சிறப்புக்கட்டுரைகள்

குழந்தைச் செல்வமே தமிழனின் பெரும் சொத்து

அந்திமழை இளங்கோவன்

என்ன செய்தாய் நீ எனக்கு என்று கேட்ட மகனுக்கு ஓர் அப்பா எழுதிய பதில்..

அப்பொழுதெல்லாம் வீட்டிலிருந்தபடியே கர்ப்பத்தை உறுதிசெய்யும் உபகரணங்கள் கிடையாது. முதல் மாதம் வீட்டிற்கு தள்ளிப் போனதிலிருந்தே பிடிபடாத ஆனந்த வெள்ளம் தாறுமாறாக ஓடியது.வேறு யாருக்கும் சொல்ல வேண்டாமென்பது அவளது எண்ணம். மூன்று மாதங்கள் கடந்த பின் ஒழுகினசேரி ரோட்டில் உள்ள மருத்துவரிடம் போய் உறுதி செய்து கொண்டோம்.கையோடு அருகிலுள்ள நாகராஜா கோவிலுக்குப் போய் சாமி பெயருக்கு அர்ச்சனை கொடுத்து கும்பிட்டுவிட்டு,பிரகாரம் சுற்றி வெளியே வந்த நாங்கள்,குளத்திற்கு எதிர்புறமுள்ள ஆலமர திண்டில் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஆணா..பெண்ணா... என்பதிலிருந்து என்ன பெயர் வைப்பது,எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்று எங்கெங்கோ சிறகடித்துப் பறந்தவளை, தரையிறக்கி வெளியே அழைத்து வந்தாயிற்று. போகிற வழியில் மணிமேடைக்கு அருகிலுள்ள அசைவ உணவகத்திற்கு போகலாமென்றால், கோவிலுக்கு போய்விட்டு அசைவம் தின்பதா என்று மறுத்தவளை என்னென்னவோ சமாதானம் செய்தாலும் முடியவில்லை. நீ சாப்பிடற சாப்பாட்டிற்கு சோனியாகத்தான் பிள்ளை பிறக்குமென்றபின் உள்ளே வந்தாள். 4.10.1979 தேதியிட்ட அந்த சாப்பாட்டுக்கடை பில்லை நீண்ட நாள் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

ரூ 2100...

மிகவும் சிக்கலான பிரசவம் அது..இரண்டு நாள் வலியில் துடித்து வெளியே வர மறுத்த உன்னை ஆயுதத்தின் உதவியுடன் வெளியே எடுத்தார் அந்த இடலாக்குடி மருத்துவர். மிகவும் காஸ்ட்லியான பிரசவமும் கூட. மருத்துவமனை பில்லான ரூபாய் 2100 ஐ அவளின் அப்பா கட்டக்கூடாது என்று தடுத்து என்னைக் கட்டச் சொன்னாள். என் பிள்ளைக்கு எல்லாவற்றையும் நான் தான் செய்வேன் என்ற வைராக்கியம் அன்று ஆரம்பித்தது. இதனால் நாலைந்து மாதம் அப்பா மகளுக்கு சரியான பேச்சுவார்த்தை கிடையாது.கொஞ்ச காலம் பலர் உன்னை 2100 என்றுதான் அழைத்தார்கள்.

என்னைத் தவிர யாரிடமும்..

முப்பத்தியொரு வருட திருமண வாழ்வில் உன் அம்மாவிடம் ஏற்பட்ட மிகப்பெரிய யுத்தம் அது மட்டும்தான். 12 நாட்கள் நீடித்த போரில் என் பக்கம் நியாயம் இருந்தும் அவளிடம் சரணடைந்து அந்த முடிவுக்கு ஒத்துக்கொண்டேன்.ஒரு குழந்தை போதும் அவனை பார் புகழ வளர்ப்போம் என்ற அவளது முடிவு சரியானதல்ல என்பது என் வாதம். சுமார் 47- 48 நாள் வயதான கருவை கலைத்துவிட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள ஹைகிரவுண்டிற்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றோம்.தன்மையாக பேசும் அந்த பெண் மருத்துவர் அதிகமாக கோபப்பட்டது எங்களிடமாகத்தானிருக்கும்.அவரின் சகல அஸ்திரங்களும், வார்த்தைகளும் உன் அம்மாவிடம் எடுபடவில்லை.யோசித்துவிட்டு மறு நாள் வரச் சொன்னார்.‘என் முடிவில் மாற்றமில்லை,

நீங்கள் இதை செய்யாவிட்டால் நான் வேறு ஒருவரிடம் போய் இதைச் செய்ய வேண்டியிருக்கும்’ என்றவளிடம், கருக்கலைப்பு செய்கிறேன் ஆனால் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பதிலாக காப்பர்டி பொருத்துகிறேன் என்றார். உனக்காக அவள் பார்த்துவந்த டீச்சர் வேலையை விட்டதைவிட இது மிகப்பெரிய கலவரத்தை குடும்பத்திற்குள் ஏற்படுத்தியது. குழந்தைக்காகத்தான் நாம் எல்லோரும் கஷ்டப்படுகிறோம், ஆனால்  நீங்கள் செய்வது சரியல்ல என்று உனது அம்மாவின் அப்பா, அம்மா,அக்கா தொடங்கி பலரும் நீண்ட உபதேசங்களை வழங்கியிருக்கிறார்கள்.அப்போதெல்லாம் அவள் உன்னை தனது மடியிலமர்த்திக்கொண்டு உன் தலையை கோதிக்கொண்டோ, உன் நீளமான பிஞ்சு விரல்களை எண்ணிக் கொண்டோ இருப்பாள்.எதிராளியின் வார்த்தைக்கு சரிக்கு சரி பதிலடி கொடுக்கத் தெரிந்த உன் அம்மா உன் விஷயங்களை என்னைத் தவிர யாரிடமும் விவாதித்ததில்லை.மற்றவர்களின் கேள்விக்கும்,கேலிக்கும் வார்த்தைகளால் பதிலலிக்கவில்லை.

என்ன இருந்தது என்னிடம்...

இலஞ்சியில் இருந்த வயலை விற்று வந்த பணம் உனது ஐஐடி செலவிற்கு சரியானது.தென்காசி மேலகரத்திற்கு அருகிலிருந்த தோப்பும், நாகர்கோவில் திருப்பதிசாரத்திற்கு அருகில் இருந்த உன் அம்மாவின் பூர்வீக வயலும் கைமாறி உன் Cornell University பட்டம் ஆனது.செங்கல் செங்கலாக நாங்கள் பார்த்து கட்டிய நம் வீட்டின் எல்லா சுவர்களிலும் உனது அவதாரங்கள் தான் புகைப்படங்களாக இருந்தன.அந்த வீட்டை விற்று தான் பெங்களூர் அப்பார்ட்மென்டானது உன் பெயரில். அந்த வீட்டை விற்காமலிருந்தால் உன் அம்மா இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்திருக்கலாம்.

உனக்காக நாங்கள் செய்த எல்லா விஷயங்களையும் எப்படி யெல்லாமோ ஊர் விமர்சித் தாலும் நாங்கள் கவலைப்பட்டதில்லை. ஆனால் நேற்றிரவு என் மருமகளுடன் சேர்ந்து நீ உதிர்த்த வார்த்தைகள் என்னை முதல்முறையாக சிந்திக்க வைத்துள்ளன.

‘இந்த முப்பத்திநாலு வருஷத்துல எனக்கு உருப்படியா ஏதாவது செய்திருக்கிறீர்களா? ஒவ்வொருத்தர் பிள்ளைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க தெரியுமா? பெத்தா மட்டும் போதுமாப்பா...’

 நல்ல வேளை அவள் உயிரோடு இல்லை.இருந்திருந்தால் இந்த வார்த்தைகளின் வெப்பத்தை அவள் மனது எப்படி தாங்கும்? எங்கள் தலைமுறை தமிழர்களுக்கு சொத்து பெருக்குவது பற்றி சொல்லிக் கொடுக்கப்படவும் இல்லை, அதைக் கற்றுக் கொள்ள நாங்கள் முயலவுமில்லை. எங்களது ஒரே சொத்து‘பிள்ளைச் செல்வம்’ மட்டும்தான். தந்தை மகற்காற்று நன்றி யவையத்து; முந்தி யிருப்பச் செயல் என்ற குறளின் வழிகாட்டுதலின் படி தான் உன்னை வளர்த்துள்ளோம்.

நீ அடிக்கடி உதாரணம் காட்டும் திருபாய் அம்பானி அவரது மகனுக்கு சேர்த்து வைத்த சொத்துக்களை பற்றி பேசுகிறாய், ஆனால் திருபாய் அம்பானியோ தனது  தந்தை தன்னை பள்ளி இறுதி வரை கூட படிக்கவைக்கவில்லை என்று ஒரு முறை கூட குறை கூறவில்லை. வாழ்க்கையில் எல்லா கட்டங்களிலும் பெற்றோரிடம் எதையாவது எதிர்பார்க்கும் நீங்கள், எங்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை சௌகரியமாக மறந்து விடுகிறீர்கள். இப்போது நீ கேட்கும் என் ரிட்டையர்மெண்ட் பணம் அப்படியே என் பெயரில் வங்கியில் வட்டி ஈட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு  ணணிட்டிணஞுஞு நீ தான், ஆனால் அதை நீ என் மரணத்திற்கு பின் தான் பயன்படுத்த முடியும். அதிலிருந்து ஒரு பைசா கூட நான் எடுக்கவில்லை இதுவரை.

என் மனைவியுடன் பெருங்காலம் கழித்த திருநெல்வேலி மண்ணிற்கே நான் இன்று செல் கிறேன். அங்கே உலவும் அவள் நினைவுகளுடன் என் மிச்ச காலம் கழியட்டும். இந்த கடிதத்துடன் ஒரு அட்டவணையை இணைத்துள்ளேன். அதில் இரண்டு வயதாகும் என் பேரனுக்கு நீ செலவழிக்க வேண்டிய தொகையை குத்துமதிப்பாக பட்டியலிட்டுள்ளேன்.

விடைபெறும் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீ உனது மகனை எவ்வளவு பாசத்துடன் வளர்க்கிறாய் என்பது எனக்கு தெரியும். அவன் கேட்டால் எதையும் செய்கிறாய். புரிகிறது. நீ இன்னொரு வங்கி கணக்கு உன் பெயரிலேயே ஆரம்பி.அதில் நீ உன் மகனுக்கு நூறு ரூபாய் செலவழித்தால் ஒரு ரூபாய் (அதாவது செலவழித்த தொகையில் ஒரு சதவீதம்) புது கணக்கில் போட்டுவிடு. இதை விடாமல் தொடர்ந்து செய். குறிப்பிட்ட காலம் கடந்தபிறகு உன் இரண்டாவது வங்கி கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறதோ அதன் நூறு மடங்கு உன் மகனுக்கு நீ செலவழித்திருப்பாய்.இந்த அறிவுரையை உன் மகனுக்கு நீ செய்யும் செலவை கணக்குப் பார் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை. பிறிதொரு நாள் உன் மகன் நேற்று நீ கேட்ட கேள்வியைக் கேட்டால் அப்போது உன்னிடம் பதிலிருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கூறுகிறேன்.

- உன் அன்பு அப்பா

நடுத்தர குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு செலவு அட்டவணை

பிரசவ கால செலவு

மருத்துவர் கட்டணம்  (200 து 12) 2400

பரிசோதனை-மருந்து  3800

கர்ப்ப கால உணவு-உடை      17000

பிரசவ கால விழாக்கள்           20000

குழந்தை நலன்            2800

பிரசவ மருத்துவமனை செலவு           20000 - 40000

மொத்தம் 66000 - 86000

0-4 வயது வரை

குழந்தை பராமரிப்பு    35000

மருத்துவ செலவு         12000

 குழந்தை துணி வகை 25000

 குழந்தை உணவு வகைகள்    25800

புத்தகங்கள்,விளையாட்டு பொருட்கள்          16000

பணியாள் செலவு (1500 து 48)           72000

பிளே ஸ்கூல் செலவு   12800

 பெயர் சூட்டு,இதர விழா       50000

பிறந்த நாள் விழாக்கள்           20000

மொத்தம் 268600

4-15 வயது வரை

பள்ளிக் கட்டணம் 1500 து 11 து 12 = 198000 மற்றும் பள்ளி வாகனம், புத்தகம், டியூசன் , பள்ளி சீருடை - மற்றவை,  உணவு, துணி மற்ற வகைகள் கம்ப்யூட்டர்- சாதனங்கள், மருத்துவ செலவு,  கேளிக்கை, எல்லாம் சேர்த்து மொத்தம்-1005300

15-22 வயது வரை

 பள்ளிக் கட்டணம் 1500 து 4 து 12 = ரூ72000, டியூசன், கல்லூரி படிப்பு செலவு (90000-22,30500) கேளிக்கை, துணி வகைகள் எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ 430000 - 2570500

22-25 வயது வரை

தொழிற்படிப்பின் கடைசி இரண்டு ஆண்டு செலவு ரூ 63000 - 1,90,000   துணி -கேளிக்கை, திருமண செலவு (உத்தேசமாக 3,00,000-5,00,000) எல்லாம்

சேர்த்து மொத்தம்  ரூ,43,8000-76,5000

25 வயது வரை

மொத்த செலவு : ரூ 22,07900-46,95400

இவையில்லாமல் மேற்படிப்பு தனி. 25 வயதுக்கு மேல் மகனோ மகளோ வேலைக்கு போகாமல் சுற்றிக்-கொண்டிருந்தால் இந்த அட்டவணையின் நீளம் அதிகமாகும்.

ஜனவரி, 2014.