சிறப்புக்கட்டுரைகள்

கண்ணீரில் மூழ்கடித்த கஜா!

பாரதி தம்பி

போர் நடந்த பூமி போல சிதைந்து சின்னா பின்னமாகிக் கிடக்கின்றன டெல்டா மாவட்டங்கள்.

 திரும்பிய திசை எல்லாம் உடைந்து நொறுங்கிக் கிடக்கும் வீடுகள், முறிந்து வீழ்ந்து கிடக்கும் மரங்கள், அடியோடு சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், ஓங்கி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் எல்லாம் தரையோடு தரையாக வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் அவலக் காட்சிகள், எங்கு திரும்பினாலும் கேட்கும் அழுகுரல்கள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திக்பிரமை பிடித்ததுபோல் அலைந்து திரியும் மக்கள் & நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காணும் காட்சிகள் ஒவ்வொன்றும் நிலைகுலைய வைக்கின்றன.

அன்று இரவு வீசிய கஜா புயல், இவ்வளவு பெரிய சீரழிவைக் கொண்டு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசே இந்தப் புயலின் வீரியம் குறித்து உரிய அளவுக்கு எச்சரிக்கவில்லை.

‘சுனாமியையே பார்த்தவர்கள் நாம்' என்ற எண்ணத் துடன் வீடுகளுக்குள் இருந்தவர்களுக்கு, 'சுனாமியைவிட பத்து மடங்கு அதிகமான அழிவை சந்திக்கப்போகிறோம்' என்பது தெரியவில்லை.  அன்று இரவு 11 மணி அளவில் வீசத் தொடங்கிய காற்று ஒரு மணி நேரம் ஆட்டம் காட்டிவிட்டு சற்றே ஓய்ந்தது. அதற்குள் நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதியில் இருந்த பல்லாயிரம் குடிசைகள் இருந்த இடம் தெரியாமல் போயின. Akzu சில மணி நேரத்தில்; இரவு 2 மணி வாக்கில் தொடங்கியது கஜாவின்  ஊழித்தாண்டவம். கிழக்கில் இருந்து மேற்காக சுழன்ற புயலின் கண், எதிர்ப்பட்ட அனைத்தையும் துவம்சம் செய்யத் தொடங்கியது.  அவர்களின் வாழ்வில் அதுவரை பார்த்திராத அந்த அதிவேக காற்று, கிட்டத்தட்ட  புயலில் சிக்கியிருந்த அனைவருக்குமே உயிரச்சத்தைக் கொடுத்தது.

கடற்பகுதியை ஒட்டியிருந்த கிராமங்களில் திடீரென உள்ளே புகுந்தது கடல்நீர். ஒரு பக்கம் தென்னை  உள்ளிட்ட சுற்றியிருக்கும் அனைத்து மரங்களையும் வேரோடு வீழ்த்தும் பெருங்காற்று, அந்த மரங்களில் சிக்கி உடைந்து நொறுங்கும் வீடுகள்; உயிரிழக்கும் கால் நடைகள், வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு புகுந்துவிட்ட கடல் நீர்... மின்சாரமற்ற நள்ளிரவில், ஊழிக்காற்றின் பெரும் சத்தத்துடன்  சில மணி நேரங்கள் தொடர்ந்த இந்தக் காட்சி எத்தனை திகிலாக இருந்திருக்கும் என்பது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

ஆனால், காலை விடிந்து எழுந்து பார்க்கும்போதுதான் அவர்களுக்கு உண்மையான திகில் காத்திருந்தது. ஊருக்குள் ஒரு வீடு மிச்சமில்லை. ஒரு மரம் மிச்சமில்லை. ஒரு கால்நடை மிச்சமில்லை. உயிருடன் இருப்பவர் யார், இறந்தது யார் எதுவும் தெரியவில்லை. செல்போன் கோபுரங்கள் எல்லாம் மரக்குச்சி போல உடைந்து தொங்கின. தொலைத்தொடர்பு அடியோடு இல்லை. என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்வது எதுவும் புரியாமல் மக்கள் பரிதவித்து கொண்டிருந்தபோது, ‘தமிழக அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக எடுத்துள்ளது' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதமாக அறிவித்தார். அந்தப் பெருமிதத்தை வழிமொழிந்தார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். மருத்துவர் ராமதாஸ், ரஜினி, கமல், டி.டி.வி.தினகரன் வரை அனைவரும் தமிழக அரசைப் புகழ்ந்து தள்ளிகொண்டிருந்தபோது, டெல்டா மாவட்ட மக்கள் ஒதுங்க ஒரு கூரையின்றி, உடுத்த ஓர் ஆடையின்றி, அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, பசித்த வயிற்றுடன் நடுநோட்டில் நின்றார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நிலைமையின்  தீவிரம் உணர்ந்த பல்வேறு தன்னார்வலர்கள் உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் டெல்டா மாவட்டங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்போதுதான் தஞ்சை மண் குறித்து அவர்கள் மனதில் வைத்திருந்த சித்திரத்தின் நேர் எதிர்க்காட்சியை கண்டு அதிர்ந்தார்கள்.

பசுமையும், செழிப்பும் நிறைந்த டெல்டா மாவட்டங்களில் வறுமையும், பசி பட்டினியும் உண்டு என்றாலும் மக்கள் ஒருபோதும் கையேந்தி நின்றது இல்லை. நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாக சேற்றில் நின்று உழைக்கத் தயங்காத  உழைப்பாளிகள் அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்ப்பஞ்சத்தின் காரணமாக விவசாயமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் எலிக்கறி சாப்பிடும் நிலைக்குச் சென்றபோது, அப்போதைய மாநில அரசு டெல்டா பகுதியில் கஞ்சித் தொட்டிகளை திறந்தது. ஆனால், அங்கு கஞ்சி வாங்க யாரும் வரவில்லை. பட்டினி கிடந்தபோதிலும் இரந்து உண்ணும் இழிநிலையை விரும்பாத தன்மானம் கொண்டோராக அந்த

கஞ்சித் தொட்டிகளைப் புறக்கணித்தார்கள். அப்படிப்பட்ட டெல்டா மாவட்ட சிறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கஜா புயலுக்குப் பிறகு பசியால் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நாங்கள் நீர்முளை என்ற கிராமத்தில் சில நிவாரணப்பொருட்களை விநியோகித்துவிட்டு, தேநீர் கடையில் நின்றிருந்தோம். எங்கிருந்தோ சைக்கிளில் வந்துஇறங்கினார்  நடுத்தர வயதுடைய ஒருவர். ‘எங்க ஊர் பேர் சிந்தாமணி. காத்துல எல்லா வீடும் போயிட்டு. கடல் தண்ணீ உள்ளே புகுந்து முழங்காலுக்கு மேல நிற்குது. சாப்பிட ஒண்ணும் வழியில்ல. எங்க ஊருக்கும் வாங்க' என அழைத்தார். எங்களிடம் இருந்தது குறைந்த நிவாரணப் பொருட்களே. ஒரு முழு ஊருக்கும் அதை விநியோகிக்க முடியாது என்பதால் தயங்கினோம். ஆனால், அவருடைய முகம் வெளிறிப்போய் இருந்தது. எந்நேரமும் உடைந்து நொறுங்கத் தயாராக இருந்தார். அவரது முகத்தை எதிர்கொள்ளவே முடியவில்லை. அவரைத் தனியே அழைத்துச்

சென்று ஒரு மூட்டை அரிசியை எடுத்துக்கொடுத்து, ‘எடுத்துச் செல்லுங்கள்' என்றதும், அந்த அரிசி மூட்டையின் மீது தலைசாய்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதார். அந்த அரிசி அவருடைய குடும்பத்துக்கு அல்ல. சிந்தாமணி என்ற அந்த கிராமத்தினர் புயலுக்குப் பின்னான நாட்களில் கிடைத்த அரிசியை மொத்தமாக கொப்பரையில் கொட்டி கஞ்சி காய்ச்சி குடித்துதான் உயிர் வாழ்ந்தனர். அப்படி மொத்த ஊருக்கும் கஞ்சி காய்ச்சவே அந்த அரிசி மூட்டையை அவர் வாங்கிச் செல்கிறார்.  அவருடைய 40 வருட விவசாய வாழ்வில் எத்தனை மூட்டை நெல்லை அறுத்திருப்பார்? அடித்திருப்பார்? எத்தனை மூட்டை அரிசியைக் கையாண்டிருப்பார்? ஒரு மூட்டை அரிசியைப் பெற்றுக்கொண்டு குலுங்கி அழுத அந்த மனிதர் எங்களைக் கண்ணீர் விட்டுக் கதற வைத்தார்.

இந்த சிந்தாமணியின் காட்சி மட்டும் அல்ல. நாங்கள் கண்ட, எங்களால் காண முடியாத அனைத்து கிராமங்களின் நிலையும் இதுவே. முதலில், அடித்த புயல், ஊருக்குச் செல்லும் வழியை முழுதாக அடைத்துவிட்டது. இரண்டாவது, இதை வெளியுலகிற்கு தொடர்புகொண்டு சொல்ல செல்போன்  வேலை செய்யவில்லை. மூன்று, மின்சாரம் அடியோடு இல்லை என்பதால் தண்ணீர்  உள்ளிட்ட மின்சாரத்துடன் தொடர்புடைய எந்த வசதியும் கிடைக்கவில்லை. இவை, பிரச்னையின் மேலோட்டமான வரையறைகள். இதன் உள்ளடுக்குகளில் பல அடுக்கடுக்கான சிக்கல்கள் இருக்கின்றன. 

ஊருக்குள் மரம் விழுந்துவிட்டது என்று சொன்னால், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் மரம் விழுந்துவிட்டது. இதை வெட்டுவதற்கு அரிவாள் போதாது. பெரிய மரம் வெட்டும் எந்திரங்கள் வேண்டும். அவை நகரப்பகுதிகளில்தான்  கிடைக்கும். அங்கு செல்வதற்கு பாதை இல்லை. அப்படியே டூ&வீலரில் சென்று எடுத்து வந்தாலும், அதை இயக்குவதற்கு மின்வசதி இல்லை. இதனால், மரம் அறுக்கும் இயந்திரத்தை இயக்க ஜெனரேட்டர் தேடிப் பிடிக்க வேண்டும். பெட்ரோல் பங்குகளையும் கஜா சூறையாடிவிட்டது என்பதால், திறந்திருக்கும் பங்குகளை தேடிப்பிடித்து டீசல் வாங்கி வர வேண்டும். ஜெனரேட்டரை ஒவ்வொரு இடமாக நகர்த்திச் சென்று ஒவ்வொரு மரமாக அறுத்து, ஊரை சுத்தம் செய்து...

இன்னொரு பக்கம் இரண்டாவது நாளே குடிநீர் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. ஆழ்துளை பம்புகளை இயக்க மின்வசதி இல்லை. 200 அடிக்கும் கீழே இருக்கும் ஆழ்துளை கிணற்று இயந்திரத்தை இயக்கி, 60 அடிக்கும் மேலே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்ற வேண்டுமானால், அதற்கு அதிக குதிரைத்திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் வேண்டும். அவை மிக சொற்பமாகவே இருக்கும். அடுத்தது உணவுத் தட்டுப்பாடு. இப்படி சிக்கல் மேல் சிக்கல், அவலத்தை விட பேரவலம், அழிவில் இருந்து பேரழிவு என்று கஜா புயல் மக்களை நிலைகுலைய செய்துவிட்டது. இப்போது எங்கு திரும்பினாலும் நிவாரண முகாம்கள் மட்டுமே தென்படுகின்றன. நிவாரண பொருட்கள் ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களை எதிர்பார்த்து மக்கள் சாலையோரங்களில் கையேந்தி நிற்கின்றனர். சில பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கும், அரிசிக்கும், துணிமணிகளுக்கும் ஏங்கி நிற்கின்றனர்.

இவர்கள் அடுத்து என்ன செய்யப்போகின்றனர் என்பதே தெரியவில்லை. நிவாரண வண்டிகள் அதிகபட்சம் இன்னும் 10 நாட்களுக்கு. அதன்பிறகு சராசரி வாழ்வை எதிர்கொண்டாக வேண்டும். வீடில்லை. வீடில்லை என்றால் கூரையில்லை என்று மட்டும் அர்த்தம் அல்ல. வீட்டில் இருந்த பாத்திரங்கள், துணிமணிகள், தொலைக்காட்சி பெட்டி, செல்போன் உள்ளிட்ட எந்த பொருளும் இல்லை. பூஜ்ஜியம். வேலைக்குச் செல்லலாம் என்றால், வேலை தர வேண்டிய விவசாயம் அழிந்து கிடக்கிறது. உப்பளங்கள் எல்லாம் கடல் நீரில் மூழ்கி கிடக்கின்றன. இறால் பண்ணைகள் பேரழிவை சந்தித்துள்ளன. வேலை கொடுக்க ஆள் இல்லை. என்ன செய்யப்போகிறார்கள் என்றே தெரியவில்லை. யதார்த்தத்தில், குடும்பம், குடும்பமாக பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்வார்கள். பள்ளி, கல்லூரி பிள்ளைகள் கல்வியை இடைநிறுத்துவது அதிகம் நடக்கும். குடும்ப சண்டைகளும், தற்கொலைகளும் அதிகரிக்கும். எதுவும் நடக்கலாம் என்பதைப் போல்தான் சூழல் இருக்கிறது.

இன்னொரு பக்கம், அழிவு நடந்தது முழுவதும் கடற்கரையோரம் என்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் இழந்துவிட்டனர். வலைகளும், படகுகளும் பல லட்சம் விலைகொண்டவை.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், பேராவூரணி, அறந்தாங்கி, கறம்பகுடி, கந்தர்வக்கோட்டை பகுதி கிராமங்களுக்கும் இதே பிரச்னை . குடிசைகள் வீழ்ந்து, ஓட்டு வீடுகள் நொறுங்கி, மரங்கள் அழிந்து எல்லாம் போய்விட்டது. பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் இருந்த தென்னை மரங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இந்த தென்னந்தோப்புகள் எல்லாம் இப்பகுதி இளைஞர்களின் கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்டவை. சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு சென்று உழைத்து பொருளீட்டி கடந்த 20 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்புகள் இவை. இப்பகுதியின் செல்வச் செழிப்புக்கும் இவையே காரணம். அந்த கால் நூற்றாண்டு கால உழைப்பு இன்று தரை மட்டமாகிவிட்டது. அரசின் அதிகாரப்பூர்வ கணக்கின்படியே 90 சதவிகித தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. மீண்டும் இவற்றை உருவாக்குவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம். இதை நம்பி வாங்கியிருந்த கடன்கள், பிள்ளையின் திருமணம், படிப்பு என்று போட்டு வைத்திருந்த திட்டங்கள் எல்லாம் நாசமாகிவிட்டது.

இது வரலாறு காணாத பேரழிவு என்பதை முதலில் அரசு உணர வேண்டும். அரசின் அனைத்து துறைகளும் கூடுதல் நிதி ஒதுக்கி, கூடுதல் அக்கறை காட்டி மறு நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

டிசம்பர், 2018.