தமிழ் நவீனக் கவிதையில் செவ்வியல் இலக்கியத்துக்கு நிகரான மகத்தான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அந்த அளவுக்குக் கொண்டாடப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை. நவீனக் கவிஞர்கள் மீது அந்த வெளிச்சம் படுவதே இல்லை” என்று தொடங்கி கவனம் ஈர்த்தார் எஸ்.ராமகிருஷ்ணன். அந்திமழை இதழ் சார்பில் கலைஞன் போற்றுதும் என்ற தலைப்பில் கவிஞர் கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு மதுரையில் 15/7/2017 அன்று ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் அரங்கம் நிறைந்திருந்தது. நிகழ்வில் எஸ்.ராமகிருஷ்ணன் வழக்கம் போலத் தன் வசீகரப் பேச்சால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார். “ தமிழின் முக்கியமான நவீன கவிஞர்கள் யாரும் தங்கள் கவிதையைப் பற்றி முதன்மைப்படுத்திக் கொள்வதில்லை. தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள். பொதுவாக வாசகர்களுக்குப் பிம்பங்கள் தேவை. முன்னிலைப்படுத்தப்படுகிறவர்களை மட்டுமே நாயகர்களாக நினைக்கிறார்கள். நவீன கவிஞர்களை முன்னிலைப்படுத்துவது இல்லை” என்ற எஸ்.ரா.,“கலாப்ரியாவின் கவிதைகளில் பெரும்பான்மையானவை துயரத்தின் துளியை சொட்டாக வைத்திருக்கின்றன. ஒரு நல்ல கவிதை மானுடத்தின் துயரை வாங்கிக்கொள்கிறது. அவனுக்கு மீட்சியை அளிக்கிறது. கலாப்ரியா அசலான தமிழ் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அவருக்குப் பிரியமான கவிஞர்களாக வைத்தீஸ்வரன், பிரமிள், நகுலன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அல்ல அவரை உருவாக்கியவர்கள். கலாப்ரியாவை உருவாக்கியவர் தாகூர். அவருக்கும் தாகூருக்கும் இடையே நெருக்கமான புள்ளிகளைப் பார்க்கலாம். ஒரே வானத்தின் வெவ்வேறு நட்சத் திரங்கள். தாகூர் கவிதைகளையும் கலாப்ரியா கவிதைகளையும் ஒன்றாகப் படித்துப்பாருங்கள். இவர் எந்த அளவுக்குத் தாகூரில் இருந்து உருவாகி வந்தவர் என்பது தெரியும். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதை எழுதிவரும் கலாப்ரியாவின் மொழியில் ஜாலம் செய்து காட்டவேண்டும் என்று எந்த முயற்சியும் இருக்காது. இவரது கவிதைகளில் கடைசி வரிகளில் ஒரு உலுக்கல் இருக்கும். ஒரு வாளைப்போல் இதயத்தில் பாய்ச்சுகிறார். கபிலர், பரணர் வரிசையில் வரக்கூடிய கவிஞராகத்தான் கலாப்ரியாவை நான் சொல்லுவேன். கவிதைகளிலிருந்து அவருடைய தனிப்பட்ட ஆளுமை வேறானது. அதை உருவாக்கியது சினிமா. அவர் கடந்த பத்தாண்டுகளாக சினிமா பற்றியும் எழுதி வருகிறார்‘ என்ற எஸ்.ரா. அவரது சினிமாக் கட்டுரைகள் பற்றியும் விரிவாகப் பேசினார். இறுதியாக “கலாப்ரியாவின் ஒரு நிறைவேறாத காதலின் காதலர். அதற்காக அவர் வருத்தப்படாமல் அதைக் கொண்டாடத் தொடங்கிவிடுகிறார். அவர் தேவதாஸ் அல்ல..” என்று சொல்லி கரகோஷ ஒலியுடன் நிறைவு செய்தார்.
தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். “ எம்ஜிஆர் ரசிகனாக எழுதினாலும், திமுக அனுதாபியாக எழுதினாலும் ஜென் கவிதைகள் குறித்து எழுதினாலும்.. அனைத்தையும் உரிய மரியாதையுடன் இயல்பாக எழுதக்கூடிய கலை மனம் கொண்டவர் கலாப்ரியா” எனக் குறிப்பிட்டார் சா.தேவதாஸ்.
எழுத்தாளர் ஆத்மார்த்தி, கலாப்ரியாவின் கவி ஆளுமையின் நுட்பமான தரிசனங்கள் குறித்தும், மொழியை அவர் கையாளும் முறை குறித்தும் உரையாற்றினார். கலாப்ரியாவின் கட்டுரைத் தொகுப்புகள் குறித்து தீபா நாகராணி விரிவாகப் பேசினார். கலாப்ரியா என்னும் தனிப்பட்ட ஆளுமையின் விஸ்தீரணம் குறித்துப் பெரியசாமி ராஜா உரையாற்றினார். இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன் கலாப்ரியாவுடனான தனிப்பட்ட நட்பு குறித்தும், தன் 19வது வயதில் கலாப்ரியாவை இல்லம் தேடிச்சென்று சந்தித்தது, கலாப்பிரியா நடத்திய குற்றாலம் கவிதைப் பட்டறை போன்ற நிகழ்வுகளைப் பற்றித் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். முருகேசபாண்டியனின் உரையில் உற்சாகம் கொப்பளித்தது.
கலாப்ரியாவுடனான தன் நட்பு குறித்தும், அவர் படைப்புகள் மற்றும் கவிதைகள் குறித்த தீர்க்கமான பார்வையையும் முன்வைத்தார் அந்திமழை இளங்கோவன். கலாப்ரியா விரைவில் ஒரு நாவலை எழுதவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் இளங்கோவன். கலைஞன் போற்றுதும் என்ற தலைப்பில் அந்திமழை முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வு என்றும் பல படைப்பாளிகள் தொடர்ந்து கௌரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
ஏற்புரையில் கலாப்ரியா சுருக்கமும் நெகிழ்வுமாகப் பேசினார். படைப்புகள் குறித்த நியாயமான பெருமிதம் கொஞ்சமும் வெளிப்படவில்லை. “ படைப்பாளி என்பவன் மண்புழுவைப் போன்றவன். மண்ணை உழுதுகொண்டே இருப்பான். நிறுத்தமாட்டான். அதே போல் நானும் என் வாழ்வையும் சகமனிதர்கள் வாழ்க்கையையும் எப்போதும் கடைசிவரை சொல்லிக்கொண்டே இருப்பேன்,” என்றவர் இந்த ஆண்டிலேயே நாவல் எழுதிவிடுவதாக அந்திமழை இளங்கோவனுக்கு உறுதி அளிக்கவும் தவறவில்லை!
விழாவில் கவிஞர் கலாப்ரியா அவர்களுக்கு அந்திமழை சார்பில் சாதனை விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு அந்திமழை வெளியீடான கலாப்ரியாவின் ‘நீ போகின்ற பார்வையெல்லாம் பூ முகம் காணுகின்றேன்” என்ற கட்டுரைத் தொகுப்பு கலாப்ரியா கையெழுத்துடன் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பார்வையாளர்களின் முகவரிக்கு ஆறுமாதம் தொடர்ந்து அந்திமழை இதழ் அன்புப் பரிசாக அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை சுவாரஸ்யத்துடனும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கினார் மேகா பதிப்பகம் அருணாசலம். பார்வையாளர்கள் வரிசையில் சுரேஷ்குமார இந்திரஜித், சமயவேல், பா.திருச்செந்தாழை, அர்ஷியா, அர்விந்த் யுவராஜ், ப.திருமலை, பிஜி.சரவணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆகஸ்ட், 2017.