திரைப்படம் என்பது கேளிக்கை.திரைப் படங்களினால் எந்த சமூக மாற்றத்தையும் உண்டாக்கமுடியாது என்ற கருத்துக்களை அடித்து உடைத்த ஆவணப்படம் ‘தி தின் புளூ லைன்’ (The thin blue line-1988). அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆடம்ஸ் என்பவருக்கு இந்த ஆவணப்படம் விடுதலை வாங்கி கொடுத்திருக்கிறது.
1976 ஆம் வருடம் ஆடம்ஸ் தன்னுடைய வேலை விஷயமாக கலிபோர்னியா செல்ல வேண்டியிருக்கிறது.கார் பிரச்னை காரணமாக டலாஸில் ஹாரிஸ் என்ற 16 வயது சிறுவனுடன்(?) தங்கும்போது,இரவு போதை வஸ்துக்களை உபயோகிக்கிறார்கள்.அந்த சிறுவன் ஓட்டிவருவது திருட்டு கார். காரில் தன்னுடைய அப்பாவின் துப்பாக்கியையும் வைத்திருக்கிறான். இரவு சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது போலீஸ் காரை நிறுத்துகிறார்கள். காரிலிருந்து இரண்டு துப்பாக்கி குண்டுகள் போலீஸ் மீது பாய்கிறது. ஹாரிஸின் வாக்குமூலத்தின்படி வழக்கு விசாரணை முடிந்து ஆடம்ஸுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
வழக்கு முடிந்தபிறகுதான் இந்த வழக்கின் திருப்புமுனையே ஏற்படுகிறது. மாரிஸ் என்பவர் தனியார் துப்பறியும் நிறுவத்தை நடத்தி வருபவர். இவர் மரண தண்டøனைக் கைதிகளை சோதிக்கும் மன நல மருத்துவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்றை உருவாக்க முனைகிறார். அந்த முயற்சியில் ஆடம்ஸின் வழக்கு விபரங்களால் உந்தப்பட்டு இதையே படமாகவும் எடுக்கிறார். அவருடைய துப்பறியும் மூளையின் உதவியால் வழக்கைப்பற்றிய புதிய பரிமாணம் கிடைக்கிறது. 1988 ல் படம் வெளியாகி பரபரப்பானவுடன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த முறை ஆடம்ஸ் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகி விடுதலையாகிறார்.ஆடம்ஸிற்கு அவருடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத மாரிஸ் கிடைத்தார். குற்றமற்ற மற்றவர்கள் நிலை?
‘12 ஆங்ரி மென்’ (12 Angry men-1957) என்ற படம் வழக்காடு மன்றம், நீதியமைப்பு முறை அனைத்தையுமே கேள்விக்குள்ளாக்குகிறது. சிறப்பு வழக்குகளுக்கு (அதாவது அரிதினும் அரிதான வழக்குகள்) 12 பேர் கொண்ட நீதிபதிக்குழு ஒத்த கருத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நடைமுறை. இதில் யாராவது ஒருவர் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும் தீர்ப்பு வழங்க முடியாது. 12 பேர் குழுவில் 11 பேரும் ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்து விடலாம் என்று முடிவு செய்யும்போது ஒருவர் மட்டும் வழக்கில் சந்தேகமான இடங்கள் நிறைய உள்ளது. அதனை தெளிவு படுத்தியபிறகுதான் தீர்ப்பு வழங்க முடியும் என்கிறார். மற்றவர்களுக்கு எரிச்சல். எல்லோருக்கும் பல வேலைகள் இருக்கின்றன. ஒருவர் மனைவியை ஷாப்பிங் அழைத்து செல்ல வேண்டும். இன்னொருவர் மாலை விருந்துக்குச் செல்ல வேண்டும். இப்படி. இவன் ஒருத்தன் மட்டும் சம்மதிக்காமல் கழுத்தறுக்கிறானே என்று மற்றவர்கள் நினைக்கும் போது அவர் சொல்வது, நீங்கள் நாளை கூட ஷாப்பிங் போகலாம். நீங்கள் நாளை கூட விருந்துக்குச் செல்ல முடியும். ஆனால் இவனுக்கு இருப்பது ஒரே வாழ்க்கைதான். நீங்கள் மரணதண்டணை விதித்துவிட்டால் இவன் எதையுமே திரும்பப்பெற முடியாது’. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இந்த படத்திலும் நிரபராதிதான் கூண்டுக்குள் இருப்பான்.
நீங்கள் நம்பும், ஆதரிக்கும் கொள்கைக்காக என்ன செய்வீர்கள்? முக நூலில் பதிவு? அல்லது மெழுகுவர்த்தி போராட்டங்கள்? அடையாள உண்ணாவிரதம்? அதிகபட்சமாக என்ன செய்யமுடியும்? ஆம்.முத்துக்குமாரைப் போல,செங்கொடியைப் போல நாம் ஆதரிக்கும் கொள்கை, கருத்துக்காக அதிகபட்சமாக உயிரைத் தரமுடியும். ஆனால் அவல முரணாக மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் டேவிட் கேலும், அவருடைய சக பயணி கான்ஸ்டேன்ஸும் தங்கள் உயிரை பணயம் வைத்து, கடைசியில் அதை இழந்தபின்னர் தடயங்கள் மட்டுமே உண்மையாகாது என்று நிரூபிக்கும் அதி அற்புதமான படம் ‘தி லைப் ஆப் டேவிட் கேல்’ (The life of David Gale-2003).
படம் பிட்சி (கேட் வின்ஸ்லெட்) என்கிற பத்திரிகையாளரின் பார்வையில் அமைந்துள்ளது.அடுத்த நான்கு நாட்களில் மரண தண்டனைக்கு ஆளாகும் ஒரு கைதியை பேட்டி எடுக்கும் பொறுப்பு அவரைத் தேடி வருகிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் வசிக்கும் டேவிட் கேல் கல்லூரி விரிவுரையாளர். இது போக ‘டெத் வாட்ச்’ என்ற மரணதண்டனைக்கு எதிரான அமைப்பின் முக்கிய பொறுப்பிலிருக்கிறார். கற்பழிப்பு, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட டேவிட் கேலை குற்றவாளியாகவே அணுகும் பிட்சி மூன்றே நாளில் அவர் குற்றமற்றவர் என்று அறிந்து காப்பாற்ற முனைகையில் எல்லாம் முடிந்துவிடுகிறது.
படத்தின் முக்கியமான காட்சி டேவிட் கேலுக்கும் மகாண கவர்னருக்கும் நடக்கும் தொலைக்காட்சி விவாதம்.சூடான விவாதத்தில் ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பைபிள் சொல்கிறது’என்கிறார் கவர்னர். ‘கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல் என்ற பழைய மொழி அனைவரையும் குருடாக்கிவிடும்’ என்ற காந்தியின் மேற்கோளை காட்டுகிறார் கேல். இறுதி விவாதத்தில் ‘மரண தண்டøனை பெற்ற யார் ஒருவரையாவது நீங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியுமா?’ என்று தன்னுடைய கடைசி அஸ்திரத்தை எறிகிறார் கவர்னர்.டேவிட் கேலிடம் பதிலில்லை.அவர் வழக்கறிஞர் அல்லவே? ஆனால் இந்த புள்ளியை நிரூபிக்கத்தான் டேவிட் கேலும்,கான்ஸ்டேனும் தங்களுடைய உயிரை பணயம் வைக்கிறார்கள்.கடைசியில் கேட் வின்ஸ்லெட் உடைந்து அழும்போது, நம்மாலும் அழத்தான் முடிகிறது.வேறு என்ன செய்ய?
மரண தண்டனையை ஆதரிப்போர் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள்:
1. Paths of Glory- 1957
2. 12 Angry Men - 1957
3. The Thin Blue Line -1988
4. The Green Mile –1999.
5. Pierrepoint: The Last Hangman –2005.
6. Capote – 2005
7. Dead Man Walking – 1995
8. The Star Chamber –1983
9. Shocker –1989
10. True Crime –1996
11. The Life of David Gale- 2003.
மரண தண்டனையை எதிர்ப்போரும் பார்க்கலாம், தம் கருத்தை வலுப்படுத்திக்கொள்ள.
மார்ச், 2014.