சிறப்புக்கட்டுரைகள்

காதலுக்கும் மரியாதை!

கதையல்ல நிஜம்!

ஜி.கௌதம்

அந்த வீட்டின் வரவேற்பறையையும் கடந்து.. சிறப்பு விருந்தினர்களுக்கான அறையில் காத்திருந்தார்கள் அவனும் அவளும். காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் பரவசமும் பரபரப்பும் கூடிக்கொண்டே இருந்தது.

 ஓரிரு நிமிடங்களில், 'வணக்கம்..' என்று காந்தக்குரல் ஒலித்தது. மின்னல் போல எதிரே வந்து நின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! அது, அவரது போயஸ் தோட்டத்து வீடு!

கடவுளைக் கண்ட பக்தன் போல எழுந்து நின்று வணங்கினார்கள் அவனும் அவளும். 'எப்டி இருக்கேம்மா..?' என ரஜினி பேச ஆரம்பித்ததுமே, வெடித்து அழத் தொடங்கினாள் அவள். ஆனந்தம் கண்களில் இருந்து ஊற்றாகக் கிளம்பியது. 

'இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே..' எனத் தேற்ற முயன்றார் ரஜினி. அவளின் தலையை வருடி, ஆசுவாசப்படுத்தினார்.

'இந்த நிமிஷத்தை எங்க வாழ்நாள் பூராவும் மறக்க மாட்டோம் சார்..' என்றான் அவன், அவளது கணவன்.

*****

கடலூர் மாவட்டம். நெல்லிக்குப்பம். தினக்கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறக்கிறான் அவன். படிப்பு பிடிக்காமல் சென்னைக்கு வந்து திரிந்து சின்னச் சின்ன கூலி வேலைகள் செய்ய ஆரம்பிக்கிறான். 18 வயதாகிறது அவனுக்கு. அவன் இப்போது மற்றவர்களின் பார்வையில் அவர். நெட்டையோ குட்டையோ.. நிரந்தர வருமானம் கிடைக்கும் ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கிறது மெப்ஸ் எனப்படும் அரசின் ஏற்றுமதி வளாகத்தில்.

ஊரில் வசிக்கும் தன் இரு தங்கைகளையும் படிக்கவைக்கும் ஆசையில் சென்னைக்கு வரவழைக்கிறான். அரைவயிறும் கால் வயிறுமாக தன்னை வருத்திக்கொண்டு, தன் தங்கைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்து அழகு பார்க்கிறான். அண்ணனைப் போலவே தங்கைகளும்! படிக்கப் பிடிக்காமல் அவர்களும் எக்ஸ்போர்ட் கம்பெனி வேலைக்குப் போகிறார்கள் ஓரிரு வருடங்களில்.

கட்டிளம் காளையாக இருக்கும் அவனுக்கு
செக்யூரிடி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கிறது. கை நிறையப் பணம் கிடைக்காவிட்டாலும் கூழோ கஞ்சியோ இரண்டு வேளைகளாவது சாப்பிட வழி பிறக்கிறது.

*****

காஞ்சிபுரம் மாவட்டம். படப்பைக்கு அருகே இருக்கும் ஓச்சேரி கிராமம். மிக ஏழ்மையான குடியானவக் குடும்பத்தில் பிறக்கிறாள் அவள். மூத்ததாக ஒரு சகோதரி.

அவளுக்கு படிப்பு நன்றாகவே வருகிறது. ஆனால்.. பத்தாம் வகுப்புக்குப் பிறகு தொடர்ந்து படிக்கவைக்க பெற்றோரிடம் பணமில்லை. அம்மா வீட்டோடு, அப்பாவோ தினசரி 'குடி'மகன்.. பாவப்பட்ட இளம்பெண்களுக்கு பள்ளிக்கூடம் நிலைக்குமா என்ன!

தேர்வெழுதிய அடுத்த மாதமே எக்ஸ்போர்ட் கம்பெனி வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள். அவளது சின்ன வருமானம்தான் அந்தக் குடும்பத்தை வாழவைப்பதற்கான ஆதாரம்!

துறுதுறு பேச்சாலும், சுறுசுறு உழைப்பாலும் வேலை பார்க்கும் இடங்களிலெல்லாம் நல்ல பெயர் கிடைக்கிறது அவளுக்கு. அவள் இப்போது அழகிய இளம்பெண்.

ஆண் - பெண் பேதம் பார்க்காமல் அதட்டலோடு பேசும் அவளுக்கு செக்யூரிடி கார்ட் ஆக பணி புரிய வாய்ப்புக் கிடைக்கிறது.

*****

புள்ளிகள் இரண்டும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிகிறார்கள். அவனும் அவளும்
நேசிக்கத் தொடங்குகிறார்கள். அது காதல் என்பதை முதலில் உணர்கிறார்கள். அடுத்து என்ன என்ற பேச்சு, திருமணத்துக்கு அச்சாரம் போடுகிறது. என் தங்கைகள் இருவரையும் கட்டிக்கொடுத்த பிறகுதான் நம் திருமணம் என்று சொல்கிறான் அவன்.

தன் வருமானத்தில் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, கடன் வாங்கி தன் அக்காவுக்கும் திருமணம் செய்து ஓய்ந்திருக்கும் அவளுக்கு உடனடியாக கல்யாணம் செய்து கொள்ள ஆசை. அதற்கு அவன் சம்மதிக்காததால் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் இருந்த ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்துக் குடித்துவிட்டு மயக்கமாகிறாள் அவள்.

மருத்துவமனையில் தெய்வாதீனமாக உயிர் பிழைக்கிறாள்.

அவர்கள் காதலிப்பது இருவரது பெற்றோருக்கும் தெரியவருகிறது. இருவர் வீடுகளிலும் கடும் எதிர்ப்பு. காரணம்.. வெவ்வேறு சாதிகள்!

இருதரப்பிலும் பேசிப்பார்ந்து ஓய்ந்து போகிறார்கள் இருவரும். வேறு வழியில்லாமல் ஒருநாள், 'நாம பிரிஞ்சுடலாமா..' என்கிறான் அவன். மறுபடியும் மருந்து குடித்து விட்டு, உயிர் பிழைக்கப் போராடுகிறாள் அவள்.

பிழைத்து வரும் அவளுக்கு அவளது வீட்டில் சம்மதம் கிடைக்கிறது. அவனது பெற்றோர் மட்டும் பிடிவாதமாகவே இருக்கிறார்கள்.

அவளை அருகே உட்கார வைத்து தங்கள் இருவரது குடும்ப சூழல் குறித்தும், பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பொறுமையாகப் பேசுகிறான் அவன்.

*****

காலம் அதன் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

விடுப்பு எடுக்காமல், ஓவர் டைம் ட்யூட்டியெல்லாம் பார்த்து பணம் சம்பாதிக்கிறான் அவன். பற்றாத குறைக்கு வெளியே கடன் வாங்குகிறான். தன் இரண்டு தங்கைகளுக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைக்கிறான்.

அவளுக்கு அதைவிடவும் அதிக பாரம்! அவளது சேமிப்பிலும், அவள் வாங்கிய கடனிலும்தான் அக்காவின் திருமணம் நடந்திருந்தது. விவசாய நிலத்தின் வேலியில் பாய்ச்சியிருந்த மின்சாரம் தாக்கி இறந்து போகிறார் அக்காவின் கணவர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, மூன்றாவது பெண் குழந்தையைப் பிரசவிக்கும் போது அக்காவும் இறந்து போகிறாள்.

தன் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்போடு அக்காவின் குழந்தைகளை வளர்க்கும் கடமையும் அவள் தோள்களிலேயே விழுகிறது. அக்காவின் மகள்களை ஓரளவு படிக்க வைத்து, இரண்டு பேருக்கு திருமணம் நடத்தி வைக்கிறாள் அவளே. மூன்றாவது பெண் இப்போது திருமணத்துக்குத் தயார்.

''அவ கல்யாணத்தையும் நடத்தி முடிச்சுவோம். நானும் என் தங்கச்சிகளின் திருமணத்துக்காக வாங்கிய கடனை அடைச்சுக்கறேன். அப்புறமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்'' என்று பொறுப்போடு பேசிய அவனது பேச்சுக்கு இப்போது மறுபேச்சு பேசவில்லை அவள். கல்யாண ஆசையைத் தள்ளிவைத்து விட்டு காசு பணம் சேர்க்கும் உழைப்பில் கவனமாக இருக்கிறார்கள் இருவரும்.

*****

அவனுக்கு இப்போது 39 வயது. அவளுக்கு 33 வயது. கல்யாண வயதெல்லாம் கடந்து பல வருடங்களாகிறது. உழைப்பதும், பணம் சம்பாதிப்பதும், கடன்களை அடைப்பதும், அவரவர் குடும்பங்களைத் தாங்குவதும் மட்டுமே இப்போது அவர்களுக்கு முக்கியம்.

2 திருமணங்களை நடத்தி வைத்து மகிழ்ந்த அவனும், 3 திருமணங்களை நடத்தி வைத்து மனநிறைவு பெற்ற அவளும்.. தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ள முடியவில்லை. கையில் பணமில்லை. வாங்கிய கடன்கள் இன்னும் அடையவில்லை.

காதலனைக் கைப்பிடிக்க இன்னும் எத்தனை காலமாகுமோ என்ற ஏக்கத்துடன் அவளும், குடும்பக் கடமைகள் முழுதையும் முடித்தபிறகுதான் நமக்குக் கல்யாணம் என்ற வைராக்கியத்துடன் அவனும்.. அவரவர் திசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறையாத காதலுடன் காத்திருக்கிறார்கள்.

*****

திடீரென அவர்களது வாழ்க்கையில் ஒரு வசந்தம்! அது சூப்பர் ஸ்டாரின் பெயரைச் சொல்லி வந்து நிற்கிறது!

பேட்ட படத்தின் ரிலீஸ் நாளை அமளி துமளியாகக் கொண்டாட வேண்டும் என ஆசைப்படும் தென்
சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் அது குறித்துப் பேச உட்காருகிறார்கள்.

''நாம ஏன் கஷ்டப்படும் ஒரு ஏழை ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது. அதுவும் எல்லா செலவுகளையும் நாமே செஞ்சு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சுக் கொடுக்கலாமே'' என்று தன் எண்ணத்தைக் கொளுத்திப் போடுகிறார் செயலாளர் சினோரா அசோக். அனைவருக்கும்
உற்சாகம் பற்றுகிறது. ரசிகர் மன்ற பொறுப்புகளில் இருக்கும் ரகு, நிகமுதீன் என்ற இரண்டு பேரும் பொண்ணு & மாப்பிள்ளை தேடும் கோதாவில் இறங்குகிறார்கள். அவர்களது தேடலில்
சிக்குகிறார்கள் அவனும் அவளும்!

போனில் விவரம் தெரிவிக்கப்படுகிறது. சம்மதம் கேட்கப்படுகிறது. அடையாள அட்டைகளை இருவரிடமும் வாட்ஸப் மூலமாகவே வாங்குகிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

உடனே கிளம்பி வாருங்கள் என போனில் சொல்லி, கார் அனுப்பி வைக்கிறார்கள். அவனும் அவளும் காரில் ஏறிப் புறப்படுகிறார்கள்.

அவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, அங்கே கல்யாணப் புடவை, வேஷ்டி, சீர் வரிசைப் பொருட்களெல்லாம் தயாராக இருக்கின்றன.

அனைத்தையும் அவர்களிடம் காட்டி, அவர்கள் சம்மதம் வாங்குகிறார்கள் ரஜினி ரசிகர்கள். அதே காரில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். காரில் பயணித்தபடியே உறவுக்காரர்கள் அனைவருக்கும் கல்யாணச் சேதி சொல்கிறார்கள் அவனும் அவளும்.

விடிந்தால் கல்யாணம்! கல்யாண வைபவம் நடக்கும் இடம்.. சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் உட்லண்ட்ஸ் தியேட்டர்!

இரவு முழுக்க கண் விழித்து ஓடியாடி வேலை செய்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். மாலை, பூ வாங்குவதற்கு ஒரு அணி ஓடுகிறது. தட்டு முட்டுச் சாமான் உட்பட சகல விதமான சீர் வரிசைப் பொருட்கள் வாங்க இன்னொரு அணி ஓடுகிறது. மேள தாளம், பேண்ட் வாத்தியங்களுக்கு ஏற்பாடு செய்ய வேறொரு அணி.

புரோகிதரைக் கூட்டிவர, பூஜைப் பொருட்கள் வாங்கிவர, சாப்பாட்டுக்கு ஏற்பாடுகள் செய்ய, சடங்கு சம்பிரதாயங்களைக் கவனிக்க, மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வர, பெண் வீட்டாரை அழைத்து வர, தியேட்டர் வாசலில் தோரணம் கட்ட, கல்யாணத்துக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கும் தனியே காலை உணவுக்கு ஏற்பாடு செய்ய, வாகன ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள, வரவு செலவுகளை கவனித்துக் கொள்ள, தாலி உட்பட முக்கியமான பொருட்களைப் பாதுக்காக்க... என ஒவ்வொரு வேலைக்கும் அணி அணியாகக் கூறுகட்டிக்கொண்டு சூப்பர் ஸ்டாரின் படை பட்டாளம் களமிறங்குகிறது. ஒரே ராத்திரியில் எல்லாம் நடந்து முடிகின்றன.

விடிய விடிய வேலை செய்த அத்தனை ரசிகர்களும் அதிகாலையில் தியேட்டரில் ஆஜர். காலை 6 முதல் 7:30 வரை ராகு காலம் என்பதால், 6 மணிக்கு முன்பே சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஆரம்பமாகின்றன.

தற்காலிக மணமேடையாக தியேட்டர் படிக்கட்டுகளிலேயே அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. அருகிலேயே இரண்டு வேன்கள். மணமகன் வாகனம், மணமகள் வாகனம் என அவற்றில் எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றன. மங்கல மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன.

7:40 க்கு கெட்டி மேளம். உரத்து ஒலிக்கும் பேண்ட் வாத்தியங்களும், ஆடவைக்கும் தாரை தப்பட்டைகளும் ஒன்று சேர, உறவினர்கள் ஆசி தூவ, ரஜினி ரசிகர்கள் விசில் தூவ.. அவளது கழுத்தில் தாலி கட்டுகிறான் அவன். கேஸ் நிரப்பப்பட்ட 3000 பலூன்கள் வானத்தில் பறக்க விடப்படுகின்றன.

சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது சுமார் 1500 பேருக்கு அந்த இடத்திலேயே. கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டு, மொய்த்துக் கிடக்கும் டிவி சேனல் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள் புதுமணத் தம்பதியர்.

*****

காதலுக்கு மட்டுமல்ல, தங்கள் குடும்பங்களுக்கும் மரியாதை கொடுத்துக் காத்திருந்த அவன், இல்லையில்லை அவரது பெயர்.. அன்பரசு. அவளது பெயர்.. காமாட்சி.

தம்பதியரை தன் வீட்டுக்கு வரவழைத்து, பட்டுத்துணிகள் பரிசாகக் கொடுத்து, வாழ்த்தி மகிழ்ந்தார் ரஜினிகாந்த்.

'எங்களுக்கு இப்படி ஜாம்ஜாம்னு கல்யாணம் நடக்கும்னு நாங்க கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லைன்னு ரஜினி சார்கிட்ட சொன்னேன். கடவுள் சித்தம்னு அவர் சொன்னார். குழந்தை பிறந்ததும் தகவல் கொடுங்க, குழந்தையோட வீட்டுக்கு வாங்கன்னும்
சொன்னார் ரஜினி சார்..' என மகிழ்ச்சியோடு
சொன்னார் அன்பரசு.

'அவரைப் பார்த்ததுமே என்னால கண்ணீரை அடக்க முடியலை..' என நெகிழ்ச்சியோடு சொன்ன காமாட்சிக்கு, சொல்லும்போதே கண்ணீர் வழிந்தது.

வறுமை கொடிது. இளமையில் வறுமை அதனினும் கொடிது. இளமையிலும் வறுமையிலும் வாழ்வாங்கு வாழ்வது எத்தனை அரிது!  அதற்குக் கிடைத்த பரிசுதான் அவர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்!

ஜுலை, 2019.