சிறப்புக்கட்டுரைகள்

கருப்பு வெள்ளை விளையாட்டு

பழநிபாரதி

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றவுடன் தங்களது பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள படையெடுத்த மக்களின் கூட்டங்களைப் பார்த்தபோது ஒவ்வொரு வங்கியும் ஒரு வாக்குச்சாவடி போல இருந்தது. நோட்டுகளை மாற்றுகிறவர்களே மீண்டும் மீண்டும் மாற்ற வருகிறார்கள் என்று குற்றம் சாட்டி மக்களின் விரலில் மை வைத்துக் கரி பூசிய நிகழ்வு வங்கிகளெல்லாம் வாக்குச்சாவடிகள்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

தங்களின் அன்றாட செலவுக்குக்கூட பணமில்லாமல் பிரதமர் மோடியின் தாயாரும் சோனியா காந்தியின் பிள்ளை ராகுலும் வங்கி வரிசையில் நின்றபோது ஏற்றத்தாழ்வு எதுவும் பார்க்காமல் மத்திய அரசு ஒரே நாளில் எல்லோரையும் தெருவுக்கு கொண்டுவந்துவிட்டதா என்று அச்சமாக இருந்தது. எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம் என்பது இதுதான் போல.

வடநாட்டில் ஒரு வங்கி வரிசையில் நிற்கும் முதியவரைக் காவலர் ஒருவர் மூங்கில் கம்பு ஒடிய ஒடிய அடித்து வரிசை குலையாமல் பார்த்துக்கொண்டதை முகநூலில் பார்த்தபோது அந்தக் கடமை உணர்ச்சியைக் கண்டு நான் கைதட்டிவிட்டேன்.

ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு புனிதப் போரைத் தொடுத்துள்ளது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியபோது அதை முழுதாக யாராலும் நம்ப முடியாமல் இருந்திருக்கும்.

ரூபாய் நோட்டு மாற்றத்தின் மூலம் வங்கிகளில் பணம் குவிந்தவுடன் மக்களின் பசி பொறுக்காத இந்த மண்ணின் மாபெரும் விவசாயியான மல்லையாவுக்குக் கொடுத்த 1,201 கோடி ரூபாய் கடனை எஸ்.பி.ஐ தள்ளுபடி செய்தது நமது விவசாயிகளுக்கெல்லாம் வயிற்றில் பால் வார்த்தது போலிருந்திருக்கும். இனியும் விவசாயிகள் செத்தால் அதற்கு மாநில அரசையோ மத்திய அரசையோ யாரும் குற்றம் சாட்டக்கூடாது. இந்தியாவில் எந்த விவசாயியும் உடன்பட்டுச்  சாகிறானே தவிர கடன்பட்டுச் சாவதில்லை.

நடுத்தரக் குடும்பங்களின் நிறைய திருமணங்கள், வங்கிகளில் பணமெடுக்க இயலாததால் நின்று போய்விட்டன என்று ஊடகங்கள் தேவையில்லாமல் ஊதுகின்றன. அது உண்மையென்றால் கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் 650 கோடி செலவில் எப்படி நடந்திருக்க முடியும்?

வங்கிக் கணக்கில்லாதவர்கள், வீட்டுவேலை செய்து சிறுகச் சிறுகச் சேமித்தவர்கள், அரசாங்க ஊழியர்கள் இப்படி சகல பேரிடமும் இருந்த ஐந்து லட்சம் கோடி கறுப்புப் பணத்தை ஒரு சில நாட்களில் வங்கிகளில் செலுத்த வைக்கப்பட்டிருப்பது சாதாரண நடவடிக்கை இல்லை.

2000 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டை விட சிறியதாக இருப்பது, அதில் கையெழுத்துப் போட்டிருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்குத் தெரியாதா? இதனால் இரண்டு லட்சம் ஏடிஎம்கள் மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளன என்று அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் ப்ரான்கோ கேட்கிறார். ஏன் சார்.. கையெழுத்து போடும்போது இதையெல்லாமா கவனிக்க முடியும்? காமெடி பண்ற நேரமா சார் இது?

இந்த 1000, 500 நோட்டுப் பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் சில குழந்தைகள் இறந்திருக்கின்றன. வங்கி வரிசையில் நின்ற சிலர் மயங்கிவிழுந்து இறந்திருக்கிறார்கள். 16-18 மணிநேர உழைப்பின் உலைச்சலில் சில வங்கி ஊழியர்கள் இறந்திருக்கிறார்கள்.

‘மாடு பிடித்து விளையாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வீடியோ கேமில் விளையாடலாமே’ என்று ஜல்லிக்கட்டு வழக்கில் கருத்து தெரிவித்திருக்கும் உச்சநீதிமன்றம், நோட்டுப் பிரச்சனை வழக்கில் ‘நாட்டில் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது’ என்று மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் மாட்டுப்பிரச்சினைக்குச் சொன்ன கருத்தையே நோட்டுப் பிரச்சினைக்கும் எடுத்துக் கொண்டால் என்ன என்று கேட்கிறார் என் நண்பர் மாடசாமி. ‘மாடு’ என்றால் தமிழில் செல்வம் என்று அர்த்தமாம். அந்த செல்வத்துக்குள் கருப்புப்பணம், கள்ளப்பணம் எல்லாமே அடங்கி அடங்கிவிடாதா என்று கேட்கிறார். விபரீதமான ஒரு விஷயத்தை வீடியோ கேமாக அவர் பார்ப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘வாங்க ஒரு டீ சாப்பிடலாம்’ என்று அழைத்தேன். என்னிடம் சில்லறை இல்லை; நீங்கள் வாங்கிகொடுத்தால் குடிக்கிறேன் என்றார். என்னிடமும் சில்லறை இல்லை; இருந்த ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மாற்ற முடியவில்லை என்பதுதான் இந்தக்கட்டுரையின் கடைசிவரியாக விதித்திருக்கிறது.

டிசம்பர், 2016.