முதல் செய்தி: கோழிக்கோட்டில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டில் காதலனும் காதலியும் முத்தத்தைப் பரிமாறிக்கொண்டார்கள். அதை அறிந்த சிலர் ரெஸ்டாரண்ட்டை அடித்து நொறுக்கினார்கள்.
நாம் ஒருவருக்கொருவர் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த தனிமையான இடம் தேவையா? பொதுவெளியில் அன்பை வெளிப்படுத்தலாமா? காதலர்கள் ஒரு ரெஸ்டாரெண்ட்டின் மூலையில் முத்தமிட்டுக் கொள்வது தங்களுக்குள் பரஸ்பரக் காதலைப் பரிமாறிக் கொள்வதுதானே. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று செய்திருப்பார்களா? ஒரு வேளை, அந்தக் காதலன் பின்னாளில், ‘அந்த ரெஸ்டாரெண்டின் இருட்டு மூலையில் ஆர்க்கிட் செடிகளின் மறைவில் நீ அன்று கொடுத்த முத்தம் இன்னமும் இனிக்குதடி’ என்று கவிதை எழுதக் கூடும்.
தனிமையில் செய்ய வேண்டியதை பொது இடத்தில் செய்யக் கூடாது என்றால் முதலில் செய்ய வேண்டியது வீட்டுக்கு வீடு கழிவறை கட்டுவதற்காகப் போராடுதல்தான். நகரங்களில் சேரிகளை ஒட்டிய ஒற்றையடிப்பாதைகளில் ‘இவிடெ காற்றினு சுகந்தம்’ என்று மனதுக்குள் பாடியபடி, மூக்கைப் பொத்தியபடி, மல வரிசைகளைத் தாண்டியபடி நடக்கும்போது, குந்தியிருக்கும் அம்மணச் சிறுவன் ஒருவன் ‘அண்ணா, பாத்துப் போங்க, மிதிச்சிராதீங்க’ என்று அக்கறையோடு எச்சரிப்பதை நீங்களும் கேட்டிருந்தீர்களேயானால், நீங்கள் முதலில் கழிவறை கட்டும் போராட்டத்தைத் துவங்கியிருப்பீர்கள்.
செய்தி இரண்டு: ரெஸ்டாரண்ட்டைத் தாக்கியதைக் கண்டித்து ‘பொது இடத்தில் முத்தம் பரிமாறிக்கொள்வோம்’ என்று சவால் விட்டு சில சுதந்திரச் சிந்தனையாளர்கள் கேரளாவின் கலாச்
சார தலைநகரமான கொச்சினில் ‘முத்தப் போராட்டம்’ நடத்தினார்கள்.
கலாச்சாரக் காவல் என்பது உலகம் முழுக்க மனித உரிமை கோருபவர்களால் எப்பொழுதும் கடுமையாக எதிர்க்கப்படுவது. பொது இடங்களில் முத்தம் பரிமாறிக்கொள்வது என்பது ஒழுக்ககேடான செயல் அல்ல என்று உச்ச நீதி மன்றமும் டெல்லி உயர்நீதி மன்றமும் முன்பே தீர்ப்பு வழங்கியுள்ளன. பொது இடங்களில் அன்பைப் பரிமாறிக் கொள்வது தவறா, அல்லது பொது இடங்களில் பேண்ட் ஜிப்பைத் திறந்து அல்லது வேட்டியைத் தூக்கி விட்டேற்றியாய் ஒன்றுக்குப் போவது தவறா? எந்தக் காதலர்களும் ரொம்ப அவசரமாக இப்போது முத்தமிட்டே ஆகவேண்டும் என்று பொது இடங்களில் முத்தமிட்டுக் கொள்வதில்லை. அந்த நேரத்தில் அன்பை வெளிப்படுத்தும் ஒரு கணச்செயல் மட்டுமே.
முகநூலில் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் பெண்களுக்கு இடப்படும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே இன்னும் 99 சதவீத ஆண்கள் பெண்களை அடிமைகளாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். செய்தி மூன்று: முத்தப் போராட்டத்தை முன்நின்று நடத்திய தம்பதியான ராகுல் பசுபாலனும் ரஷ்மி நாயரும் ‘ஆன்லைன் செக்ஸ் ராக்கெட்’ சம்பந்தமாக கைது செய்யப்பட்டார்கள்.
Operation Big Dad’ என்று பெயரிடப்பட்ட தேடுதல் வேட்டையில் ராகுலும் ரஷ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ராகுலுக்கு சொந்தமான ஃபேஸ்புக் பக்கங்களில் ரஷ்மியின் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஆன்லைன் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், இவர்களின் நெட்வொர்க் உலகளாவிய செக்ஸ் மாஃபியாவுடன் சம்பந்தப்பட்டு பல இளம்பெண்களை அதில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராகுல் திரைப்படம் சார்ந்த செயல்பாடுகளிலும் ரஷ்மி மாடலிங்கிலும் இருப்பவர்கள். ரஷ்மியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக வலம் வந்தன. இருவரும் சமீப காலங்களில், சமூக அரசியல் விவாதங்களில் பங்குகொண்டு கேரளாவில் பிரபலமாகி விட்டவர்கள். முத்தப் போராட்டத்தை எதிர்த்தவர்கள் “நாங்க அப்பவே சொன்னோமில்ல?” என்று குதிக்கிறார்கள். ராகுலின் தந்தை பசுபாலனே “என் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டதில் ஆச்சரியமில்லை. முதலிலிருந்தே எனக்கு அவர்கள் மேல் சந்தேகம் இருந்தது” என்கிறார். இதனால் முத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நிலை தர்மசங்கடம் என்பதில் சந்தேகமில்லை.
இதைப் பற்றி நடிகையும் ஆக்டிவிஸ்ட்டுமான ’சஜிதா மடத்தில்’ சொல்வது: “கிஸ் ஆஃப் லவ் மூலமாக கேரளாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தாக்கம் கேரள சமூகத்தில் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ராகுல் பசுபாலனும் ரஷ்மியும் கைது செய்யப்பட்டதால், முத்தப் போராட்டம் ஒரு பாழ்சொல்லாக ஆகிவிடப்போவதில்லை. முத்தப் போராட்டம் முன்வைத்தது கலாச்சார காவலர்களுக்கு எதிரான இன்றைய தலைமுறையின் தார்மீகக் கோபத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும்தான். மணிப்பூரில் ராணுவத்தினரை நோக்கி நிர்வாணமாக நின்று எங்களை வன்புணர்வு செய்யுங்கள் என்று பெண்கள் போராடியது, தாங்கள் வன்புணர்வு செய்யப்படவேண்டும் என்ற விருப்பத்தாலா? அப்படியொரு போராட்டம் நடத்த எந்த அளவு அவர்களுக்கு தார்மீகக் கோபம் இருந்திருக்கும்? அப்படியொரு நிலைப்பாட்டில்தான் முத்தப் போராட்டமும் நடத்தப்பட்டது. ராகுலும் ரஷ்மியும் அவர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்காக முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரையும் தரம் தாழ்ந்தவர்களாகச் சித்தரிப்பது தவறு” என்கிறார்.
டிசம்பர், 2015.