சிறப்புக்கட்டுரைகள்

கிளர்ந்து எழும் தலித் முதலாளித்துவம் – 3000 தலித் முதலாளிகள்

செங்குட்டுவன் தம்பி

இந்திய தலித் வர்த்தக மற்றும் தொழில்துறைக் கழகம் என்ற அமைப்பின் தலைவர் மிலிந்த் காம்ப்ளே. ஒரு தலித் ஆகப் பிறந்து, குடும்பத்தில் முதல் முதலாகத் தொழில் தொடங்கி முன்னேறியவர். பொறியியல் படித்திருந்தாலும் இடஒதுக்கீட்டில் வேலைக்குச் செல்ல விரும்பாமல் சுயமாகத் தொழில் செய்து முன்னேற விரும்பியவர் இவர்.  தொழில்துறையில் முன்னேறியதை அடுத்து தன்னைப் போன்ற தலித் தொழில் முனைவோரை இணைத்து இந்திய தலித் வர்த்தக மற்றும் தொழில்துறைக் கழகத்தையும் ஆரம்பித்தார். இந்தியாவில் 11 மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் இருக்கின்றன. இதில் 3000 தலித் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் மொத்தமாகப் புரளும் பணத்தின் மதிப்பு 25,000 கோடி! புனேயில் இருக்கும் இவரிடம் அந்திமழைக்காகப் பேசினோம்.

ஒரு தலித் தொழிலதிபராக நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன?

சாதியுடன் தொடர்புடைய சிக்கல்கள்தான். பலருக்கு தலித்துகளுடன் தொழில் செய்ய விருப்பம் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கஷ்டம். ஆனால் இதெல்லாம் இப்போது மாறிவருகிறது.

சமூகப் பிரச்னையில் இருந்து மீள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொழில்முனைவோராதல் ஒரு நல்ல வழியா?

ஆமாம். நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதிய அடையாளங்களை உடைக்க இது உதவுகிறது. முதலீடும் உள்நாட்டு, வெளிநாட்டு பொருளாதார அமைப்புகளும் தலித்துகளை தலித்தாகப் பார்க்காமல் பொருளாதார பிரதிநிதிகளாக, தொழிலதிபர்களாகப் பார்ப்பதற்கான ஒரு பொதுவெளியை உருவாக்குகின்றன. சாதியை  ஒழிக்க முதலீடு ஒரு முக்கியமான வழி என்று நாங்கள் நினைக்கிறோம்.

இந்திய தலித்  வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கழகத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

அம்பேத்கர்தான் எங்களுக்கு வழிகாட்டி. அவருடைய உழைப்பைப் பின்பற்றி பிற்காலத்தில் வந்த அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்விபுகட்டும் பணியைச் செய்தன. ஆனால் அவர்களை பொருளாதார மேம்பாடு அடையவைக்கும் கொள்கைகள் இல்லை. இதை அடுத்து உருவானதே இந்தக் கழகம். தலித்களிடம் தொழில் தொடங்கும் எண்ணத்தை உருவாக்க விரும்புகிறோம். ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முன்னோர்கள் நினைத்தே இராத பல விஷயங்களை அவர்களை சாதிக்க உதவி செய்கிறோம்.

எப்படி?

இந்திய மைய நீரோட்ட சமூகத்துக்குப் பங்களிக்க இந்திய தலித் சமூகம் விரும்புகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தாங்களும் ஒரு பங்காக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் உருவாக்கும் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி, ஜிடிபிக்கு பங்களித்து இந்திய பொருளாதாரத்தில் வலிமையான சக்திகள் ஆகலாம். கடந்த பத்தாண்டுகளில் எங்கள் அமைப்பு சார்பாக வர்த்தக கண்காட்சிகளை நடத்தி தொழில்துறையின் அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்யும் விதத்தில் தலித் தொழிலதிபர்கள் விளங்குவதைக் காட்டியிருக்கிறோம். பெருநிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்கை உருவாக்கத்தில் பங்கு பெறுகிறோம். நான் திட்டக் குழு உறுப்பினர். சி.ஐ.ஐ, சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகளுக்கான தேசிய வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளேன். எல்லா இடங்களிலும் தலித்துகளின் குரலை ஒலிக்கச் செய்கிறோம். டாடா நிறுவனத்துடனான  எங்கள் உறவு சிறப்பானது. தலித் வெஞ்சர் கேபிடலையும் உருவாக்கி உள்ளோம். ஜூன் ஆறு அன்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தொடக்கி வைத்தார். இது தலித்துகள் நடத்தும் நிறுவனங்களுக்கு உதவும்.

தலித் தொழிலதிபர்களுக்கு தனியாக தொழில்துறை அமைப்பு தேவையா?

தேவைதான். இந்த அமைப்பில் இப்போதுதான் தொழில் தொடங்கி இருப்பவர்கள் முதல் 1000 கோடிரூபாய்க்கு மேல் பணம் புரளும் தொழில் செய்பவர்கள் வரை உள்ளனர். இவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறோம். பல வெற்றிக்கதைகளை இணைக்கிறோம். அத்துடன் தொழில் உலகில் தலித்துகளுக்காக ஒருங்கிணைந்த குரல் தேவை. தலித்கள் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள். எல்லா மட்டத்திலும் அவர்களின் குரல் கேட்கப் படவேண்டும்.

தொழில் தொடங்குவதில் தலித்துகளுக்கே உரிய பிரச்னைகள் என்ன?

முதலீடு ஈர்ப்பதில் தலித் தொழிலதிபர்களுக்கு முக்கிய பிரச்னைகள் உள்ளன. கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அதற்காக சொத்துகள் உள்ளனவா என்று பார்க்கின்றன. சமூக நிலையைக் கவனத்தில் கொள்வதில்லை. தலித்களிடம் சொத்து இருப்பதில்லை. இதனால் தலித்கள் புதிதாகத் தொழில் தொடங்குவதில் முட்டுக் கட்டை போடப்படுகிறது.

உங்கள் வெஞ்சர் கேபிடல் இதில் உதவுமா?

இளம் தலித் தொழிலதிபர்களை உருவாக்குவதே இந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு நிதியின் நோக்கம். மேலே சொன்ன பிரச்னைகளை இந்த நிதி எதிர்கொள்ளும். 25 சதவீதத்துக்கும் மேலாக வருவாயை எதிர்நோக்கும் அதே சமயம் சமூகத்தில் நான்குவிதமான விளைவுகளை ஏற்படுத்த விரும்புகிறோம். நிதி பெறுதல், பொருளாதார வலிவு பெறல், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவையே அவை. 2012-ஆம் ஆண்டின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருள்கள் வாங்கும் கொள்கைப்படி இன்னும் மூன்று ஆண்டுகளில் அரசுகள் வாங்கும் பொருட்களில் 4% தலித் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப் படவேண்டும். இதன்மூலம் மட்டுமே 17,000 கோடி ஆண்டு சந்தை உருவாகி உள்ளது. இதை தலித் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் உருவாக்கி உள்ள நிதியில் பொதுத்துறை நிதிநிறுவனங்கள், வங்கிகள்,எல்,ஐ.சி போன்றவற்றை முதலீடு செய்ய வைக்க உதவுவதாக நிதி அமைச்சரும் ஆர்வம் காட்டினார்.

டெல்லியில் தலித் நிறுவனம் ஒன்றுடன் டாடா கூட்டு முயற்சியில் ஈடுபடுவது பற்றி?

தலித் முதலாளித்துவத்தில் புதிய அத்தியாயம் உருவாகிறது. மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான டாடா, ஒரு தலித் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது அனைவருக்கும்  ஒரு முக்கிய செய்தியைத் தருகிறது. தலித் தொழில்நிறுவனங்களின் தயார் நிலையை அது உணர்த்துகிறது.  

ஜூலை, 2013.