ரவி பேலட்
சிறப்புக்கட்டுரைகள்

ஒழுக்க நடுக்கங்கள்

முள்ளரும்பு மரங்கள் -8

ஷாஜி சென்

1980 களின் இறுதி ஆண்டுகள். போவின் பள்ளியிலிருந்து பாலாநகர் செல்லும் நெடும்பாதையின் இருமருங்கும் பரந்த பிரோஸ்குடாப் பகுதி. அதன் ஓர் எல்லையில் அப்போதைய ஐதராபாத் விமானநிலையம். மறுமுனையில் பெட்டிகள் போன்று சிறு வீடுகள் நெருங்கிய சேரிகள். பல மாநிலங்களிலிருந்து வேலைதேடி வந்திறங்கிய ஏழை இளைஞர்கள் இடுங்கலான அத்தெருக்களில் சுற்றித் திரிந்தனர்.

நெடுக்கிலும் குறுக்கிலும் திறந்து கிடந்த சாக்கடைகளின் கரியெண்ணெய் நிறமான அழுகிய நீருக்குமேல் மனித மலம் மிதந்துகொண்டேயிருந்தது. காற்றில் எப்போதும் பரவிக்கிடந்த மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மூன்று நான்கு நாள்களில் நமக்குப் பழக்கமாகிவிடும். ஏனெனில் சொந்த ஊரையும் வீட்டையும்விட்டு ஓடி வந்தவனுக்கு இங்கே பிழைத்தே ஆகவேண்டும். இடுங்கலான ஒற்றையறை வீடுகளில் எட்டு, பத்துப் பேர் கூடி வாழ்ந்தனர். அறையின் மூலையிலுள்ள ‘மோறி'யில்தான் பாத்திரம் கழுவலும் குளியலும் அத்தியாவசிய நேரங்களில் மூத்திரம் போதலும் கூட. சமையலும் சாப்பிடலும் அதனருகேதான். இரவானால் அங்கேயே ஜமுக்காளம் விரித்துக் கூட்டமாக முண்டியடித்துத் தூங்குவார்கள்.

அவர்களில் ஒருவனாக சிலநாள்கள் நானும் அங்கே இருந்தேன். ஆனால் அதிகாலையில் அங்கிருந்து தப்பித்து இரவில் தாமதமாகத் திரும்பவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். தூதஞ்சல் ஆவணங்கள் மற்றும் பொட்டலங்களின் விநியோகக்காரன், தனியார் காவலாளிகளை வழங்கும் நிறுவனத்தின் முகவர் எனப் பல வேலைகளைச் செய்தேன். எதிலுமே இரண்டு மாதத்திற்குமேல் தாக்குப் பிடிக்கவில்லை. அறை வாடகை மற்றும் உணவுக் கணக்கில் எனது விகிதத்தைக் கொடுக்க பெரும்பாலும் கையில் பணமிருக்கவில்லை. கிடைப்பதை வைத்துப் புத்தகங்களையும் இதழ்களையும் வாங்கி, கண்ணில் தெரியும் திரைப்படங்களையெல்லாம் பார்த்துத் திரிபவன் கையில் என்ன மீதமிருக்கும்?

அறையிலிருந்து அரைநாழிகை நடந்தால் நெடும்பாதை முச்சந்தி. அங்கே டெக்கான் ஈரானி உணவுக்கடை. கடும் காக்கித் துணி வண்ணத்தில் கொழுத்த கால் கோப்பை ஈரானித் தேநீரை வாங்கிச் சுவைத்து மூன்றுநான்கு வெண்ணெய் பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கே அமர்ந்துகொள்ளலாம். கையிலிருக்கும் புத்தகத்தைப் படித்து முடிக்கும்வரை அங்கேயே அமர்ந்தாலும் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள். அக்கடைக்கு அருகே மலையாளியான மேரிக் குஞ்சு ஆன்ட்டி நடத்தும் ஜோபின்ஸ் எனும் தட்டச்சுப் பள்ளி இருந்தது. ஜோபின் என்பது அவரது மகனின் பெயர். அவனுக்கும் எனக்கும் ஒரே வயது. தட்டச்சுப் பயின்றால் பல வேலை வாய்ப்புகள் வரும் என்று எண்ணி அங்கே நானும் சேர்ந்தேன். பெரிதாக எதுவுமே பயிலவில்லை என்றாலும் ஜோபினும் நானும் நெருங்கிய நண்பர்களானோம். விரைவில் ஷாஜி என்று பெயருடைய இன்னொருவனும் எங்கள் நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டான். குமரி மாவட்டத்தின் குலசேகரம் பகுதிகளிலிருந்து ரப்பர் தாள்களை வரிப்பணம் செலுத்தாமல் சரக்குந்துகளில் கடத்திக்கொண்டுவந்து ஐதராபாதிலுள்ள ரப்பர் தொழிற்சாலைகளுக்கு விற்று பெரும்பணத்தைச் சம்பாதித்துக்கொண்டிருந்த ஒருவரின் உறவினன் அந்த ஷாஜி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் சினிமா பார்ப்பதே எங்கள் மூவர் படையின் வாடிக்கையாக இருந்தது. செலவையெல்லாம் குலசேகரம் ஷாஜி பார்த்துக்கொள்வான். ஆனால் அவனது விருப்பம் தெலுங்கு மசாலாப் படங்களின்மேல்தாம். ஐதராபாதில் பிறந்து வளர்ந்த ஜோபினுக்கோ ஆங்கிலப் படங்கள்தாம் பிடிக்கும். எனக்கு ஹிந்திப் படங்கள். குறிப்பாக முன்பு பார்க்க முடியாமல்போன பழைய படங்கள். அப்படிப்பட்ட பல படங்களைக் குறைந்த செலவில் பார்க்கும் அரிய வாய்ப்பினை பிரோஸ்குடா எனக்கு அமைத்துத் தந்தது.

விமானப் படையினரின் திறந்தவெளித் திரையரங்கு ஒன்று அங்கே இருந்தது. நாலாபக்கமும் மதில்சுவர் இருந்தாலும் அதற்கு மேல்கூரை இருக்கவில்லை. விமானப்படை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாகப் படம் பார்ப்பதற்கான ஏற்பாடு அது. மூன்றோ நான்கோ ரூபாய் சிறு கட்டணம் செலுத்தினால் வெளி ஆள்களும் உள்ளே சென்று படம் பார்க்கலாம். பக்கத்தில் இருக்கும் ஐதராபாத் விமான நிலையத்தின் ஆகாயத்தில் அடிக்கடி உயர்ந்து தாழும் விமானங்களின் இரைச்சல் வசனங்களையும் பாடல்களையும் தட்டிச் செல்லும்போது அவற்றைச் சரிவரக் கேட்க ஆசைப்பட்டு பார்த்த படங்களையே பலமுறை பார்த்தேன். நாசிர் உசேன் எழுதித் தயாரித்து விஜய் ஆனந்த் இயக்கி ஷம்மி கபூர், ஆஷா பரேக் நடித்த, ஆர் டி பர்மனின் அதிசயப் பாடல்கள் இடம்பெற்ற ‘தீஸரீ மன்சில்' எனும் படத்தை மட்டும் ஏழுமுறை பார்த்த நினைவிருக்கிறது.

ஓரு சனிக்கிழமை இரவில் அங்கே ராஜ் கபூரின் ‘மேரா நாம் ஜோக்கர்' படம் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் பார்க்கப் பெருங்கூட்டம். பலரும் குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அரைமணி நேரத்திற்குமேல் படம் ஓடியிருக்கவேண்டும். ரிஷி கபூரும் நண்பர்களும் அடங்கிய பதின்பருவப் பள்ளிமாணவர்களின் குழுவை மேய்த்துக்கொண்டு மேரி எனும் சட்டைக்காரி ஆசிரியை சுற்றுலா செல்கிறார். சிமி கேர்வாள் எனும் இளம் நடிகைதான் அப்பாத்திரம். நீட்டம் குறைவான குட்டியுடுப்பை அணிந்த அவரைக் கண்டால் ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவி என்றே தோன்றும். ‘தீத்தர் கே தோ ஆகே தீத்தர், தீத்தர் கே தோ பீச்சே தீத்தர்..' பாடியாடிச் சிரித்து மகிழ்ந்து ஒரு காட்டாற்றில் அந்த மாணவர்கள் குளியலுக்கு இறங்குகிறார்கள். சேட்டை செய்யும் மாணவர்களைக் கோபமாகத் திட்டும்போது தடுமாறிக் கால் வழுக்கி ஆற்றுத் தண்ணீரில் விழுகிறார் சிமி.

நனைந்து உடலில் ஒட்டிப்பிடித்த குட்டியுடுப்புடன் தண்ணீரிலிருந்து எழுந்துவரும் அவரது காமக்கிளர்ச்சியூட்டும் உடலை இன்னும் குழந்தைப் பருவம் விடாத ரிஷி கபூர் வேட்கையுடன் பார்க்கிறான். பின்னர் அருகேயுள்ள தழைக்காட்டின் மறைவில் உடை மாற்றும் சிமியின் நிர்வாணத்தை அவன் ஒளிந்து நின்று பார்க்கிறான். அன்றிரவு அவனது கனவில் தழைக்காட்டிலிருந்து முழுநிர்வாணமாக இறங்கிவரும் சிமி காட்சியளிக்கிறார்! எல்லோரும் பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு பெருவோட்டத் திரைப்படத்தில் கதாநாயகி முழுநிர்வாணமாக நடித்திருக்கிறாள்! பார்வையாளர்கள் வாய்பிளந்தனர். அரங்கம் முழுவதும் ஒரே சலசலப்பு. ‘அது கனவுக் காட்சிதானே, நிஜமில்லையே' என்று நாங்கள் நகையாடினோம் என்றாலும் குழந்தையும் குடும்பமுமாக வந்தவர்கள் அதிர்ந்துபோய் முகத்தோடுமுகம் பாராமல் தலை குனிந்து அமர்ந்தனர். ராஜ் கபூர் இயக்கிக் கதாநாயகனாக நடித்த அப்படத்தில் அவரது குழந்தைப் பருவத்தைத்தான் சொந்த மகனான ரிஷி கபூர் நடித்தான். பால்யம் தாண்டாத தனது மகனை ஒரு தகப்பன் இப்படியெல்லாம் நடிக்க வைக்கலாமா? அனைவருக்கும் பயங்கரமான ஒழுக்க நடுக்கம். திடீரென்று படம் நின்றது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட்டம் சலசலக்கும்போது 'இதுவரை பார்த்ததே போதும் சாமீ' என்று பலர் தமது குழந்தைகளை இழுத்துக்கொண்டு வெளியே சென்றனர். அப்போது அதோ மீண்டும் முதலிலிருந்து படம் தொடங்குகிறது! இது என்ன கூத்து என்று கூட்டம் கூச்சல் போடத்தொடங்கியது. ஆனால் அங்கே யாராலும் எதுவும் செய்ய முடியாது. படம் ஓட்டும் இயந்திரம் உயர்ந்த ஒரு கட்டடத்தில்தான் இருக்கிறது. அங்கே யாருக்கும் அனுமதியில்லை. விமானப்படையின் கண்காணிப்பில் இருக்கும் இடங்கள். யாராவது அத்துமீறி அசைந்தால்கூட பிடிபடுவார்கள். ஒரே படத்தைப் பலமுறை பார்க்கும் வியாதி இருந்த நான் சந்தோஷப்பட்டேன். மீண்டும் பார்க்கும்போது விரிவாகப் பார்க்கலாமே. சூட்டை ஏற்றும் சிமி கேர்வாளின் காட்சிகளை மீண்டும் பார்க்கப்போவதன் மெய்சிலிர்ப்பில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அந்த காட்சி வந்து முடிந்தவுடன் மீண்டும் படம் நின்றது.

படமோட்டும் அறையின் கீழ்மட்டத்தில் விமானப் படையின் உயர் அதிகாரிகள் அமர்ந்து படம் பார்ப்பதற்கான தனித் தளம் ஒன்று இருந்தது. அங்கே உயர் அதிகாரி ஒருவர் குடிபோதையில் கிறங்கி அமர்ந்திருந்தார். போதை மிதப்பில் ஓர் அரசரைப்போல் வீற்றிருந்த அவரது ஆணையின்படிதான் படம் முதலிலிருந்து மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அன்றைக்கு படம் பார்க்கவந்த ஆண்களில் பெரும்பாலானோர்கள் அக்காட்சியை மீண்டும் பார்க்கவேண்டுமே என்று ஆசைப்பட்டிருப்பார்கள். குடிபோதையில் சூடேறிப்போன உயர் அதிகாரியின் நிலைமை சொல்லவா வேண்டும்! இடுப்புப் புட்டியிலிருந்து குடித்துக்கொண்டேயிருந்த அவர் விரைவில் தலைதொங்கி தூங்கிப்போனதால் மூன்றாவது தடவை ‘மேரா நாம் ஜோக்கர்' நில்லாமல் ஓடியது.

நிஜத்திலேயே நான்கு மணி பதினைந்து நிமிடம் நீளமிருக்கும் அப்படத்தைப் பார்த்து முடிக்க அன்றைக்கு எங்களுக்கு ஐந்தரை மணிநேரம் தேவைப்பட்டது. முக்கியக் கதாநாயகியான பத்மினியின் (ஆம்... பழைய தமிழ் நடிகை பத்மினியே தான்) முக்காலும் அம்மணமான மார்பகம், உள்புறம் தெரியும் சேலை மட்டுமே கட்டி மழையில் ஆடிப்பாடும் அவரது உடல்வடிவுகள் எனப் படத்தில் மீண்டும் பல நிர்வாணக் காட்சிகள் இருந்தன. நல்லவேளை அதெல்லாம் வரும்முன் அதிகாரி ஆழ் தூக்க போதையில் விழுந்திருந்தார். இல்லையேல் அன்று மேரா நாம் ஜோக்கர் பதினாறு மணி நேரம் ஓடியிருக்கும்.

(வளரும்...)

shaajichennai@gmail.com

ஏப்ரல், 2022