சிறப்புக்கட்டுரைகள்

எப்படி ஒதைக்காம விட்டாங்க?

பழனி கிருஷ்ணசாமி

அக்டோபர் மாதத்திற்கு இந்த வெயில் அதிகம் தான். பன்னிரண்டு மணியளவில் வருவதாக இருந்தால் நேரே மின்மயானத்திற்கே வந்து விடும்படி மகாலிங்கம் சொல்லியிருந்தார். மின்மயானத்தைச் சேர்ந்த போது சரியாக பன்னிரண்டு மணி. பெங்களூர் கெம்பே கௌடா பன்னாட்டு விமானநிலையம் அமைந்திருக்கும் ஐதராபாத் நெடுஞ்சாலையில் ஏலஹங்காவுக்கு முன்னால் வரும் முக்கிய சந்திப்புகளில் ஒன்று எஸ்டீம் மால். மயானம் எஸ்டீம் மாலுக்கு வலது புறம் இருந்தது.  நவீனமானது தான். ஒரே நேரத்தில் ஐந்தாறு அமரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய முடியும். நான் உள்ளே போன கொஞ்ச நேரத்திலேயே வெ.சா.வைத் தாங்கி வந்த அமரர் ஊர்தி வந்தது. மயானக்கட்டடத்தின் உள்ளே இடது புறமாக உள்ள விசாலமான அறையில் பிணம் கிடத்தப்பட்டது. பாரதிக்குக் கிடைத்த அதே ‘புண்ணியம்’ தான் வெ.சா.வுக்கும். அவரது சவ அடக்கத்தில் நாங்கள் ஒரு ஐந்தாறு பேர்தான் இருந்தோம். நவீனமயமாகாத தமிழ்ப்பண்டிதம், மக்களின் மடமையையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்த திராவிடீய அரசியல், வெகுசன ரசனையை அடிமட்டத்திற்குக் கொண்டு சென்ற முதலாளித்துவம் என்பவற்றிற்கு எதிராக தன் எழுத்தின் மூலமாகவே வாழ்நாள் முழுவதும் போராடிய அந்த மனிதன் தனது கண்கள் இரண்டையும் தானமாகக் கொடுத்து விட்டு கோர்த்த கைகளை மார்பின் மீது வைத்துப்படுத்திருந்தார்.  சஹிருதயர்கள் நிறைந்த கூட்டத்தில் வயது வித்தியாசம் பாராமல் தோள் மீது கை போட்டுப் பேசுகின்றாரென்றால் வெ.சா. விவாதத்தாலும், அன்பாலும் மனம் நிறைந்திருக்கின்றார் என்று பொருள். இதை 1977-ம் ஆண்டு முதல் முதலாக அவரோடு தொடர்பு ஏற்பட்டதிலிருந்து கண்டு வருகிறேன். அதிலும் தன் மீது உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

‘அக்கிரகாரத்தில் கழுதை’ சினிமாவின் திரைக்கதை வெ.சா.வால் எழுதப்பட்டு அதன் முதல் பதிப்பு 1977-ம் ஆண்டு வெளி வந்தது. அதன் இரண்டாம் பதிப்பை ’காவ்யா’ சண்முகசுந்தரம் 1998-ம் ஆண்டு வெளியிட்டார்.  ஒரு சந்திப்பில்- ஒரு மிதமான போதையில்- அவரிடம் கேட்டோம்.

‘வெ.சா... இதை எளுதனுதுக்காக உங்க ஆளுங்க எப்படி உங்கள ஒதைக்காம விட்டாங்க...’

‘இதையெல்லாம் அவங்க எங்கய்யா படிக்கறாங்க படிச்சிருந்தாத்தான் கதை வேற மாதிரி இருந்திருக்குமே...’

திலீப்குமார் தொகுத்த வெ.சா.வைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ‘இலக்கிய விமரிசனத்தைக் கலாச்சார விமர்சனமாக மாற்றியதில் பெரும் பங்கு வெ.சா.வுக்கு இருந்தாலும் கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தியைப் போன்று ஒரு முழுமையான கலாச்சார விமர்சகராக அவர் மாறவில்லை’ என்கிற மாதிரிச் சொல்லியிருந்தேன்.  இதை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று ஒரு பயம் இருந்தது. அடுத்த சந்திப்பில் கேட்கவும் செய்தேன். ‘இதுல என்னய்யா இருக்கு... உம்ம அபிப்ராயத்தை நீர் சொல்றீர்.. நான் நானாகத்தானே இருக்க முடியும்...’ என்றார்

2010-ம் ஆண்டு. பெங்களூரிலுள்ள ஆர்.வி. அறக்கட்டளையைச்சார்ந்த ‘ஷஸ்வதி’ என்கிற அமைப்பு கன்னடத்திலுள்ள பெண் எழுத்தாளர்களுக்குப் பரிசு தருவதோடு மட்டுமல்லாமல்  பிற இந்திய மொழிகளைச் சார்ந்த சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கும் பரிசு கொடுக்கத் தீர்மானித்து தமிழுக்கு  தேர்வுக்குழு ஏற்படுத்துவது உட்பட பரிசைத் தீர்மானிக்கும் பொறுப்பை என்னிடம் விட்டிருந்தார்கள். நான் வெ.சா. வை அணுகினேன்.

‘சார் நீங்க தான் தேர்வுக்குழுத்தலைவர். குழுவில் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேணும்.. திருவண்ணாமலை ஷைலஜாவைக் கேட்கலாம்ணு இருக்கேன்.. என்ன சொல்றீங்க’

‘தாராளமாக் கேக்கலாம்.. உம்ம கிட்டத்தானே பொறுப்பக் கொடுத்திருக்காங்க.. நீர் தான் தலைவர்’’

சார் நீங்க மூத்த தலமொற.. நீங்க இருக்கறப்ப நா எப்பிடி..’

‘தலமொறயிலே மூத்தது எளசெல்லாம் கெடயாதுய்யா.. ஆட்டந்தான் முக்கியம். யாரு ஆடறாங்க அப்டீங்கறது முக்கியமில்லே...’

உமா மகேஸ்வரியைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தோம். பிற இந்திய மொழிகளிலிருந்தும் சிறந்த எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அகில இந்திய அளவில் நயந்தரா சாகல்  தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். விழாவுக்கு பெங்களூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களும், இலக்கிய அபிமானிகளும் வந்திருந்தார்கள். உமாவுக்கு நிறைந்த மகிழ்ச்சி. வெ.சா.வுக்கும் தான்.

‘தமிழ் நாட்டுலே ஒரு பய இப்பிடிக்கூப்புட்டு பரிசு குடுக்க மாட்டான்யா.. அந்த நல்ல நாளு எப்ப வரப்போகுதோ.’

எத்தனையோ முறை கூப்பிட்டும் எங்கள் கல்லூரிக்கு வந்து பேச அவர் மறுத்து விட்டார். அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை. ’தமிழ் மாணவர்களிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை. ஆங்கில இலக்கிய மாணவர்களிடமாவது பேசுங் கள்’ என்று கேட்டேன். ‘தமிழ் மாணவர்கள் கிட்டே பேசமுடியாத எந்த விஷயத்தைய்யா நான் ஆங்கில மாணவர்கள் கிட்டே பேசப்போறேன்’ என்றார்.

மயானத்தை விட்டு வெளியே வந்தேன். நெடுஞ்சாலையின் இரு மருங்கிலிருந்தும் வாகனங்கள் மிக வேகமாகப் போய்க்கொண்டிருந்தன. வெயில் இன்னும் கடுமையாகத்தான் இருந்தது.

நவம்பர், 2015.