சிறப்புக்கட்டுரைகள்

காய்கறிக்கடையில் கற்ற பாடம்

கே.எஸ்.புகழேந்தி

நான் மயிலாப்பூரில் அச்சகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த நேரம், திருமணம் ஆன புதிது. தினமும் காய்கறிகள் நான் தான் வாங்கி வருவேன். அன்றும் காய்கறி வாங்கச் சென்றேன். ஒரு பெண்மணி 3 முருங்கைக்காய் 2  ரூபாய் என்று கூவிக் கொண்டிருந்தார். எனக்கோ அதிர்ச்சி. காலையில் அந்தப்பக்கம் சென்றபோது அவர் 2 முருங்கைக்காய் 3 ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தவரேதான். நான் அவரிடமே சென்று கேட்டுவிட்டேன். அவர் சொன்னார் : சார் நான் காலையில் 300 ரூபாய்  வட்டிக்கு வாங்கினேன். 50ரூபாய் வட்டிக்கு எடுத்துக்கொண்டு 250 ரூபாய் தருவார்கள். மாலையில் 300 ரூபாய் கட்டிவிட வேண்டும்.மொத்தக் கடனையும் அடைத்தால்தான் அடுத்த நாள் நம்பிக்கையாகக் கடன் கொடுப்பார்கள். அதனால் முதலில் அந்த 300ரூபாய்க்கு விற்று விட வேண்டும் என்று பார்ப்பேன். இன்று 300க்கு விற்றுவிட்டேன். இனிமேல் வருவது எல்லாம் எனக்குதான். இதுவரை 200ரூபாய் வருமானம். வீட்டிற்கு போகும்போது நிச்சயம் 300ரூபாய் தேற்றி விடுவேன் என்றார். அத்துடன் காலையில் யாரும் பேரம் பேசமாட்டார்கள். மாலையில் பேரம் பேசுவார்கள். அவர்கள்  பேரம் பேசாத அளவுக்கு நான் சொல்லும் விலை இருக்கும் என்றார். எம்.ஏ பொருளாதாரம் படித்த நான் Demand & Supply பற்றி படித்திருக்கிறேன். லாபம் நஷ்டம் பற்றியெல்லாம்  படித்திருக்கிறேன். ஆனால் அதை எவ்வளவு சாமர்த்தியமாக இவர் பயன்படுத்துகிறார் என எண்ணிக்கொண்டேன்.

இதில் நான் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டேன். அப்படியென்றால் இதில் நாம் பின்பற்றக்கூடாது என்பது ஏதாவது இருக்கிறதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுவது இயற்கை. ஆம் இதில் பின்பற்றக் கூடாதது எதை என்று கடைசியில் சொல்கிறேன்.

இவர் கையில் பணம் இல்லாமல் தான் வியாபாரத்தை காலையில் தொடங்குகிறார். லாபத்துடன் மாலையில் வியாபாரத்தை முடித்துக்கொள்கிறார். ஆக வெறும் கையில் முழம் போடுகிறார். அதிக வட்டி பற்றிக் கவலைப்படவில்லை. தான் நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

நான் அந்த நொடியிலிருந்து முதல் இல்லாததால் நிறுவனத்தை விரிவுபடுத்த முடியவில்லையே, யாரிடம் கடன் கேட்பது என்ற கவலையெல்லாம் மூட்டை கட்டி வைத்தேன். எவ்வளவு வட்டியென்றாலும் கவலைப்படாமல் சகட்டுமேனிக்கு கடன் வாங்கி நிறுவனத்தில் முதலீடு செய்தேன்.

சனிக்கிழமையன்று பாக்கி வைக்காமல் நாணயமாக பணியாளர்களுக்கு வாரக்கூலி கொடுத்தாக வேண்டும் என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒரு முறை மாதம் 10% வட்டிக்கு மார்வாடியிடம் கை கடிகாரத்தை அடமானம் வைத்து கூலி கொடுத்துவிட்டு ஒருபைசாகூட கையில் இல்லாமல் வீட்டிற்கு போய் பரிதாபமாய் மௌன விரதம் காத்த காலமும் உண்டு. ஆனால் அதைப்பற்றியெல்லாம் சஞ்சலப்படாமல் கருமமே கண்ணாய் அத்தியாயத்தில் நான் சொல்லியிருந்தது போல் என் கடன் வாங்கும் தொகையை அதிகரிப்பதிலும் அதை நாணயமாகத் திரும்பக் கட்டுவதிலும் மட்டும் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.

அதற்கு பிறகு தான் இன்னொரு விஷயத்தில் கவனம் செலுத்தினேன். நான் அதிகபட்ச வட்டிக்குக் கடன் வாங்கியவர்களின் கடன்களை முதலில் அடைப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். அதற்கு மேலும் கடன் வாங்கினேன். ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. என் நாணயத்தைப் பார்த்து எனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுக்கத் தயாராயிருந்தவர்களில் குறைந்த வட்டி வாங்குபவர்களிடமிருந்து கடன் வாங்கி அதிக வட்டி கடன்களை அடைத்தேன். நமக்கு யார் கடன் கொடுப்பார்கள் என்று கலங்கி நிற்கும் நண்பர்களே, உங்களை போன்றவர்களுக்கு கடன் கொடுக்கவே பணத்தை மடியில் கட்டிக் கொண்டு கனவான்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் நாம் இந்த ஆளிடம் கொடுத்த பணம் திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. அது சரி, காய்கறி விற்ற அந்தப் பெண்மணி செய்த தவறு என்ன!

அதிக வட்டிக்கு கடன் வாங்கினார். அன்றைய பொழுதை ஓட்டுவதற்குச் சம்பாதித்தால் போதுமென்று நிறைவடைந்து விட்டார். அதனால் அவர் வாழ்க்கையின் உயரங்களைத் தொடுவது சிரமம்!

(கட்டுரையாளர் சிக்ஸ்த்சென்ஸ் நிறுவன பதிப்பாளர்)

டிசம்பர், 2015.