சிறப்புக்கட்டுரைகள்

கணக்கு வாத்தியார்

அந்திமழை இளங்கோவன்

டைம்ஸ் இதழ் வருடந்தோறும் உலகின் முக்கியமான நூறுபேர்களின் பட்டியலை வெளியிடும் . பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற முக்கிய தலைவர்கள் இடம் பெற்ற 2012க் கான பட்டியலில் ஒரு  கணக்கு ஆசிரியரும் இடம் பெற்றிருந்தார். இந்திய வம்சாவளியினரான  அவரது பெயர்  சல்மான்கான் ( பாலிவுட் நடிகரல்ல ). அப்படியென்ன பெரிய கணக்கு வாத்தியார் ? சல்மான் கான் தனது அகடாமியின் மூலம் கோடான கோடி குழந்தைகளுக்கு அதட்டாமல், தலையில் கொட்டாமல், புரியும்படி கணக்கு  பாடமெடுக்கிறார் இலவசமாக. மங்கோலியாவில் உள்ள ஏழை குழந்தைகளிலிருந்து பில்கேட்ஸின் குழந்தைகளான ஜெனிபர், ரோரி மற்றும் போயிபி வரை கானின் மாணவர்களாக உள்ளனர்.

முப்பத்தாறு வயதான சல்மான் கான் கணக்கு வாத்தியாரான கதை சுவாரசியமானது.  படிப்பில் படுசுட்டியான கான் அமெரிக்காவில்  எம் ஐடியில் கணிதம் , எலக்ட் ரிக்கல் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ்  பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் பெற்ற கானுக்கு ஹெட்ஜ் பண்ட் அனலிஸ்ட்டாக பாஸ்டன் நகரில் வேலை கிடைக்கிறது . கணக்கில் புலி என்று குடும்பத்தில் பெயரெடுத்திருந்த  கானுக்கு நெருங்கிய உறவுக்கார குட்டிப்பெண்ணான நாடியாவிற்கு கணக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி கோரிக்கை எழுந்தது.

வேலை நேரத்திற்குப் பின் தொலைபேசி மூலமும் சாட் மூலமும்  கான் கணக்கு சொல்லிக்கொடுத்தார். பள்ளியில் நாடியா கணக்கு பாடத்தில் பிரமாதமாக பிரகாசிக்க , ‘எனக்கும் சொல்லிக் கொடுங்களேன் ’  என்று இன்னும் பலரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

எல்லாருக்கும் நேரம் ஒதுக்க சிரமப்பட்ட கான் பதினைந்து நிமிடங்கள் நீளமுள்ள சிறு சிறு வீடியோ பாட உரைகளை உருவாக்கி அதை யூ ட்யூபில்

வெளியிட்டார். பாடங்கள் சிறப்பாக இருக்க ’கானின் புகழ் குடும்பத்திற்கு வெளியேயும் பரவ ஆரம்பித்தது.

வரவேற்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட கான் அதிக பணம் தரும் தனது உயர்ந்த பதவியை விட குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுப்பது அதிக மகிழ்வை தருவதாக உணர்ந்தார். 2008 ல் ‘கான்   அகாடமி ’ என்ற லாப நோக்கமற்ற  நிறுவனத்தை ஆரம்பித்தார்.  அடுத்த வருடம் இதற்காக வேலையையும் விட்டுவிட்டார். எப்போதாவது வரும் ஐந்து டாலர் அல்லது பத்து டாலர்  நன்கொடை  மட்டும் தான் வருமானம்.  ஒரு நாள் தன் வங்கிக் கணக்கைப் பார்க்கும் போது நம்பமுடியவில்லை . ஆன் என்ற  பெண்மணி 10,000 டாலரை நன்கொடையாக அளித்திருந்தார். அதிகபட்ச நன்கொடையை  அளித்த அவருக்கு ஒரு எட்டு நேரில் போய் நன்றி சொல்லி விட்டு வரலாம் என்று கிளம்பினார் கான்.

ஆனிடம் நேரில் பேசிக்கொண்டிருக்கும் போது கான், நீங்கள் அளித்ததைத் தவிர இது வரை வந்த அதிகபட்ச நன்கொடை நூறு டாலர் தான் என்று சொன்னபோது அப்படியா?’ என்று ஆன் கேட்டுக்  கொண்டார். வீடு திரும்பிக் கொண்டிருந்த கானுக்கு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ,  என்ன என்று கேட்ட வரிடம் வீட்டிற்கு சென்ற பின் வங்கிக் கணக்கை பாருங்கள் என்று சஸ்பென்ஸ்  வைத்தார் ஆன்.

வீட்டிற்கு வந்து  வங்கிக் கணக்கை பார்த்த கான் ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டார். ஆன் ஒரு லட்சம் டாலரை ( அதாவது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஆறு லட்சம்! ) நன்கொடையாக வழங்கியிருந்தார்!

2010ல்  கூகுள் 11 கோடியையும் , பில்கேட்ஸ் பவுண்டேசன் 28 கோடியையும் நன்கொடையாக வழங்கின. பணமழை தொடர கணக்கிலிருந்து மற்ற பாடங்களுக்கு சேவையை  விரிவுபடுத்தினார்.

தற்போது சராசரியாக மாதத்திற்கு இருபத்தி ஒன்பது லட்சம் பேர், கான் அகாடமி இணையதளத்திற்கு வருகை தந்து கணக்கையும் இதர பாடங்களையும் இலவசமாக படிக்கிறார்கள். தற்போது ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள் முயன்றால் தமிழிலும் கானின்  பாடங்களை உருவாக்கலாம்.

‘ஒரு வி௸ஷயத்தைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு கால அளவு தேவைப்படும். ஆனால் நமது பள்ளிகள் எல்லா குழந்தைகளும் ஒரே கால அளவில் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கின்றன. இதனால் திறனுள்ள குழந்தைகள் கூட பின் தங்கிப் போய்விடுகிறார்கள்’ என்கிறார் கான்.

கணக்கிற்குப் பயப்படும் குழந்தைகளுக்கு கான் அகடமியை அறிமுகப்படுத்துவோம்:

www.khanacademy.org

செப்டெம்பர், 2012.