சின்னதுறை கிராமத்தின் தேவாலயத்தின் எதிரே உள்ள சந்தில் உள்ள சர்மிளாவின் வீடு மரணத்தின் சாயல் படிந்து கிடக்கிறது.
ஒக்கி புயலில் ஒரே வீட்டைச் சேர்ந்த ஆறு பேர் பலியான சோகம் அந்த வீட்டில் அழுகையாக விரவிக்கிடக்கிறது. உடைந்து போன சேர்களுக்குப் பதிலாக எதிர் வீட்டிலிருந்து சேர் கொண்டுவந்து போடுகிறார்கள். வசதியின் எந்தச் சுவடும் இல்லாத அந்த வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கிறார் மாற்றுத்திறனாளியான சர்மிளா.
‘‘ என் கணவர் பெயர் மில்டன். நவம்பர் 22ஆம் தேதி அவர், என் தம்பி அந்தோணிராஜ், என் அப்பா கிரிஸ்டோஃபர், என் அக்கா கணவர் என மொத்தம் 11 பேர் மீன் பிடிக்கச் சென்றார்கள். திரும்பி வரும்போதுதான் புயலில் மாட்டிக்கொண்டார்கள். கடலில் பார்த்தவர்கள் எங்கள் கணவர் போன படகு கவிழ்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள். எங்கள் படகு இரும்புப் படகு. மரப்படகாக இருந்தால் புயலின் காற்று வேகத்தில் பிளந்து உடைந்து போகும். ஒரு பெரிய சுழி வந்து இரும்புப் படகு அப்படியே கவிழ்ந்து மூழ்கிப்போகும். மொத்தம் பதினோரு பேர்கள் இந்தப்புயலில் மாட்டிக்கொண்டார்கள். அதில் ஏழு பேர்கள் எங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்ப என் கணவரை என் சொந்தங்களை கடல் கொண்டு போச்சு,'' என்கிற சர்மிளாவுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களுடையது காதல் திருமணமும்கூட.
‘‘ என் புள்ளைங்களுக்கு என் கணவர் செத்தது தெரியாது. கிருஸ்துமஸ்க்கு என் கணவர் வீடு திரும்பலன்னா என் புள்ளைங்க அப்பா எங்கம்மான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன். கடலம்மே,'' என்று பெருங்குரலெடுத்து அழுகிறார் சர்மிளா.
சின்னதுறை ரெம்மியாசின் குடும்ப சோகம் வேறு மாதிரியானது. ரெம்மியாசும் அவரது ஒரே மகனும், இரண்டு மருமகன்களும் நவம்பர் 28ஆம் தேதி மீன் பிடிக்கப் போனார்கள். யாரும் வீடு திரும்பவில்லை. ஒரே வீட்டில் அப்பா, மகன், இரண்டு மருமகப் பிள்ளைகள் என நான்கு ஆண்கள். வீடு முழுதும் இறைந்து கிடக்கிறது அழுகை. முதலில் நம்மிடம் பேச மறுத்தவர் ஃபாதர் அனுப்பினார் என்றவுடன் அழுகையினூடே பேச ஆரம்பித்தார் ரெம்மி யாசின் மகன் ஆண்டோ ஜெயினின் மனைவி ரம்யா, ‘‘அண்ணன் ராகேஷுக்கு டிசம்பர் 20ஆம் தேதி திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. செலவுக்குப் பணம் வேண்டும் என்பதால்தான் எல்லோரும் கடலுக்குப் போனார்கள். மூத்த அக்காவின் கணவர், அண்ணன், அப்பா, சின்ன அக்காவின் கணவர் என நால்வர் இந்தப் புயலில் காணாமல் போயுள்ளார்கள். அரசாங்கம் தரும் எந்த உதவியும் எங்களுக்கு வேணாம். எங்க அப்பாவை. மாமாவை, அண்ணனை கண்டுபிடிச்சி தந்தாப்போதும்'' என்கிறார் அவர்.
ரெம்மியாசின் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளி இருக்கிறது ரெசோலின் வீடு. ரெசோலினும் அவரது மச்சான் வில்ஃப்ரட்டும் நவம்பர் 19ஆம் தேதி கடலுக்குப் போனார்கள். வழக்கமாக பத்துப் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்பிவிடுவார்கள். இந்த முறை அவர்களிருவரையும் ஒக்கி புயல் கொண்டு போனது. இவர்களுடன் சேர்ந்து மொத்தம் ஆறு பேர் கடலுக்குப் போனார்கள். அவர்களின் கதி என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. ரெசோலினுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், வில்ஃப்ரட்டுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உண்டு. இவரது மூத்த பெண் கோத்லூஃபா இரண்டாவது படிக்கிறாள். சிறு வயதிலிருந்து இவளுக்கு கல்லீரல் பாதிப்பு உண்டு. திடீர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்துவிடுவார். சென்னை குளோபல் ஹாஸ்பிடலில்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டியது. டிசம்பர் ஏழாம் தேதி அறுவை சிகிச்சைக்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சைக்கு பத்து லட்சம் வரை தேவைப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்தைச் சம்பாதிக்கவே இருவரும் கடலுக்கு மீன் பாட்டுக்குப் போனார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. கோத்லூஃபாவின் ஆபரேஷனும் தள்ளிப்போய்விட்டது. ‘‘இனி குழந்தையின் எதிர்காலம் அந்த ஏசப்பா கையிலதான்'' என்று அழுகிறார் புனிதா, வில்ஃப்ரெட்டின் மனைவி. ‘‘ஒன்னு இந்த அரசாங்கம் என் கணவர மீட்டுத் தரணும்; இல்லை இந்தப் புள்ளைங்கள படிக்க வெச்சு கரை சேர்க்க எதாவது உதவி செய்யணும்'' என்கிறார்.
வில்ஃப்ரட்டின் அப்பா பெர்க்மன்ஸ். அம்மா மேரி. சத்துணவு உதவிப் பணியாளர் வேலை செய்து ஓய்வு பெற்றவர். முப்பது வருடங்களுக்குப் முன் கடலுக்கு போன பெர்க்மன்ஸ் வீடு திரும்பவில்லை. மகன்களையும் மகளையும் சத்துணவு வேலை செய்து கரை சேர்த்தார் மேரி. இப்போது மகனையும் அதே கடல் கொண்டுபோய்விட்டது.
சின்னதுறை கிராமத்துக்கு அருகில் இருக்கிறது தூத்தூர் இரவிபுத்தன் துறை. கடற்கரை கிராமம். ஓகி புயலுக்கு முன்பு கடலுக்கு போன சேவியர் இன்னும் வீடு திரும்பவில்லை. சேவியரின் மனைவி தெரசாம்மாள் நான்கு பெண் பிள்ளைகளுடன் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். பத்து வயதிற்கும் குறைவான நாலு பெண் பிள்ளைகளுடன் இனி எப்படி ஜீவிப்பேன் கர்த்தாவே என்று அழுகிறார். தேற்ற ஆளில்லாத ஜீவிதம் தெரசம்மாவுடையது. சிறிய வாடகை வீட்டில் பெண் பிள்ளைகளுடன் ஒரு பண்ட பாத்திரம் போல் கிடக்கிறார் அவர். ‘‘நாலு புள்ளைங்க என்றாலும் அவர் உழைச்சி தர்ற பணத்திலதான் நாங்க சாப்பிட்டோம். பத்து வயசிலருந்து கடலுக்குப் போக ஆரம்பித்தவர் என் கணவர். கடல் அவருக்கு தெய்வத்துக்கும் மேல. கடலுக்குப் போய்வந்தா கண்டதையும் வாங்கி வந்து புள்ளைங்களுக்கு ஊட்டி விடுவார். கடல் இருக்கிற வரைக்கும் என் ஜீவிதத்துக்கு குறைவில்ல தெரசா, எண்ட புள்ளைகளக் கரை சேத்திடுவேன் என்பார். இப்படிப் புயல் வந்து கொண்டோம்னு காங்கலையே ஏசப்பா'' என வெடிக்கிறார் படிப்பறிவில்லாத தெரசம்மாள். குழந்தைகள் அழும் அம்மையின் முகம் கண்டு திகிலடைந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
சின்னதுறை கிராமத்தில் மட்டும் புயலுக்கு 39 பேர் இறந்து போனார்கள் என்பது அதிகாரப்பூர்வ செய்தி. சொல்லிவைத்தாற் போல அத்தனை பேரும் சொன்னது அரசாங்கம் முறையான புயல் எச்சரிக்கை தரவில்லை. எங்களை இரண்டாம் தரக் குடிகளாக நடத்துகிறது. மீட்புப் பணிகளை சரிவர முன்னெடுக்க வில்லை என்பதுதான்.
சின்னதுறையை சேர்ந்த ஆண்டனிதாஸன் ஒக்கி புயலுக்குக் தப்பிக் கரை சேர்ந்தவர்களில் ஒருவர். தன் திகிலான அனுபவத்தை ஆவேசமாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
‘‘ நான் பன்னிரண்டு வயசில இருந்து கடலுக்குப் போக ஆரம்பிச்சேன். இருபது வருஷமா நான் கடலுக்கு மீன் பிடிக்கப் போயிட்டு வர்றேன். இவ்வளோ வருஷ அனுபவத்துல இந்த மாதிரி ஒரு புயல நான் பார்த்தது கிடையாது.
ஆளையே போட்டோட சேர்த்து தூக்கி வீசுற அளவுக்கு காத்து. கொஞ்ச நேரம் கழித்து எஞ்சின் ஆஃப் ஆயிட்டுது. எஞ்சின்ல தண்ணி ஏறி திரும்ப ஆன் பண்ண முடியல. எங்க ஆளுங்ககிட்ட வயர்லஸ்ல கூப்பிட்டு சொன்னோம். அவங்களுக்கு அதே நிலமைதான். நேவிக்கு வயர்லஸ்ல ட்ரை பண்ணோம். யாருன் லைன்ல வரலே. அப்ப கப்பல் ஒன்னு வந்தது. அவங்ககிட்ட நாங்க உதவி கேட்டோம். அவங்க கூப்பிட்டும் நேவிக்காரங்க உதவிக்கு வரல. நாங்க போன போட்டு ரெண்டா பொளந்திட்டு.. போட்டுல இருந்த டீசல் கேன்களை புடிச்சி கடல்ல கெடந்தோம். ஒரு நாள் பூரா கடல்ல கிடந்தோம். எங்க கண் முன்னே எங்க ஆள் ஒருத்தர் கடல்ல மூழ்கி இறந்து போனார். உடம்பெல்லாம் காயம். எங்களால் எதுவும் செய்ய முடியல. மத்தவங்களுக்கு உயிர் பயம் அதிகமாயிட்டு. என்ன செய்யறது? பொறவு இன்னொரு ஆள் இறந்து போனார். இன்னும் எங்க எல்லாருக்கும் பயம் கூடுதலாயிட்டு. அடுத்தடுத்து நாலு பேர் எங்க கண்ணு முன்னாடி இறந்து போனாங்க. மீதி ஆறு பேர் நாங்க டீசல் கேனைப் புடிச்சிக்கிட்டு நீந்த ஆரம்பிச்சோம். ராத்திரி பன்னெண்டு மணிக்கு நீந்த ஆரம்பிச்சி மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஒரு படகைப் பார்த்தோம். சரி கிட்டப்போயி ஏறிப் பொழைக்கலாம்னு பார்த்தா அது ‘போட்' கிடையாது. உடைஞ்ச போட்டோட ஒரு பகுதிதான். அதை பிடிச்சிட்டு தத்தளிச்சுட்டு இருந்தோம். இப்ப நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் இருந்தோம். நாலு பேர் என்ன ஆனாங்கன்னு தெரியல. அப்புறம் ரெண்டு படகு வந்தது. அவங்க எங்க ஆளுங்கதான். மீனவர்கள். ரெண்டு பேரையும் படகுல தூக்கிப் போட்டாங்கள். சாப்பிட்டு ரெண்டு நாளானதால நாங்க ரெண்டு பேரும் மயங்கிட்டோம். அப்புறம் அவங்க நேவிக்கு தகவல் கொடுத்தாங்க. நேவிக்காரங்க வந்தாங்க. அங்கிருந்து எங்களக் கொண்டுபோய் எர்ணாகுளம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில சேர்த்து சிகிச்சை கொடுத்தாங்க. ரொம்ப வற்புறுத்திதான் டிசம்பர் அஞ்சாம் தேதி நாங்க ஊருக்குத் திரும்பி வந்தோம். ஆனா எங்க கூட வந்த யாரும் இன்னும் கிடைக்கல. மிஸ்ஸிங்தான். எங்கள் மாதிரி முப்பது நாப்பது படகுங்க இந்தப் புயல்ல சிக்கிட்டாங்க. 'போட்டு' வலை, வயர்லெஸ், ஜிபிஎஸ், எக்கோ செண்டர் என எல்லாமும் போச்சு. 3 டன் வலையோட விலை ஐந்து லட்ச ரூபாய். இப்படி மொத்த இழப்பையும் கணக்குப் போட்டுப் பாருங்க.''
களியக்காவிளையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் கேரளா எல்லை தொடங்கிவிடுகிறது. அரை மணி நேரப் பேருந்து பயணத்தில் வருகிறது கொல்லங்கோடு கிராமம். அதனை அடுத்து மார்த்தாண்டம்துறை. தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவக் கிராமம் என்றாலும் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் இது. இறையுமன் துரையிலிருந்து பூத்துறை, தூத்தூர், சின்னதுறை, இரைவிபுத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை என நீரோடி வரை எட்டு கிராமங்கள் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தின் கீழ் வருபவை.
மார்த்தாண்டம்துரையைச் சேர்ந்தவர் பொனிப்பாஸ். வயது 55. தனது இரண்டு மகன்கள் ஆரோக்கியராஜ், ஆண்டனி மற்றும் மற்ற நான்கு பேர்களுடன் நவம்பர் 20ஆம் தேதி கடலுக்குப் போனார். ஓகி புயலுக்கு மூன்று நாள் கழித்து ஆரோக்கியராஜ், ஆண்டனி மட்டும் புயலுக்குத் தப்பிக் காயங்களுடன் கரை சேர்ந்தார்கள். மற்ற மூவர் மற்றும் பொனிப்பாஸ் ஆகியோர் மகன்கள் கண்முன்னே கடலில் மூழ்கிப்போனார்கள். பொனிப்பாஸின் வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கிறது கடல். வீடென்று சொன்னால் இருவர் கொஞ்சம் கால் நீட்டிப் படுக்கலாம். அவ்வளவுதான். ஹாலைத் தாண்டி சின்ன சமையல் அறை. பாத்திரங்கள் இறைந்து கிடக்கின்றன. பொனிப்பாஸின் மனைவி மேரிபாய், வயது 50. சர்க்கரை நோயாளி. காலில் கட்டி வந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். மருத்துவம் பார்க்க வழியில்லை என்று அழுது அரற்றுகிறார். இரு மகன்கள் இருந்தாலும் கணவரின் ஆதரவில்தான் வாழ்ந்து வந்தார். ‘‘மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி தெரு நாயப்போல கஞ்சி குடிக்க யாரையாவது எதிர்பார்த்துக்கிடக்கணும்மே ஏசப்பா'' என்று கண்ணீர்க்குரலால் கரைகிறார்.
மர்த்தாண்டம்துறைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நீரோடி. சின்ன பஸ் ஸ்டாண்டையொட்டி நம்மை வரவேற்கிறது செயிண்ட் நிக்கோலஸ் சர்ச். நீரோடியிலிருந்து ஓகி புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37 பேர். இது ஆதாரப்பூர்வமான எண்ணிக்கை. அந்த முப்பத்தேழு பேருக்கும் வைக்கப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் எல்லாவற்றையும் நமக்குச் சொல்லிவிட்டன. அன்றைக்கு மோடி கன்னியாகுமரி வந்ததால் மீனவப் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் கன்னியாகுமரிக்கு போயிருந்தார்கள். வீட்டில் இருப்பவர்களில் சிலரிடம் பேசினோம்.
அழுகைக்குரல் தெறிக்க லூசி பேச ஆரம்பிக்கிறார். ‘‘என் கணவர் பெயர் சனில். எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. என் கணவரும், அவரது தம்பியும், நண்பர்களுமாக மொத்தம் பதிமூன்று பேர் கடலுக்குப் போனார்கள். இப்ப வரை திரும்பி வரல்ல. எல்லாரும் படகு தாழ்ந்து செத்துப் போய்விட்டார்கள். இனி எண்ட ரெண்டு புள்ளைகளுக்கும் ஆதரவு யாரும் இல்ல. எவ்வளவு இருந்தாலும் இழப்பு இழப்புதானே. என் கணவர் திரும்பி வந்தாப் போதும்'' என்கிறார் யதார்த்தத்தை மீறி. சனிலுடன் கடலுக்குச் சென்றவர்களில் மற்ற எல்லாருக்கும் வயது இருபத்தைந்துக்கும் கீழ்தான் என்பது துயரத்தைக் கூட்டும் செய்தி.
செயிண்ட் நிகோலஸ் சர்ச்சின் ஃபாதர் ஷைனிஷ் போஸ்கோவிடம் பேசினோம். ‘ மீனவர்கள் இனத்தை கடற்கரையிலிருந்து வெளியேற்ற விரும்புகிறது மத்திய அரசு. மீட்பு நடவடிக்கைகளில் அத்தனை மெத்தனம். எங்கள் சார்பில் கடலுக்குப்போன மீனவர்கள் பற்றிய தகவல்களைக் கொடுத்தும் மீட்புப் பணியை அரசாங் கம் முடுக்கிவிடவில்லை. அப்படி அரசாங்கம் விரைந்து செயல்பட்டிருந்தால் பாதிக்கும் மேற்பட்ட மீனவ மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இணையம் துறைமுகம் அமைய நியாயமான போராட்டத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்த மீனவ மக்களை இந்த அரசாங்கம் எதிரியாகப் பார்க்கிறதோ என்கிற சந்தேகம் இப்போது தோன்றுகிறது'' என்று முடிக்கிறார் ஷைனிஷ் போஸ்கோ.
சின்னதுறையில் நாம் முன்னமே பார்த்த சர்மிளாவின் தம்பி அந்தோணிராஜின் மனைவி ஜோமி மழலை மாறாத இரு பெண்குழந்தைகளைக் கையில் பிடித்தவண்ணம் சொன்ன வார்த்தைகள் சென்னைக்குத் திரும்பியபோது நம் காதுகளில் ஒலித்தவண்ணம் இருந்தன..
‘‘என் கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் எங்கயாவது இன்னும் உயிரோடதான் இருக்கார்னுதான் தோணுது. அவர் திரும்பி வருவார். எண்ட பிள்ளைகளோடு விளையாடுவார்.'' நம்பிக்கைகள் பலிக்கட்டும்!
ஜனவரி, 2018.