சிறப்புக்கட்டுரைகள்

கொக்கிளாய் புத்தர் சரணம்

வன்னி இளங்கீரன்

வடக்கு - கிழக்கில் மக்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற அரச மர நிழல்கள் ஒவ்வொன்றிலும் புத்தர் பிரசன்ன மாகியிருக்கின்றார். அவரது அமைதி தவழும் முகம் அமைதிக்குப் பதிலாக பீதியைக் கிளப்புவதுதான் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. மதத்தினை மையப்படுத்தி நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கான மிக முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய கொக்கிளாய் கிராமம் பற்றி இங்கே பேசுவோம்.

கொக்கிளாய் எனப்படுகின்ற கிராமம் திருகோணமலை - முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் இடைப்பட்ட எல்லைக் கிராமமாகும். 1983ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையினை அடுத்து அந்தப் பகுதி மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து வன்னியின் பல பகுதிகளிலும் குடியேறினர். 1983ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கு குறித்த கிராம மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. கொக்கிளாயுடன் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உட்பட்ட கிராமங்களும் இவற்றுடன் உள்ளடக்கம்.

கொக்கிளாய் கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் கடல் தொழிலில் ஈடுபட்ட அந்த மக்கள் அங்கு வாழ்ந்த காலப் பகுதியில் செழிப்பாக வாழ்ந்திருந்தனர். 1983ஆம் ஆண்டு அவர்கள் அங்கிருந்து இடம்பெயரும் வரையில் சிங்களக் குடும்பங்கள் எதுவும் அங்கு நிரந்தரமாக வசிக்கவேயில்லை. மாறாக தென்னிலங்கையில் இருந்து மீன் பிடிக்க அனுமதி கேட்டு அங்கு சென்ற நான்கு குடும்பங்கள் மட்டுமே தற்காலிக குடிசைகள் அமைத்து தொழில் புரிந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு தமது கிராமத்திற்கு திரும்பிய ஊர் மக்கள் நம்ப முடியாத மாற்றங்களைக் கண்டனர். அடையாளம் காண முடியாத அளவிற்கு மக்களின் காணிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களது வீடுகளுக்கான அடையாளங்கள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

அந்தக் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு இலுமனைட் தாது பிரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான பணிகள் முன்னெடுக்கபட்டுவருகின்றன. அதேபோல கொக்கிளாய் பறவைகள் சரணாலயத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் தமிழ் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான சிங்களவர்களுக்கு சொந்தமான மீன்பிடி உபகரணங்களும் படகுகளும் நிறைந்து காணப்படுகின்றன. தடைசெய்யப்பட்ட அனைத்து வகை மீன்பிடி உபகரங்களும் மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு மீன் வளம் முழுமையாகச் சுரண்டப்படுவதாக தமிழ் மக்கள் ஏங்குகின்றனர்.

தமிழ் மக்கள் தமது கிராமத்திற்கு மீள்குடியேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வீட்டுத்திட்டத்தினையோ ஏனைய உதவிகளையோ பெற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணி நிலங்களுக்கான உரிமங்களில் பெரும்பாலானவை சிங்களவர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. காணி உரிமங்களுக்கான ஆதாரங்களை தமது கைகளில் வைத்திருக்கின்ற தமிழ் மக்கள், அது தொடர்பில் கேள்வி எழுப்புகின்ற போது அவர்களின் கேள்விகள் காற்றில் கரைவனவாகவே அமைகின்றன. அதேபோல, கரைவலை எனப்படுகின்ற மீன்பிடித்தல் தொழிலுக்கான உரிமங்களும் சிங்களவர்களின்  பெயர்களுக்கே மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

கொக்கிளாய் கிராமம், முற்றுமுழுதாக சிங்கள மயமாதலுக்கு உட்படுகின்றது என்பதற்கு முக்கிய ஆதாரம், அங்கு அமைக்கப்பட்டுவருகின்ற புத்தவிகாரம். அதற்கான ஆளுந்தரப்பு ஆதரவு நிலை! கொக்கிளாயின் முகத்துவாரம் எனப்படுகின்ற பகுதியில் வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில் புத்தவிகாரை ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அதை நிர்வகிக்கின்ற பௌத்த பிக்கு வசிப்பதற்கான நிரந்தரக் கட்டிடம் ஒன்று அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், நில  உரிமையாளர் அங்கிருக்கின்ற காவல்துறை உதவியினை நாடியிருக்கின்றார். விசாரணை  செய்யச் செல்வதாகத் தெரிவித்த  அதிகாரிகள் பிக்குவின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.  அதன் தொடராக இராணுவத்தினரின் கவனத்திற்கும் முறையிடப்பட்டிருக்கின்றது. பயனில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சட்ட ஆலோசனைகளை வழங்கவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்துள்ள ‘ஆலோசனைக் குழு’வும் இதைக் கண்டும் காணாமல் இருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

மிக விரைவில் இந்த விகாரையை இலங்கை அதிபர்  மகிந்த ராஜபட்சேவின் மகன் நாமல் ராஜபட்சே திறந்து வைப்பார் என்றும் அதற்கு முன்பாக அங்கு குடியேறியிருக்கின்ற கிறித்துவ சிங்களவர்களையும் பௌத்த மதத்தினைத் தழுவும் படியும் மிரட்டியிருப்பதாக அங்குள்ள கத்தோலிக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் நிலம் பௌத்த சிங்கள மயமாவதற்கு கொக்கிளாய் ஒரு உதாரணம். எதிர்காலம் புத்தபிரானுக்கே வெளிச்சம்...!   

ஜூலை, 2013.