சிறப்புக்கட்டுரைகள்

ஒரு மிளகாயில் 40 பேருக்கு குழம்பு!

மீரா வில்வம்

காட்டில் அவன் அலைந்ததுதான் மிச்சம், அன்றைய வேட்டை முயற்சியும் வீணாகிவிட்டது. சோர்வடைந்த அவனைப் பசியும் தாக்கத்  தொடங்கியது.. சுற்றும் முற்றும் பார்த்தான். ஏதாவது சாப்பிடக்  கிடைக்குமா ..?

அதோ அருகில் ஒரு சிறு செடி நிறையச் சிவந்த சிறுபழங்கள்.. இலைகளுக்கு மேல் வரிசையாய் அடுக்கியதைப்போல்  அப்படியொரு அழகான வரிசையுடன் அந்தச் சிவப்புப் பழங்கள்  அவனை மகிழ்வித்தன.

அதைப் பறித்துத் தின்னத்  தொடங்கினான். அவ்வளவு பசி அவனுக்கு. அது சாப்பிடக் கூடிய  பழம்தானா? இதுபோன்ற கேள்விகளெல்லாம் கேட்க பசி அவனை  அனுமதிக்கவில்லை.. ஆனால் அவன் அதைச் சாப்பிட்டதும் எரிச்சல்  தாங்கமுடியாமல் கீழே வீழ்ந்து மண்ணில் புரண்டான் ..  வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் நுரை வரத் தொடங்கியது.. வயிறும்  எரிய அவன் பாதி மயக்கத்திற்குள் வீழ்ந்துவிட்டான்.. .

இலை நுனிகளிலிருந்தும் இற்று வீழ்ந்த நீர்த்துளிகள் அவன் முகத்தில்  வீழ மரணத்தின் எல்லையிலிருந்து கண்திறந்து பார்த்தான்..  புகைச்சலில் தளர்ந்து போன உடலை அவனால் ஒன்றும்  செய்யமுடியவில்லை.. புகைவு மூடிய கண்களைத் திறந்து பார்த்தான்.  மேலே சில பறவைகள் நெற்கதிரை அலகுகளில் எடுத்துப்  பறக்கின்றன.. அவற்றிடம் மனத்தால் உதவிக்கு வேண்டினான்..  அந்தப் பறவைகள் நெற்கதிர்களை அவன் மீது போட்டுவிட்டுச்  சென்றன..

அவனோ கதிர்களை இறுத்து மென்றுகொண்டிருந்தான்... கொஞ்ச  நேரத்தில் தவிடும் உமியும் எல்லாம் தின்றதினாலோ என்னமோ  அவனின் புகைவு கொஞ்சம் குறைந்தது.. மெல்ல எழுந்த அவன்,  மீதமிருந்த நெற்கதிர்களையும் அந்த அற்புத பழங்களையும்  கிராமத்துக்கு எடுத்துச் சென்று நட்டு வளர்த்தான் ..அப்படித்தான்  நாகாலாந்தில் உணவுப் பயிரிடல் தொடங்கியதாம்...  அந்தப் பழம்தான் நாகா காந்தாரி மிளகாய்.

ஏதோ யுகத்தில் மிளகாய் அவனுக்கு விவசாயத்தைக் கற்றுகொடுத்தது.. ஆனால் கேரளாவில் சாலக்குடி நதிக்கரையில் இருக்கும் காடுகுற்றி எனும் விவசாயக் கிராமவாசியான ஜோஜோ சிறமல் என்பவருக்கு மிளகாய்  வாழ்க்கையை அளித்திருக்கிறது..

நீண்ட பதினைந்து வருடகால அரேபிய பாலைவன வாழ்க்கை  அவருக்கு அளித்தது பக்கவாதம் எனும் கொடிய நோயை. சௌதி அரேபியாவிலுள்ள பென்டெக் கம்பெனியில் உயர்பதவியில் இருந்த  ஜோஜோ வேறு வழியின்றிக் கேரளாவுக்கு வருகிறார். நீண்டகால  ஆங்கில மருத்துவத்திற்குப் பிறகு மனம் நொந்து வாழ்ந்த அவர்  குடும்பம் ஆயுர்வேத சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தது... வைத்தியர் இவரிடம் முதலில் கேட்ட கேள்வி.

‘உங்களுக்கு என்ன வேலை பிடிக்கும் ?‘

உடல் அசைக்க முடியாமல் இருக்கும் ஜோஜோ யோசிக்காமல் திணறித் திணறிச் சொன்னார் ...

‘விவசாயம்..‘

சிறுவயதிலிருந்தே ஜோஜோவுக்கு விவசாயம் மிகவும் பிடித்தமான  ஒன்று... இவரது உற்சாகத்தைப் பார்த்து இவரது தந்தை இவருக்கு  அன்று கொடுத்ததுதான் இந்த 30 சென்ட் இடம்... அதில்  படிக்கும்போதே ஜாதிக்காய் மரங்களை வளர்த்தார். இன்று  அவருக்கு வருமானம் தருகின்றன அவை.....

வைத்தியர் அவருக்குக் கொடுத்த மருந்துகளில் மிக முக்கியமான  மருந்து...

‘செடிகளை வளர்த்து.. விவசாயம் செய்‘ என்பதாகும் .

ஜோஜோவுக்கு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் வேதனையாகவும்  இருந்தது.. மனைவியின் உதவியால் காய்கறிகளை நட்டு வளர்க்கத்  திட்டமிடுகிறார்.. அதில் ஒன்று மிளகாய்.. செடித் தொட்டிகளில்  முளைத்துவரும் மிளகாய்ச் செடிகளுக்கருகில் சக்கரநாற்காலியைக்  கொண்டு செல்வார் மனைவி ...

மிளகாய் வளர வளர ஜோஜோவின் கைகளும் கால்களும் மெல்ல  மெல்ல அசையத் தொடங்கின.. செடித் தொட்டிகளில் இருந்த  மிளகாய்ச் செடிகள் அடுக்களையின் வெளியே மண்ணிற்கு மாற்றப்படுகின்றன. மனைவியின் உதவியால் மெல்ல மெல்ல மிளகாய்ச்  செடிகளுக்கிடையே நடைபயிலத் தொடங்கினார் ஜோ...

ஆறுமாதத்திற்குள் ஜோஜோ தயார்... மண்வெட்டியால் குழியெடுத்து  இயற்கை உரங்கள் தயாரிப்பதிலிருந்து விளைவை எடுத்து சந்தையில்  கொண்டுபோய் விற்பது வரைக்கும் தானாகச் செய்யத்தொடங்கினார்..

தன்னை நலமாக்கிய மிளகாய்ச் செடிகளை அவர் எப்படி நேசிக்காமல்  இருப்பார்? ஓர் இலையை யாராவது பறித்தால்கூட அவருக்கு  இதயத்துடிப்பு அதிகமாகும் அளவிற்கு மிளகாயின் காதலனாக  மாறிவிட்டார் ஜோ...

மிளகாய் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தத் தொடங்கிய இவர்  முகநூலில் சில்லி லவர்ஸ் (chilli lovers) என்றொரு பக்கத்தை  ஆரம்பித்துத் தம் அனுபவங்களை அதில்  எழுதுகிறார். இவர் பகிர்ந்த  அனுபவம் படித்து மிளகாய் விவசாயம் மூலம் கடன்தொல்லையில்  இருந்து மீண்ட எத்தனையோ குடும்பங்களும் உலகின் பல  இடங்களில் இன்று இருக்கின்றனர்.

ஜோஜோவிடம் பேசிப் பாருங்கள்.. மிளகாய் பற்றி மட்டுமே அவர்  பேச்சிருக்கும்.. மூன்று நிறங்களில் நாகா மிளகாய் இவரது மிளகாய்த்  தோட்டத்தின் வி ஐ பி யாக இருக்கிறது.. நாற்பது பேருக்குக் குழம்பு  வைக்க ஒரு நாகா மிளகாய் போதுமாம்.. இப்போது புரிகிறதா அதன்  காரத் தீவிரம்..,,அதிலிருந்தும் பயோ வெப்பன் (Bio weapon)  தயாரிக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது...

நாகா மிளகாயோடு 70 வகை மிளகாய்கள் இவரின் தோட்டத்தைச்  செழுமைப்படுத்துகின்றன.மூன்று  வித்தியாசமான மிளகாய்ச் செடிகளை மகரந்தச் சேர்க்கை நடத்தி  இவர் உருவாக்கியிருக்கிறார்...

ஜோ சொல்கிறார்..

‘நல்ல விளைவு வேண்டுமென்றால் ரசாயன உரங்களையோ பூச்சிக்  கொல்லிகளையோ பயன்படுத்தாதீர்கள்.. இலை சுருளும் நோய்  வந்தால், வீட்டிலே பூச்சிக்கொல்லி மருந்தைத் தயார் செய்யலாம். வெள்ளைப்பூண்டு பூச்சிக்கொல்லி மருந்து: ஒரு கிலோ வெள்ளைப்பூண்டை நன்றாக அரைத்து நான்கு லிட்டர்  தண்ணீரில் கரைக்கவும் .... அதில் 50 கிராம் மஞ்சள் பொடி சேர்த்து  நன்றாகக் கலக்கவும் ..இதை நேர்த்தியான துணியில் வடித்தெடுத்து இலைகளில் தெளிக்கவும்..இது சக்திவாய்ந்த பூச்சிக்கொல்லி.. மிளகாய்ச் செடிகளுக்குக் கடலைப் புண்ணாக்கு நீர் மிகச் சிறந்த வளம்.. புண்ணாக்கைத் தண்ணீரில் கரைத்து மூன்று நாட்கள் வைக்கவும் .. புளித்துத் தெளிந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றவும்..  மீண்டும் அந்தப் புண்ணாக்கில் தண்ணீரை ஊற்றி இதைப் போலவே  மூன்று நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம்..

மிளகாய்க்கு உத்தம உரம் என்றால் மீன் அமினோ ஆசிட்தான்.. அதை வீட்டிலேயே தயார் செய்யலாம்..

ஜோ, மிளகாயின் காதலன் ..ஆனால் பழகுவதற்குக் காரமானவர்  அல்லர் .. மிகவும் இனிமையானவர்.. எல்லோருக்கும் தன்னால்  முடிந்தவரை விதைகளைக் கொடுத்து உதவியும் வருகிறார்.  உலகச் சந்தையில் ஒரு கிலோ நம்மூர் இயற்கை விவசாயத்தில் வந்த  காந்தாரி மிளகாய்க்கு 1200 ரூபாய் வரை கிடைக்கும் எனும்போது ஏன்  காய்கறி விவசாயம் செய்பவர்கள் இயற்கை விவசாயத்திற்கு  மாறக்கூடாது? ஜோவை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் அவரின் முகநூல் பக்கத்தில் பேசலாம்...

ஏப்ரல், 2015.