ஓவியம் ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

கெளரமான பேயாகவே இருந்து விடலாம்!

மணா

சி லைச் செதுக்கலைப் போன்ற முகம். முறுக்கிய மீசை. சங்கிலி இணைந்த கண்ணாடி என்று கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார் அன்று பார்த்த நிமாய்கோஷ்.

சென்னை வடபழனி தாண்டி எளிய வீடு. அருகில் உயரமான நாய் ஒன்று. அவரைச் சந்திக்கச் சென்றது எண்பதுகளின் துவக்கத்தில் இருக்கலாம்.

தன்னுடைய வாழ்க்கையைச் செறிவாகச் சொன்ன அந்தத் தருணங்கள் அருமையானவை. சுமார் ஐந்து சந்திப்புகளுக்கு மேல் சந்தித்திருப்போம். திரும்பத் திரும்ப வரச்சொல்லி அவரைப் பற்றிய குறிப்புகளை எழுதி முடித்தபோது அவை நூறு பக்கங்களுக்கு மேல் நீண்டிருந்தன.

அதைச் சுருக்கி ஒரு சினிமா வார இதழுக்குக் கொடுத்தேன். அதற்கான கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தையும் நிமாய்கோஷே கொடுத்தார்.

இனி அவருடைய அனுபவங்கள் :

நிமாய் கோஷ் பிறந்தது வங்கத்தில் உள்ள டாக்கா என்கிற சிறிய கிராமத்தில். 1914 ல் பிறந்த அவருக்குச் சிறுவயதில் கலைகளில் ஈடுபாடு. அவருடைய தந்தையோ அவரை ரேடியோ எஞ்சினியராக்க ஆசைப்பட்டார். ஆனால் கோஷூக்கோ புகைப்படங்களை எடுப்பதில் விருப்பம். படிக்கும்போதே புகைப்படக் கலையைப் பற்றிய புத்தகங்களைப் படித்தார். குறைந்த விலையில் சின்னக் காமிராவை வாங்கிப் புகைப்படங்கள் எடுத்தார். பிலிமைக் கழுவிப் பிரிண்ட் போட்டுத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார்.

சினிமா அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்தது. வங்கத்திலும் திரைப்படச் சோதனை முயற்சிகள் நடந்தன. வங்கத்தில் அப்போது இருந்த அசோக்சென், தேவிகோஷ் போன்றவர்களை அணுகினார். நிறையக் கேள்விகளைக் கேட்டார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்த தேவிகோஷ் அவரை உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

அரசுக்கான விளம்பரப் படங்களை எடுத்தார்கள். இங்கிலாந்திலிருந்து பலர் இந்தியாவுக்கு வருகை தந்த போது அவற்றைக் குறும்படமாக எடுக்க வேண்டியிருந்தது. இருந்தும் போதுமான வருமானமில்லை.

அப்பாவின் விருப்பத்துக்காக அவர் ஆரம்பித்துக் கொடுத்த ரேடியோக்கடையில் சிறிதுகாலம் இருந்தும் அதோடு ஒட்ட முடியவில்லை. வெளி வந்த வங்கப்படங்களைப் பார்த்தார். சில படங்களின் ஒளிப்பதிவு அவருக்கு ரசிக்கவில்லை. இயற்கை ஒளியோடு இணைந்த ஒளிப்பதிவைப் பெரிதும் விரும்பிய அவர் தன்னை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்.

அதற்கான  நேரத்தை உருவாக்கினார். சுதந்திரத்தை ஒட்டி மேற்கு வங்கம் அப்போது தான் பிரிக்கப்பட்டது. பலர் அகதிகளாகி இடம் பெயர்ந்து போனார்கள். குடும்பங்கள் நெகிழ்ந்து சிதறின. வாழ்க்கையின் பரிதாபத்தைத் திரைப்படமாக்க முயற்சித்தார் கோஷ்.

முடிந்தவரைக்கும் இயற்கையான ஒலி, அரங்கில்லாத இயல்பான வெளியில் படப்பிடிப்பு, முக ஒப்பனைகளோ, உடை ஆடம்பரங்களோ இல்லை. மிகை நடிப்பில்லை. நிமாய்கோஷே திரைக்கதை எழுதி இயக்கிய வங்கப்படம்

‘ சின்ன மூல்'. பின்னாளில் இயக்குநரான ரித்விக் கட்டக் இந்தப் படத்தில் உதவி இயக்குநர்.

அலையடிக்கும் கடல். காற்றில் தவிக்கும் படகு.இப்படி ஆரம்பிக்கும் படம் கடல் காட்சியோடு நிறைவடையும். குடும்பங்கள் நிலத்தைவிட்டுப் பிரிகிற தருணங்களின் வலியைக் காட்சிபூர்வமாகச் சொன்ன இந்தப் படம் அன்றைக்கு மாற்றுச் சினிமாவை விரும்பியவர்களுக்குப் பிடித்தமானதாகியிருந்தது. வெளிநாடுகள் வரை கவனிக்கப்பட்டது.

இந்தப்படத் தயாரிப்பின் போது நடந்த விஷயங்களைப் பகிர்ந்தபோது கோஷ் சொன்னார். ‘‘ முடிந்த வரை செயற்கையான ஒளியைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அகதிகள் கூடியிருக்கும் இடத்தில் ஒப்பனையில்லாமல் சாதாரணமாக இருக்கும் எங்களுடைய நடிகர்களை அமரச் சொல்வேன். நான் அருகில் காமிரா வெளியே தெரியாதபடி ஓரிடத்தில் அமர்ந்து ஒளிப்பதிவு செய்வேன்.சில சமயங்களில் ஒரு வேனுக்குள் காமிராவின் முன்பாகம் மட்டும் வட்டமாகத் தெரியும். நான் காமிராவோடு வேனுக்குள் இருப்பேன். உள்ளே இருந்து நான் படம் பிடித்திருக்கிறேன். இயல்பாக ஒரு காட்சி அமைய வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அந்தப் படத்தில் செய்தேன். ‘சின்ன மூல்' வெளிவந்து பெரிய அளவில் வணிகரீதியான வெற்றியைப் பெறாவிட்டாலும், படம் பேசப்பட்டது. என்னைக் கவனித்தார்கள்.

ரஷ்யாவிலிருந்து என்னை அழைத்திருந்தார்கள். அதற்கு முன்பு அங்கு திரையிட என்னுடைய படத்தை அனுப்பியிருந்தது மத்திய அரசு. அங்கு அதற்கு நல்ல வரவேற்பு. இந்தியாவில் கலைத்துறையில் இயங்கிய பலரை ரஷ்ய அரசு அழைத்திருந்தது. அதன் படி விமானத்தில் சென்றபோது தான் தமிழ்த்திரைப்பட இயக்குநராக இருந்த கே.சுப்பிரமணியத்தைச் சந்தித்தேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சந்தித்தேன். பழக்கமான பிறகு தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்ற என்னை அழைத்தார்கள். ரஷ்யாவிலிருந்து திரும்பிய பிறகு நான் சென்னைக்கு வந்தேன்.''

சென்னைக்கு வந்ததும் நெப்ட்யூன் ஸ்டூடியோவில் தயாரான ‘பொன் வயல்' படத்தில் ஒளிப்பதிவு. தொடர்ந்து ரத்தபாசம், அவன் அமரன், நாலு வேலி நிலம் என்று பல படங்கள் அவருடைய ஒளிப்பதிவில் வெளியாகின.

பொதுவுடமைச் சிந்தனையில் ஈடுபாடு கொண்ட நண்பர்களுடனும், இசையமைப்பாளரான எம்.பி. சீனிவாசனுடன் இணைந்து  நிமாய் கோஷ் மற்ற நண்பர்களிடம் பெறப்பட்ட நிதியின் மூலம் எடுக்கப்பட்ட படம் ‘ பாதை தெரியுது பார்.' ஒளிப்பதிவுடன் படத்தை அவரே இயக்கியிருந்தார்.

விஜயன், விஜய லட்சுமி என்று பலர் நடித்த படத்தில் ஜெயகாந்தனின் அருமையான பாடலுக்கு உயிரோட்டமான இசையைக் கொடுத்திருப்பார் சீனிவாசன். இந்தப்படத்தைத் துவக்கி வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான ப. ஜீவானந்தம். நிறைவடைந்ததும் சென்னையில் வெளியிட்டவர் ஏ.வி. மெய்யப்பன்.

கூட்டு முயற்சியால் கோடம்பாக்கத்தில் உருவாக்கப்பட்ட முதல் முயற்சி ‘ பாதை தெரியுது பார்'.

அப்போது தான் கே.பாலசந்தர் தன்னுடைய முதல் படமான ‘நீர்க்குமிழி' யை எடுத்தார். ஒரு மருத்துவனைக்குள் நிகழ்கிற கதை. ஒளிப்பதிவுக்குப் போதுமான வாய்ப்பில்லா விட்டாலும், நிமாய் கோஷின் ஒளிப்பதிவு கவனிக்கப்பட்டது. தொடர்ந்து பாலசந்தரின் ‘ அனுபவி ராஜா அனுபவி' போன்ற  படங்களில் ஒளிப்பதிவு செய்த கோஷ் சற்றே திரைப்பட இரைச்சலிலிருந்து விலகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1981ல் இயக்கிய படம் ‘‘சூறாவளி''.

ஒளிப்பதிவுத்துறையிலும், இசைத்துறையிலும் முதலில் தொழிலாளர் நலச் சங்கத்தை உருவாக்கி ‘உடனடியாகப் பணம்' என்பதை ஒழுங்குபடுத்தி

அடுத்தடுத்துத் திரைப்படத்தில் பல தொழிற் சங்கங்கள் உருவாவதற்கான விதையை விதைத்தவர்கள் நிமாய்கோஷூம், இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனும் தான்.

கோஷின் பங்களிப்பை நினைவுகூரும் விதத்தில் மாநில அரசின் விருது அவர் பெயரில் விருது அளிக்கிறது.

‘‘சினிமா இன்றைக்குப் பிரமாண்டமான மீடியா. பெரும் பொருட் செலவு கொண்ட மீடியா. ஆனால் இதற்காக எவ்வளவு ஆயிரம் மனிதர்கள் உழைக்கிறார்கள்? அவர்களுடைய உழைப்புக்குத் தகுந்த ஊதியம் ஏன் கொடுக்கப்படாமல் இருக்கிறது?& என்பதை யோசித்துத் தான் தொழிற் சங்கத்தை திரைப்படத்துறையில் உருவாக்கினோம். உருவாக்கினபோது என்னைப் போன்றவர்களை ‘‘பேய்'' என்று சொல்லியிருக்கிறார்கள். சக தொழிலாளியின் வாழ்வுக்காகச் செயல்படுகிறவன்

‘பேய்' என்றால் இப்படிக் கௌரவமான பேயாகவே இருந்துவிடலாம்'' - அவருடைய வீட்டில் நாயின் கழுத்தைத்தடவிக் கொடுத்தபடி அண்ணாந்து சிரித்த நிமாய்கோஷின் தோற்றம் அழகான புகைப்படத்தைப் போல மனசில் பதிந்திருக்கிறது.

செப்டெம்பர், 2018.