சிறப்புக்கட்டுரைகள்

கருப்பும் சிவப்பும்

சுகுமாரன்

பதினைந்துக்கும் இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட வயதில் வேறுவேறு வருடங்களில் கேட்ட இரண்டு அரசியல் சொற்பொழிவுகள் என்னை அடியோடு மாற்றின. சரியாகச் சொல்வதானால் அந்த உரைகளின் வெளிச்சத் தில்தான் கருத்துகள் பக்குவப்படத் தொடங்கின. அதுவரை சொல்லிக் கொடுக்கப்பட்டவையும் திணிக்கப்பட்டவையுமான கருத்துகளை அந்தப்பேச்சுகள் நொறுக்கித் தள்ளின. புதிதாக யோசிக்கக் கற்றுக் கொடுத்தன. அந்தச் சொற்பொழிவாளர்கள் மீது அன்றைக்கு இருந்த வழிபாட்டுணர்வு இன்று இல்லை. அவர்களுடைய கருத்துகளுக்கு ஆதரவும் எதிர்ப்புமான நிலைப்பாடுகள் எனக்கிருக்கின்றன. அவற்றை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தையும் அவர்களேதான் அளித்திருக்கிறார்கள் என்பதே அவர்களை இன்னும் சிந்தனை வழிகாட்டிகளாக நினைவில் வைத்திருக்கக் காரணம். அந்தச் சொற்பொழிவாளர்கள் - தந்தை பெரியாரும் தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடும்.

 அப்பாவுக்குத் திட்டமான அரசியல் அபிப்பிராயங்களோ வாழ்க்கையின் இதர நடவடிக் கைக்கள் பற்றிய தனிப்பட்ட கருத்துக்களோ இருந்ததாகத் தெரியவில்லை. துரதிருஷ்டவசமாகத் தெரிந்துகொள்ள நானும் முயன்றதில்லை. ஆனால் அவரிடம் சன்னமான இடதுசாரி அனுதாபம் இருந்ததாக யூகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான மின்சாரத் தொழிலாளர் சங்கப் பணிகளில் கொஞ்ச காலம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.அதனால் நாத்திகர் அல்லவெனினும் ஆத்திகராக இல்லாமலிருந்தார். எந்தக் கோவிலுக்கும் அவர் போய்ப் பார்த்ததில்லை. அதை ஈடுகட்டுவதுபோல நான் கோவில் பிராணியாக இருந்தேன். எங்கள் தெருப் பிள்ளையார் கோவிலுக்கு கொஞ்ச காலம் நான் தான் பூசாரி. பிள்ளையாரும் தரித்திரர். நானும் பள்ளி மாணவன். கோவிலுக்கு வருபவர்களில் அபூர்வமாக யாராவது தட்டில் காசு போட்டால்தான் மறுநாள் விளக்கேற்ற எண்ணெயும் சூடமும் வாங்க முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த பிள்ளையாருக்காகக் காசு சேர்க்க ஆரம்பித்தேன். பள்ளிக்குக் போவதும் வருவதும் நகரப் பேருந்தில்தான். அதற்கான கட்டணத்துடன் சிறு செலவுக்காக ஓரிரு காசுகள் கூடக் கொடுக்கப்படும்.

சிறு செலவுக் காசில் ஒரு வில்லை கற்பூரம் கூட வாங்க முடியாது. எனவே காலையில் கூட்டம்பிதுங்கி வழியும் பஸ்ஸில் போவேன். பலநாட்கள் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்திருக்கிறேன். சில நாட்களில் டிக்கெட் பரிசோதகரிடம் அகப்பட்டுக் கொள்ளாமலிருக்க பாதி வழியில் இறங்கிக் காத்திருந்து கூட்டமான வேறு பஸ்ஸில் ஏறி பள்ளிக் கூடம் போய்ச் சேர்வேன். மாலையில் இந்தச் சிக்கல் கிடையாது. பள்ளிக் கூடத்திலிருந்து நடந்தே வந்து சேர்வேன். மிஞ்சும் காசுகள் பிள்ளையாருக்கு. ஆளில்லாமல் அவ்வப்போது திறந்து வைக்கப்பட்டிருந்த கோவில் தொடர்ந்து திறந்திருந்ததும் விளக்கு மின்னுவதும்பிள்ளையார் துவைத்த வேட்டியில் ( சலவை: அம்மா உபயம்) உட்கார்ந்திருப்பதும் பக்தர்களின் கவனத்தில் பட்டது. காற்றும் பெருச்சாளிகளும் மட்டுமே உள்ளே நுழைந்திருந்த கோவிலுக்கு ஒன்றிரண்டாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். பிள்ளையாருக்குப் பழங்களை நைவேத்தியம் செய்ய முடிந்தது. ஒரு நாளைக்கு ஒரு தேங்காயாவது உடைக்க முடிந்தது. வில்லைக் கற்பூரத்துக்குப் பதிலாகக் கட்டிக் கற்பூரம் ஏற்ற முடிந்தது. பக்திப் பழமான அத்தையின் வளர்ப்பில் கற்றிருந்த சுலோகங்களையும் தமிழ்ப்பாடல்களையும் பிள்ளையாரிடம் ஒப்பிக்க முடிந்தது. என் பக்தியை மெச்சிய கர்ணம் அய்யர் ஒரு அனுமதியை வழங்கினார். அவர்கள் வீட்டு வளவில் இருக்கும் பவழமல்லி, முல்லை, செம்பருத்திப்பூக்களை நான் பறித்துக் கொள்ளலாம். இரண்டு கேள்விகளைக் கேட்டார். ‘நீ நம்மவா பிள்ளையாண்டானா? சுலோகம் ஸ்பஷ்டமாச் சொல்றியே?’ என்ற முதல் கேள்விக்கு இல்லை என்றதும் வாடிப் போனார். ‘தீபாரத்தி காட்டுறப்ப மணி அடிக்கணும். நீ ஏன் அடிக்கறதில்ல?’ இரண்டாவது கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. தெருப் பையன்கள் ‘மணியாட்டி’ என்று கேலி செய்வதைச் சொல்லக் கூச்சமாக இருந்தது. அதைவிடவும் முக்கியமான காரணம் மணிச் சத்தம் கேட்டதும் தட்டில் காசு விழும் என்று மோப்பம் பிடித்து ஓடி வரும் அறங்காவலரின் பிள்ளை ஊளை மூக்கன் ஆறுமுகம். தட்டிலிருக்கும் காசுகளைப் பொறுக்கிக் கொண்டு போய் விடுவான் என்ற பயத்தால்தான் பிள்ளையாருக்கு மௌன ஆரத்தி நடத்திக் கொண்டிருந்தேன். அவன் வந்து போன மறுநாள் மறுபடியும் கூட்டமான பஸ்ஸுக்குக் காத்திருக்க வேண்டி வந்து விடும். நடந்து வீட்டுக்கு வரவேண்டியதாகி விடும். இதையெல்லாம் பிள்ளையார் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்ல வழி காட்டுவார். தப்பாக இருந்தாலும் பொறுத்துக் கொள்வார் என்று திடமாக நம்பினேன். இரண்டொரு நாட்களுக்குப் பிறகுதான் நான் பிள்ளையாரை நம்பியதுபோல அவர் என்னை நம்பவில்லை என்று தெரிந்தது. கூட்டமாக இருந்த ஒரு பேருந்திலிருந்து இறங்கி இன்னொன்றைப் பிடிக்க ஓடியபோது வந்த பேருந்தின் டிக்கெட் பரிசோ தகரிடம் மாட்டிக் கொண்டேன். அந்த அவமான தினத்தில் முதலில் வெறுத்தது பிள்ளையாரைத்தான். அன்று மாலை கோவிலைத் திறக்கப் போகவில்லை. அதற்குப் பிறகு இன்றுவரையும் போனதில்லை.

முதலில் பிள்ளையார் நம்மைச் சோதிக்கிறார் என்று தோன்றியது. அதுவரை படித்த புராணங்களும் கதைகளும் பக்த சரித்திரங்களும் மனதுக்குள் குழம்பின. எல்லாக் கடவுள்களும் மனசில் ஒட்டியிருந்த வஜ்ரப் பசையின் இழைகளில் பொம்மைகளாகத் தொங்கின. படித்ததும் கேட்டதும் நம்பியதும் நிஜமா பொய்யா என்ற தத்தளிப்பில் மனம் இருந்தது. அதன் பின்னர் வந்த துன்ப காலங்களில் அந்தத் தத்தளிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. படிப்பில் கவனம் குறைந்தது. பாடம் சொல்லிக் கொடுத்த அபிமான ஆசிரியர்களில் சிலர் பகுத்தறிவாளர்கள். அவர்கள் சொல்வதுதான் உண்மையென்றால் நான் இதுவரை இருந்தது பிழையான கருத்துகளுடனா? விடலைப் பருவ மூட்டமான உணர்வுகளுடன் இந்தக் கேள்விகளும் வதைத்துக் கொண்டிருந்தன. பெரும் திணறலுடன் இருந்த தருணத்தில்தான் பெரியாரின் பேச்சை முதல்முறையாகக் கேட்டேன். அவரைப் பற்றி என் தமிழாசிரியர் உருவாக்கிக் கொடுத்த பிம்பம் கவனத்தில் இருந்தது. அந்தச் சமயத்தில் ‘துக்ளக்’ இதழில் வெளியாகிக் கொண்டிருந்த தனது அரசியல் அனுபவங்கள் தொடரில் பெரியாரை அவர் முன்னிலையிலேயே விமர்சனம் செய்ததைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியிருந்தார். தமிழய்யா முன்வைத்த பெரியார் பிம்பம் ஜெயகாந்தனின் விமர்சனத்தில் சிதறடிக்கப் பட்டிருந்தது. இரண்டுக்கும் இடையில் அகப்பட்டு மேலும் திணறினேன். தமிழய்யாவின் வாசகங்களை விட ஜெயகாந்தனின் விமர்சனமே அப்போது மனதுக்கு உவப்பானதாக இருந்தது. பெரியார் பேச்சைக் கேட்ட பிறகே ஒரு முடிவுக்கு வருவது என்ற தீர்மானத்தில்தான் கோவை

சிதம்பரம் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பெரியார் சொற்பொழிவைக் கேட்கப் போனேன்.

v

 “ஒலகத்திலுயே நாமதான் காட்டுமிராண்டிகள். கீழ்ச் சாதி மக்கள். எந்த நாட்டுல இந்த மாதிரி மானங்கெட்ட மக்கள் இருக்குறாங்க” என்று பேசத் தொடங்கினார் பெரியார். எளிமையான பேச்சுமுறை. எந்த வித அலங்காரமோ மேற்கோள்களோ இல்லாமல் தான் பேச எடுத்துக் கொண்ட பொருளை நேரடியாக முன்வைக்கும் பேச்சு. அதில் கொங்கு நாட்டுக் கொச்சைத் தொனி இருந்தது. நாம் ஏன் வீழ்ச்சி அடைந்தோம் என்பதுதான் அவர் பேச எடுத்துக் கொண்ட பொருள். பார்ப்பனியமும் பார்ப்பனர்களுந்தான் நம்முடைய சகல வீழ்ச்சிகளுக்கும் காரணம் என்பதுதான் பேச்சின் மையமாக இருந்தது. அந்த மையத்திலிருந்தே எல்லாவற்றையும் விளக்குவதாக இருந்தது அவருடைய அணுகுமுறை. மதம், மொழி, பொருளாதாரம், சரித்திரம், அரசியல் எல்லாமும் பார்ப்பனச் செல்வாக்கால் பாழ்பட்டு நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராகப் போராடுவதுதான் நம்முடைய விடுதலைக்கு ஒரே வழி என்ற முற்றுப்புள்ளிக்கு வந்து சேர்வதாக இருந்தது அவருடைய மொத்தப் பேச்சும். பேச்சின் சாரம் எனக்கு முழுமையாகப் புரியவில்லை. அதைவிடவும் முக்கியமாக மனதுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஆனால் உணர்வைப் பொசுக்குவதாக இருந்தது. அதுவரை நம்பிய கருத்துக்களை அந்தப் பேச்சு உலுக்கி உதிர வைத்தது.

கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நீண்ட பேச்சு முடிந்து கூட்டம் கலைந்து வீடு திரும்பும்போது என்னுடைய உடலில் ரத்தம் வடிந்து போயிருந்ததுபோல உணர்ந்தேன். தலைக்குள் பெரும் காட்டுத் தீ படர்ந்ததுபோலத் தகித்தது. இரண்டு நாட்கள் வரை தலைமுதல் கால் நகம் வரை அந்த வெக்கை அணையாமல் இருந்தது. அது அணைந்தபோது மனம் காலியாக இருந்தது. பெருமழை பெய்து பதமான நிலம் போல. களை பிடுங்கப்பட்ட வயல்போல. புதிய விதைக்குக் காத்திருக்கும் மண்போல.

தேர்நிலைத் திடலில் தோழர் ஈ எம் எஸ் பேசுகிறார் என்ற சுவரெழுத்தைப் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வாய்த்திருந்தது. அவரைப் பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்த உரிமையுணர்வு இருந்தது. அவர் என்ன பேசக் கூடும் என்ற தெளிவு இருந்தது. எப்படிப் பேசக் கூடும் என்பதுதான் தெரியாமல் இருந்தது. பத்திரிகைகளில் அவர் பேச்சை வாசித்து ஒரு கற்பனைத் தோற்றம் உருவாகியிருந்தது. வேறு பேச்சாளர்களின் சொற்பொழிவைக் கேட்டு உருவாகியிருந்த பிம்பம் அவரைப் பற்றியும் வடிவம் கொண்டிருந்தது. மடை திறந்த வெள்ளம்போலப் பேசுவார் என்ற எண்ணம் இருந்தது. மைக்கின் முன்னால் அவர் வந்து நின்று வேட்டியை சரி செய்து தொண்டையைச் செருமிக் கொள்வதைப் பார்க்கும்வரை அந்தப் பிம்பமே இருந்தது. அவர் பேசத் தொடங்கியதும் முதலில் அந்த பிம்பம் உடையும் ஓசைதான் மனதுக்குள் கேட்டது.

“சகோதர, சகோதரிகளே” என்று ஆரம்பித்த உரையின் ஐந்தாவதோ ஆறாவதோ வாக்கியத்தில் ஈ.எம்.எஸ்ஸின் குரல் திக்கியது. ஓயாத புயல்வேகப் பேச்சை எதிர்பார்த்திருந்த மனம் அந்தக் திக்குவாய்ப் பேச்சில் கற்பனை சிதறிய சோகத்தில் ஆழ்ந்தது. அடுத்து எந்த வாக்கியத்தில் திக்குவாரோ என்ற இனம் விளங்காப் பதற்றத்தில் இருந்தேன். கேட்பவனை யோசிக்க விடாமல் பொழியும் சொல் மழைகளைக் கேட்டிருந்த காதுக்கு அந்தத் தடுமாற்ற மழை ஏற்புடையதாக இருக்கவில்லை. திரும்பிப் போய்விடலாமா என்று நிராசையுடன் யோசித்துக் கொண்டிருந்த பொழுதில் ஏதோ ஒரு நொடியில் அந்தப் பேச்சின் ஓட்டத்தில் நானும் கலந்திருந்தேன். அது நெருக்கடி நிலை அறிவிப்புக்குச் சற்றே முந்தைய காலம்.

அதிகாரத்தின் மூலம் ஒரு அரசியல்வாதியின் தவறுகள் எப்படி நாட்டை சர்வாதிகாரத்தின் பாதைக்கு இழுத்துச் செல்லுகிறது என்று தோழர் ஈ எம் எஸ் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லிக் கொண்டிருந்தார். அது எப்படி நாட்டை பாதிக்கும், நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவோம் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். அவர் காரண காரியங்களுடன் உரையாற்றிக் கொண்டிருந்த அந்த நொடியில் நான் அவரது திக்கலை மறந்தேன். அவரது குரல் கேட்கவில்லை.மொழி கேட்கவில்லை. திக்கல் பதியவில்லை. கருத்துகள் மட்டுமே காதுக்குள் நுழைந்து புத்திக்குள் படர்ந்தன. அவர் பேசி முடிந்தபோது மனதில் ஓர் இருண்ட சித்திரம் உருவாகியிருந்தது. ஈ எம். எஸ் பேச்சைக் கேட்ட நாளுக்குச் சில மாதங்கள் கழித்து நெருக்கடிநிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அந்த நாட்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நடைமுறையாகிக் கொண்டிருந்தபோது முன்னரே எதிர்பார்த்தவைபோலத் தோன்றின. அதற்குக் காரணம் ஏற்கெனவே கேட்டிருந்த தோழர் ஈஎம்.எஸ்ஸின் பேச்சுத்தான். நான் கேட்ட அந்தப் பேச்சில் அவர் அதைத்தான் தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார். அதை உணர்ந்தபோது “என்ன, நான் சசசரியாக ஊஊஊகித்தேனா?” என்று தோழர் திக்கித் திக்கிக் கேட்பதுபோலவே இருந்தது.

பின் நாட்களில் அவரது முதல் உரையும் அப்போது எனக்கு ஏற்பட்ட மனநிலையும் நினைவுக்கு வரும்போதெல்லாம் தோழர் ஈ எம் எஸ் தனது பேச்சைப் பற்றிச் சொன்னதும் மனதில் ஒலிக்கும். “உங்களுக்கு எப்போதும் திக்கல் வருமா?” என்று கேட்கப்பட்டது. தோழர் சொன்ன பதில். “இல்லை. எப்போதும் திக்கல் வராது. பேசும்போது மட்டுமே வரும்”.

ஆகஸ்ட், 2013.