சிறப்புக்கட்டுரைகள்

காற்றைப் போல பயணி!

எஸ்.ராமகிருஷ்ணன்

கனவைப்பற்றி எழுதுவெதன்பது கனவைப் பற்றிய நினைவுகளை எழுதுவதே. பயணத்தைப் பற்றி எழுதுவதும் அப்படியே.

பயணத்தின் போது கையில் குறிப்பு நோட்டு, கேமிராவுடன் ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டு படமெடுத்து எழுதுவது பயண எழுத் தல்ல. 

 பயணத்தில் நாம் புதிது புதிதாக அனுபவங்களைப் பெறுகிறோம். புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. உலகைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்கள் உருமாறத் துவங்குகின்றன. காணும் இடங்களை வியப்பதுடன் சிறகடித்து அகன்ற வானில் பறக்க துவங்குகிறோம்.

 பயணம் என்பது வெறுமனே ஓரிடம் விட்டு ஓரிடம் செல்வதில்லை. நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளை திறந்துவிடுவதே பயணம். 

பயமும் தேவையற்ற கற்பனைகளுமே பயணம் செய்ய தடையாக இருக்கின்றன. பத்திரமாக போய் வரவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு அதிகம் கொண்டவர்களால் வீட்டிலிருந்து வெளியே போய்வரவே முடியாது. உண்மையில் நாம் பயப்படுமளவு உலகில் ஒன்றும் நடந்துவிடாது. தயக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு குறைவான உடைகளுடன் விரிந்த மனதுடன் பயணம் துவங்குங்கள். அப்போது உங்கள் நாட்கள்  நிச்சயம் மகிழ்ச்சியுடையதாக மாறும். 

நான் அப்படி தான் ஊர் சுற்றத்துவங்கினேன். காற்றைப் போல இலக்கில்லாமல் அலைந்து கொண்டேயிருக்க முடியாதா என்ற ஏக்கம் இப்போதும் எனக்குண்டு. ஒரே இடத்தில் வாழ்நாள் எல்லாம் வேரூன்றிவிட்ட வருத்தத்தை போக்கத் தான் மரங்கள் பறவைகளுக்கு இடம் தருகின்றது. சென்று வந்த ஊர்களைப் பற்றி, சுற்றி அலைந்த அனுபவத்தைப் பற்றி பறவைகளின் வழியே மரம் அறிந்து கொள்கிறது. 

அந்த காலத்தில் மன்னர்கள் இப்படி தான் செய்வார்களாம். மார்கோ போலோ கூட தனது நீண்ட கடற்பயணத்தை சீனப் பேரரசன் குப்ளாய்கானிடம் விவரித்த போது மன்னர் தான் இருந்த இடத்திலிருந்தே தொலைதூரங்களை கண்டறிந்தது போலிருக்கிறது எனப்பாராட்டினார் என்கிறார்கள். 

ஒரு காலத்தில் கடலோடிகள் புதிய நிலம் தேடி பயணித்துக் கொண்டேயிருந்தார்கள். வருஷக்கணக்கில் அந்த பயணம் நீண்டது. திசையறியாமல் அலைந்த பயணமது. பின்பு விஞ்ஞானிகள் புதிய உயிரினங்களை தேடி தீவு தீவாக பயணம் செய்தார்கள்.  திசை மானி வந்த பிறகு பயணத்தின் நோக்கம் மாறியது. 

கடலிலும் நிலத்திலும் வானிலும் மனிதர்கள் வாகனங்களை செலுத்த ஆரம்பித்தபிறகு உலகம் சுருங்கத்துவங்கியது. இன்று பூமியின் ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு போவதற்கு ஒரு நாள் போதும். ஆகாயவழியில் எளிதாக கடந்து போய்விடலாம்.  

வணிக காரணங்களுக்காக பயணம் செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. அப்படி தேசம் விட்டு தேசம் சென்றுவந்த வணிகர்கள் தங்கள் அனுபவங்களை எழுத்தாக்கியிருக்கிறார்கள். கிரேக்கத்திலும் ரோமிலும் நிறைய பயணநூல்கள் எழுதப்பட்டுள்ளன. பின்பு கடலோடிகள் தங்கள் அனுபவங்களை எழுதினார்கள். போர்த்துகீசீய கடலோடிகளின் குறிப்புகள் சுவாரஸ்யமானவை. 

மார்க்கோ போலோ எழுதிய பயணக்குறிப்புகள் சீனாவிற்கு சென்று வந்த அனுபவத்தை விவரிக்கின்றன. இதை மார்க்கோ போலோ எழுதவேயில்லை என்றொரு சர்ச்சை இருந்து வருகிறது. சிறையில் அடைக்கபட்ட மார்க்கோ போலா இந்த அனுபவங்களை நண்பர் ஒருவருக்கு சொன்னார். அவரே இதை எழுதியவர் என்கிறார்கள். தற்போது நெட்பிளிக்ஸ் சேனலில் மார்க்கோ போலா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் வரும் மார்க்கோ போலா பெரும் போர்வீரன். நாம் அறிந்த வரலாற்று செய்திகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது போலோ சீரியல்.  

என்னை பயணம் செய்ய தூண்டியது ராகுல சாங்கிருத்தியாயனின் ஊர் சுற்றிப்புராணம் என்ற புத்தகம். கையில் காசில்லாமல் ராகுல்ஜி சுற்றியலைந்த நினைவுகளை வாசித்த போது அது போல நாமும் போகலாமே என்று தான் கிளம்பினேன். 

எனது பதினேழு வயது முதல் இன்று வரை பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். புகழ்பெற்ற இடங்களை காண்பதற்காக நான் ஒரு போதும் பயணம் போவதில்லை. சுற்றுலா பயணி போல புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்வதில்லை. எனது பயணத்தில் பத்தில் ஒரு பகுதியை மட்டுமே இதுவரை எழுதியிருக்கிறேன். காரணம் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. எழுதவும் இயலாது.

ஆங்கிலத்தில் பயணக்கட்டுரைகள் எழுதுபவர்களில் Paul Theroux, Pico Iyer, Lawrence Durrell, William Dalrymple ஆகிய நான்குபேரையும் விரும்பி வாசிப்பேன். இதில் வில்லியம் டால்ரிம்பிள் இங்கிலாந்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர், பத்திரிகையாளர், இவர் ஆராய்ச்சிக்காக பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்று நூல்களை எழுதுகிறவர். அத்துடன் சமகால வாழ்க்கை குறித்து பயணத்தின் வழியே நுணுக்கமான பதிவு செய்பவர்.

காந்தி சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அந்த கடற்பயணம் பற்றியோ வழியில் கண்ட இயற்கை காட்சிகள் பற்றியோ, லண்டனின் அற்புதமான பருவகாலம் பற்றியோ, தேம்ஸ் நதியின் எழில் மிகு காட்சிகள் பற்றியோ எதுவும் எழுதியதேயில்லை. 

நம் காலத்தின் மிகப்பெரிய பயணி மகாத்மா காந்தியே. அவரே இந்தியா முழுவதும் சுற்றி யலைந்தவர். அவரது நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனால் விமானம் தவிர எல்லா வகையான வாகனங்களையும் உபயோகித்து காந்தி பயணித்திருக்கிறார். அதிலும் சிறப்பாக நீண்ட தூரம் நடந்தே போயிருக்கிறார் என்பது தனித்துவமானது.  

எழுத்தாளர்கள் பலரும் நீண்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் ஐரோப்பாவில் பயணம் செய்து அதை பதிவு செய்திருக்கிறார்கள். செகாவ் சைபீரியாவிற்கு பயணம் செய்து நூலாக்கியிருக்கிறார். மார்க் ட்வைன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். தாகூர் ஜப்பான், கொரியா, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து எழுதியிருக்கிறார். கார்க்கியின் அமெரிக்க பயணக்கதை சுவாரஸ்யமானது. பார்வையற்ற போர்ஹே கூட உலகப்பயணம் மேற்கொண்டு புகழ்பெற்ற வரலாற்று இடங்களை கண்டிருக்கிறார். 

பார்வையற்ற ஒருவர் உலகப்பயணம் மேற்கொண்டு என்ன செய்வார். புகழ் பெற்ற இடங்களில் உலவும்போது எப்படி உணருவார் என்பதை Atlas  என்ற நூலில் போர்ஹே அழகாக விளக்குகிறார். 

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா நகரங்களிலும் சிறந்தது ஜெனிவாதான். அது மகிழ்ச்சியின் நகரம். கடந்தகாலத்தின் அழகுடன் பணிவுடன் அந்த நகரம் தன்னைப் பூரணமாக ஒளிரச் செய்கிறது. பாரீஸ் போலவோ, லண்டன் போலவே தான் உலகின் பெரிய நகரம் என ஜெனிவா பெருமிதம் கொள்வதில்லை. ஜெனிவாவை தனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இறந்து போவதற்குக் கூட ஜெனிவாவிற்கே திரும்பி வர விரும்புகிறேன் என்கிறார் போர்ஹே. 

போர்ஹே ஒவ்வொரு நகரையும் தான் படித்த புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் இசைக்கலைஞர்களையும் கொண்டே அறிகிறார். அவரைக் கிளர்ச்சி அடையச்செய்வது கலைஞர்களின் வசிப்பிடங்கள், இசைக்கூடங்கள், மியூசியங்கள், மற்றும் வரலாற்றுச் சின்னங்களே. கனவுகளே அவரை வழிநடத்துகின்றன. ஏதோ ஒரு தேசத்தில் ஒரு நகரில் தான் படுத்து உறங்கினாலும் தனது கனவில் ப்யூனஸ் அயர்ஸ் மட்டுமே வருகிறது. ஒவ்வொரு நாளும் தான் ப்யூனஸ் அயர்ஸிலிருந்தே விழித்து எழுவதாகக் கூறுகிறார். இது தான் பயணத்தின் விசித்திரம்.

போர்ஹே ஒவ்வொரு நகரையும் தான் படித்த புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் இசைக்கலைஞர்களையும் கொண்டே அறிகிறார். அவரைக் கிளர்ச்சி அடையச்செய்வது கலைஞர்களின் வசிப்பிடங்கள், இசைக்கூடங்கள், மியூசியங்கள், மற்றும் வரலாற்றுச் சின்னங்களே. கனவுகளே அவரை வழிநடத்துகின்றன. ஏதோ ஒரு தேசத்தில் ஒரு நகரில் தான் படுத்து உறங்கினாலும் தனது கனவில் ப்யூனஸ் அயர்ஸ் மட்டுமே வருகிறது. ஒவ்வொரு நாளும் தான் ப்யூனஸ் அயர்ஸிலிருந்தே விழித்து எழுவதாகக் கூறுகிறார். இது தான் பயணத்தின் விசித்திரம்.

நெருதாவின் இலங்கை பயணமும் ஆக்டோவியா பாஸின் இந்திய பயணமும் கவித்துவமானவை. விசித்திர அனுபவங்களை கொண்டவை. ஓர் எழுத்தாளன் தேசம் விட்டுத் தேசம் செல்லும்போது, அவனது பார்வையில் புதிய மாற்றங்கள் உருவாகின்றன. அதற்கு அடையாளமாக ஹென்றி மில்லரைக் கூறலாம்

முன்னறியாத ஒரு இடத்தை தேடி ஓர் எழுத்தாளன் பயணம் செய்யும்போது அவனுக்கு ருசியான உணவோ, இருப்பிடமோ, வசதிகளோ முக்கியமானதில்லை. அவன் அவசரப்படுவதில்லை. வெறுமனே கண்ணால் மட்டும் பார்ப்பதால் எந்த ஒன்றையும் உணர்ந்துவிட முடியாது என அவன் அறிந்திருக்கிறான். ஆகவே அந்த நிலக்காட்சிக்கு தன்னை முற்றிலுமாக ஒப்புக் கொடுக்கிறான். ஒரு மரம் காற்றை எதிர்கொள்வது  போன்ற நிலையது. 

ஆகவே, கைவிடப்பட்ட கோட்டைகளை, இடிபாடுகளை, எவர் கண்ணிலும் படாமல் பூத்திருக்கும் மலர்களை, இனிய குரலிடும் வண்ண பறவைகளை, மேகங்களை, ஏரியை, குன்றுகளை, ஏன் தாவிச்செல்லும் வெட்டுக் கிளிகளைக் கூட எழுத்தாளன் ரசிக்கிறான். அவற்றோடு தன்னை இணைத்துக் கொள்கிறான். அடையாளம் காண்கிறான். என் பயணம் இத்தகையதே. ஆகவே தனியே பயணிக்கவே எப்போதும் விரும்புகிறேன். 

பயணத்தின் போது நம் அடையாளங்கள் யாவும் உதிர்ந்துவிடுகின்றன. பயணம் நம்மை காற்றில் மிதக்கும் இறகைப் போல எடையற்று ஆக்கிவிடுகிறது. பயணம் நமக்குள் குளிர்ச்சியை பரவவிடுகிறது. தனிமையை கரைக்க வைக்கிறது. மனிதர்களின் மீது கொண்ட கசப்பை, வெறுப்பை இயற்கை துடைத்தெறிகிறது.

முகம் தெரியாத பறவையின் இனிய குரலை கேட்கையில் மனம் கொள்ளும் உவகையில் பெருநகர வாழ்வின் கசப்புகள் கரைந்து போய்விடுகின்றன.

ஜெய்சால்மார் பாலைவனத்தில் ஒரு நாள் சூரிய அஸ்தமனத்தை பார்த்தேன். எத்தனையோ நாள் சென்னையில் இது போன்ற காட்சியை பார்த்திருக்கிறேன். ஆனால் பாலைவனத்தின் நடுவில் நின்றபடியே மறையும் சூரியனை காணும் போது தான் அதன் பிரம்மாண்டமும் உலகிலிருந்து விடைபெறும் நாடகமும் உணர்ச்சிபூர்வமாக நம்மை தாக்குகிறது. அந்தக் கணத்தில் சூரியனை கையெடுத்து வணங்கினேன். 

மேற்குவானில் சென்று சூரியன் மறைந்தது. ஆனாலும் வானில் செம்மை மறையவேயில்லை. மெல்ல ஒட்டகங்கள் வீடு திரும்ப துவங்கின. பறவைகள் அவசரமாக கடந்து போயின. வானிலிருந்து இருளின் தாரைகள் வழிந்தோட துவங்கின. கண்முன்னே உலகம் இரவின் கைகளுக்குள் அடங்கியது. நட்சத்திரங்கள் எழுந்து ஒளிர்ந்தன. குளிர்ச்சி பரவ ஆரம்பித்தது. நானொரு பிரபஞ்ச ஜீவி என்பதை அந்த நேரமே உணர்ந்தேன். பகலையும் இரவையும் வெறும் பொழுதுகளாக இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்பதை அந்த நாள் கற்றுதந்தது. நண்பர்களே, இது தான் பயணம் கற்றுதரும் பாடம். இதை முற்றிலுமாக எழுத்தில் உணர்த்திவிட முடியாது. தோய்ந்து அனுபவிக்க வேண்டும். 

கால்களில் வலுவுள்ள போதே கிளம்புங்கள். உலகம் பெரியது. உங்கள் சிறகுகளை விரித்து பறந்து பாருங்கள். உலகம் மட்டுமில்லை நீங்களும் அற்புதமாக இருப்பதை உணர்வீர்கள்.

சிறந்த பயண நூல்கள்

1.   The Great Railway Bazaar -  Paul
Theroux

2.   The Lady and the Monk: Four Seasons in Kyoto-   Pico Iyer

3.   City of Djinns - William Dalrymple

4.   Seven sacred rivers- William McKay Aitken

5.   Kon-Tiki -  Thor Heyerdahl&

6.  ஏ கே செட்டியார் பயணக்கட்டுரைகள்

7.  ஜீவன் லீலா-- - காகா கலேகர்

8.  நடந்தாய் வாழி, காவேரி- -சிட்டி, தி ஜானகிராமன்

9.  எனது பர்மா வழிநடைப் பயணம்- -சாமிநாத சர்மா

10.மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்- ஃபிரான்சுவா பெர்னியர்

மே, 2018.