சிறப்புக்கட்டுரைகள்

ஏற்றுக்கொள்ளுங்கள்

ராம்பாபு

புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் மிக முக்கியமானவை.  பலரால் கண்முன்னால் நடந்த நிகழ்வைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த தம்பதியினர் அவர்கள். குழந்தைகள் இல்லை. ஓய்வுபெற்ற பின் ஒரு சொந்த வீடு கட்டினார் கணவர். ஒரு நாள் திடீரென அவரது  மனைவிக்கு உடல் நலக்குறைவு. வாகனத்தில் ஏற்றி எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். சிலநாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, மனைவி உயிர் நீத்தார். மனைவியின் மரணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈமச்சடங்குகள் முடிந்தபின்னர், அவர் எங்கள் மருத்துவமனைக்கு கையில் ஒரு மஞ்சள் பையில் மனைவியின் மருத்துவக் குறிப்புகளுடன் வர ஆரம்பித்தார். தினமும் சிகிச்சை அளித்த மருத்துவரைச் சென்று பார்ப்பார். ‘நிஜமாகவே என் மனைவி இறந்துவிட்டாரா? நல்லா தானே இருந்தார்?’ என்று கேட்பார். மருத்துவரும் பொறுமையாகப் பதில் சொல்வார். இப்படியே இரண்டு மாதங்கள் போயின. மருத்துவர்கள் எவ்வளவு நாள் பதில் சொல்வார்கள்? என்னிடம் அந்த பொறுப்பு மடைமாற்றப்பட்டது.

‘நிஜமாகவே இறந்துட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?’ என்னிடமும் கேட்க ஆரம்பித்தார். பல நாட்கள் வந்துகொண்டிருந்தார்.  என்னுடைய உதவியாளர்கள் ஏன் சார்... இவருக்கு பதில் சொல்கிறீர்கள்? என்று கேட்பார்கள்.

ஒரு நாளும் அவரிடம் நான் கோபப்பட்டதில்லை. தன் மனைவி இறந்துவிட்டார் என்பதை எழுபது வயதைக் கடந்த இந்த எளிய மனிதரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  திடீரென அவர் வருவது நின்றுபோனது. அப்புறம் விசாரித்தபோது, அவர் வீட்டை விற்றுவிட்டு சென்னைக்கு வெளியே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்துகொண்டார் என்று தெரிந்தது. தொலைவு அதிகமானதால் அவர் வருவதை நிறுத்திவிட்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். ஒருவேளை அவர் தன் மனைவி நிஜமாகவே இறந்துவிட்டார் என்று உணர்ந்திருக்கவும் கூடும். எப்படி இருந்தாலும் அவர் அடைந்த துயரம் மனதை நெருடுகிறது!

நிகழ்வின் கணத்திலிருந்து விலக்கி முன்னோக்கி நகர்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்கிறான் என்றால் அந்த பள்ளியை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கல்வி கடினமாகிவிடுகிறது. பணிக்குச் செல்லும்போது அலுவலகத்தை அந்த சூழலை ஏற்றுக்கொண்டு பணிபுரியவேண்டும். நிறைய பேரிடம் உங்கள் அலுவலகம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், அதை ஏன் கேட்கறீங்க.. என்று அலுத்துக்கொள்வர். ஆனால் முப்பது ஆண்டுகள் அங்கேயே குப்பை கொட்டுவர். ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவராக இருப்பினும் பத்தாயிரம் சம்பளம் வாங்குபவராக இருப்பினும் இப்படி சலித்துக் கொண்டால் என்ன செய்வது? வாழ்க்கை முழுக்க இப்படி சலிப்புடனே போய்க்கொண்டிருக்கும். உங்கள் உடன் பணிபுரிகிறவர் ஒரு பைக் வாங்குகிறார். அவர் பைக் வாங்கியிருக்கிறார். அது உங்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்வு. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் அவரை முழு மனதுடன் வாழ்த்துவீர்கள். இல்லாவிட்டால் பொறாமை வரும். நம் சிந்தனையே சிதைந்துவிடும்.

வாழ்க்கையில் மருமகள் மாமியாரை ஏற்றுக்கொண்டால்தான் அம்மா போல் நடத்துவார். மாமியார் மருமகளை ஏற்றுக்கொண்டால்தான் மகள்போல் நடத்துவார். ஏற்றல் என்பது நம் வாழ்வின் எல்லா கட்டத்திலும் முக்கியமானது. திரைப்படங்களில் தான் அழகாக இல்லை என்று ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டவர்கள்தான் காமெடியன்களாக ஜொலித்திருக்கிறார்கள். நன்கு கவனித்துப்பாருங்கள். தனக்குக் கிடைப்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்தே மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கிறது. ஏற்காமல் புலம்புவதில் இல்லை.

சரி... ஏற்றுக்கொள்வதை திருப்தியுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கிற மாணவன் நாற்பது மதிப்பெண்கள் பெறுகிறான். தான் இவ்வளவு மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறோம் என்று ஏற்றுக்கொண்டு அதை சவாலாக எடுத்துக் கொண்டு கூடுதல் மதிப்பெண்ணுக்காக முயற்சிக்க வேண்டும். நாற்பதே போதும் என்று திருப்தி அடைந்துவிடக்கூடாது. அத்துடன் ஐயோ நாற்பதுதானே எடுத்திருக்கிறேன் என்று சொல்லி தற்கொலை முயற்சிக்கும் போகக்கூடாது. நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன். நல்லதோ, கெட்டதோ நடப்பதை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து மேலும் உயர உழைக்கவேண்டும். (கட்டுரையாளர், சென்னை மருத்துவமனை ஒன்றின் பொதுமேலாளர்)

ஏப்ரல், 2016.