சிறப்புக்கட்டுரைகள்

கெட்ட படங்களா இவை?

கருந்தேள் ராஜேஷ்

ஹாலிவுட்டில் செக்ஸ் காமெடிகள் என்று ஒரு பதம் உண்டு. பெயரைக் கேட்டதும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஓடிவிடாதீர்கள். செக்ஸ் காமெடி என்பது உலகெங்கும் பிரபலமான ஒரு வகைதான். நாடகங்கள், திரைப்படங்கள், புதினங்கள் என்று இந்த வகையைச் சேர்ந்த படைப்புகள் உலகெங்கும் ஏராளம் உண்டு. யுனைடட் ஸ்டேட்ஸில் வருடம் தோறும் பல படங்கள் இவ்வகையில் வருகின்றன. அவைகளுக்கு அங்கே ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். செக்ஸ் காமெடித் திரைப்படங்கள் எடுத்தே மிகப்பிரபலமாக ஆனவர்களும் அங்கே உண்டு. இந்த வகையில் அனைவருக்கும் சட்டென்று நினைவு வருவது ‘அமெரிக்கன் பை’ திரைப்பட சீரீஸாகத்தான் இருக்கும். செக்ஸ் சார்ந்த விஷயங்களில் நகைச்சுவையைக் கலந்து அளிப்பது - அதன்மூலம் நமக்குச் சிரிப்பைக் கிளப்புவதுதான் செக்ஸ் காமெடிகளின் பிரதான அம்சம்.

அமெரிக்கன் பை படங்களுக்கு முன்னரே, போலீஸ் அகாடமி, Some Like it Hot, The Apartment, The Seven Year Itch  ஆகிய பிரபல செக்ஸ் காமெடிகள் உண்டு. இதில்  சம் லைக் இட் ஹாட் மற்றும் த செவன் இயர் இட்ச் படங்களில் மர்லின் மன்றோ நடித்திருந்தார். அவரது உடை காற்றில் பறக்கும் ஒரு பிரபலமான புகைப்படம் உண்டல்லவா? அது செவன் இயர் இட்ச் படம் தான். இந்த மூன்று படங்களையும் பில்லி வைல்டர் இயக்கினார். பில்லி வைல்டர், ஹாலிவுட்டின் மிகப்பிரபலமான இயக்குநர்களில் ஒருவர். அக்காலகட்டங்களில் திரைப்படங்களுக்கே பிரத்யேகமான விதிகள் உண்டு. Hays Code என்று இவ்விதிமுறைகள் அழைக்கப்பட்டன.  கடுமையான பல விதிகளின் தொகுப்பு இது. திரைப்படங்களில் நிர்வாணம் காண்பிக்கப்படக்கூடாது; போதை மருந்துகள் வரக்கூடாது; மத அமைப்புகளைக் கிண்டல் செய்யக்கூடாது; கெட்ட வார்த்தைகள் உபயோகப்படுத்தப்-படக்கூடாது.. இதுபோன்ற கடுமையான விதிகள் ஹேய்ஸ் கோடில் உண்டு. ஆனால் கொஞ்சமும் கவலைப்படாமல் பில்லி வைல்டர் இந்த விதிகளை அவரது படங்களில் தகர்த்தார். அதனாலேயேதான் மேற்சொன்ன படங்கள் பிரபலமாயின. இன்றுவரை ஹிட்களாகவும் விளங்குகின்றன. பில்லி வைல்டரின் அபார்ட்மெண்ட், ஐந்து ஆஸ்கர்கள் வாங்கிய படமும்கூட.

இதுபோலவே ஹாலிவுட்டில் பல செக்ஸ் காமெடிகள் உண்டு. ஒருசில உதாரணங்களாக, There is Something about Mary, American Pie, Police Academy, National Lampoon series, Porky's, The 40 Year old virgin, Sex tape, Harold & Kumar go to White Castle, Knocked up, Zack and Miri Make a Porno ஆகிய படங்களைச்  சொல்லமுடியும். இந்த ஒவ்வொரு படத்திலும், காதல், திருமணம் என்று பல தலைப்புகள் கையாளப்பட்டாலும், அவற்றினூடே செக்ஸ் என்பது எப்படி இன்றியமையாததாக வருகிறது என்பதைக் கவனித்துப் பார்க்கவேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையில் செக்ஸுக்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் உண்டு. அதனை இப்படங்கள் கச்சிதமாகக் கையாளும். உதாரணமாக, அமெரிக்கன் பை படத்தில், இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளப்போவது தற்செயலாக இண்டர்நெட்டில் ப்ராட்காஸ்ட் செய்யப்பட்டுவிடும். அனைவரும் இதனை வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இளைஞனுக்கு விரைவில் ஸ்கலிதம். இதனை மறுநாள் கல்லூரியே கிண்டலடிக்கும். இதேபோல், அதன் மூன்றாவது பாகத்தில், நாயை வைத்துக்கொண்டு அவர்கள் செய்வதையெல்லாம் நினைத்தே பார்க்க இயலாது.

இந்தியாவில் செக்ஸ் காமெடிகள் உண்டா? ஹிந்தியில் தற்போது ஏராளமான செக்ஸ் காமெடிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தோஸ்தானா, க்ராண்ட் மஸ்தி சீரீஸ், ஹண்டர்ர், குச் குச் லோச்சா ஹை, க்யா கூல் ஹை ஹம் சீரீஸ் போன்ற படங்கள் உண்டு. இவைகளில் பல படங்கள் பெரிய ஹிட்களாகவும் விளங்குகின்றன. வசூலை வாரிக்குவிக்க இப்போதெல்லாம் செக்ஸ் காமெடி ஒன்றை எடுத்தாலே போதுமானது. சன்னி லியோனியை யுனைடட் ஸ்டேட்ஸின் porn இண்டஸ்ட்ரி சரியாகப் பயன்படுத்திக்கொண்டதோ இல்லையோ - ஹிந்தியின் செக்ஸ் காமெடி இண்டஸ்ட்ரி  மிகச்சரியாக அவரைப் பயன்படுத்திக்-கொண்டிருக்கிறது. சன்னி லியோனி மட்டுமல்ல; இன்னும் பல நட்சத்திரங்கள் உள்ளனர். அதேசமயம், ஹிந்தியில் செக்ஸ் காமெடி என்பது இப்போது வந்த விஷயமும் இல்லை. எண்பதுகளின் துவக்கத்தில் பிரபல இயக்குநர் பாஸு சாட்டர்ஜீ இயக்கிய படம் ஷௌகீன் (Shaukeen).  இப்படத்தில், வயதான மூன்று ஆசாமிகள், ஒரு இளம்பெண்ணுக்காகப் போராடுவதை மிகுந்த நகைச்சுவையாக சொல்லியிருப்பார். அஷோக் குமார், உத்பால் தத், ஏ.கே. ஹங்கல் ஆகிய மூன்று பிரமாதமான நடிகர்களை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட படத்தை எப்போதோ ஹிந்தியில் எடுத்துவிட்டனர்.

டெல்லி பெல்லியை மறக்க முடியுமா? இது செக்ஸ் காமெடி அல்ல என்றாலும், படத்தின் வசை வார்த்தைகள், காட்சிகள் ஆகியவை செக்ஸ் காமெடிகளைக் கட்டாயம் நினைவுபடுத்தும். தமிழில் சேட்டை என்ற பெயரில் பல வெட்டுக்களோடு வெளியாகிப் படுத்துவிட்ட படம்.

சரி. தமிழில் ஏன் தரமான செக்ஸ் காமெடிகள் சாத்தியமில்லாமல் உள்ளன? அல்லது தமிழில் செக்ஸ் காமெடிகள் உள்ளனவா?

மன்மதலீலை என்று கமல்ஹாஸன் படம் ஒன்று உண்டு. இயக்கம் பாலசந்தர். பலருக்கும் நினைவிருக்கக்கூடும். இந்தப் படத்தை ஒரு செக்ஸ் காமெடி என்று தாராளமாகச் சொல்லலாம். காமெடி என்றதும், விழுந்து புரண்டு சிரிக்கவைக்கும் நகைச்சுவை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. படத்தின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சம்பவங்கள் தொடர்ந்து நமக்குப் புன்சிரிப்பை ஏற்படுத்தினாலே அது செக்ஸ் காமெடிதான். அதேபோல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தையும் ஒரு செக்ஸ் காமெடி என்று உறுதியாகவே சொல்லமுடியும். அந்தப் படத்தில் அத்தனை விதமான சிச்சுவேஷன்கள் உண்டு. உதாரணமாக, ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் விடலை மாணவர்கள் செல்லும் காட்சி. யாருமே எதையுமே செய்யாமலேயே, பெரிய சாதனை செய்தவன் போல அவர்கள் நடிக்கும் களம். இதுபோல அந்தப் படத்தில் பல காட்சிகள் உண்டு. விடலைகள் சமுதாயத்தோடு பழகுகையில், அவர்கள் எப்படி தட்டுத்தடுமாறி, தங்களின் லட்சியமாக ஏதோ ஒன்றை அடைகிறார்கள் என்பதைச் சொன்ன படம் அது. வெளியான சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம், அதுவரை இளைஞர்களுக்கான செக்ஸ் காமெடி தமிழில் வந்தே இருக்கவில்லை.

பாய்ஸுக்குப் பின், செக்ஸ் காமெடி என்ற களத்தைக் கையில் எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவரது நியூ படத்தின் பல காட்சிகள் செக்ஸ் காமெடி என்பதற்கு உதாரணம் (இந்தக் கருத்தை பாக்யராஜ் அவரது சில படங்களில் ஒருசில காட்சிகளில் கையாண்டிருப்பார். உதாரணம் - பவுனு பவுனுதான் ஐஸ்ஃப்ரூட் அய்யர். ஆனால் தொடர்ச்சியாக செக்ஸ் காமெடிகளை அவர் எடுக்கவில்லை. ஜனரஞ்சகமான படங்களையே எடுத்தார்). நியூ படத்துக்குப் பின்னர், ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம்தான் செக்ஸ் காமெடி என்ற tச்ஞ்கால் பிரபலமானது. அதில் நடித்தவர் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தைத் தொடர்ந்து  செக்ஸ் காமெடியா? கூப்பிடு ஜி.வி.பிரகாஷை என்ற நிலையே தற்போது உருவாகிவிட்டது. இதில், திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் கிட்டத்தட்டத் தமிழகத்தின் அத்தனை பேராலும் பார்க்கப்பட்டது. நம் அனைவருக்குமே செக்ஸ் மீது ஒரு குறுகுறுப்பு உண்டு. இதனை உள்ளுக்குள்ளேயே மூடி மறைத்துக்கொண்டிருப்பதால், இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்றதுமே எப்படியாவது அதனை நாம் அனைவரும் பார்த்துவிட்டோம். இதுதான் காரணம். அதைத் தொடர்ந்து வேறு சில படங்களில் பிரகாஷ் நடித்திருந்தாலும் அவை ‘அ கிளாஸ்’ என்று என்று சொல்ல முடியவில்லை! (என்ன ஆச்சு பிரகாஷ்? வாலிப வயோதிக அன்பர்களை ஏமாத்தாதீங்க!)

கல்யாண சமையல் சாதம் என்று ஒரு படம், பிரசன்னா நடிப்பில் வெளியானது. தரமான செக்ஸ் காமெடி என்றால் அது இந்தப் படம்தான். Erectile Disfunction என்ற  பிரச்னையால் அவதிப்படும் இளைஞன் ஒருவன் திருமணம் செய்துகொண்டால் என்னாகும் என்ற பிரச்னையை மிகுந்த நகைச்சுவையோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் எடுத்திருந்தனர். இயக்கியது ஆர்.எஸ். பிரசன்னா. மிக வித்தியாசமான ஒரு கரு இது. இருந்தும், ஹிந்தியில் வந்துகொண்டிருப்பதுபோன்ற செக்ஸ் காமெடிகளை இன்னும் தமிழில் பார்க்க முடிவதில்லை. குச் குச் லோச்சா ஹை, வெளிப்படையான, பட்டவர்த்தனமான வசனங்கள், காட்சிகள் முதலியவைகளைத் தமிழில் கண்டிப்பாக யோசித்தல் இயலாது. இவ்வளவு ஏன்? செக்ஸ் காமெடி என்ற வகையை அடல்ட் காமெடி என்று மேற்பூச்சுப் பூசித்தானே நாம் அழைத்துக்கொண்டிருக்கிறோம்? காரணம், முதலில் நமது சமுதாயம். இங்கே இன்னுமே செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே ஒரு பிரச்னை. இளைஞர்கள் பத்து-இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்ததுபோல் இல்லாமல், ஏராளமான எக்ஸ்போஷருடன் இப்போது விளங்குவது உண்மைதான்.

அவர்களுக்கு இப்போதெல்லாம் உலகம் முழுக்க வெளியாகும் பல்வேறு படங்கள், புத்தகங்கள் முதலியவைகள் விரல் நுனியில் கிடைப்பதும் உண்மைதான். ஆனால் பெரும்பாலான மக்கள் இன்னமுமே, தாங்கள் பழமையான கலாச்சாரம் சார்ந்த மக்களாகவே இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளவே விரும்பும் இடம் இது. முதலில் நமது தணிக்கை விதிகளை நாம் சரிபார்க்கவேண்டிய தேவை உள்ளது. செக்ஸ் காமெடி தப்பு என்றால் பில்லி வைல்டருக்கு எப்படி ஆஸ்கர்கள் கிடைத்தன? அவரால் ஹேய்ஸ் கோடே தகர்க்கப்பட்டது. அப்படி முதலில் நமது மனநிலை மாறவேண்டும் என்றே நினைக்கிறேன். போலியான கலாச்சாரப் பின்னணியை முகமூடியாக மாட்டிக்கொண்டு உலகிலேயே நல்லவன் போல நாம் நடிக்கத் தேவையிருக்காது. மாறாக, இயல்பாக இருப்போம். அதுதான் இங்கே முதல் படி.

டிசம்பர், 2016.