சிறப்புக்கட்டுரைகள்

கூகுள் போட்ட திங்கள் சந்தை

சிலிக்கான் சிந்தனைகள்

குமரன் மணி

திங்கள் சந்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாரத்தில் திங்களன்று எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடைபோடுவார்கள். மக்கள் அன்று குவிந்து பல பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிக்கொள்வார்கள். சமீபத்தில் வந்த 12-12-2012 அன்று கூகுளும் இப்படி ஒரு திங்கள் சந்தை போட்டது ( இந்த தேதி எங்க தலைவரின் பிறந்தநாள் அல்லவா என்று கூவுகிறார் எங்கள் அலுவலக ரஜினி ரசிகர் ஒருவர்!). கூகுள் அதற்கு சைபர் மண்டே என்று பெயர் வைத்தது. சுமார் 50 ஆன்லைன் கடைகளை ஒன்றிணைத்து அதில் பல்வேறுபட்ட பொருட்களை வாங்கிக்கொள்ள கூகுள் ஏற்பாடு செய்தது. இந்தியாவில் இப்படி ஒரு ஆன்லைன் வர்த்தக ஏற்பாடு இதுதான் முதல்தடவை. அமெரிக்காவில் 2005-ல் சைபர் மண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிப்பதற்காக இது செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் செய்யப்படும் இந்த ஏற்பாடு அங்கே வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இது இம்முறை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த அளவுக்கா இங்கே ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது? மக்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கத் தயாராக இருக்கிறார்களா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆன்லைன் மார்க்கெட். சுமார் 10 கோடிப்பேர் இணையத் தொடர்புகளால் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. இங்குள்ள நடுத்தர வருமானப் பிரிவினர் எண்ணிக்கை ஒட்டுமொத்த அமெரிக்க நுகர்வோர் எண்ணிக்கைக்குச் சமம். இங்கே மின்வணிகத்தின் மதிப்பு இப்போதைக்கு 35,000 கோடி! இப்போது புரிகிறதா இங்கே சைபர் மண்டே அறிமுகமாவதற்குக் காரணம்? இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இந்த மதிப்பு இரண்டு லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது! அதாவது கடைக்கு கார் ஏறி, பஸ் ஏறிப்போய் பொருட்களை வரிசையில் நின்று வாங்குவதற்குப் பதிலாக இந்தியர்கள் வீட்டில் இருந்துகொண்டே 2 லட்சம் கோடிக்கு வணிகம் செய்யப்போகிறார்கள். ஐயா! இந்த வாய்ப்பை தற்போது கடை வைத்திருக்கும் தொழிலதிபர்கள் தவறவிடக்கூடாது. இந்தியர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கத் தயங்குகிறார்கள் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிராதீர்கள்.

இந்த ஆன்லைன் வர்த்தக சமாச்சாரத்தில் ஒரு விஷயம். இந்த வர்த்தக மதிப்பில் முக்கால் அளவுக்குப் பிடித்துக் கொண்டிருப்பது டிக்கெட்கள், ஹோட்டல் புக்கிங்குகள்தான்! 2007-கணக்குப்படி பயண டிக்கெட்டுகள் புக் செய்யும் மேக்மைட்ரிப் டாட்காம் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு அந்த ஆண்டில்மட்டும் பிசினஸ் செய்திருக்கிறது!

இது இல்லாமல் மீதி நடக்கும் வர்த்தகத்தில் பெரும்பாலும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன!

இதெல்லாம் இருக்கட்டும். மின்வணிகம் சாதாரண ஆளுக்கு எப்படிப் பயனளிக்கிறது? (இது எங்களுக்குத் தெரியும் என்பவர்கள் ஒரு பாரா தள்ளிப்போகவும்) பில்களை வரிசை இன்றி கட்டிவிடலாம். எங்கும் யாருக்கும் லஞ்சம் தரவேண்டியதில்லை. வரி ஏய்ப்பு செய்யமுடியாது. தேவையில்லாமல் வெளியே போய் டிராபிக்கில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம் நல்ல வேகம் கொண்ட இணையத் தொடர்புதான்!

கிராமப்புற அமைப்புகளுக்கு சர்வதேச அளவில் போட்டியிடும் வாய்ப்பை இணையமும் அதில் வளர்ந்திருக்கும் மின்வணிகமும் அமைத்துத் தந்திருக்கின்றன. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் முக்கியம்.

36 வயதான சிவ தேவி ரெட்டி சில ஆண்டுகளுக்கு முன்பாக மிகச் சொகுசான கார்ப்பரேட் வாழ்க்கை வாழ்ந்தவர். இப்போது அந்தவேலையைத் துறந்துவிட்டு பெங்களூருவிலிருந்து  gocoop.com என்ற இணையதளத்தை நடத்துகிறார். இதன் வேலை கூட்டுறவு அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு உலகளாவிய அளவில் தங்கள் பொருட்களை விற்பதற்கு இணையதளத்தில் இடம் தருவதே. விற்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப கமிஷன் அவரது இணையதளத்துக்குக் கிடைக்கும். அவர் செய்வது சேவை. ஐக்கிய நாடுகள் சபை இதைப் பாராட்டி அவருக்கு அங்கீகாரம் அளித்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். “ கூட்டுறவு சங்கங்கள் என்றால் பெரும்பாலும் கிராமப்புற அமைப்புகள்தான். அங்கு நிறையபேர் கணினியைப் பார்த்ததே கிடையாது. அவர்களை ஆன்லைனின் வியாபாரம் செய்யலாம் என்று ஒப்புக்கொள்ள வைப்பதுதான் பெரிய சவால்” என்கிறார் ரெட்டி. இன்னும் பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் 2 லட்சம் கூட்டுறவு அமைப்புகளையும் 10 லட்சம் சுய உதவிக்குழுக்களையும் தன் இணையத்தின் மூலம் ஒன்றிணைப்பதே இலக்காக அவர் வைத்திருக்கிறார்.

இந்தியாவில் கே.வைத்தீஸ்வரன் என்பவர் 1999ல் தொடங்கிய fabmart.com  என்பதுதான் முதல் மின்வணிக தளம். அப்போது இந்தியாவில் அவ்வளவாக இணையத் தொடர்புகளோ கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களோ இல்லை. ஆனால் இப்போது அசுர வளர்ச்சி. இங்கே எந்த அளவுக்கு வளந்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம். snapdeal.com, flipkart.com, Flipkart.com என்று நிறைய வந்துவிட்டன. Flipkart  இப்போதைக்கு  இந்தியாவின் நம்பர் ஒன் மின்வணிக தளம். ஒரு நாளைக்கு சராசரியாக இந்த தளத்தின் மூலம் மட்டும் 5 லட்சம் டாலர்களுக்கு வர்த்தகம் நடக்கிறது என்றால் நம்புவீர்களா?

நான் சொல்வதெல்லாம்   ஆன்லைனில் பிசினஸ் பண்ணலாம்; நீங்கள் எவ்வளவு சின்ன தொழில்முனைவோராக இருந்தாலும். அதற்கான வாய்ப்புகள் எளிதாகிவிட்டன என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன். பொருளை விற்பவரின் முகமே பார்க்கவேண்டாம்; வாங்குபவர் யாரென்றும் தெரியவேண்டாம். வியாபாரம் செய்ய இந்தியர்களும் தயாராகிவிட்டார்கள்!

அமெரிக்காவில் இயங்கும் இ-பே மின் வணிகத்தளம் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் இருக்கும் சில வினோதமான விஷயங்கள் பற்றி பட்டியல் போட்டிருந்தார்கள். அதில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு அம்மணி எட்டு டாலர் கட்டினால் காதலியைக் கவர, பழிவாங்க உங்களுக்காக மந்திரம் செய்து தருகிறாராம்! நம்மூர் பூசாரிகளும்  மந்திரவாதிகளும் எப்போ ஆன்லைனுக்கு வரப்போகிறார்கள்?(இது வேறா?).

பிப்ரவரி, 2013.