சிறப்புக்கட்டுரைகள்

ஓய்ந்தது இசை முரசு

பொள்ளாச்சி மா. உமாபதி

திமுக பிரச்சாரப் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் என்னும் இரண்டு தண்டவாளங்களின் மீது பயணித்த இசைத்தொடர் வண்டி - அவர். தமிழகம் கடந்து தமிழர்கள் வாழும் திசையெல்லாம் அவரது இசை முரசு சிறப்பாக ஓங்கி ஒலித்தது. குறிப்பாக  இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்.

இஸ்லாமிய பாடல்கள் மிகவும் மென்மையாக ஒலித்து வந்த காலத்தில் தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற பாடகர்களைப் போல் உச்சஸ்தாயி பாடல்களில் உச்சம் தொட்டவர் அனீபா அவர்கள். அதிலும், தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் மணிப்பிரவாளத் தமிழில் பாடிய போது இசையை ரசித்த அளவுக்கு அதன் பொருளை உணர முடியவில்லை. ஆனால் நாகூர் அனிபா பாடிய அழகு தமிழ்ப் பாடல்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

நாகூர் இஸ்மாயில் - மரியம் பீவி இணையரின் மூன்றாவது கடைசி மகனாகப் பிறந்த முகமது அனீபாவின் பிறந்த நாள் - கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 - 1925. எளிய சிறிய கொல்லுப் பட்டறையில் தன் தந்தைக்கு துணையாக இருந்த போது தன்னிச்சையாக அவர் பாடிய பாடல்கள்  அனைவரையும் கவர்ந்தது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அனிபா - முறைப்படி இசைப்பயிற்சி பெற்றவரல்ல. எனினும் புலவர் ஆபிதீன் என்னும் கவிஞரை அவரது குரல்வளமும், பாடும் திறனும் பெரிதும் ஈர்த்தது.

நாகூரில் கௌசியா பைச் என்னும் திருமண ஊர்வலங்களில் பாடும் இசைக்குழுவில் இணைந்து பாடத் தொடங்கினார். தந்தை பெரியாரின் கொள்கைகளும் செயல்பாடுகளும் அனிபா அவர்களை பெரிதும் கவர்ந்தது. இயக்கப் பிரச்சார பாடல்களையும் பாடி வந்தார். நாகூருக்கு அருகில் இருந்த திருக்குவளையிலிருந்து நாகூருக்கு அடிக்கடி வந்த கலைஞர் அவர்களின் தொடக்க நாள் நண்பரானவர்.

1949இல் அறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தொடங்கியபோது, அவரது படைவரிசையில் அணி வகுத்தார். அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா என்னும் பாடல் தி.மு.கழகத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. 1950களில் அவரது பாடல்களை இசைத்தட்டாக வெளியிட எண்ணியபோது, அவரது உச்சகட்ட குரலை அப்போதைய பதிவு கருவிகளால் பதிவு செய்ய இயலவில்லையாம். அதன்பின் 1955 இல் இலங்கை நல்லதம்பி பாவலர் எழுதிய “ சின்னச் சின்னப் பாவலர்களே ” என்னும் பாடல்தான் இசைத்தட்டாக வெளிவந்தது. அந்த இசைத்தட்டின் மறுபக்கத்தில் புரட்சிக் கவிஞரின் “ சங்கே முழங்கு ” பாடல் இடம் பெற்றது.

நாகூரின் சிறப்புகள் இரண்டு. முதல் சிறப்பு நாகூர் தர்க்கா. அது மத எல்லைகளைக் கடந்து அனைத்து மதத்தவரின் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. அது போலவே நாகூர் அனிபா பாடிய பாடல்கள். இவை மத எல்லைகளைக் கடந்து அனைவராலும் நேசிக்கப் பட்டன. “ இறைவனிடம் கையேந்துங்கள் ” என்னும் பாடல் அனைத்து மதத்தவர் இல்லங்களிலும் ஒலித்தது.

நாகூர் அனிபா அவர்களுக்கு பதவிகள் தேடிவந்த போது - அவற்றை ஏற்காது மறுத்தவர்தான் இசைமுரசு. “ நான் ஒரு பாடகன் ” - எனது பணியை வாழ்நாள் முழுவதும் தொடர்வேன், மற்ற நிர்வாகப் பணிகள் எனக்கு ஒத்து வராது என்று மறுத்தார். எனினும் அவரை சட்ட மேலவை உறுப்பினராகவும் - வக்ஃப் வாரியத் தலைவராகவும் கலைஞர் அமர்த்தி அழகு பார்த்தார்.

 சம்பத், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தனிக்கட்சி தொடங்கிய போது எவ்வளவு வேண்டிக் கேட்டுக் கொண்டபோதும், திமு கழகத்தில் உறுதியாக இருந்ததோடு - அப்போது அவர் பாடிய பாடல்,

“ வளர்த்த கடா - மார்பில் பாய்ந்ததடா ” அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

பலரும் நம்புவதுபோல் அவர் பாடிய பாடல்கள் பல்லாயிரம் இல்லை. நானூறு பாடல்கள் மட்டுமே பாடினார். ஆனால் நாற்பாதாயிரம் பாடல்கள் பாடிய புகழ் பெற்றார். இசையில் சரித்திர சாதனை படைத்த சகாப்தமாக நாகூர் அனிபா என்றும் நம் நினைவில் வாழ்வார்.

(பொள்ளாச்சி உமாபதி, திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் செயலாளர்)

மே, 2015.