சிறப்புக்கட்டுரைகள்

கபடி கபடி

எஸ்.எஸ். சிவசங்கர்

வாய் அசையவில்லை, உடலில் பெரிய அதிர்வு இல்லை, நிதானமாக உள்ளே நுழைந்தார். அப்படி, இப்படி லேசாக உடலை அசைத்தார். இரண்டு கையையும் விரித்து, ஒரு தட்டு தட்டி காலை உதறினார். இரண்டாம் கோட்டை கால் தாண்டியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு சொடுக்கு. கையைத் தூக்கி ஒரு விரலைக் காட்டினார். ஒருவர் அவுட். கபடி விளையாட்டு தான்.

சில வருட இடைவெளிக்கு பிறகு கபடிப் போட்டி பார்ப்பதால் சில மாற்றங்கள் பளிச் என தெரிந்தது. உயர்நிலைப் பள்ளி காலத்தில், பள்ளி கபடிக் குழுவில் இடம் பெற்றவன் நான். முப்பது ஆண்டுகளுக்கு முன்னான காலம். அப்போது கபடி என்றால் மூச்சை தம் கட்டி ரைட் போக வேண்டும். மூச்சை விட்டால் அவுட் கொடுத்து விடுவார்கள். அதே போல ‘கபடி, கபடி, கபடி‘ என முழங்கிச் செல்ல வேண்டும்.

’நாங்கள் போன போது புனவாசல் அணியும், உடையார்பாளையம் அணியும் மோதினார்கள். நல்ல விறுவிறுப்பான ஆட்டம். புனவாசல் திருவையாறு அருகில் இருக்கும் கிராமம். அந்த அணியில் நல்ல தேர்ந்த வீரர்கள். எதிரணியான உடையார்பாளையமும்  நல்ல அணி தான். ஆனால் ஆரம்பத்திலேயே ஆட்டம் புனவாசல் பக்கம் திரும்பி விட்டது. இருந்தாலும்   ஆட்டம் பரபரப்பாகவே போனது. நல்ல வித்தியாசத்தில் புனவாசல் அணி வென்றது.

கபடிப் போட்டி நடந்தது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓரியூர் கிராமத்தில். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது பிறந்தநாளுக்காக நடத்தப்பட்ட போட்டி. பக்கத்து மாவட்டங்களில் இருந்து நிறைய அணிகள் பங்கேற்று மூன்று நாட்கள் நடந்த போட்டிகளின் இறுதி நாளில் தான் நாங்கள் சென்றது. அப்போது  நடந்தது அரையிறுதி முதல் போட்டி. உள்ளூர் கழகத் தோழர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தார்கள்.

குகுகு என எழுத்து அச்சிட்ட வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த சிலர் கோடுகளில் வெள்ளை மாவுத் தூவிக் கொண்டிருந்தனர். சிலர் வீரர்களுக்கு நீர் வழங்கிக் கொண்டிருந்தனர். விழாக் குழுவினர் யூனிபாஃர்ம் போல இருந்தது. ஓரியூர் சிவாவும் அந்த டி-ஷர்ட் அணிந்து கைலியோடு பணியாற்றிக் கொண்டிருந்தார். பத்தாண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் பிரபலமான கபடி ஆட்டக்காரர் சிவா. இப்போது ஒடுங்கி ஒல்லியாக இருந்தார். அடுத்த அரையிறுதிப் போட்டி துவங்கியது. கிளம்ப எத்தனித்தோம். அப்போது ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் ‘இந்த ஆட்டத்தை பார்த்துவிட்டு போகலாம்ணா‘ என்றார். ஏன் என்றுக் கேட்டேன். ‘குகுகு அணி விளையாடப் போகிறார்கள், உற்சாகப்படுத்தின மாதிரி இருக்கும்’, என்றார். என் பெயரில் குகுகு என அணி அமைத்திருக்கிறார்கள். நானும் ஆர்வமாக அமர்ந்தேன். ஜோதி சிரித்தார். என்ன என்றேன். ‘ஆளல்லாம் பாருங்க’ என்றார்.

சிவா கைலியை அவிழ்த்தார். உள்ளே ஷார்ட்ஸ் தயாராக இருந்தது. களம் இறங்கினார். ‘எல்லாம் ரிட்டயர்ட். நீங்க வர்றீங்கன்னு தான்  டீம் செட் பண்ணாங்க’, என்றார். ‘ஒரு ரவுண்ட்ல வேல முடிஞ்சிடும். எதிரணி வெண்மான்கொண்டான் ஊரைச் சேர்ந்த அணி. சிட்டானா விளையாடுறானுங்க பசங்க. டால்மியா அணிய அசால்டா அடிச்சிட்டாங்க. நம்மாளுங்கள ஊதிடுவாங்க’ என்றார் ஓரியூர் கண்ணன்.

ஆட்டம் அதிரடியாக துவங்கியது. வெண்மான்கொண்டான் சரசரவென புள்ளிகளைக் குவித்தது.  குகுகு திணறியது. அவர்களை பார்த்து ஜோதி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார், ‘சீக்கிரம் முடிங்க. சாப்பிடப் போகணும்‘.  முதல் பாதி முடியக் கொஞ்சம் நேரம். குகுகு அணியில் இருந்து ரைட் சென்ற நபரை  எளிதாகப் பிடித்தார்கள். எதிர்பாராத தருணத்தில் அவர் தாவ, கோட்டில் வந்து விழுந்தார். இரண்டு பேர் அவுட் . வெண்மான்கொண்டான் அணியினர் ஒப்புக் கொள்ளவில்லை, ரைடர் அவுட் என வாதிட்டார்கள். ஆனால் நடுவர் உறுதியாக இருந்தார். சிறிது நேர எதிர்ப்புக்கு பிறகு ஒப்புக் கொண்டார்கள். நாங்கள் அமைதியாக இருந்தோம், எது சொன்னாலும் தப்பாகி விடும். குகுகு  இரண்டு புள்ளிகள். ஆட்டம் திசைமாறியது.

அடுத்த பாதியில் எதிர்பாரா திருப்பங்கள். குகுகு அணி வேகமாக முன்னேறியது. கடும் போட்டியானது. ஒரு தண்ணீர் இடைவெளி விடப்பட்டது. வெண்மான்கொண்டான் அணியினர் கூடி அடுத்தக்கட்ட யுக்தியை கலந்தாலோசித்தார்கள். ஆனால் குகுகு  அணியினர் ஆளுக்கொரு பக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  திரும்ப ஆட்டம் ஆரம்பித்தது. உச்சக் கட்ட பரபரப்பு. கடைசியில் குகுகு வென்று விட்டது. யாராலும் நம்ப முடியவில்லை. ஜோதி என்னைப் பார்த்து சிரித்தார். ‘ உங்கள பார்த்த குஷி போல இருக்கு. நீங்க இருந்தா ஃபைனலும் அடிச்சிடலாம்‘, என்றார்.

‘சான்ஸே இல்ல, புனவாசல் கபடியே மூச்சா இருக்கறவங்க. இந்த ஆட்டத்தில நம்மாளுங்க ஏதோ

அடிச்சிட்டாங்க. ஆனால் நம்மாளுங்க இப்பவே  டயர்டாயிட்டாங்க. வேலைக்காகாது’, என்றார் உள்ளூர் தோழர். நான் கிளம்பினேன், ‘ யார் ஜெயிச்சாங்கன்னு போன் பண்ணுங்க’. அரை மணி நேரப் பயணம், அரியலூர் அடைந்தேன். அலைபேசி அலறியது. மூச்சிரைக்க கண்ணன் பேசினார்,‘அண்ணா, நம்மாளுங்க ஜெயிச்சிட் டாங்க’. ‘என்ன?’. ‘ நிஜமாத் தான் அண்ணா. அதுவும் 9 பாயிண்ட் வித்தியாசம்’. ’ஓல்ட் இஸ் கோல்ட்’ ஆயிடுச்சி கடைசியில்.

 (எஸ்.எஸ். சிவசங்கர்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)  

ஏப்ரல், 2017