மன அழுத்தம் தரும் பணிகள் கொண்ட துறைகளில் ஒன்று சினிமா. அதில் சிலரிடம் எப்படி உங்கள் மன அழுத்தத்தைச் சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டோம்.
திரைப்படக் கல்லூரியில் மூன்று வருடம் படித்துவிட்டு வெளியே வந்த போது நான் தேடிப்போனது ராஜீவ் மேனன் சாரைத்தான். அவரும் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தவர்தான். நான் காலை ஏழு மணிக்கு ராஜீவ் மேனன் சாரைப் பார்க்கப் போனேன். அவர் வாக்கிங் போயிருப்பதாகச் சொன்னார்கள். எனவே அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன். அப்பவும் அவர் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வாக்கிங் போய்விட்டார் எனப் பதில் வந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் நான் அதிகாலை ஐந்து மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் ஆச்சரியத்துடன் என்னை வரவேற்று அமரவைத்தார். அப்போது அவர் டைனிங் டேபிளில் ஸாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்னையும் டைனிங் டேபிளில் அமரவைத்து சாப்பிட வைத்தார். பிறகு தேநீர் கொடுத்து என்னுடன் பேச ஆரம்பித்தார். புதியவனான என்னை அவர் கையாண்ட விதம் எனக்குள்ளிருந்த பதற்றத்தை இல்லாமல் ஆக்கியது. எனவே சூழ்நிலையை, மனிதர்களை எவ்விதம் நாம் கையாளுகிறோமோ அதன் அடிப்படையிலேயே நமக்கு அதன் பலன்கள் வந்து சேர்கிறது என்று நான் ராஜீவ் மேனன் சாரிடம் கற்றுக்கொண்டேன். இது பின்னாட்களில் சக மனிதர்களைக் கையாளவும், சினிமா படப்பிடிப்பின் போது கடினமான சூழ்நிலைகளைக் கவனமாகக் கையாளவும் பெரும் உதவியாய் இருந்தது.
அதன்பிறகு கௌதம் மேனன் படத்தில் நான் ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். படிக்கிற காலங்களில் என் முதன்மையான பொழுதுபோக்கு மாலை ஆறு மணிக்கு மேல் வெவ்வேறு தெருக்களின் வழியே நடந்து போவதுதான். தெருக்களின் ஒளியமைப்பைக் கூர்ந்து கவனித்துதான் நான் ஒரு ஒளிப்பதிவாளராக என்னைக் கூர் தீட்டிக் கொண்டேன். இப்படி ஒளியுடன் தொடர்ந்து பயணிப்பதாலோவோ என்னவோ எனக்கு ஸ்ட்ரெஸ் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போயிருந்தது என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளராக என்னை நிலை நிறுத்திக் கொண்ட பிறகு தினமும் நான் செய்த ஒரு விஷயம் தூங்கப்போகும் முன்பு ஒரு சினிமா பார்ப்பதுதான். இதுதான் ஒரு சினிமாக்காரனாக எனக்குத் தெரிந்த ஸ்ட்ரெஸ்ஸைக் கையாளும் ஒரு வழி. நான் ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது அப்படி வேலை செய்வதைக் குறைத்து விட்டேன். அதன் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டேன். என் குழந்தைகளுடன் இப்போது அதிக நேரம் செலவிடுகிறேன். அவர்களுடன் ஊர் சுற்றுகிறேன். உலகத்திலேயே குழந்தைகளுடன் நேரம் செலழிப்பதுதான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு வழி என்று இப்போது உணர்ந்து கொண்டேன். என் குழந்தைகள் என் ஸ்ட்ரெஸ்ஸை போக்கும் வலி நிவாரணிகள்.
நான் எப்போதும் சினிமாவையும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் பிரித்தே வைத்துள்ளேன். இதனால் வேலையையும் தனிப்பட்ட வாழ்வையும் தனித் தனியே அதற்கேயுண்டான ஒரு மன நிலையில் அணுக முடிந்தது. நேர நிர்வாகமும் ஒரு திறமையான ஸ்ட்ரெஸ் ரிலீவர்தான்.
சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அனுபவம் கூடக்கூட புதிய இயக்குநர்களுடன் வேலை செய்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டேன். இதுவும் ஒரு வகையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிதான்!
நாங்களெல்லாம் விரும்பிய வேலையை முழு விருப்பத்துடன் செய்கிறவர்கள். படைப்புத்தொழிலில் அழுத்தம் என்பது வாய்ப்புகளை உருவாக்குவது, அவற்றுக்காகக் காத்திருப்பது ஆகியவற்றில் ஏற்படுகிறது. மன அழுத்தத்தை நான் நண்பர்களைத் தேடிச் சென்று பார்ப்பதன் மூலமும் புதிய மனிதர்களைச் சந்திப்பதன்மூலமும் போக்குகிறேன். மன அழுத்தம் போக்குகிறேன் என்று மதுவை நாடுகிறவனுக்கு குற்ற உணர்ச்சியால் அழுத்தம் அதிகரிக்கவே செய்யுமே தவிர குறையாது. ‘எனக்குக் கிடைக்க வில்லையே என்பதைவிட எனக்கு கிடைத்திருக்கிறதே என்ற நிறைவுக்கு நான் இயற்கைக்கு நன்றி சொல்கிறேன்! நேற்றையும் நாளையும் பற்றிக் கவலைப்படாமல் இன்றைய தினத்தை ரசித்து வாழ்தல் மன அழுத்தம் போக்கும் முக்கிய வழி.
பல நேரங்கள்ல நைட் ரெண்டு மூணு மணிக்கு போன் பண்ணி காலைல இதுதான் பண்ணப் போறோம் அப்டினு சொல்லுவாங்க. அந்த நிமிஷத்துல ஒரு மன அழுத்தம் வரும். ஆனால் என்ன இப்ப சொல்றீங்கன்னோ முடியாதுன்னோ சொல்ல முடியாது. முடியாதுன்னு சொன்னா அப்போ நீங்க தேவையில்லைங்ற முடிவுக்கு டீம் வந்துடுவாங்க. அதனால சரின்னு சொல்லிடுவேன். அந்த நேரத்துல தூக்கம் வராது. கொஞ்சம் பயமாவும் இருக்கும். ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துல அதை எப்படி செய்றதுனு க்ரியேட்டிவா யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். நார்மலான மேக் அப்னா எல்லா மெட்டீரியலும் கைல இருக்கும். சமாளிச்சுடலாம்.
உதாரணத்துக்கு நாடோடிகள் படத்தின் போது ராஜபாளையத்துல 40 நாட்கள் ஷூட்டிங்கு போயிருந்தோம். கேமராமேன் கதிர் வந்து என்ன மாதிரி பண்ணப் போறோம்னு சொன்னதும் நான் ரெண்டு நாள் சென்னை போய்ட்டு வரேன் சார்னு சொன்னேன். ஆனா உங்களால முடியும் சண்முகம்னு சொல்லிட்டார். நாடோடிகள் படம் முழுக்க அடிபட்ட தழும்போட சசிக்குமார் நடிச்சிருப்பார். அது கொஞ்சம் கொஞ்சமா ஆறின மாதிரி மேக் அப் போட்டிருப்பேன். அதை எனக்கு டீடெய்லா சொல்லல. ஆனாலும் அப்போ ஒரு அழுத்தம் இருந்தது. அடுத்து அதை சக்ஸஸ் பண்ணிக் காமிச்சதும் ஒரு பாராட்டு கிடைக்கும் பாருங்க அதுல எல்லா மன அழுத்தமும் பறந்துடும்.
இப்ப மெர்சல் படத்துல கூட தினமும் ஏதாவது மாற்றம் இருந்துட்டே இருந்தது. ஆனா அதை மன அழுத்தமா பார்க்காமல் ஒரு சேலஞ்சா எடுத்து செய்யும்போது அதைக் கடந்து வந்துட முடியும்.
அரவான் பட ஷூட்டிங்கில ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஜல்லிக்கட்டு காட்சிக்காக 450 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், நூறு மாடுகள், ஒவ்வொரு மாட்டையும் பராமரிக்க 3 பேர்னு சுமார் 750 பேருக்கும் மேல இருந்தது கூட்டம். அது ஒரு ரிமோட் ஸ்பாட். அப்போ ஜல்லிக்கட்டு ஷூட் பண்ண பெர்மிஷன் கிடையாது. எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம். அன்னிக்கு ஸ்பாட்ல ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்டுக்கு உடம்பு சரியில்ல. சாயங்காலம் 3 மணிக்கு அந்த பைட்டர் மயங்கி விழுந்துட்டார். வண்டிய ஏற்பாடு பண்ணி ஹாஸ்பிடல் போறோம்.
அந்த நேரம் பார்த்து அம்மா கிரியேஷன்ஸ் மகேந்திரன் பேங்க்ல பணத்தை எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டிருந்தார். சி.ஆர்.பி.எப். போலீஸ் அவரைப் பிடிச்சுட்டாங்க. ஹாஸ்பிடலுக்கு போனப்போ, அந்த ஆர்ட்டிஸ்ட் இறந்துட்டதா சொல்லிட்டாங்க. ஸ்பாட்ல அவ்வளவு பேருக்கும் சம்பளம் கொடுக்கணும். அடுத்தநாள் ஷூட்டிங் முடிச்சு செட்டை பிரிக்கணும். உச்சபட்ச குழப்பம்.
போலீஸ் ஸ்டேஷன்ல அவரை விட்டுட்டாலும், பணத்தை உடனடியா தரலை. அதுல நிறைய பார்மலிட்டிஸ் இருந்துச்சு. இதனால கையில பணம் இல்லை. புரொடியூசருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு, ஸ்பாட்டுக்கு போனோம். அன்னிக்கு 24 மணி நேரமும் புரொடக்ஷன்ல யாரும் தூங்கலை. ஸ்பாட்ல இருந்த 450 ஜூனியர் ஆர்ட்டிஸ்டையும் தனித்தனியா கூப்பிட்டு பேசினோம். ஹாஸ்பிடல்ல இறந்தவரை போஸ்ட்மார்ட்டம் பண்ணி, அவரோட பேமிலிய வரவழைக்க ஏற்பாடு செஞ்சோம்.
அடுத்த நாள் ஸ்டண்ட் மாஸ்டர் வேறொரு ஷூட்டிங்குக்காக கல்கத்தா கிளம்பணும். அதனால அடுத்தநாள் காலையில 11 மணிக்கு எல்லோரையும் மறுபடியும் அசெம்பிள் பண்ணி ஷூட் பண்ணோம். இப்படி அந்த டைம்ல என்ன முடிவு எடுக்கறமோ, அதுதான். அதை எப்படி எடுக்கறோம்கறதுதான், அந்த வேலையோட நேச்சர். நான் அப்படித்தான் ஹேண்டில் பண்றேன். அதனால, ஒரு படம் ஆரம்பிச்சு முடியறவரைக்கும் கண்டிப்பா ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்காது.
அப்போல்லாம் கார்ல ஏறி உட்கார்ந்த உடனேயே இளையராஜா பாட்டை கேட்க ஆரம்பிச்சிருவோம். இதுக்காக தியானமோ, யோகாவோ பண்றது கிடையாது. சில பேர் குடியை விரும்புவாங்க. ஆனால், ஸ்பாட்ல அதுக்கு நேரமே கிடைக்காதுங்கறதுதான் உண்மை. எந்த ரிலாக்சேஷனுக்கும் வழி இருக்காது. எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும், அதைப்பத்தி டீமுக்குள்ளயே கேலியும் கிண்டலுமா பேசிக்குவோம். அந்த சூழ்நிலைய ஜாலியா மாத்திக்கறது ஒரு வழி.
அதேமாதிரி எல்லோரோட ஈகோவும் குவியுறது புரொடக்ஷன் டீம் மேலதான். அதை தாங்கிப் பிடிக்கறது மேனேஜர்கள்தான். அதனாலதான் அவங்க நினைச்சா ஒரு சினிமாவை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்னு சொல்றாங்க. சில பேரால, இந்தச் சுமையை தாங்கிக்க முடியாது. மற்ற எல்லாத் துறையும் போலவே, இதுவும் அந்தந்த ஆளுங்களோட திறமைய பொறுத்தது. சினிமாவுல எல்லா டிபார்ட்மெண்ட்லயும் திட்டறதுக்குன்னு ஒரு ஆளை வச்சிருப்பாங்க. ஆனா, சம்பந்தமே இல்லாம எல்லார்கிட்டயும் கன்னாபின்னான்னு திட்டு வாங்கறது புரொடக்ஷன் ஆட்கள்தான். அதை மேனேஜ் பண்ணத்தான், அவங்களுக்கு சம்பளம் கொடுக்குறாங்க. அதுதான், அவங்களோட திறமை.
குறித்த நேரத்தில் இயக்குநர்கள் விரும்பும்படியும், நடிகர் நடிகைகள் விரும்பும்படியும் ஆடை வடிவமைப்பு செய்து தருவது என்பதுதான் எங்களுக்கு முன் உள்ள சவால். எனவே இயல்பிலேயே மன அழுத்தம் உருவாவதற்கான அதிகம் ஸ்கோப் உள்ள துறை இது. இந்தத் துறையில் நான் எனக்குக் கீழே பணியாற்றுபவர்களை கையாள்வதைப் பொறுத்துதான் என் பொறுப்பை என்னால் நிறைவேற்ற முடியும். நமக்கு தரப்பட்ட வேலையை அதன் கால அளவுக்குள் முடித்து விட்டாலே போதும் மன அழுத்தம் நம்மை அண்டாமல் விடுபட்டுவிட முடியும். எனது கோபத்தைக் கூட நான் நட்பான ஒரு புன்னகையுடன்தான் வெளிப்படுத்துவேன். இது வீட்டிலும், தொழில்சார்ந்த எனது வேலையிலும் உடன் பணிபுரிபவர்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. சிரிப்பிருக்கும் இருக்கும் இடத்தில் மன அழுத்தத்திற்கு இடமேது?
வேலையை அதன் முன்னுரிமை சார்ந்து நாம் அணுக வேண்டும். முக்கியமான வேலைகளை முதலில் கவனத்துடன் முடித்துவிடவேண்டும். எல்லா வேலையையும் நாமே செய்ய வேண்டும் என நினைப்பது நம்மை மன அழுத்தத்தில்தான் தள்ளும். எனது வேலையை நான் தீவிரமாக நேசிக்கிறேன். எனவே எனக்குப் பிடித்த வேலையை ஆத்மார்த்தத்துடன் செய்கிறேன். படங்களில் அல்லது விளம்பரப்படங்களில் வேலை செய்யும் போது அதற்கான மெட்டிரியலை வாங்கக் கடை கடையாய் ஏறி இறங்க வேண்டியிருக்கும். எனவே ஷாப்பிங் செய்வதே என்னைப் பொறுத்தவரை ஒரு மன அழுத்தத்தை நீக்கும் செயல்தான். மேலும் தனிமையில் சினிமா பார்ப்பது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, நம் வீட்டின் மூத்தவர்களுடன் நேரம் செலவழிப்பது ஆகியவை நம்மை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்கும்.
அக்டோபர், 2017.