சிறப்புக்கட்டுரைகள்

குதிரையின் மதிப்பு ஏழரை கோடி!

மருத்துவர் எஸ்.ஜெயபாரத்

குதிரைப்பண்ணைகளில் வேலைகள் அதிகாலை ஐந்தரை மணிக்கே தொடங்கிவிடும். அன்று எனக்கு நாள் சரியில்லை போலும். இல்லையெனில் குதிரையிடம் உதை வாங்கி பத்தடி தள்ளிப்போய் விழுந்திருப்பேனா?

பல லட்சங்களில் முதலீடு செய்து வாங்கப்படும் பெண் குதிரைகள் சுமார் ஆறு முதல் ஏழு வயது வரை பந்தயங்களில் ஓடும். அதன் பின்னர் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படும். அவைகள் குட்டி போடாவிட்டால், கருத்தரிப்பதில் பிரச்னை என்றால் அந்த குதிரைகளை வீண் செலவு என்றே பண்ணைகளில் கருதுவார்கள். ஏனெனில் அவற்றை பராமரிக்க ஆகும் செலவு. சுமார் ஏழெட்டு குட்டிகள் போட்ட பிறகு, அந்த பெண்குதிரைகளுக்கு ஓய்வளிக்கப்பட்டுவிடும். ஒரு பெண் குதிரை சரியாக  கருத்தரிக்கவில்லை என்பதால் சிகிச்சைக்கு என்னிடம் வந்திருந்தது. ஏனெனில் குதிரைகளின் இனப்பெருக்கத் துறையில்தான் நான் செயல்பட்டு நல்ல பெயர் வாங்கி இருந்தேன்.

வழக்கம் போல் அதிகாலை ஐந்துமணிக்கு  ‘எஸ்கபேட்' என்று பெயர்கொண்ட அந்த அழகான குதிரை வந்து நின்றது. அதை மலக்குடல் வழியாக பரிசோதனை செய்யவேண்டும். கருப்பையின் நிலை எப்படி இருக்கிறது என்று உணர்வதற்காக. நான் கையுறைகளைப் போட்டு

ஆயத்தமாகி, அந்த பரிசோதனையைச் செய்யத் தொடங்கினேன். டமால் என்று ஒரு சத்தம். நெஞ்சில் இடி இடித்ததுபோல் ஒரு தாக்குதல்! நான் பத்து அடிகள் பறந்துபோய் விழுகிறேன். எஸ்கபேட் விட்ட உதை! உடனே வலியோடு இருந்த என்னை மருத்துவமனைக்குத் தூக்கிப்போய் பரிசோதித்ததில் நெஞ்செலும்புகள் உடைந்திருப்பது தெரிய வர, படுக்கையிலேயே ஒரு மாதம் இருக்கவேண்டியதாயிற்று!

நலமாகி வந்த பின்னர், முதல் வேலையாக 'எஸ்கபேட்' எங்கே? என்று கேட்டதுடன், அதை மீண்டும் அதேபோல் பரிசோதனை செய்தேன். இம்முறை அது எளிதாக உதைக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். சிகிச்சையைத் தொடர்ந்தேன்.

அதுவரை குட்டி போட்டிராத 'எஸ்கபேட்' எங்கள் பண்ணையிலேயே சில குட்டிகளை ஈன்றது!

குதிரைகள் தொடர்பான மருத்துவராக ஆகவேண்டும் என்ற எண்ணம் கல்லூரியில் குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டபோதே எனக்கு வந்துவிட்டது. அங்கே அதிகாலை 4 மணிக்கே எழுந்து குதிரையேற்றத்தில் ஈடுபடுவோம். புதிய, கடினமான குதிரைகள் வரும்போது அவற்றை பழக்குவதிலும் ஈடுபடுவோம். அப்படி வந்த குதிரை ஒன்றிடமிருந்துதான் முதன் முதலாக கடிபட்டேன். பிறகு அதே விலங்கு என்னுடைய மிகப்பிரியமான ஒன்றாக ஆகிவிட்டது. 1994&இல் படிப்பு முடித்தவுடன் டெல்லி அருகே குர்காவோனில் (இப்போது குருகிராம்) ஒரு குதிரைப் பண்ணையில் நேரடியாக வேலைக்குச் சேர்ந்தாகிவிட்டது. நானும் நாகேந்திரகுமார் என்கிற என் நண்பனும் இளம் கால்நடை மருத்துவர்களாக அந்த பண்ணைக்குப் போய்ச் சேர்ந்தோம். ஊருக்கு வெளியே ஆள் அரவமற்ற இடத்தில் பிரம்மாண்டமான பண்ணை. போன பின்னால்தான் அங்கே எங்களுக்கு தங்க இடம் இல்லை என்று தெரிந்தது. பண்ணைக்கு வெளியே தங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அது எப்படி? பண்ணையில் வேலை என்றால் உள்ளே தங்கினால்தானே வசதியாக இருக்கும்?

அங்கே ஒரு கோடவுன் இருந்தது. அதில் ஒரு ஓரமாக பொருட்களை வைத்துக்கொண்டேன். மரத்தடியில் இரவுகளில் தூங்கினேன். குளிப்பதற்கு ஓர் குழாய் இருந்தது. அதிகாலையில் எல்லோருக்கும் முன்பாக எழுந்து குளித்துவிட்டு, ஆடைகளை அணிந்து அமர்ந்துகொள்வோம். நான் போய்ச்சேர்ந்தது ஜூன் மாதம். சுமார் மூன்று மாதங்கள் இப்படியே வாழ்க்கை. அதன் பின்னர் பண்ணையிலேயே ஒரு அறை கட்டித் தந்தார்கள். அதில் தங்கிக்கொண்டோம். இதற்கிடையில் எங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதால் விசிட்டிங் கார்டு எல்லாம் அடித்து நண்பர்களுக்கு ஜம்பமாக அனுப்பிவைத்திருந்தேன். இதை நம்பி டெல்லிக்கு ஒரு வேலையாக வந்திருந்த நண்பன் எங்கள் பண்ணைக்கு வந்தான். எங்கள் நிலையைப் பார்த்து கழுவி கழுவி ஊற்றிவிட்டுப் போய்விட்டான்.

இப்போது நினைத்துப்பார்த்தால் மலைப் பாகத்தான் இருக்கிறது! புதிதாக ஒரு துறையில் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இதுபோன்ற வசதிக்குறைவெல்லாம் தாங்கிக்கொண்டோம்!

எனக்கு ஒரு வார்த்தை இந்தி தெரியாது என்பதால் ஆரம்பத்தில் மிகச் சிரமம். பிறகு ஒரு மாதத்தில் கட்டாயத்தினால் இந்தி பேசக்கற்றேன். இப்போதுவரை எனக்கு அதைப் பேசவே தெரியும். படிக்கத்தெரியாது!

குதிரைகளுக்கான சிகிச்சைகள், பராமரிப்புகள் ஆகியவற்றை மெல்ல அங்கே கற்றுக்கொண்டேன், சுமார் 5 மாதங்கள் மட்டுமே ஒரு மருத்துவரின் கீழ் பணிபுரிந்தேன். பின்னர் என்னையே அங்கு மூத்த மருத்துவர் என்ற பணிநிலையில் அமர்த்தி

விட்டார்கள். ஆனால் ஒரு சவாலுடன்.

பொதுவாக குதிரைப்பண்ணைகளில்  இனப்பெருக்கம் செய்வதற்காக நிறைய பெண் குதிரைகளையும் ஒன்றிரண்டு ஆண் குதிரைகளையும் வைத்திருப்பார்கள். அந்த ஆண்டு பண்ணையின் இனப்பெருக்கத்தை மருத்துவர் என்ற  முறையில் நான் கையாளவேண்டும். சரியாகச் செய்தால் அங்கே மூத்த மருத்துவர் என்ற நிலையில் தொடரலாம். இல்லையென்றால் பணியிறக்கம். அப்போதெல்லாம்

செல்போன்கள், இணையங்கள் இல்லை. யாரிடமும் கேட்டு எளிதாக அறிந்துகொண்டு செயல்பட முடியாது. குதிரைகளின் இனப்பெருக்க சிகிச்சை குறித்து ஒரே ஒரு புத்தகம் மட்டும் கையில் இருந்தது. அதைப் படித்து மெல்ல கற்றுக்கொண்டேன். அந்த ஆண்டு பண்ணையில் இனப்பெருக்க சீசன் சிறப்பாக நிறைவேறியது. அத்துடன் என் கற்றலும் அறிதலும் சிறந்தன.

அச்சமயம் அங்கிருந்த  'சர்ப்ரூஸ்' என்ற ஆண் குதிரைக்கு  ‘கோலைட்டிஸ்' (ஞிணிடூடிtடிண்)  என்ற நிலை உருவானது. சுமார் 20 நாட்கள் அதற்கு அருகிலேயே இருந்தேன். நாள் முழுக்க அதற்கு பக்கத்தில் இருந்து  சிகிச்சை செய்யவேண்டும். ஏதாவது சிறப்பு நிபுணரிடம் கேட்கவேண்டுமென்றால் ஐந்து கிமீ பைக்கில் போனால்தான் டெலிபோன் கிடைக்கும். அங்கிருந்து ட்ரங்க் கால் போட்டு பேசி, கையில் கொண்டுபோன குறிப்புகளை விளக்கி, அவர்கள் சொல்லும் யோசனைகளை செய்துபார்க்கவேண்டும். சர்ப்ரூஸுக்கு நான் செய்த சிகிச்சைகள் பலனளித்து அது குணமாகிவிட்டது. இந்த சிகிச்சையும்  நிர்வாகத்திடம் நல்ல பெயரை வாங்கித்தந்தது.

இதே ‘கோலைட்டிஸ்' நோய்தான் நான் பண்ணைகளில் முழுநேரமாக வேலை செய்யவேண்டாம் என்று வெளியேறவும் காரணமாக அமைந்தது. அது பற்றிக் கடைசியில்.

பண்ணைகளில் ஜனவரி முதல் ஜூன் வரை குதிரைகள் குட்டிஈனும் (ஞூணிச்டூடிணஞ் ண்ஞுச்ண்ணிண) காலம். ஜனவரி ஒன்றாம் தேதி உலகமே பார்ட்டிகளில் மூழ்கி இருக்கும்போது நாங்கள் பண்ணைகளில் இரவுகளில் குதிரைகளுக்கு பிரசவம் பார்த்துக்கொண்டிருப்போம். பெரும்பாலும் இரவுகளில்தான் அவை குட்டி ஈனும். ஆகவே குதிரைப் பண்ணை மருத்துவன் என்றால் அவனுக்கு நேரம் காலம் கிடையாது. வீடு பண்ணைக்குள்தான் இருக்கும் என்றாலும் போய் குழந்தை மனைவியைப் பார்த்துவரக்கூட முடியாது. சுமார் நான்கு மாத காலம் இந்த வேலையிலேயே போய்விடும்.

அதிலும் சில சமயம் குட்டி வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் உண்டு. உள்ளே கையைவிட்டு குட்டியை இழுக்கும்போது கை மாட்டிக்கொண்டால் முறிந்துவிடும் அளவுக்கு குதிரையின் கருப்பை தசைகள் பலத்துடன் அழுத்தம் தரும். சிலசமயம் கருப்பையில் இருந்து குட்டியை வெளியே இழுக்க, பத்து பேர் வரை கயிற்றைப் பிடித்து தம் கட்டி இழுத்த சம்பவங்களும் உண்டு. இப்போது சுலபமாக சிசேரியன்கள் செய்யப்பட்டுவிடுகின்றன. இருப்பினும் வேலைக்குச் சேர்ந்த ஆரம்பகால ஆண்டுகளில் எதிர்கொண்ட குட்டி ஈனும் காலப் போராட்டங்கள் மறக்க முடியாதவை.

குதிரைகள் ஒருவிதமான மேன்மை குணம் கொண்ட கம்பீர விலங்குகள். அவற்றுடன் நெருங்கிப் பழகுகிறவர்கள் அவற்றின் குணாதிசயங்களுக்கு அடிமை ஆகிவிடுவோம் என்று சொல்லலாம். பூனேவில் என் வீட்டுக்கு அருகிலேயே டிரோல் என்ற ஆண்குதிரையின் கொட்டகையும் உண்டு. அதற்கு என்மீது பிரியம் அதிகம். வீட்டில் நான் இருந்தால் அது ஒரு நாய்க்குட்டி போல் ஓடி வந்துவிடும். பாடல்கள் போட்டால் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கும்.

கோலிக் என்று ஒரு வயிற்றுவலிப்பிரச்னை குதிரைகளுக்கு உண்டு. பண்ணைகளில் அதுதான் பெரிய பிரச்னை. உடனடியாக நள்ளிரவானாலும் ஓடிப் போய் சிகிச்சை அளிக்கவேண்டும். வலியால் சில குதிரைகள் புரண்டுகொண்டிருப்பதைப் பார்க்க  சகிக்காது. இப்படி ஒரு 'கோலிக்' பிரச்னையில் டிரால் தன் 20& ஆவது வயதில் இறந்தான். அவன் இறந்தது ஆகஸ்ட் 21. ஆகஸ்ட் மாதம் வந்தாலே எனக்கு மனம் நடுங்க ஆரம்பித்துவிடும். அந்த அளவுக்கு அவனுடன் எனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு இருந்தது!

குர்காவோனில் இருந்து புனேவுக்கு மாற்றலாகி வந்து சேர்ந்த பண்ணை இந்தியாவில் 47வது இடத்தில் இருந்தது. அதை நாட்டின் முதல் நான்கு பண்ணைகளில் ஒன்றாக மாற்றும் அளவுக்கு வெற்றிகரமாகப் பணிபுரிந்தேன். இங்கேதான் பல நிர்வாக விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் பண்ணை. வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களில் அந்த நிறுவனம் திவால் ஆகிவிட்டது. ஆகவே இந்த பண்ணையை வேறொரு கார்ப்பரேட் நிறுவனம் எடுத்துக் கொள்வதாக இருந்தது. அதற்கு எட்டு மாதங்கள் ஆயின. அதுவரை சம்பளம் இல்லாமல், குறைந்த பட்ச ஆட்களை வைத்து சமாளித்தோம். பல ஆண்டுகள் பணியில் நிறைய அனுபவங்கள்; இத்துறையில் நற்பெயர் எல்லாம் ஈட்டியாயாகிவிட்டது!

இந்த பண்ணையில் அயர்லாந்தில் இருந்து இறக்குமதியான ஒரு ஆண்குதிரை இருந்தது. இந்திய மதிப்பில் இது ஏழரை கோடி ரூபாய் விலை உள்ளது! அயர்லாந்து இதுபோன்ற உயர் ரககுதிரைகளுக்குப் பெயர் போன நாடு. அந்நாட்டின் பொருளாதாரத்தில் குதிரைப் பண்ணைகளுக்கு முக்கிய இடம் உண்டு! (இந்த குதிரையுடன் ஒரு பெண் குதிரையை ஜோடி சேர்க்கவேண்டும் என்றால் இங்கே சுமார் 3 லட்சம் கட்டணம்! இதற்கே அசந்துவிடாதீர்கள். இந்த குதிரையின் அப்பா அயர்லாந்தில் மிகப் பிரபலமான குதிரை. அங்கே இதனுடன் பெண் குதிரையை இணை சேர்க்க வேண்டுமானால் 500,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம்!)

இந்த  பொலிகுதிரைக்கு கோலைட்டிஸ் வந்துவிட்டது! பத்துநாட்கள் போராடினேன். சர்வ தேச நிபுணர்கள் வீடியோ கான்பரஸ் மூலம் வந்து ஆலோசனைகள் வழங்கினார்கள். ஆனாலும் அது இறந்துவிட்டது! இது என்னை மிகவும் உணர்வு ரீதியாகப் பாதித்தது! ஆனால் நிர்வாகமோ இன்ஸூரன்ஸ் செய்யப்பட்ட பணத்தில்தான் குறியாக இருந்தது! இந்த சூழலில் எனக்குள் இருந்த ஏதோ ஒன்று உடைந்துவிட்டது! இது வரை குதிரைப் பண்ணைகளில் முழு நேர மருத்துவராக இருந்துவிட்டோம் இனிமேல் வெளியே இருந்து

ஆலோசனை சொல்லக்கூடிய மருத்துவராக மாறுவோம் என வெளியேறிவிட்டேன்!

(எஸ்.ஜெயபாரத், பூனாவில் பணிபுரியும்

கால்நடை மருத்துவர்)

செப்டெம்பர், 2020.