த்தியா?”

“அதிலேயே இருக்கிறேன் சார்”

திருவண்ணாமலைக் கோவிலுக்கு போய்விட்டு,  சன்னதித் தெருவில் இறங்கி நடக்கிறேன். அந்தத் தெருவும், பழமையான வீடுகளும், எதிரே பதினாறுகால் மண்டபமும் என்னை வரைய மாட்டாயா ஓவியனே? என தன் கண்களால் என்னை யாசிப்பது போல உணர்ந்தேன். அந்நிமிடம் எதனாலோ உந்தப்பட்டு எதிரிலிருந்த யாரோ ஒரு வீட்டின் முன் நின்று நான் ஒரு ஓவியன் உங்கள் வீட்டு மாடி அறையிலிருந்து இத்தெருவை வரைய அனுமதிக்க வேண்டுமென வேண்டினேன்.

சிறு தயக்கத்தோடு அவர்கள் என்னை அனுமதித்தார்கள். எட்டு மணிநேரம் புற அசைவுகள் எதுவுமின்றி அத்தெருவை அதன் இயங்குதலை வரைந்து முடித்தேன்.

படைப்பூக்கம் மிக்க பித்தேறிய சில கலைஞர்களுக்கு கூட எப்போதாவது மட்டுமே நிகழும் அபூர்வ கணமது.

கிராமத்திலிருந்து வரைந்தவை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சென்னை வாழ்வு பிடிபடாமல் அலைகழிந்த போது வரைந்தவை. சந்தானராஜ் என்ற மகா கலைஞன், ஒரு சிற்பத்தின் கண்களைக் கடைசியாய் திறப்பதுபோல என் கண்களைத் திறந்தபோது வரைந்தவை. செயின்ட் தாமஸ் மவுண்டில் தனித்திருந்த அவர் வீட்டிலிருந்து வரைந்தவை.

அவர்தான் பவானிசங்கர் என்ற ஒரு புகைப்பட கலைஞனை எனக்காக வரவழைத்து என்னை கறுப்பு வெள்ளையில் புகைப்படங்கள் எடுத்து இயக்குநர் ஸ்ரீதர் சாருக்கு அனுப்பி வைத்தவர். என் வாழ்வின் எல்லா ஆதர்ச ஸ்ருதியும் அவரே, அவரே என தழுதழுத்ததை நன்றியோடு மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது யோசிக்கையில் எல்லோருமே கொஞ்சம் முயன்றால் நடித்து விடமுடியும். அப்படித்தான் நானும். ஆனால் வரைதலில்போது நான் தனித்திருக்கிறேன். குழைக்கப்பட்ட வண்ணமும் எதிரே கேன்வாசும் மட்டுமே என் தோழர்கள். வெறியோடு அதில் இயங்கிய காலங்களே என்னை ஆச்சர்யப்படுத்துகிறது பவா என்று சொன்னபோது குரல் அநியாயத்திற்கு குழைந்திருந்தது.

சூர்யாவும், கார்த்தியும் என் அத்தனை ஓவியங்களையும் சேகரித்து முடித்திருக்கிறார்கள். ‘Coffee table’ புத்தகமாக அவற்றை மாற்ற இருக்கிறார்கள்.   அதன்மீது பெரிய எதிர்பார்ப்பும், வேட்கையுமிருக்கிறது. பிள்ளைகள்  என் ஆழ்மனதிலிருந்த ஓர் ஆர்வத்தை சுலபமாக வெளியே எடுத்துவிட்டார்கள். என் மனநிலையிலேயே இருக்கும் பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் மட்டுமே வாய்க்கக் கூடிய அபூர்வத் தருணமிது. எனக்கு வாய்த்தது பெரும்பேறு’ என அவர் தழுதழுத்தார்.

என் வீட்டிற்கு வரும் எவருக்கும் இனி அந்த ஓவியப் புத்தகமே பரிசளிக்கப்படும். சமீபத்தில் நண்பர். ஏ.எஸ்.பன்னீர்செல்வம் புகழ்பெற்ற ஓவியர் கே.ஜி.சுப்ரமணியத்தின் முழு ஓவியங்கள் அடங்கியப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். என் இரு கைகொண்டும் தூக்க முடியாத அதில் அவர் வாழ்நாளின் எல்லாப் பகல்களும், இரவுகளுமிருக்கிறது. அதுவே அவர் ஜீவிதம். அதைச் சுமக்கிற ஒருவன் சுப்ரமணியத்தின் ஜீவிதத்தைச் சுமந்தலைகிறான். அவர் வாழ்வின் அனுபவச் சாரத்தைப் பருகுகிறான். ஏனோ சிவக்குமார் சாரின் பேச்சினூடே எனக்கு கே.ஜி.சுப்ரமணியன் ஞாபகத்துக்கு வந்தார்.

‘நான் இப்போது நிற்கிற இங்கிருந்து கடந்து போன என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறேன் பவா’

கண்கள் கூசும் புகழ் வெளிச்சம் ஒரு நடிகன் என்ற முறையில் என் மீது அளவுக்கதிமாக பாய்ச்சப்பட்டது. கட்டளையிடும் இடத்திற்கு நான் உயர்ந்தபோது, முதன்முதலில் செய்தது ஒவ்வொரு விளக்குகளாக அணைக்கச் சொன்னதுதான்.

‘நான் அடிப்படையில் ஓவியன். அப்புறம் எளிய வாசிப்பாளன், மகாபாரதத்தையும், கம்பராமாயணத்தையும் பல ஆண்டுகள் இடைவிடாமல் படித்து அவைகளை இரண்டிரண்டு மணி நேநரமாக என்னுள் அடுக்கிக் கொண்டவன். அவைகளை தமிழ்நாட்டு மக்கள் திரள் மேடைகளில் பேசிப் பார்ப்பவன். அவ்வளவுதான்’

‘அவ்வளவுதானா சார் நீங்கள்? இன்னும் இரண்டு போகஸ் விளக்குகளை கூட்டி வைக்கச்சொல்லும் உலகில் நீங்கள் அணைக்கச் சொல்கிறீர்கள். இன்னும் பத்து வீடு வாங்கு, இன்னும் இரண்டு கார் வாங்கு என மகன்களை லௌகீகத்திற்கு ஆர்வப்படுத்தும் அப்பாவா நீங்கள்?

‘இன்னும் பத்து அடித்தட்டு புள்ளைகளைப் படிக்க வையுங்கடா’ என அதட்டிச் சொல்லும் அப்பா.

அதனாலேயே நாம் நட்பின் கண்ணிகளில் இணைக்கப்பட்டிருக்கிறோம். இது நாளுக்கு நாள் இன்னும் இன்னும் இறுகும் சார்.

நவம்பர், 2016.