மகாநதி படம் வந்த ஆண்டு 1993. அப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தேன். பதினெட்டு வயது. செயற்கையான சினிமாக்களுக்கிடையே ஓர் அழகிய கிராமத்தையும், குடும்பத்தையும், ஒரு மனிதனுக்கு நிகழவே கூடாத உச்சபட்ச மனத்துயரை சந்திக்கும் ஒரு நல்லவனையும் காண்பித்து, இதுதான் உலகம் எனும் பிரமிப்பையும், பயத்தையும் எனக்கு அறிமுகம் செய்தது மகாநதி. பல வகைகளில் தொடர்ந்து சிந்திக்க, வாசிக்க, கற்க வைத்த படம் அது.
‘பிறர்வாடப் பல செயல்கள் செய்து நரைமூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’
அத்தகைய சூழலிலும் தன்னம்பிக்கையையும், கர்வத்தையும் தருகின்ற அந்தக் கவிதை வரிகளை கமல்ஹாசன் பகிர்கையில் கல்வெட்டுப் போல பதிந்தது எனக்குள். நான் நிச்சயமாக அந்த வேடிக்கை மனிதனாக இருக்கவே கூடாது, இருக்கவே மாட்டேன் என படபடத்தேன். யாருடைய கவிதை இது? யாராவது வைரமுத்தா? இல்லை கமல்ஹாசன்தானா? பாரதியைப் பள்ளிப் பாடமாக மட்டுமே விட்டுவிட்டு வந்த என்னைப் பார்த்து சிரித்தார் கமல்ஹாசன். ஓடிப்போனேன் என் தாத்தனிடம்! இப்போது பாரதி பள்ளிப் பாடமில்லை. காதலானேன். பின்னாளில் என் பிள்ளைக்கு பாரதி என பெயர் தந்த போது, அதற்கு பாரதி மட்டுமே காரணமில்லைதானே? பாரதி பெருமலையெனில், பாரதிதாசன் ஓர் ஊழிக்காற்று.
அதற்கும் முன்னதாக 1986ல் விக்ரம் எனும் படம் வெளிவந்தது. அப்போது நான் விகடனில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்புச் சிறுவன். அந்தப் படம் ஸ்பை, கம்ப்யூட்டர், கோடிங், ராக்கெட் எனும் புதுவகையான கதையை, அந்த வயதை ஈர்க்கக்கூடிய கதையைச் சொன்னதால்தான் விழுந்தடித்துக்கொண்டு ராஜேஷ்குமாரையும், சுபாவையும், தமிழ்வாணனையும் நோக்கி ஓடினேன். அதைச் செய்திருக்காவிட்டால் அதைத் தொடர்ந்த பிற வாசிப்பேது? மேலும் ஒன்று, சுஜாதா!
அபூர்வ சகோதரர்கள் 1989ல் வெளியானது. கமல்ஹாசனின் மசாலாப் படங்களில் கூட ஊடே கிடக்கும் கலைத்துண்டுகளைத் தனியே அள்ளிச் சேகரிக்கலாம். அதில், சில விநாடிகளே வந்தாலும், ஜனகராஜைப் பார்த்து கண்ணடிக்கும் ஓர் அனிமேஷன் துண்டு என்னை வியப்பிலாழ்த்தியதில் வியப்பேதுமில்லை. இப்படியான முதல் முறைகள் கமல்ஹாசன் படங்கள் அனைத்திலுமே காணக்கிடைப்பவைதானே! உலகெங்கிலுமிருந்து கதைகளைத் தழுவியவர் என அவரைத் தேடித்தேடி நாம் குறை சொல்கையிலேயே, அந்த அறிவுக்கும், விசாலத்துக்குமான விதை அவர் போட்டது என்பதை மறந்துபோகிறோம். ஒரு டெக்னிக்கை வேறு யாராவது செய்யட்டும், பொறுத்திருந்து அதன் வெற்றியை நாம் பயன்படுத்திக்கொள்வோம் என்றெண்ணாது, களத்தில் முன்னோடியாய் செல்பவர். பணமே பிரதானமான சினிமா எனும் படுகளத்தில் முன்வரிசை வீரனாக களம்புகுவதை என்னென்பது? அதுதான் ரசனை. நம்மாலும் ஆகும் என சக கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டியவர்.
2001ல் ஆளவந்தான் வந்தபோது எனக்கு 26 வயது. அப்போதுதான் பல ஆங்கிலப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டு பார்க்கத்துவங்கியிருந்தேன். அந்தப்படம் பல சிறப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், குறிப்பாக நந்து பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் கண்டு நீண்ட சிந்தனைக்குள்ளிருந்தேன். இன்னொரு விஷயமும் என்னை உறுத்திக்கொண்டிருந்தது. ‘கவனிச்சியா? உம்.?’ என என்னையே கேட்டுக்கொண்டிருந்தேன் பல தடவை. அதுநாள் வரை இரண்டு வேடங்கள் புனையப்பட்ட படங்களிலிருந்து அது முற்றிலும் வேறாக இருந்ததை யாரும் சொல்லாமலேயே கண்டுகொண்டேன். ஆனால், பிற்பாடுதான் அந்த நுட்பத்தின் பெயரை அறிந்துகொண்டேன். அது நாள் வரை இரண்டு கமல்ஹாசன்கள் வரும் காட்சிகளில் அசையாமல் நின்றுகொண்டிருந்த காமிரா, முதல் முறையாக, ‘மோஷன் கண்ட்ரோல்’ கணினி நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு கமல்ஹாசன்களைச் சுற்றி வந்தும், அவர்களோடு ஓடிப்பிடிக்கவும் செய்தது. சிறைக்கம்பிகளுக்கு இருபுறமும் இருவரும் அமர்ந்திருக்க, கைகள் கட்டப்பட்ட நிலையில், நந்து சிமெண்ட் காரையைப் பற்களால் கடித்து, விஜயை நோக்கித் துப்பிக் காயப்படுத்தும் காட்சி இன்னும் மனதில் நிற்கிறது. முன்னதாகவே ஜுராசிக் பார்க் படம் ஏற்படுத்திய தாக்கத்தில், கணினி வரைகலை பற்றி ஆர்வம் கொண்டு நிறைய வாசித்து வைத்திருந்தபடியால் பறக்கும் அந்தக் காரைத்துண்டும், விஜயின் நெற்றியில் ஏற்படும் ரத்தக்கீற்றும் இஎஐ என கணிக்க முடிந்தாலும் விஜயின் பின்புறத்திலிருந்து, நந்துவின் தோளுக்குப் பின்பாக ஓடிவரும் காமிரா தந்த வியப்பு என்றைக்கும் மறக்காது.
குருதிப்புனல் எனும் பெயரைக்கேட்டதும்தான் இந்திரா பார்த்தசாரதியை அறிமுகம் செய்துகொள்ள நூலகத்துக்கு ஓடினேன். அப்போது எனக்கு 21 வயது இருக்கும். நூலக அலமாரிகளைத் துழாவி அந்தப் புத்தகத்தை எடுத்தது கூட நினைவிலுண்டு. அந்தக் கதைக்கும், படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனினும் வாசிப்பைத் தேடி ஓடவைத்தது கமல்ஹாசன்தான். அந்த வயதில் குருதிப்புனலின் கிளைமாக்ஸை ஏற்க முடியாமல் ஒரு நடிகனின் ரசிகனாக என் மனம் வாடியது. ஆனால் அப்போதே நான் நடிகனின் ரசிகனாக அல்லாது சினிமாவின் ரசிகனாக மாற தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.
எனது ஓவியக் கண்களை முதலும், கடைசியுமாக ஏமாற்றியது யார் என்றால் அது அவ்வை சண்முகி மட்டும்தான். விகடனின் அட்டைப்படத்தில் குறுக்காக (முன் பின் அட்டைகள் சேர்த்து) முழு தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது சண்முகியின் படம். யார் இந்தப் பெண்மணி? அதுவும் இப்படி அதிகமாய் மேக்கப் போட்டுகொண்டு? இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், இந்த விகடனுக்கு வேறு வேலை இல்லையா? என்றுதான் முதல் பார்வையில் நினைத்தேன். பின்பு அது கமல் என்று தெரியவந்தபோது புதியவற்றை முயற்சிக்கும் அவர் மீது பிரியம் வராமல் எப்படி இருக்கும்?
காந்தியார் என்பவர் இன்னொரு பள்ளிப்பாடம். வரலாறு சற்றே சோம்பல் தரும் விஷயமாகயிருந்தது. ஒரே நாளில்தானே விடுதலை கிடைத்தது, அதற்கும் முன்பாக ஒரே நாடாகத்தானே கூடியிருந்தோம்? ஏனிந்த தொடரும் பிரிவினைக் காட்சிகள், சண்டைகள் என சலிப்போடு பாகிஸ்தானைக் கவனித்ததோடு சரி, அதன் பின்னணியை தெரிந்துகொள்ள யாருக்கு நேரம்? அது யார் கதையோ? நமக்கென்ன?
அது நம் கதை. உனது, எனது கதை என்று எனக்குச் சொன்னவர் எந்த எழுத்தாளரும் இல்லை, கமல்ஹாசன் தான். ஹேராம்தான் என்னை ‘சத்திய சோதனை’யை வாசிக்கச் செய்தது என்றால் நம்புவீர்களா? காந்தியாரை, மகாத்மாவாகப் போற்றி ஒதுக்கி வைத்திடாதீர்கள் என கமல்ஹாசன் சொல்லும் போது முதலில் சற்றே அதிர்ந்து, பின்பு அவரும் நம்மில் ஒருவர்தான், அவரைப்போல நம்மாலும் சத்தியஜோதியாக ஒளிரமுடியும், அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்ற தொடர்ச்சியைக் கண்டுகொண்டு ஏற்றேன்.
ஹேராம் படத்தின் காட்சியழகு அதற்கு முன்போ, அதன் பின்போ தமிழில் இன்று வரை பார்த்திராத ஒன்று. அப்படி ஓர் ஓவியமாக அந்தப் படம் திகழ்ந்தது. அதிலும் எத்தனை முதல்கள் இருந்தனவோ தெரியாது, அதன் கலையும், பின்னணி இசையும் அதற்கு முன்பு பார்த்தோ, கேட்டோ அறியாதது. அந்நாளைய ஆனந்த விகடனை கமல்ஹாசன் மாடியறையில் படித்துக்கொண்டிருக்கும் போது, வீதியில் சென்ற பஜனைக்குழுவின் பாடலோசை சத்யம் திரையரங்குக்கு வெளியே கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது.
“கேள்வி கேக்குறது சுலபம் மாமா. பதில் சொல்லிப்பாத்தாதான் தெரியும்..” என நாகேஷிடம் சிக்கிக்கொண்டு அல்லாடும் பஞ்சதந்திரம் ராமும், அவனது நண்பர்களும் என்றும் எனது ஃபேவரிட். மும்பை எக்ஸ்ப்ரஸெல்லாம் அவரது கவனிக்கப்படாத சாதனைகள் என்பேன்.
கவிஞராகவும், பாடகராகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முத்திரை பதித்திருக்கிறார் கமல்ஹாசன். ’பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு’, ‘நினைவோ ஒரு பறவை’, துவங்கி ‘யார் யார் சிவம்?’ ‘மாட விளக்கே’ வரை எத்தனைப் பாடல்கள்! ’மாட விளக்கு’ எப்போது கேட்பினும் நெஞ்சைக் கலங்கச்செய்வதாக இருக்கிறது. தாய்க்கோழியை இழந்த குஞ்சாய் அந்த அழுகை மனதைப் பிசைகிறது.
நேற்று, தமக்கு திருநெல்வேலி வட்டார வழக்கைக் கற்பித்த சுகாவாகட்டும், என்றோ குழந்தையாக தம்மை ஏற்றுக்கொண்ட அவ்வை டி.கே.சண்முகமாகட்டும் அவர் குருவாக ஏற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான நபர்களைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், முகம் மலர, அகம் மலர, “எனக்குக் கிடைச்ச குருமாரெல்லாம் அப்படியாப்பட்டவங்களாக்கும். அவர்களெல்லாம் சொல்லிக்கொடுத்தும் நான் இதைச் செய்யலைன்னாதான் ஆச்சரியம்..” என ஒரு குழந்தையைப் போல அவர் காட்டும்
உற்சாகம் அழகானது. அந்த மரியாதை போற்றுதலுக்குரியது. விஸ்வரூபம் பட உருவாக்கக் காணொளியில் நடக்கவும் சிரமப்படும் வயதிலும், ‘உன்னைக் காணாது..’ பாடலுக்கு நடனமைத்த அந்த நடனப் பண்டிதர், பிஜு மகராஜ் ஒரு சோபாவில் அமர்ந்தபடி பாவனையை விளக்கிக்கொண்டிருக்க, தரையில் அமர்ந்தபடி, ஒரு காலை மடித்து ஒரு சிறுவனைப்போல ஆர்வத்துடன் பிஜுவின் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். கற்றலில் இதுவல்லவா அழகு என உவந்தேன். அந்தப் பாடலை திரையில் காண்கையில் என் கண்கள் தளும்பின. கதைச்சூழலில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சியோ, பாடலோ அதுவல்ல எனினும் ஏன் இந்த தளும்பல்? அதற்குப் பெயர்தான் நிறைவு.
சுய சிந்தனையும், சுய மரியாதையையும் கற்றுத்தந்த பெரியோரையும், அவர்தம் கொள்கைகளையும் காற்றிலே பறக்கவிட்டோம். இந்த விஷயத்திலும் ஊர் ஒதுக்கிவைத்த பிள்ளையாக, கருப்புச் சட்டை அணிந்த ஒற்றையாளாக கமல்ஹாசன் மட்டும்தான் இருக்கிறார். கஞ்சிக்கு வழியில்லாத ஊரில் பீட்சா கடை எதற்கு? நடிப்பெல்லாம் வேறு ஆள் பார்த்துக்கொள்ளட்டும். கொஞ்சம் கருப்புச்சிந்தனையை பரப்பும் தொழிலுக்கு வரமாட்டாரா இந்த ஆள்? என்று சில சமயம் எண்ணுவதுண்டு. அதுசரி, அவருக்குத் தெரிந்த தொழில் சினிமா, அதையாவது ஒழுங்காகச் செய்யட்டும். நமக்கு ஆளில்லை என்பதற்காக ஒருத்தரையே எவ்வளவுதான், எதற்குத்தான் எதிர்பார்ப்பது என்றில்லாமல் போய்விட்டது.
கமல்ஹாசனை முந்திக்கொண்டு இன்றைய புதியதலைமுறை முன்செல்கிறது, அவர் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உண்மையில் அப்படியே இருப்பது என்றால், அது வேறு சிலருக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஆக, அது உண்மையில் குற்றச்சாட்டு அல்ல, பாராட்டு. அவரே விரும்புவதும் அதைத்தான்.
புதிய தலைமுறையுடன் இணைந்து பயணிக்க, குறிப்பாக புதிய இயக்குநர்களிடம் தம்மை ஒப்படைத்து இன்னும் தரமான படங்கள் தர கமல் முன்வரவேண்டும் என்பதாக ஒரு கருத்து உண்டு. இந்தக் கருத்தை சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், கமல் தன் ஈகோவை விட்டுத்தந்து அமீர், சசிகுமார் போன்றோருடன் இணைந்து பணியாற்ற வரவேண்டும் என்கிறார். அதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லையாயினும், ஐந்தே ஆண்டுகளில் அமீரும், சசிகுமாரும் எங்கு போனார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.
சகலகலாவல்லவனையும், காக்கிச்சட்டையையுமே அவர் பண்ணிக் கொண்டிருந்திருந்தால் இந்நேரம் கரையொதுங்கிப் போயிருப்பார். அஃதொன்றும் தவறில்லை, அது ஒரு தனிமனிதனின் விருப்பம். ஆனால், நான் எப்படி இருந்திருப்பேன் என்றுதான் தெரியவில்லை. வேலராமமூர்த்தியையும், வண்ணதாசனையும் யாரென்று எனக்குத் தெரிந்திருக்காது. அஜித், விஜய் படங்களுக்கு முதல் ஆளாய்ப் போய் விசிலடித்துக் கொண்டிருந்திருப்பேன். என் மனைவியை வேலைக்குப் போகச்சொல்லியோ, போகக்கூடாதென்று சொல்லியோ கட்டாயப்படுத்திக் கொண்டிருந்திருப்பேன். கூசாமல் லஞ்சம் தருபவனாக இருந்திருப்பேன், பதிலாக, எனக்கு ஏதும் லஞ்சம் கிடைக்க வழியுண்டா என ஆராய்ந்து கொண்டிருந்திருப்பேன். இந்த இஸ்லாமியர்கள் ஏன் எங்கு பார்த்தாலும் குண்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள், என சீரியஸாக சிந்திப்பதோடு மட்டுமல்லாமல், அதை ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் வாங்கியிருப்பேன். உச்சமாக, அருகில் மனைவியோ, ஒரு நண்பனோ டிவிடியில் ’லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்’ படத்தையோ, ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தையோ பார்த்துக் கொண்டிருக்கும்போது கொட்டாவி விடும் மாபாவத்தைச் செய்துகொண்டிருந்திருப்பேன்.
(கட்டுரையாளர், ஒரு பொறியாளர்)
நவம்பர், 2015.