ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அமெரிக்காவில் செயல்பட்டுவரும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அங்குள்ள தமிழர்களை இணைத்து தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தும் வண்ணம் விழா நடத்தி வருகின்றது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள எல்லா தமிழ்ச் சங்கங்களும் இந்த சங்கப் பேரவையில் அடங்குகின்றன. இதில் என்னை சிறப்பு
விருந்தினராக அழைத்திருந்தனர். கடந்த இரண்டாண்டுகளாக என்னை அழைக்கின்றனர். செல்ல முடியவில்லை. இந்தாண்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கான பயிற்சி ஒன்றுக்காக மிசெக்ஷூரி செல்லவிருந்தேன். திடீரென அது ரத்தாகிவிட, பிறகு அவரசமாக மூன்று நாட்களில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று விசாவும் கிடைத்துஅமெரிக்கா சென்றேன். மேரிலேண்ட் என்ற மாநிலத்தின் தலைநகரான பால்டிமோர் நகரத்தில் அந்த விழா நடைபெற்றது. இது தமிழ்ச்சங்கப் பேரவை ஆரம்பித்து 25ம் ஆண்டு. வெள்ளி விழா கொண்டாட்ட உற்சாக களிப்பில் இருந்தனர் நம் தமிழர்கள்.
நான் போய்ச்சேர்ந்த அன்று திரைப்பட பின்னணிப் பாடகி சித்ரா பங்குபெறும் இசைக்கச்சேரி இருந்தது. என்னைப் போன்ற சிறப்பு விருந்தினர்களாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அய்யா தோழர் நல்லகண்ணு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவனகக் கலைஞர் கலைச்செல்வன் என நிறைய பேர் வந்திருந்தனர்.
பாட்டுக் கச்சேரிக்கு முன்னதாகக் கிடைத்த சிறிது இடைவெளியில் என்னை மேடையேற்ற விரும்பிய நிர்வாகிகளுக்கு கொஞ்சம் தயக்கம். பாட்டுக் கச்சேரிக்கு முன்னதாக மேடையேற்றினால் எங்கே விசில் அடித்து உட்கார வைத்துவிடுவார்களோ என்ற தயக்கம் அவர்களுக்கு. இருப்பினும் ஐந்து நிமிடங்கள் மட்டும் பேச வைக்கலாம் என்று மேடையேற்றினார்கள். ஆனால் நான் ஐந்து நிமிடங்கள் பேசி முடித்த பின்னர் கூட்டத்திலிருந்து, ‘‘தொடர்ந்து
பேசுங்கள்; சித்ராவின் பாடல்களில் ஒன்றிரண்டைக் குறைத்துக்கொள்ளலாம‘ என வரவேற்புக் குரல்கள் எழுந்தன. நான் 20 நிமிடங்கள் பேசினேன். தமிழின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய நான், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் தான் தமிழை வளர்ப்பவர்களாக உள்ளனர். மற்ற குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர்.
அடுத்த தலைமுறைக்கு தமிழ் தெரியப் போவதில்லை. தமிழ்ப் பயன்பாட்டில் இருந்து மறைகிறது’ என்றேன். அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். தமிழுக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரமாக அது இருந்தது.மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் படுசுவையாக இருந்தன. ஸ்ரீராம் சர்மாவின் வேலுநாச்சியார் பற்றிய நாட்டிய நாடகம் அரங்கேறியது. ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் வேலுநாச்சியார் பெருமை பற்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கே அவ்வளவாக தெரியாது. தொடர்ந்து தமிழன்-தமிழச்சி என்ற நிகழ்ச்சியை நடத்தினர். அமெரிக்காவில் பிறந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் கலந்துகொண்டனர். அதில் கலந்து கொண்ட அனைவரும் வேட்டி தாவணிகளில் தான் வந்திருந்தனர். சிறந்த தமிழன் யார், சிறந்த தமிழச்சி யார்? என்பதை தேர்ந்தெடுக்க இலக்கியம் சம்பந்தமான கேள்விகளை கேட்கின்றனர். பின்னர் சிலம்பாட்டம், பறை அடித்தல் போன்ற கலை சம்பந்தமான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். ஏன் தமிழனாக தமிழச்சியாக விரும்புகிறாய் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு.
பிறகு நான் மினியாபோலிஸ், ஹுஸ்டன், மிசோரி போன்ற நகரங்களுக்கு அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் அழைத்ததின் பேரில் சென்றுப் பேசினேன். ஹூஸ்டன் தமிழ்ச் சங்கத்தில் ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற தலைப்பில் பேசினேன்.
இலக்கியக் கூட்டத்தில் பேசிய மருத்துவர் செந்தில் என்பவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். தமிழின் மீது தீவிர காதல் கொண்டவர். அவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் மருத்துவம் படிக்கின்ற போது இந்திய வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்குள் பேசும்போது தங்கள் கலாச்சார அடையாளங்களை மறக்காமல் தாய் மொழியில் பேசுகின்றனர் என்பதை கவனித்துள்ளார். தாய் மொழித் தமிழில் பேசுவது தான் தமிழருக்கான அடையாளம் என்பதை புரிந்து கொண்டார். உலகின் பழமையான மொழி நமது தமிழ் என்பதை அறிய நேர்ந்த போது அதனை முழுவதுமாக கற்றுக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார். சிலப்பதிகாரம் உட்பட்ட தமிழர் இலக்கியங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தே இங்கிருந்து சென்றுள்ளார். இன்று அவர் தூய தமிழில் தான் பேசுகிறார். ஈழத்துப் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் ஒரு ஈழத்து பெண்ணை காதல் மணம் புரிந்துள்ளவர்.
தன் குழந்தைக்கு அம்மணி என்று பெயர் வைத்துள்ளார். நாம் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினாலும் அதனை தூய தமிழாக மாற்றி சொல்லும் ஆற்றல்
உடையவர் மருத்துவர் செந்தில். அவர் தமிழார்வம் வியக்க வைத்தது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் அங்கே கணினிப் பொறியாளராக இருக்கிறார். அவருடைய மகளின் பெயர் மாதவி. வீட்டில் எப்போதும் தமிழில் தான் பேச வேண்டும் என்ற எழுதப்படாத விதியை பின்பற்றி வருபவர். மாதவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை மகிழ்ச்சியாக இருந்தது என்று என்னிடம் தூய தமிழில் தெரிவித்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறை குழந்தையா இவர் என ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் பள்ளி முழுவதும் ஆங்கிலம்தான். வெளியில் பேசுவதும் ஆங்கிலம் தான். இருந்தும் தமிழ் மீது அவர்களிடையே இருந்த ஈடுபாடு பெருமைக்குரியது. இதேபோல் சம்பந்தமூர்த்தி என்பவரும் திருநெல்வேலிக்காரர் தான். அவர் தனது குழந்தைக்கு மண்ணின் மணம் மாறாமல் இருக்க தாமிரபரணி நினைவாக தாமிரா என்று பெயர் வைத்திருக்கிறார்.
தமிழ் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கு ரொம்பவே உதாரணமாக இருப்பவர் மிசோரியைச் சேர்ந்த பொற்செழியன். தன்னுடைய மொழி அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழிசையையும் பாடல்களையும் தன் குழந்தைகளுக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளார். பாரதியார் பாடல்கள், புறநானூற்று பாடல்கள் என எல்லாவற்றையும் தமிழிசையுடன் பாட அவர்கள்
கற்றுவருகிறார்கள்.
சங்கக் கூட்டங்களுக்கு நடுவே ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியை சென்று பார்த்தேன். அமெரிக்க கனடா எல்லையில் அந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. அங்கே
நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு மேலே செல்ல லிஃப்ட் இருக்கிறது. அதில் பணியாற்றுகிற ஒரு கறுப்பினத்தவர் எங்களை பார்த்ததும் ‘ஆர் யு தமிழ்ஸ்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். நாங்கள் ‘ஆமாம்’ என்றோம்.
உடனே அவர் ‘நல்லாஇருக்கீங்களா?’ என்று கொச்சைத் தமிழில் கேட்டவர் ஒண்ணு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று அதே கொச்சைத் தமிழில் சொல்லிவிட்டு சிரித்தபடியே கைகொடுத்தார். எப்படி தமிழ் அவருக்கு தெரியும் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் ஆச்சரியம். ஒருவேளை கனடா பகுதிகளில் நம் ஈழத்தமிழர்கள் அதிகமிருப்பதன் தாக்கமாக இருக்கலாம். தமிழ் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்பதை பார்த்து பரவசப்பட்டு போனேன். அப்போது மிகவும் பெருமையாக இருந்தது. கடைசியாக என்னுடன் கூடவே பயணத்தில் இருந்த ஜெயபாலனை பற்றி நிச்சயம் குறிப்பிட்டாக
வேண்டும். நான் அங்கு 11 நாட்கள் தங்கியிருந்தேன்.
அத்தனை நாளும் அலுவலக விடுப்பு எடுத்து என்னுடன் இருந்தார். ‘தமிழுக்காக இதைச் செய்கிறேன்’ என்றார் அவர். தஞ்சாவூர்க்காரரான அவர் சங்கப் பேரவையில் நிர்வாகியாக உள்ளார். இன்னும் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி அவர்களின் செயல்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் பக்கம் போதாது. இவர்கள் பல ஊகளில் தமிழ்ப் பள்ளிகள்
நடத்தி வருகின்றனர். பல இல்லத்தரசிகள் தமிழாசிரியர்களாக அங்கே உள்ளனர். வார விடுமுறை நாட்களில் இந்தப் பள்ளிகள் தமிழை கற்றுத் தரும்.
கடல் கடந்து சென்றாலும் மொழியின் மீதும் மண்ணின் மீது பற்றுடன் தமிழ் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இது நம் தமிழ்நாட்டில் வாழும் ஆங்கில மோகத்திற்கு அடிமையான தமிழர்களுக்கு ஒரு பாடம் என்றே நினைக்கிறேன்.
(பேராச்சி கண்ணனிடம் கூறியதில் இருந்து)
செப்டெம்பர், 2013.