சிறப்புக்கட்டுரைகள்

ஒரு பக்கச் சார்பா உமக்கு ?

எதிர்வினை

Staff Writer

அன்புடையீர்,   வணக்கம்.

இம்மாத அந்திமழை கண்டேன் .அதில் திராவிடத்தின் தசை ஆடியதா? என்னும் ஒரு பார்வையாளரின் குறிப்பேடு கண்டேன். அந்த பார்வையாளர் தமிழ் தேசியக் கண்ணோட்டம் கொண்டவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அரங்கில் சுபவீ, பெ.மணியரசன்  இருவருக்கும் முப்பது நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. சுபவீ  மிகச் சரியாக  29 நிமிடம்  55 வினாடிகளில்  தன் வாதத்தை முடித்தார். ஆனால் தோழர் பெ.ம.  42 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். ஆனால் உங்கள் பார்வையாளர், சுப.வீ  ‘பேசிக் கொண்டே போனார்‘ என்று குறிப்பிட்டிருப்பது அவரது ஒருதலைச்சார்பினைத் தெளிவாக்குகிறது.

சுப.வீ  தன் பேச்சில், திராவிடத்திற்கும், தமிழுக்கும் உள்ள உறவு, திராவிடம் வளர்த்த தமிழ், திராவிடத்தை வெறுக்கும் தமிழ் தேசியம் என்று மூன்று கூறுகளாகப் பிரித்து வாதிட்டார். திராவிடம் என்பது சொல் அல்ல, அது ஒரு கோட்பாடு, அதற்கு அகராதியில் பொருள் தேடக்கூடாது, வரலாற்றில் விடை தேட வேண்டும் என்று அழகாக குறிப்பிட்டார்.  பார்ப்பனீயம் தவிர்த்த, சமுக நீதியை அடிப்படையாகக் கொண்ட, சாதிப் பிரிவுகளற்ற, சமத்துவ சமுதாயம் காண்பதே திராவிடம் என்று தெளிவாக்கிய பின்னாலும், தோழா பெ.ம. ‘இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப் பட்ட போது சுற்றிலும் உள்ள மாநிலங்களில் இருந்து ஒரு கண்டனத் தீர்மானம் கூட இயற்றவில்லையே? தானாடாவிட்டாலும் தன தசை ஆடுமல்லவா? ஏன் ஆடவில்லை?‘ என்று திராவிடத்தை பூகோள அடிப்படையில் புரிந்துகொண்டு கேள்வி எழுப்பினார். அவர் புரிந்துகொண்ட திராவிடம்  ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாட்டை உள்ளடக்கிய திராவிடம். இது அவரது தவறான புரிதலைக் காட்டுகிறது.  சுப.வீ  சொன்ன ‘திராவிடம் என்பது சொல் அல்ல , அது ஒரு கோட்பாடு, அதற்கு அகராதியில் பொருள் தேடக்கூடாது, வரலாற்றில் விடை தேட வேண்டும் ‘ என்றதை வசதியாக மறந்ததுபோல்  மறைத்து விட்டார். ‘அதற்கு அகராதியில் பொருள் தேடக்கூடாது, ‘ என்ற பின்னாலும்  பிரிட்டானியா என்சைக்ளோ பீடியாவை ஆதாரம் காட்டுகின்றார். ஆனால் சுபவீ  மபொசி-யை வரலாற்றில் ஆதாரம் காட்டினார். பாவாணரை, அயோத்திதாச பண்டிதரை வரலாற்றில் ஆதாரம் காட்டினார். ராகுல் திராவிட் என்று பார்ப்பனர் பெயர் வைத்திருப்பதால் பார்ப்பனர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று அடிப்படையே இல்லாத சொத்தை வாதத்தை பெ.ம. வைத்தார்.

அதை விடவும் சுபவீ  திராவிட இயக்கங்கள் அனைத்திற்காகவும் பேசினார். ஆனால் பெ.ம. தனது அமைப்பிற்காக மட்டும் பேசினார். ‘நான் இனத்தால் தமிழன், நாட்டால் இந்தியன் ‘ என்று கலைஞர் கூறியதை எப்படி இந்தியன் என்று ஒத்துக்கொள்ளலாம் என்று விதண்டா வாதம் பேசினார். அப்போது சுபவீ  உங்கள் கையில் உள்ள கடவுசீட்டு (பாஸ்போர்ட்) எந்த அரசு கொடுத்தது? இந்திய நாட்டின் அரசா? தமிழ்  நாட்டின்  அரசா?  என்று மடக்கினார். ஆனால் பெ.ம . மிகவும் தரம் தாழ்ந்து பெரியார் என்னும் பெருங்கடலை சாதி என்னும் சின்ன சிமிழுக்குள் அடக்க நினைத்தார். அதுகண்டுதான் கருப்புச்சட்டைகள் வெகுண்டு எழுந்தனர். காலமெல்லாம் சாதி ஒழிப்பிற்காக பாடுபட்டவரை நாயக்கர் என்ற சாதியாளராக சித்தரித்தது பெருங்குற்றமாகும். தங்கள் தரப்பு பலவீனமாகும்போது இப்படி மலிவான தந்திரங்களை கையாள்வது தவிர அவருக்கு வேறுவழி தெரியவில்லை.  ஈழத்தமிழர் படுகொலையைப் பற்றிக் குறிப்பிட்டு பேசியதால், தமிழ்நாட்டில் இரண்டு தமிழ் குழுக்கள் சாதிக்கலவரத்தில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டினார். கருப்புச்+சட்டை போட்டுவந்தவர்கள்  தங்கள் தரப்பு சோபிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததாக குறிப்பிடுவது, அபத்தமானது. விவாதம் முழுவதும் திராவிடமே தலை நிமிர்ந்து இருந்தது. திராவிடம் தமிழை உள்ளடக்கியது. திராவிடத்தின் வெற்றி தமிழின் வெற்றியே.

அன்புடன் ,

பொள்ளாச்சி மா.உமாபதி

ஏப்ரல், 2015.