சிறப்புக்கட்டுரைகள்

ஐ.பி.எஸ். அவசியமில்லை

மூசே விஜி

காவல் துறையைச் சுதந்தரமும் நேர்மையும் கொண்ட கட்டுப்பாடான துறையாக மாற்ற சில யோசனைகள்:

  1. இங்கிலாந்தில் இருப்பது போல் காவலர் நிலையில் மட்டுமே நேரடியாக பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

  2. மூன்றாண்டுகளுக்கொரு முறை காவலர்களிலிருந்து தேர்வு மூலம் தலைமைக் காவலர்களையும், தலைமைக்காவலர்களிலிருந்து  துணை ஆய்வாளர்களையும், இவர்களிலிருந்து ஆய்வாளர்களையும், ஆய்வாளர்களிலிருந்து துணைக் கண்காணிப்பாளர்களையும், துணைக்கண்காணிப்பாளர்களிலிருந்து கண்காணிப்பாளர்கள் என காவல் துறைத்தலைவர் வரை  தகுதி, திறமை அடிப்படையில் பதவி உயர்வின் மூலம் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அதாவது காவலராகப் பணியில் சேர்ந்த ஒருவரே காவல் துறைத்தலைவராக வர வேண்டும்.

  3. காவலர்கள் அனைவருக்கும் எட்டு மணி நேரம் மட்டுமே பணி.

  4. முக்கியமான சாலைகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிகளை மீறுபவர்கள் வீட்டுக்கே அபராத அறிவிப்பு செல்லும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்(கேமராக்களுக்கு யார் வி.ஐ.பி என்று தெரியாது).

  5. நீதிமன்றங்கள் போன்று சுதந்தர அமைப்பாக காவல்துறை மாற்றப்பட வேண்டும்.

  6. வழக்குகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும்.

  7. காவல் வாகனங்களைச் சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதைத் தடுக்க, எல்லா காவல் துறையினருக்கும்

    சொந்த வாகனமும் எரிபொருளும் அரசு செலவில் தனியாக வழங்க வேண்டும்.

  8. தினமும் ஒரு மணி நேரம் காவல் துறைத் தலைவர் முதல் அனைவரும் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.

  9. காவலர் குடியிருப்புகள் அனைத்தும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும் உடற்பயிற்சிக்கூடம் அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும்.

  10. போக்குவரத்துக் காவல் பிரிவு என்று தனியாக வைக்காமல் பணியை மாற்றி மாற்றிக் கொடுத்தால் தூசிகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் காவலர்களைக் காப்பாற்றலாம்.

  11. ஒழுக்கம் , கட்டுப்பாடு, கண்ணியம், ஈடுபாடு, சேவையுணர்வு ஆகியவற்றை மேம்படுத்த ஆண்டுக்கு பதினைந்து நாட்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.

  12. காவலர்கள் மக்களின் உண்மையான நண்பர்கள் என்பதை உண்மையாக்க, ஊர்கள் தோறும் பொதுமக்களிலிருந்து காவல் நண்பர்கள் குழுவை ஏற்படுத்தி ஒருங்கிணைந்து பணியாற்றும் சூழலை உருவாக்கலாம்.

மார்ச், 2013.