சிறப்புக்கட்டுரைகள்

ஏன் விஷ்ணுப்ரியா இப்படி?

கே. வி. ஷைலஜா

டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் மரணம் என்னைத் தூங்கவிடாமல் தொடர் அவஸ்தைக்குள்ளாக்கியிருக்கிறது. எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அடங்க மறுக்கிறது மனசு. சமூகத்தின் எத்தனை கோரமுகங்களைத் தாண்டி ஒரு கரு பெண்ணாய் பரிணமிக்க வேண்டியிருக்கிறது. பல காலகட்டங்களைத் தாண்டி போராடி உச்சாணிக் கொம்பிலிருந்து இந்த பூமியைத் தரிசிக்க வேண்டியவள் இப்படி கோழையாகிப் போனாளே. காவல் துறையில் சாதிக்கத் துடித்த விஷ்ணுப்ரியா அப்படி ஒரு முடிவெடுத்தது வாழ்வை முடித்துக் கொள்ள எடுத்த துணிச்சலான முடிவா? வாழவே முடியாத தருணங்கள் தன்னிலிருந்து சிந்திப்போகிறது என உணர்ந்த மூடத்தனமா?

பாஷை தெரியாமல் ஸ்பெயின் நாட்டிலிருந்து தன் உறுதியான மனதுடன் மட்டுமே இந்தியாவிற்கு வந்த ஓவியர் காயத்ரி காம்யூஸ் நினைவிற்கு வருகிறார். தன் வீட்டு வாசலில் அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த வேப்பமரத்தை வெட்ட வாளோடு வந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரை தடுத்து நிறுத்தி என்னை வெட்டிவிட்டு இந்த மரத்தை வெட்டு என்று ஆங்கிலத்திலும் ஸ்பெயினிலுமாக பேசி மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு நின்ற உக்கிரம். ஏதோ ஊர்லேர்ந்து வந்த பொம்பளக்கே ஒரு மரத்த வெட்டக்கூடாதுன்னு இவ்ளோ அக்கறையிருக்கே, இனி நான் அதை வெட்டவேமாட்டேன் என்று அவரைத் திரும்பிப் போக வைத்தது.

 நாம் பொருட்படுத்தாமல் போகும் எத்தனையோ கிராமத்துப் பெண்களில் ஒருத்தியான என் பாட்டுக்கார லட்சுமி, திருமணமான சில வருடங்களிலேயே புருஷன் சாராயம் காய்ச்சுகிறான் என்று தெரிந்து அவனை பழஞ்சாக்கை உதறுவதுபோல உதறிவிட்டு தனியாக வாழப் பழகுகிறாள். பிறகு வாழ்வின் பாடு தீர்க்க மூட்டை தூக்குகிறாள், மாட்டுக்கறி விற்கிறாள், காய்கறி விற்கிறாள், பேருந்தின் ஏணியிலேறி ஆண்களுக்கு சமமாய் லோடு இறக்குகிறாள், தன் வீட்டு இழவாய் ஊர்ச்சாவை நினைத்து ஒப்பாரி வைத்து பாடி, சலங்கை கட்டி ஆடுகிறாள். எல்லாவற்றிலுமிருந்தும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் ஐந்து பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்குகிறாள். தானம்செய்கிறாள், ஐம்பது குரங்குகளுக்கு தினமும் இட்லி வாங்கிக் கொடுக்கிறாள். சமூகத்தின் அங்கமாய் பேரானந்த சிரிப்புடன் வலம் வருகிறாள்.

ஒரு மதிய வேளையில் என் அலுவலகத்திற்கு தெருவில் போகும் பெண்ணொருத்தி வருகிறாள். வலது பாகம் முகம் தவிர கால் வரை தீயில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போய் வெந்து, கறுத்து  மெலிந்திருந்த பெண். தன் கையில் வைத்திருக்கும் பத்திரத்தில் சந்தேகம் கேட்டவள், நான் குழந்தைகளுக்கு நோட்டுகள் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து தன் குழந்தைகளுக்கும் கேட்கிறாள். உடனே கொடுத்த என்னை ஏனோ அவளுக்குப் பிடித்துவிட்டது. சில நாட்களின் இடைவெளிக்குப் பிறகு எங்கள் நிலத்திற்கே வந்து தங்கிவிட்டாள். ஆண்கள் செய்யத்தயங்கும் வேலையை அனாவசியமாக செய்து முடிக்கிறாள்.  மாடு கன்றுகள் பராமரிக்கிறாள். கோழி ஆடு முயல் வளர்க்கிறாள். எங்கள் நிலத்தின் காவல் தெய்வமாய் உரமேறி உக்கிரமாய் வலம் வருகிறாள்.

16 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அது வரை பக்கத்து வீடு கூடத் தெரியாமல் வளர்ந்த ஒருவர் அமெரிக்காவிற்கு கணவனோடு போகிறார். போன ஒரு வாரத்தில் கணவன் தனக்கு மட்டுமல்ல என்பதை அறிகிறார். இருப்பினும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாகிறார். குழந்தைகள் பெரியவர்களாவதற்குள் கணவர் இறந்துவிட,  அங்கேயே வேலை பார்த்து குழந்தைகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்துவைத்து எல்லா கடமைகளையும் முடிக்கிறார். தன் 67 -வது வயதில் ‘இனி நிம்மதியாக எனக்குப் பிடித்த மாதிரி நான் வாழவேண்டும் எங்கே வாழ்வைத் தொடங்க திருவண்ணாமலையிலா கும்பகோணத்திலா என முடிவெடுக்கவில்லை. அப்போதுதான் உங்கள் சிதம்பர நினைவுகள் புத்தகத்தைப் படித்தேன். அதனால் உங்களைப்பார்க்க வந்தேன்’ என்று என் இல்லம் வந்த அந்த பெண்ணின் கம்பீரம். மெலிந்து தோல் வற்றிப் போன அந்த கைகளை பத்து வருடங்களுக்குப் பிறகும் கெட்டியாகப் பிடித்திருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் படிப்பு இல்லையெனில் படிப்பறிவு அதிகம் பெற்ற  விஷ்ணுப்ரியாவிற்கு அது எதற்கு? நம் பாடத்திட்டமும் கல்வியும் எதை போதிக்கின்றன? வாழும் நாட்களில் மரணத்தையா? ரௌத்திரம் பழக வேண்டிய நமக்கு கோழைத்தனத்தையா?

நாம் மிக தூரம் அதி உக்கிரத்தோடு பயணிக்க வேண்டியிருக்கிறது.

 (கட்டுரையாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர்)

அக்டோபர், 2015.