பெண் குழந்தை வேண்டாம் கொன்றுவிடு, இல்லையென்றால் தற்கொலைசெய்து கொள்வேன் என்றார் அம்மா. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையுடன் கொஞ்சம் பணத்தை கூடையில் வைத்து மார்க்கெட் பகுதியில் வைத்துவிட்டேன். யாராவது எடுத்து சென்று வளர்ப்பார்கள், குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து சென்று பார்க்கும்போது குழந்தை உடல் முழுக்க கொசுக்கடித் தழும்புகளுடன் இறந்து கிடந்தது. பல நாட்கள் இதை நினைத்து கதறி அழுதிருக்கிறேன்‘‘ என்கிறார் நான்பூவின் மாமா. சீனாவின் ஒற்றைக் குழந்தை திட்டத்தினாலும், சமூகத்தின் ஆண் குழந்தை மோகத்தாலும் நடந்த இது போன்ற கொடூரங்களை தோலுரித்துக் காட்டுகிறது ஒன் சைல்ட் நேஷன் (One child nation) என்ற ஆவணப்படம். அமேசான் பிரைமில் கிடைக்கும் இப்படத்தின் இயக்குநர் நான்பூ ஒற்றைக் குழந்தை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்.
மக்கள் தொகை பெருக்கத்தில் மிகவும் அச்சமூட்டக்கூடிய வகையில் வளர்ந்து வந்த சீனா 1979 இல் ‘குடும்பத்திற்கு ஒரு குழந்தை' என்ற திட்டத்தை கையிலெடுத்தது. 1982 இல் அது சட்டமாக்கப்பட்டது. தெருக்களில், பாடப்புத்தகங்களில், வீதி நாடகங்களில், குழந்தை நிகழ்ச்சிகளில் என்று ஒரு குழந்தை திட்டம் எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது. இளம் வயதினரின் எண்ணிக்கை குறைந்து நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமானதை ஒட்டி 2015 இல் இந்த சட்டம் கைவிடப் பட்டது.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இயக்குநர் நான்பூ தன்னுடைய முதல் குழந்தையுடன் தான் பிறந்த வாங் கிராமத்திற்கு வருகிறார். முதலில் இந்த சட்டத்தை அமல்படுத்திய காலத்தில் இருந்த கிராம அதிகாரியை சந்திக்கிறார். கட்டாய குடும்ப கட்டுப்பாடு, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்ட குடும்பங்களின் மேல் செலுத்தப்பட்ட வன்முறை என்று ஒவ்வொன்றாக விவரிக்கிறார் அவர். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களின் வீடுகள், சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லோருமே சொல்லும் ஒரு விஷயம் அரசு ஆணை, நாம் என்ன செய்ய முடியும் என்பதுதான்.
‘ஒரு நாளில் இருபது கருத்தடை அல்லது கருக்கலைப்பு செய்திருக்கிறேன். அந்த காலங்களில் பெண்களை குண்டு கட்டாக கட்டி பன்றிகளைப் போல மருத்துவமனைக்கு கொண்டு வருவார்கள். என்னுடைய கையினால் குறைந்தது ஐம்பது,அறுபதாயிரம் சிசுக்களை அழிக்கும் பாவச் செயலை செய்திருக்கிறேன்' என்று குற்ற உணர்ச்சியுடன் சொல்லும் 84 வயதான செவிலி ஹுராயு அதற்கான பிராயச்சித்தமாக தற்போது குழந்தை பிறப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கான மருத்துவத்தை செய்து வருவதாக கூறுகிறார். இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் டெல்லி சாலையோரத்தில் வசித்த அடித்தட்டு மக்களை கூட்டம் கூட்டமாக அள்ளிச் சென்று கட்டாய கருத்தடை செய்த சம்பவம் இரா.முருகனின் 1975 நாவலில் வருவது இங்கு நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் எமர்ஜென்சி 21 மாதங்கள் தான் இருந்தது, ஆனால் சீனாவில் 38 ஆண்டுகள் இதே போன்ற அடக்குமுறைகள்.
அரசாங்கத்தின் செயல்களுக்கு எதிர்ப்புகள் எழாமல் இல்லை. பென் வாங் என்ற ஓவியர் குப்பை கழிவுகளில் மஞ்சள் பைகளில் சுற்றப்பட்ட இறந்த சிசுக்களை கண்டு மனம் வெதும்புகிறார். பிறகு இவ்வாறு வீசியெறியப்பட்ட சிசுக்களை சேகரிக்கத் தொடங்குகிறார். ‘இவர்களை கொல்வதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது? புன்னகையுடன் இறந்து கிடக்கும் சிசுவின் உடலைப் பாருங்கள், அது ஏன் புன்னகைக்கிறது, மனிதத்தன்மையற்ற இந்த நாட்டில் பிறப்பதை விட இறப்பதே மேல் என்று புன்னகைக்கிறதா?' என்று கேள்வி எழுப்புகிறார். அவரின் ஓவிய சேகரிப்பில் உள்ள இறந்த சிசுக்களின் படங்கள் எந்த ஒரு மனிதரையும் அசைத்துப் பார்க்கவல்லவை.
அரசாங்கம் ஒரு புறம் என்றால் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று நினைக்கும் சமூக அமைப்பு மற்றொரு புறம் தன்னுடைய கோர முகத்தைக் காட்டுகிறது. முதல் பத்தியில் நான்பூவுவின் மாமா சொன்னது போல ஏராளமானோர் பெண் குழந்தைகளை வீதியில் வீசுகிறார்கள்.
இந்த சமயத்தில் டூவான் என்கிற குடும்பத்தைச் சார்ந்தோர் குழந்தை கடத்தலுக்காக கைது செய்யப்படுகிறார்கள். உண்மையில் இவர்கள் குழந்தைகளை கடத்தவில்லை. தினமும் வேலைக்கு செல்கையில் வழியில் கிடக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளை காணும் டுவான் குடும்ப இளைஞன் ஒரு முறை குழந்தையைக் கொண்டு போய் அனாதை இல்லத்தில் சேர்க்கிறான். அங்கு அவனுக்கு இரு நூறு டாலர் பணம் கொடுக்கிறார்கள். அந்த சமயத்தில் தான் சீன அரசு அனாதை இல்லங்களிலிருந்து குழந்தைகளை தத்தெடுப்பதை அனுமதிக்கிறது. அன்றிலிருந்து வழியில் கிடக்கும் குழந்தைகளை அனாதை இல்லத்தில் சேர்த்து பணம் சம்பாதிக்க தொடங்குகிறான் அவன். பணம் கிடைக்கும் என்றவுடன் தினமும் சாலைகளில் வேலை செய்பவர்களும் இதில் இணைந்து கொள்கிறார்கள். அதற்குதான் தண்டனை.
அனாதை இல்லங்கள் மூலம் உலகெங்கும் சீன குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். அனாதை இல்லங்களுக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து தத்தெடுப்பவர்கள் பணம் கொடுத்தார்கள். ஒரு குழந்தை திட்டத்தை சிறப்பாக வழி நடத்தி செல்வதற்காக சீன அரசும் பணம் அளித்தது.
கிராமப்புறங்களில் ரகசியமாக இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து குந்தையைப் பிரித்து அனாதை இல்லங்களில் சேர்க்கும் அரசு ஊழியர்கள், அந்த குடும்பத்தினரிடமிருந்து அபராதமாகவும் கணிசமான தொகையை பிடுங்குகிறார்கள். இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால் அதில் ஒரு குழந்தையை கட்டாயமாக பிரித்து செல்லும் கொடுமையையெல்லாம் கூட நடந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
அந்த சமயத்தில் இந்த தகவல்களை பத்திரிகையில் வெளியிட்ட பத்திரிகையாளர் ஜியோமிங் பாங் அரசினால் மிரட்டப்படுகிறார். செய்திகள் தடை செய்யப்படுகின்றன. கொலை மிரட்டல் வந்தவுடன் இவர் ஹாங்காங்கில் தஞ்சம் புகுகிறார். அங்கிருந்து இந்த தகவல்களை ஒரு புத்தகமாக எழுதுகிறார்.
இப்படி பிரிக்கப்பட்ட இரட்டைச் சகோதரிகளில் அமெரிக்காவில் வாழும் ஒரு பெண், சீனாவில் இருக்கும் தன்னுடைய சகோதரியை இன்று சமூக வலைதளங்களில் தொடர்புகொள்ளும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. அதே சமயம் உண்மையான பெற்றோரை தங்கள் குழந்தை கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கும் வளர்ப்பு பெற்றோர் என உணர்வுகளின் குவியலாக இருக்கிறது இந்த ஆவணப்படம்.
இன்று உலக வல்லரசுகளுக்கு போட்டியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் சீன அரசின் இரும்பு கவசத்திலிருந்து தகவல்கள் எதுவுமே வெளி உலகிற்கு தெரிவதில்லை. ஒன் சைல்ட் நேஷன் போன்ற ஆவணப்படங்கள் தான் அந்த முகத்திரையை கிழித்து அரசின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டுகின்றன.
சென்ற அந்திமழை இதழில் மருத்துவர் ஆர்.விஜயகுமார் சொல்லியிருந்தது போல தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 என்ற அபாயகரமான நிலையில் இருக்கிறது. குறைந்தது 2.1 சதவீதமாக இருந்தால் தான் மாநிலத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும். இந்த அபாயத்தை உணர்ந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள பெற்றோர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டி இருக்கும் என்கிறார் மருத்துவர் விஜயகுமார்.
இந்த ஆவணப் படம் பார்ப்பவர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வர்கள்!
மே 2021