சிறப்புக்கட்டுரைகள்

எளியவனின் கோபம்

கேபிள் சங்கர்

எளியவனுக்கு  சாதாரணமாய் கோபம் வருவதேயில்லை. அப்படியே கோபம் வந்தாலும் அதன் வீரியத்தை எங்கே? எப்போது? காட்டுவது?  அது தேவைதானா? என்கிற தயக்கம் அவனுக்கு எப்போதுமே உண்டு. அவனின் அருமை பெருமை தெரிந்தும் அதற்கான அங்கீகாரம் மறுக்கப்படும் போதும், அதிகாரமும், பணமும், அவன் வாழ்க்கையைசின்னாபின்னமாக்கும் போதுதான் அவன் அமைதி இழந்து  பொங்கி எழுகிறான். புரட்சியாளன் ஆகிறான்.  அப்படியான ஒரு புரட்சியாளன் தான் இந்த பான் சிங் தோமர்.

சுதந்திரம் அடையாத இந்தியாவில் பிறந்து இந்த பான் சிங் தோமர் ஒர் சாதாரணன். ஆனால் அவனது ஓட்டத்தைப் பொறுத்தவரை அசாதாரணன். இந்தியாவிற்காக ஸ்டீப்பில் சேஸ் எனும் ஓட்ட வகையில் ஏழு முறை பதக்கம் வென்றெடுத்தவன். நாட்டுக்காக ராணுவத்தில் பணி புரிந்தவன். உலகம் சுற்றியவன். வேறொரு நாட்டில் பிறந்தவனாய் இருந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டியவன்.

ராணுவத்திலிருந்து ஊருக்கு திரும்புகிறான். அவன் தந்தையின் ஆனந்தம். அம்மாவின் மகிழ்ச்சி. இளம் மனைவியின் வெட்கமும், பதட்டமும் எத்தனை எளிமையோ, அழகோ, அத்தனை எளிமையும், அழகும், அறியாமையுடனான நேர்மையும் கொண்டவன் பான் சிங் தோமர். 

அவனுக்கும் மனைவிக்குமிடையே நடக்கும் சிறு ஊடலும், அவன் கண்களில் தெரியும் குழந்தைத்தனமான ஆவலும், காதலும் அவனின் வெள்ளந்தித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

சாப்பிடுவதற்காக அதெலெட்டாகிறேன் எனும் போதும் சரி. ராணுவத்தில் சேர்ந்திருக்கும் சில அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதும், அவனுடய மாமாவை கொள்ளைக்காரன் என்று ராணுவ அதிகாரிகள் சொல்ல, இல்லை அவர் ஒரு புரட்சியாளன் என்று திரும்பத் திரும்ப உயர் ராணுவ அதிகாரிகளிடம் சொல்லும் தைரியம் எங்கிருந்து வருகிறது? அவனின் நேர்மையிலிருந்து.

தன் மகளின் எதிர்காலத்திற்காக ராணுவத்தினரிடையே நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கெஞ்சும் கர்னலிடம் சரி உங்க மகள் வாழ்க்கைக்காக என்று விட்டுக் கொடுக்கும் இடத்தில் அவனது அன்பும், பெருந்தன்மையும் தெரிகிறது.

நேஷனல் அளவில் வெற்றி. அது பற்றிய பெருமை அவன் தலைக்கேறவில்லை. ஆனால் ஜப்பான் போகும் போது மட்டும் மனைவியிடம் அங்கேயிருந்து ஜப்பான்காரியை கல்யாணம் செய்து கொண்டு வந்தால் என்ன செய்வாய்? என்று சீண்டுகிறான். அதில் அவனின் விளையாட்டுத்தனமும், மனைவியின் காதலையும், காமத்தையும் தனதாக்கிக் கொள்ளும் பேரன்பும், காதலும் கொண்ட கணவனாய் வெளிப்படுகிறான்.

ஆனால் நாடே புகழும் அளவிற்கு சாதித்தவனாய் இருந்தும் பங்காளி தன் நிலத்தையும், அதில் விளைந்ததையும் அழிக்கும் போது கூட தன் உயர் அதிகாரியின் மூலம் தன் பிரச்சனைக்கு மட்டுமில்லாது பொதுப் பிரச்சனைக்குத்தான் போராடுகிறான். அங்கே அவனின் நியாயம் வெளிப்படுகிறது.

நீ விளையாட்டு வீரன். போருக்கு நீ தேவையில்லை எனும் போது நான் போர் புரிய, நாட்டைக் காக்கத்தான் வந்தேன் எனக்கான உரிமையை கொடுங்கள் என்று கேட்கும் போது உரிமையை விட்டுக் கொடுக்காத உறுதி வெளிப்படுகிறது..

தான் யார்? எத்தனை பெரிய விருதையெல்லாம் பெற்றிருக்கிறேன் என்று தன் கிராமத்து இன்ஸ்பெக்டரிடம் தானே சொல்லியும் அதை மதிக்காமல், தனக்கு மரியாதை இல்லாவிட்டாலும் தான் நாட்டுக்காக பெற்றுத்தந்த பதங்களைக் கூட மதிக்காமல் விட்டெறியும் போது அந்த எளியவனின் கோபம் வெளிப்படுகிறது.

பெற்ற பிள்ளையை உயிர் போகும் அதீத தருவாய் வரை அடித்து அனுப்பும் போது அரசோ, தான் சேவை செய்த நாட்டின் ராணுவமோ, போலீசோ, அவனுக்கு உதவாத போது அவன் தன்னை தற்காத்துக் கொள்ள ஆயுதமெடுக்கிறான். பங்காளிச்

சண்டை ஊர் சண்டையாகிறது. பெற்ற தாயை நையப் புடைத்தவனை பழிவாங்கும் வெறி வருவதற்கு காரணம் இந்த சமூகத்தின், அதிகாரத்தின் மீதான கோபம், இயலாமை வெளிப்படுகிறது.

ராணுவத்தில் சுபேதாராய் பணியாற்றி இந்தியாவிற்கு ஸ்டீப்பில் சேஸில் 7 முறை பதக்கம் பெற்றவன் இந்தியாவில் பெருமையை உலகறியச் செய்த பான் சிங் தோமர் புரட்சியாளன் ஆகிறான்.

அவனை போராட்டக்காரனாய், புரட்சியாளனாய் மாற்றியது இந்த சமூகமும், அரசும், அதிகாரமும். தோமர் எளியவன். சாதாரணன். தன்னுள் இருக்கும் அசாதாரண திறமையை வைத்து சட்டத்தை, அதிகாரத்தை வளைக்ககூடிய வித்தை தெரியாத எளியவன். அவனைப் போன்றவர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்களாய் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். எளியவர்கள் தான் சாதனை புரிவார்கள். காரணம் அவர்களின் நம்பிக்கை. நான் நல்லவன் நான் நேர்மையானவன். நான் அன்பானவன். நான் நியாயமானவன். நான் கடவுளுக்கு பயப்படுகிறவன். நான் கொலைகாரன் அல்ல, நான் போராடக்காரன் என்கிற நம்பிக்கை தான் அவர்களின் செயல். இப்படியான எளியவனின் உரிமை மறுதலிக்கப்படும் போது அவன் கோபம் கொள்கிறான். கோபம் புரட்சியாளனாய் மாற்றுகிறது. அந்த எளியவன் தன் கூட்டத்தை காக்க தலைவனாகிறான்.  அதிகாரவர்க்கம் கொள்ளைக்காரன் என்கிறது. சரணடைய கோருகிறது.

கடைசி வரை தோமர் தன்னை கொள்ளைக்காரனாய், நினைக்கவேயில்லை. தன் ஓட்டத்தின் மீதான நம்பிக்கையை, தன் மீதான நம்பிக்கையை மட்டுமே நம்பி அந்த கால்வாயை தாண்டுகிறான்.

பான்சிங் தோமர் ஒரு எளியவன். நல்லவன். அன்பானவன். நியாயமானவன். உரிமையை விட்டுக் கொடுக்காதவன். நல்ல கணவன், தந்தை, மகன் தலைவனாய் இறக்கிறான். அதிகார வர்க்கத்துக்கும் சமுகத்திற்கும் அவன் ஒரு கொள்ளைக்காரனாய் உருவகப்படுத்தப்பட்டு, என்கவுண்டரில் கொல்லப்படுகிறான். அவன் இறந்து நாற்பது வருடங்கள் கழித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் பான்

சிங் தோமர் எளியவன். அவனின் கோபம் இன்னும் பல எளியவர்களிடம் கனன்று கொண்டுதானிருக்கிறது. அதனால் தான்.

ஜூன், 2020.