இந்திரா காந்தி 1975-ல் எமர்ஜென்சியை கொண்டுவந்திருந்தாலும் திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்த ஆறுமாதங்கள் பெரிதாக எந்த நெருக்கடியும் இல்லை. திமுக அரசு கலைக்கப்படுவதற்கு முதல்நாள் சூரியனை மேகங்கள் சூழ்வதுபோல் தமிழ்நாடு முழுக்க ராணுவம் வந்து இறங்கியது. கோவையில் மக்கள் கூடும் இடங்களில் ராணுவத்தினர் நின்றனர். ஏதோ நடக்கப்போகிறது என்று மக்கள் மத்தியில் பீதி எழுந்தது. நான் அப்போது திராவிடர் கழக கோவை மாவட்டச் செயலாளர். எனக்கு 24 வயது. அன்று நள்ளிரவு 2 மணிக்கு வீட்டுக்கதவு தட்டப்பட்டது. மிசாவில் கைது செய்வதாகக் கூறி என்னை வண்டியில் ஏற்றினார்கள். என் வீட்டுக்கு அடுத்த சாலையில் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்பி ரமணி வீடு இருந்தது. என்னை அழைத்துச் சென்ற வண்டி அவர் வீட்டு முன் நின்றது.அவரைத் தேடினார்கள். அவர் வீட்டில் இல்லை. ஆயுர்வேத வைத்திய சாலையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்ததும் அங்கே வண்டி சென்றது. அவர் கட்டிலில் படுத்திருந்தார். அங்கே காவலுக்கு போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டனர். காலை ஆறுமணிக்கு கலெக்டரிடம் இருந்து மிசா சட்ட கைது உத்தரவு வந்தது. ரமணியை கட்டிலோடு தூக்கிவந்து வண்டியில் ஏற்றினார்கள். கோவை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.
சிறைக்குள் ஒரு தனி பிளாக். உள்ளே நுழைந்ததும் வாங்க வாங்க என்று யாரோ அழைத்தார்கள். அவர் ராமநாதன். எங்களுக்குப் பக்கத்து அறை. அன்று முழுக்க சுமார் 60 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டனர். சுமார் 15 நாட்கள் வரை யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. பின்னர் ரத்த உறவுகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஓராண்டு இந்த சிறைவாழ்க்கை நீடித்தது. செய்தித்தாள்கள் கடும் தணிக்கைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன. சிறையில் இருந்தபோது என் அக்கா கணவர் இறந்துபோனார். அதற்கு இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள மாலை நான்கு மணிக்கு அனுமதித்தார்கள். சுடுகாட்டுக்கு கைவிலங்கிட்டு அழைத்துப் போனார்கள். ஏன் இறுதிச்சடங்கு தாமதமாகிறது என்று பலருக்கும் புரியாமல் இருந்தது. என்னைப் பார்த்ததும் புரிந்துகொண்டனர். என்னுடன் சிறையில் இருந்த மோகன் அவர்களின் தந்தை இறந்தார். அதற்கு அவருக்கு ஒரு நாள் பரோல் தரப்பட்டது. காலையில் போய்விட்டு மாலை திரும்பினார்.
சிறையின் மத்தியில் இருக்கும் வானொலியில் ஒரு நாள் இந்திரா காந்தி தேர்தல் அறிவித்ததாக செய்தி ஒலிபரப்பப்பட்டது. சிறையில் அதைக் கேட்டு உற்சாகம் நிரம்பி வழிந்தது. ஓராண்டு கழித்து நாங்கள் விடுதலை ஆனோம்.
எமர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டாலும் அதன் வழிமுறைகளை அரசு கைவிடாமல் வேறுமாதிரி பயன்படுத்திக்கொண்டது. அதற்கு ஒரு உதாரணம் பின்னாளில் கொண்டுவரப்பட்ட தடா சட்டம். அந்த சட்டம் மிசாவை விடக் கொடுமையானது. அதிலும் நான் 91-ல் கைது செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்தேன். வழக்கு நடந்து குற்றவாளி அல்ல என்று நீதிபதி தீர்ப்பளிக்கும் வரை விடுதலை இல்லை. ஜாமீனும் கிடையாது. முதல் மூன்றுமாதங்கள் அறையை விட்டு வெளியேவே விடாமல் அடைத்து வைத்திருந்தார்கள். சிறைக்குச் சென்றபோது எனக்குத் திருமணமாகி ஐந்துமாதங்கள் ஆகியிருந்தன. என் மனைவி கருவுற்றிருந்தார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து என் தாயார் மரணமடைந்தார். இந்த செய்தி எனக்கு தெரிவிக்கப்படவே இல்லை. செய்தித்தாளில் அவர் மரணத்தையொட்டி வெளியிடப்பட்ட விளம்பரத்தை வெட்டிய பின்னரே எனக்கு அச்செய்தித்தாள் படிக்கக் கொடுக்கப்பட்டது. எனக்குக் குழந்தை பிறந்து அக்குழந்தையுடன் என் மனைவி, குழந்தையைக் காண்பிப்பதற்கும் எனக்கு ஆறுதல் கூறவும் வந்தார். அவர் எனக்கு ஏற்கெனவே மரணச் செய்தி தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஒரு மரணச் செய்தியும் ஒரு ஜனனச் செய்தியும் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. எனக்கு அழுவதா, மகிழ்வதா எதுவும் புரியவில்லை!
ஜூலை, 2015.