சிறப்புக்கட்டுரைகள்

ஓவிய உலகின் சிவாஜி

அஞ்சலி: ஓவியர் கோபுலு

ஓவியர் மனோகர்

தமிழக ஓவியர்களில் கோபுலுவின் கோடுகளில் உறைந்திருப்பதுபோல் வேறு எந்த ஓவியரின் கோடுகளிலும் தமிழரின் கலாச்சாரம் பதிவாகி இருப்பதாக என்னால் சொல்ல இயலாது. கோட்டோவியங்கள், கேலிச்சித்திரங்கள், வண்ணப்படங்கள், நீர்வண்ண ஒவியங்கள் எல்லாவற்றிலும் உயிர்ப்பு இருக்கும். பன்முக ஆற்றல் படைத்தவர்.

புகைப்படங்களைப் பார்த்து இன்று பல ஓவியர்கள் வரைவதைப் போல் வரைந்தவர் அல்ல அவர். கும்பகோணத்தில் பிறந்தவரான அவர் அங்குள்ள காந்தி பூங்காவில் அமர்ந்து சக மனிதர்களைக் கவனித்து வளர்ந்தார். அவர் கவனித்த பாத்திரங்களுக்கு தன் கோடுகளால் உயிர் கொடுத்தார். 30- 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக பிராமணக் குடும்பங்களை அவர் ஓவியங்களில் பதிவு செய்ததுபோல் எந்த புகைப்படங்களாவது பதிவு செய்திருக்குமா என்றால் சந்தேகமே. அவரது ஓவியங்களை எந்தெந்த கோணங்களிலிருந்து வரைந்திருக்கிறார் என்பது மெய்சிலிர்க்க வைக்கும்.

சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். திருமண ஊர்வலத்தில் விளக்கு ஏந்திச் செல்பவன், அப்பளத்தை உடைக்கத் திகைக்கும் நபர், என ஒவ்வொன்றையும் பார்த்தால் அவர் தனக்கான பாத்திரங்களை சமகால வாழ்க்கையில் இருந்து எடுத்துதன் கலைத்திறமையால் மேம்படுத்தினார் என்பது புரியவரும். கையை ஊன்றி எழும் உருவங்கள், வெற்றிலைப் பாக்குப் பெட்டி, கைவிசிறி, ஊஞ்சல் ஆட்டம், சுவரில் மாட்டி இருக்கும் காலண்டர் என்றெல்லாம் சின்ன கேலித்துணுக்குகளுக்கும் கூட அருமையான ஓவியங்கள் வரைவார். அவருக்கு இணையாக சொல்வதென்றால் ஆந்திராவைச் சேர்ந்த ஓவியரான பத்மஸ்ரீ விருதுபெற்ற பாபுவைச் சொல்லலாம்.

கலைஞர் கருணாநிதியின் குறளோவியம், பொன்னர் சங்கர் போன்ற தொடர்களுக்கும் அவர் வரைந்த ஓவியங்களில் அவரது மேதைமை புலப்படும்! பல கோவில் சிலைகளைப் பார்த்து வரலாற்றுக் கதைகளுக்கு தன் பாத்திரங்களை அவர் வடிவமைத்தார். ஆடைகள், ஆபரணங்கள், தலையில் இருக்கும் குஞ்சம், கொலுசு, தலை அலங்காரம் என்று எல்லாவற்றிலும் தமிழக கலாச்சாரத்தை அவர் வரலாற்று உணர்வுடன் பதிவு செய்தார்.

ஆனந்த விகடனில் 75ஆவது ஆண்டுவிழாவின்போது பல ஓவியர்களைப் பற்றி அவர் சொல்லியிருந்தார். அதில் என்னைப் பற்றியும் சில வரிகளை அவர் பதிவு செய்திருந்தார். நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. முகம் தெரியாத ஓர் இளம் ஓவியனைப் பற்றிக்கூட அவர் சொன்னது ஆச்சரியம் அளித்தது. அதன் பின்னர் அவரைப் பலமுறை சந்திக்க நேர்ந்தது. கும்பகோணம்தான் ஊர் என்றதும் உற்சாகம் அடைந்து பேசிக்கொண்டிருந்தார். ஒருமுறை அங்கே அவர் பிறந்த வீடு, படித்த கல்லூரி, கோவில்கள், காவிரி ஆறு, பழைய கல்லூரி, புதிய ஓவியக்கல்லூரி என்று பல விஷயங்களைச் சொல்லி இனி அங்கெல்லாம் செல்ல இயலாது என வருத்தப்பட்டார்.

இதற்கிடையில் அவருக்கு நடிகர் சிவகுமார்  பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவின்போது அவரைப் பிரமிக்கவைக்கும் பரிசொன்றை அளிக்க விரும்பினேன். கும்பகோணத்தில் அவர் பிறந்த தட்டாரதெரு அருகே உள்ள குளம், எதிரே இருந்த அவர் வீடு, அவர் படித்த ஐயன் தெருவில் இருந்த குப்புசாமி ஐயர் ஓவியப்பள்ளி, அவர் வரைந்த கோயில்கள், பூங்காக்கள், குளங்கள், காவிரியின் படித்துறை என பல இடங்களுக்கு அலைந்து அவற்றை ஒளிப்படக் காட்சிகளாக ஒரு குறுந்தகடில் பதிவு செய்து அளித்தோம். அவர் படித்த ஓவியப்பள்ளியை நாங்கள் போனபோது இடித்துக்கொண்டிருந்தார்கள். அதையும் படம் எடுத்திருந்தோம். அந்த குறுந்தகடைப் பார்த்துவிட்டு பலமுறை ஒரு குழந்தையைப்போல் எனக்கு போன் செய்து மகிழ்ந்தார். கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் அவர் நினைவைப் போற்றும் வகையில் கல்லூரியில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

 ஒரே வரியில் சொல்வதென்றால் நடிப்புலகில் சிவாஜியைப் போல் ஓவிய உலகில் கோபுலு!

(ஓவியர் மனோகர், முதல்வர், கும்பகோணம் ஓவியக்கல்லூரி)

ஜூன், 2015.