சஹானா 
சிறப்புக்கட்டுரைகள்

கவிதையில் ஒளிந்து கொண்ட பிராகரஸ் ரிப்போர்ட்

மா.கண்ணன்

நாகர்கோவில் அருகே வில்லுகுறியில் வசிக்கும் பதினெட்டு வயதாகும் சஹானாவின் ‘கண் அறியாக்காற்று' என்ற முதல் கவிதைத் தொகுப்பு விற்பனைக்கு வந்த சில மாதங்களில் அத்தனையும்  விற்று  தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது.  குட்டிரேவதி, தேன்மொழிதாஸ், லெஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்தன், பிரேம்குமார் களந்தை பீர்முகமது, சங்கர ராமசுப்பிரமணியன் போன்றோர் கவிதையைப் படித்துவிட்டு பாராட்டி எழுதியுள்ளார்கள்.  எழுத்தாளர் வண்ணதாசன் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு அதில் ஒரு கவிதையின் தூண்டுதலில் தான் ஒரு கவிதை எழுதியதாக தனது முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 2018 - க்கான இலக்கியப் போட்டியில்

சஹானாவின் கவிதைத்தொகுப்பை விருதுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறது. (வெளியீடு: பனிக்குடம், ஆகுதி)

இங்கிலீஸ் பீரியட் முடிந்து

இண்டர்வலில் வெளியே வருகிறேன்

நீளமாகக் கட்டப்பட்டிருக்கும்

டாய்லெட் சுவர்களுக்கு மேல்

பார்ப்பபதற்கு ஒரு நீச்சல் குளத்தைப்போல

மழை நீர் தேங்கியிருக்கிறது.

எங்கிருந்தோ வந்த சிட்டுக்குருவி ஒன்று

தேங்கியிருக்கும் நீரில் கடல் அலைகளில் குளிக்கும்

தேவதை போல

என் ஆசை தீரக் குளித்து விளையாடுகிறது.

அது என் மனதில் பாதியாகத்தான் இருக்கவேண்டும்.

அவர் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது இந்த கவிதையை எழுதியிருக்கிறார். ஆனால்  10ஆம் வகுப்பு படிப்பதற்குள் ஐந்துமுறை பள்ளிகளை மாற்றிவிட்டார்.  அப்பாவின் வேலையின் நிமித்தமாக. இருந்தாலும் அவருக்கு எந்தப்பள்ளியுமே மனதில் ஒட்டவில்லை என்றே கூறுகிறார்.

‘‘எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கும் பள்ளிக்குமான தொடர்பு மிகத்தொலைவு என்று தெரியவந்தது. தினமும் பள்ளிக்கு செல்வதற்கு பயமாகவே இருக்கும். இன்று ஆசிரியர்கள் என்ன சொல்லுவார்களோ நம்மை எப்படி எல்லோர் முன்னிலையிலும்  திட்டுவார்களோ என்ற பயம் என்னை கவ்வும். என்னைப்போல நிறையப்பேர் வகுப்பில் படிக்காவிட்டாலும் அவர்கள் அதை எளிதில் கடந்து விடுகிறார்கள். என்னால்தான் முடியவில்லை. ஏனென்றால் நான் இயல்பிலேயே அதிர்ந்து பேசாதவள். மற்றவர்கள் டீச்சர் ஒரு அடிதானே அடிப்பார் என்று மனதை தெம்பாக்கிக்கொண்டு அடிவாங்க தயாராகி விடுவார்கள். எனக்கு அது மிகவும் அச்சமாகவும் அவமானமாகவும் இருக்கும். அதனாலேயே எனக்கு பள்ளிக்கூடத்தை நினைத்தால் வாந்திதான் வரும்.

ஒரு முறை தமிழ்ப்பாடத்தில் இருந்து கட்டுரை எழுதிவிட்டு வராததால் தமிழாசிரியர் என் முதுகில் புத்தகப் பையைத் தூக்கிவைத்துவிட்டார். நான் இரண்டு மணிநேரம் அதை சுமந்துக்கொண்டு இருந்தேன். என்னால் அந்த சம்பவத்தை இப்பவரைக்கும் மறக்கமுடியவில்லை. இப்படியாக என் பள்ளியில் முட்டிக்கால் போடுவது, எல்லோர் மத்தியிலும்  கிண்டல் செய்வது, வாசலில் நிற்க வைப்பது, நான் கொண்டுவந்த தண்ணீரை யாரும் குடிக்காமல் இருப்பது, என்னை யாருமே விளையாட்டுக்கு சேர்ந்துக்கொள்ளாமல் இருப்பது, ஆசிரியர் வகுப்பு தலைவியிடம் என்னைப்பற்றிய குறைகளை சொல்லி அவளுக்கு எப்படியாவது புத்திமதி சொல் என்று அதிகாரம் செய்ய முயல்வது, தலைமையாசிரியரிடம் கூட்டி சென்று நாயை அடிப்பதுபோல் அடிவாங்கி கொடுப்பது. இப்படி நான் 2ம் வகுப்பு படித்ததில் இருந்து பத்தாம் வகுப்புவரை தொடர்ந்து பல இன்னல்களை அனுபவித்து வந்திருக்கிறேன்.

9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் எனக்கு பள்ளிக்கு செல்ல  ரொம்ப அச்சமாக இருந்தது. ஏனென்றால் இதில் அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் எல்லோரும் என்னிடம் மார்க் கேட்பார்கள். அதனால் நான் நன்றாகப் படிக்கவேண்டும். எனக்கோ படிப்பு சரியாக வராது. என்ன செய்ய என்று என் மனம் ஒரே குழப்பமாகியது.  அந்த நேரத்தில் எனக்கு பாரதியின் கவிதை வரிதான் ஞாபகத்திற்கு வந்தது

பேயாய் உழலும் சிறுமனமே

பேணாய் என் சொல் இன்று

முதல்

நீயாய் ஒன்றும் நாடாதே

நினது தலைவன் யானே

காண்.      

என்று மனதைக் கட்டுப்படுத்த தன் மனதிற்கு கட்டளையிட்டு பாரதி பாடும் இந்தப் பாடலை படிக்கும் போது பாரதியும் என்னுடைய மனநிலையில்தான் இருந்திருக்கிறார் என்றே நினைத்தேன்  இந்த மனஎழுச்சிக்கு பாரதி என்ன செய்தாரோ என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நான் சில காலம் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது டீச்சரிடம் வாங்கிய அடியை  எதிர்க்கொள்ள என் அப்பாவின் அறைக்குச் சென்று அங்கே இருக்கும் கவிதைப்  புத்தகங்களை  படிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் முழுவதும் அந்த அறையை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்வேன். என் அம்மா  நான் பாடப்புத்தகம்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுவாள்.

கற்பனை எனக்கு பிடிக்கும் என்பதால் கவிதைப் புத்தகங்களை மட்டுமே  எடுத்து படித்தேன். நான் ஒன்றை நினைத்தால் அது எனக்கு நடப்பதுபோல் உணர்வேன் இது எனது இயல்பாகவே இருந்தது. இதனால் கூட எனக்கு டீச்சர் சொல்லிக்கொடுக்கும் போது புரியாமல் போயிருக்கலாம். நான் படிப்பும் ரொம்ப சுமாராகதான் படிப்பேன். அதனால் என்னுடைய பிராகரஸ் ரிப்போர்ட்டை என் அப்பாவிடம் காண்பிக்காமல் அவரின் அறையில் உள்ள ஏதாவது ஒரு கவிதைப் புத்தகத்தின் உள்ளே ஒளித்து வைத்துவிடுவேன்.

என்னுடைய முதல் கவிதை 9ம் வகுப்பு படிக்கும்போது அம்ருதா மாத இதழில் வந்தது.  ‘சிறு துளியில் எனது குடம் பொங்கி வழிகிறது' என்ற  அந்தக் கவிதையை நான் என் வகுப்பில் எல்லோரிடமும்  படிக்கக் கொடுத்தேன். அவர்கள் படித்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை. வெறுமையுடன் நான் ஜன்னலுக்கு வெளியே நீண்டு படர்ந்திருக்கும் மரக்கிளையிலிருந்து பறந்து

செல்லும் ஒரு பறவையாய் கானகத்தை வட்டமடித்து மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துத் தின்று ஒளிச்சுடர் விடும் உடம்போடு பறந்து சென்ற பறவையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று வெள்ளை சாக்பீஸ் துண்டு ஒன்று என் மீது வந்துவிழ திடுக்கிட்டேன். ‘என்னடி எங்க இருக்கிற'  ஜெபா டீச்சர் சத்தம் போட்டார். கிளாசுக்கு வெளிய போயி நில்லுடி என்றார். நான் எப்போதுமே கிளாசுக்கு உள்ளே இருப்பதுபோல சத்தமாகத் திட்டினார் . பள்ளி விட்டதும் வீட்டிற்கு வந்து என் அப்பாவின் அறையில் என்னை ஒளித்துக்கொண்டேன். கடந்த சில மாதங்களாக கவிதைக்குள் முழ்கிய நான் தன்னிலையையே மறந்தேன்.

திடீரென்று என்னை நான் உணர்ந்தபோது நாட்கள் கடந்த ஒரு பகல்பொழுதாக இருந்தது. வராண்டாவில் அம்மா அப்பா பேசிக்கொண்டிருந்த சத்தமும் கேட்டது. திறந்த கதவை மூடும் காற்றாய் என் அறையின் இருட்டில் நான் இருந்தேன் .அன்று பள்ளியில் என்னைச்சுற்றி பலபேர் இருந்தபோது தனிமையாக உணர்ந்த நான் இன்று யாரும் இல்லாத இருட்டு அறையில் என்னை சுற்றியிருக்கும் இருட்டிருக்கு நானே அரசியாக உணர்ந்தேன். அறையின் இருட்டிற்கு மட்டுமல்ல  வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்கும் இப்போது நானே அரசி,'' என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்.

இன்று சஹானாவுக்கு 18 வயதாகிறது. பள்ளிக்கு செல்லும் பயத்தைக்கடந்து  மிகவும் ஆனந்தமாக  உணர்கிறார். இப்போது அவரால் நினைத்தபோது டிவி பார்க்கமுடிகிறது. சும்மா ரொம்பநேரம் உட்கார்ந்து இருக்க முடிகிறது. இசையில் டிப்ளமோ படிக்கிறார். தனது பள்ளி படிப்பை மீண்டும் தொடர்ந்து மாற்றுவழியில்  படிக்கவும் செய்கிறார். ஆசிரியர்களின் ஏளன பார்வையும் இல்லை. கம்பராமாயணம், பாரதியார் பாடல்கள், புறநானூறு என்று சுயமாகப் படிக்க முயற்சிக்கிறார். சஹானாவின் தந்தை தயாளனும் ஒரு கவிஞரே. வில்லுக்குறியில் கடை வைத்திருக்கிறார்.

நவம்பர், 2018.