சிறப்புக்கட்டுரைகள்

குருபூஜை பலிகள் ஏன்?

இரா. கௌதமன்

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் புதிய டைரி-யில் அரசியல் தலைவர்கள் குறித்துவைத்துக் கொள்ளும் முக்கிய தேதிகளில் ஒன்று அக்டோபர் முப்பது.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா. அன்றைய தினம் பசும்பொன் கிராமம் செல்வதும் தேவர் நினை-விடத்தில் மரியாதைச் செலுத்துவதும் அவர்களின் அரசியல் ‘பணி’களில், ‘கட்டாயங்களில்’ ஒன்றாகிவிட்டது..

தேவர் ஜெயந்தியையொட்டி சிறு சிறு சச்சரவுகள் நடப்பது வழக்கமான ஒன்று தான். அமைதியாக முடிந்த ஆண்டுகளும் உண்டு. தேவரின் 105-வது ஜெயந்திவிழாவான இந்த ஆண்டு பத்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை நடந்திராத நிகழ்வு இது. சம்பவம் நடந்து பல நாட்களாயினும் இன்னும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முழு அளவில் திரும்பிவிட்டதாகச் சொல்லமுடியாது. அதிர்ந்து போய் நிற்கின்றன தென்மாவட்டங்கள்.

தற்போது நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த இளைஞர்களில் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர் தான். மற்றவர்கள் நாடார், பிள்ளைஎன்பதோடு தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார். இதில் யார் யார்என்ன சாதி என அடையாளம் காண்பித்து மேலும் பிரச்னையைக்கிளப்பவேண்டாம் என்கிறார்கள் மகன்களைப் பறிகொடுத்த பெற்றோர்கள்.

இந்த மரண சம்பவங்களின் பின்னணிக்கு பல காரணங்கள் இருக்கின்றன எனக் கூறப்பட்டாலும் காவல்துறையின் மெத்தனப்போக்கே இந்த கொலைகளுக்குமுக்கிய காரணம் என்கிறார்கள் சிலர். ‘இப்படி உயிர்பலி நடக்கையில் குருபூஜை அவசியம் தானா...‘ என வரலாற்று ஆய்வாளரும் அ.இ.பா.பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவருமான நவமணியை சந்தித்துக் கேட்டோம்.

தேவர் ஜெயந்தி கொண்டாட்டம் என்பது அவர் வாழ்ந்த காலத்திலேயேஅதாவது 1955-ம் ஆண்டு பர்மாவில் கொண்டாடப்பட்டது. 1956-லிருந்து மதுரையில் தேவர் ஜெயந்தி விழா ஒரு வாரம் நடந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். அவரது மறைவுக்குப் பின்னர் அது பசும்பொன்னில் மூன்று நாள் நிகழ்ச்சியாகமாற்றப்பட்டது. முதல் நாள் (அக்டோபர் 28-ம் தேதி) ஆன்மீக விழாவாகவும்,இரண்டாம் நாள் (29-ம் தேதி) அரசியல் விழாவாகவும் 30-ம் தேதி அவரது ஜெயந்திவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பகாலத்தில் 30-ம் தேதிநடைபெறும் ஜெயந்தி விழா பகல் 11 மணியளவில் முடிந்து விடும். அதுவரைகுறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே வந்த நிலையில் 1978-ம் ஆண்டுஎம்.ஜி.ஆர். பசும்பொன் வந்தார். அதன் தொடர்ச்சியாக தலைவர்கள் வரத்தொடங்கினர். 1991-ல் ஜெயலலிதா பசும்பொன் நினைவிடம் வந்தார்.

1996-க்குப் பிறகு தேவர் ஜெயந்திக்கு வரும் அரசியல் தலைவர்கள்ஆனாலும் சரி தொண்டர்கள் ஆனாலும் சரி காவல்துறையின் பலத்தசோதனைக்குப் பிறகே வரமுடிந்தது. திறந்த வாகனங்களில் வரக்கூடாது என்பது தொடங்கி பிளக்ஸ் வைக்கக்கூடாது என இந்தாண்டு விதிக்கப்பட்ட காவல்துறையின்அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றித் தான் வருகிறோம். ஆனால் இந்தமுறை காவல்துறையினர் சிலர் கட்டுப்-பாடுகளை சரியாக அமல்படுத்தவில்லை.. அப்படி நடைமுறைப்படுத்தியிருந்தால் வேறு பாதையில் செல்லஎத்தனித்தவர்களைத் தடுத்திருந்திருக்கலாம்.. அதனால் மூன்றுபேர்கொல்லப்பட்டதும் தவிர்க்கப்-பட்டிருக்கும். இந்த முறை நடந்த கொடூரம் போல எப்போதும் நடந்ததில்லை.

பார்த்திபனூர் அருகேயுள்ள மேலப்பெருங்கரையைச் சேர்ந்த கமுதக்குடியிலுள்ள ஆலையில் வேலை-பார்க்கும் பதினைந்து பேர் பொன்னையா-புரம் ஊர் வழியாக வேனில் சென்-றார்-கள். அந்தப் பகுதி வழியாகச் செல்ல தடை செய்யப்பட்டிருதாலும் கூட அந்த ஊரில் உள்ள பெரும்பாலானோர் தங்களுடன்மில்லில் வேலை பார்க்கும் நண்பர்கள் தானே என நினைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ இவர்களை தாக்க.. வேனில்இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில் டிரைவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். அது-போல மதுரை சுற்றுச்சாலையில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஆறு இளைஞர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

தேவர் நூற்றாண்டையொட்டி (2007-ல்) தமிழக காங்கிரஸ் தலைவராகஇருந்த கிருஷ்ணசாமி பரமகுடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் வழியில்கீழ்கன்னிச்சேரி என்ற இடத்தில் குத்தப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்தார்.அதுதான் தேவர்ஜெயந்தியையொட்டி நடந்த மிகப்பெரிய வன்முறையாகக்கருதப்பட்டது. ஆனால் இந்தாண்டு பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இது போன்ற சம்பவங்களும் உயிரிழப்புகளும் எங்கு நடந்தாலும் எந்தசாதியினருக்கு ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. ஜெயந்திக்கு அமைப்புரீதியாக வந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.  சம்பந்தப்பட்ட சாதியின் மீதான  வெறுப்பை தேவர் மீது திருப்பியிருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.. ஓட்டு அரசியலுக்-காக தேசிய தலைவர்களை சாதிய தலைவர்களாகஆக்கிவிட்டார்கள்.. மேலும் கடந்தாண்டு பரமக்குடியில் தலித்துகள் மீதானதாக்குதல் உயிர்பலி என்பதெல்லாம் போலீசுக்கும் அவர்களுக்கும் இடையேயானமோதலால் ஏற்பட்டது. அதற்கும் தேவர் ஜெயந்திக்கும் முடிச்சு போடுவது சரியல்ல..”  என்றார் நவமணி.

ஆனால் பரமகுடி தொடர்பான  நவமணியின் வாதத்தை மறுக்கிறார் வழக்கறிஞர் சி.சே. ராசன். ‘மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின்’ மாநில அமைப்பாளரான இவர் பரமகுடி கலவரம் தொடர்பாக களஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தவர். அவரிடம் பேசினோம்...

“பரமக்குடி சம்பவத்தைப் பற்றிச் சொல்வதென்றால் முத்துராமலிங்கத் தேவருக்கு மட்டுமே குருபூஜை செய்யப்பட வேண்டும் என்றும், அதற்குச் சமமாக வேறு எவரும் ‘குருபூசை’ என்ற பெயரில் சொல்லக்கூடாது என்ற எண்ணம் முக்குலத்தோர் மத்தியில் வலுவாகஇருந்து வருகிறது. எனவே இம்மானுவேல் சேகரன் பெயரில் நடக்கும் ‘குரு பூசை’அவர்களை எரிச்சலடைய செய்தது. அடுத்த இரண்டு நாட்களில் (09.09.2011) பள்ளி மாணவன் கொலைஆதிக்க சாதியினரின் மனவோட்டத்தை உறுதி செய்தது. இதன்  தொடர்ச்சியாகத்தான் காவல்துறையினரும் அவர்களுக்கு துணை போனார்கள். பரமகுடியில் துப்பாக்கிச் சூட்டில் ஆறு உயிர்கள் பலியாயின. அப்படியிருக்கையில் பரமகுடி கலவரத்தை போலீஸ் - தலித் இடையே மோதல் என்று மட்டும் தனித்து எப்படிக் கூறமுடியும்? அதன் பின்புலத்தையும் பார்க்க வேண்டாமா? ” எனக் கேள்வி எழுப்பினார் சி.சே. ராசன்.

தற்போதைய சம்பவத்தில் இறந்தவர்கள் பலர் இளைஞர் கள். இது போன்ற வன்முறையால் உயிரிழப்பு என்பது வேதனை  தருவதோடு இதை ஏற்றுக்-கொள்ளவும் இயலாது. அதே நேரத்தில் காவல்துறை கடைபிடித்த மௌனம்தான் இந்த சம்பவத்துக்குக் காரணம்.

மருதுபாண்டியர் குருபூஜையின் போது எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொல்லப்-பட்ட-வுடன் காவல்துறையினர் ஆத்திர-மடைந்-தார்கள். மறுநாள் என்கவுன்டர் என்ற பெயரில் போலிமோதல் சாவு நிகழப்போகிறது என்ற அச்சம் பலருக்கு இருந்தது. ஆனால் காவல்துறைரொம்பவே தந்திரமாக இதை வேறுவிதமாக நடை-முறைப்படுத்தினார்கள். அதாவது, தேவர் குருபூஜைக்கு ஏற்படுத்தியிருந்த கனத்த கெடுபிடிகளில் கவனம்செலுத்தாமல் தவிர்த்தார்கள். இது இருசாதிகளுக்கு இடையே-யான மோதலாகஉருவெடுத்தது.” என்றும் விளக்கம் அளிக்கிறார் அவர்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க ஜெயலலிதா உத்தர-விட்டுள்-ளார். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதுவும் தலித் மக்களிடையே விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ‘கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் பிறந்த தின விழாவில் போலீசாரின் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தாழ்த்தப்பட்டவர்கள் ஆறு பேர் குடும்பத்-துக்கு தலா 2 லட்சம் மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கிய தமிழக அரசு தற்போது இறந்தவர்களின் ஆதிக்க சாதித் தகுதிக்கேற்ப 5 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளது. இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது எப்படி?” என்கிறார்கள் திருவிழாவில் பெற்றோரை தொலைத்து-விட்டு தவிக்கும் குழந்தை போன்றிருக்கிறது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் நிலை. கலவர மேகம் இன்னும் முற்றிலுமாகக் கலையவில்லை. முதல்வராக ஜெயலலிதா அமர்ந்தால் சட்டம் ஒழுங்குமுழுமையாக பாதுகாக்கப்படும் என்று பொதுவாக ஒரு கருத்து இருந்தது.இப்போது அதில் அவருக்கு சறுக்கல்.

கொடியங்குளம் கலவரம் தொடங்கி இன்றுவரை நொடிந்துபோயிருக்கும் தென் மாவட்டங்களை மீண்டும் ஒரு இரத்தசகதிக்குள் ஆழ்த்த வேண்டுமா யோசிக்க வேண்டிய தருணமிது. ஏனெனில் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டு தவிக்கும் நிலையில் இருக்கிறார்கள் பொதுமக்கள்.

டிசம்பர், 2012.