சி டி ராஜகாந்தம் படம் உதவி: ஞானம்
சிறப்புக்கட்டுரைகள்

‘என்னை ஆண்டவரே’ன்னு கூப்பிடுவார் எம்.ஜி.ஆர்.!

மறக்காத முகங்கள்

மணா

'இங்க.. என்னைப் பார்த்து இப்போ பேசுறதுக்குப் பதிலா புதுசா இப்போ நடிக்கிறவங்களை நீங்க போய்ப் பார்த்தாலாவது விதவிதமான டிரஸோட, படங்களோட பத்திரிகையில் போடலாம்... உங்களுக்கும் பத்திரிகை விக்கும் என்னைப் போல கிழங்களைப் பார்த்துக்கிட்டு...,' சென்னையில் கடலோரத்தில் உள்ள பட்டினப்பாக்கம் ஹௌசிங் போர்டில் இருக்கிற தரைத்தளத்தில் இருக்கிற வீட்டில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்தவரான சி.டி.ராஜகாந்தம் பார்த்ததும் அலுத்துக் கொண்டபோது திருப்பிப் பேச முடியவில்லை.

பார்த்தபோது அவருக்கு அறுபத்தியெட்டு வயது. சற்றுப் பெருத்த உடம்பு. கறுப்பான அகன்ற முகத்தில் காசு அகலத்திற்குக் குங்குமம் நல்ல கனமான வெண்கலக்குரல். மைக்கே தேவையில்லாத அளவுக்கு ஹால் முழுக்கக் கேட்குமளவுக்குக் கனத்த குரல்.

பிறந்தது கோயம்புத்தூரில். கல்யாணமாகி குழந்தை பிறந்த பிறகு தான் நாடக உலகில் காலடி வைத்திருக்கிறார். முதலில் சேர்ந்தது எஸ்.ஆர் ஜானகியம்மாளின் நாடகக்குழுவில். அங்கு ஆறு மாதம் இருந்துவிட்டு ஸ்பெஷல் நாடகங்களுக்குக் கிளம்பிப் போயிருக்கிறார் சுப்பையா பாகவதர், வேலுநாயர், ஓரடி முத்துவேல் பிள்ளை& இவர்கள் எல்லாம் இவருடன் நாடகங்களில் நடித்த நடிகர்கள். ஸ்திரிபார்ட், ராஜபார்ட் இரண்டையும் செய்திருக்கிறார் ராஜகாந்தம்.

‘' 1939 கடைசியில் மீனாட்சி பிலிம்ஸாரின் மாணிக்க வாசகர்லே ஒரு வேஷம் கிடைத்தது.போனேன். அது தான் முதல் படம்.என்.எஸ்.கே, மதுரம், எஸ்.எஸ்.கொக்கோ இவங்க கூட நடிச்சேன். கொக்கொ அப்போ ரொம்ப ஃபேமஸ். முதல் படத்துக்கு நான் வாங்கின தொகை 20 ரூபாய்''

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘உத்தம்புத்திரனில்' பி.யு,சின்னப்பா கதாநாயகன். இதில் நகைச்சுவை ஜோடியாக& ஒட்டனாக  காளி.என்.ரத்தினம். ஒட்டத்தியாக சேர்ந்து நடித்தார் ராஜகாந்தம் இருவரும் சேர்ந்து ஆடிய டான்ஸ் காட்சி பாப்புலர். படம் ஹிட். காமெடி ஜோடியும் பிரபலமாகிவிட்டது. அடுத்தடுத்துப் பல படங்களில் இதே ஜோடி இணைந்து நடித்தது.

( எம்.ஜி.ஆர்  பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடிக்கத் துவங்கியபோது அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் காளி.என்.ரத்தினம்)

 ‘‘காளி.என்.ரத்தினம் எப்பவும் மொட்டை தான் அடிச்சிருப்பார். கோணங்கித்தனம் நிறையப் பண்ணுவார். எந்த வேஷத்துக்கும் ஏத்தபடி மாத்தி மாத்திப் பேசுவார். அப்போ எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் 750 ரூபாய். அந்தச் சமயத்தில் என்னை மட்டும் தனியாக் காமெடி பண்ணக் கூப்பிட்டாங்க. இவர் சங்கடப்பட்டார். எப்படி வாய்ப்பைத் தட்டிக்கழிக்கிறதுன்னு தெரியாம என்னைக்கூப்பிட வந்தவர் கிட்டே ரேட்டை உசத்தி ‘எட்டாயிரம் ரூபா கொடுக்க முடியுமா?'ன்னு ஒரு பேச்சுக்குக் கேட்டேன். என்னவோ ஆறாயிரத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. பிறகு அதே படத்தில் காளி.என். ரத்தினமும் நடிச்சார். இப்படியே தான் நடிக்கிற சம்பளத்தை பதிமூணாயிரம் வரைக்கும் ஒசத்தினேன்''

பத்ரகிரி படத்தில் காளி என்.ரத்தினமும், ராஜகாந்தமும் ஒரு நகைச்சுவை ஜோடி. இதே படத்தில் நடித்த இன்னொரு ஜோடி கலைவாணரும், மதுரமும். குதிரை வாங்குகிறவர்களாகப் படத்தில் இவர்கள் வந்த காட்சி அப்போது சிலாகிக்கப்பட்டது.

‘‘ஏ.வி.எம்.மில்  மாதச்சம்பளத்திற்கு அவர் இருந்த நேரம். மாடர்ன் தியேட்டர்ஸிலும்  நடிச்சிக் கிட்டிருக்கார். படத்தில் அவருக்குப் புலிவேஷம் போட்டிருக்காங்க. கையை விரிச்சபடி மேக்கப் போடுறதுக்காக நின்னுக்கிட்டிருக்கார். அப்போ அவருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒண்ணு வந்துச்சு. அவர் கிட்டே வந்து காண்பிக்கிறாங்க. பார்த்தவருக்கு முகம் சுண்டிப்போச்சு. இன்னும் மேக்கப் முடியலை.

‘ இனி புலி வேஷம் போட்டு ஆடின மாதிரி தான்'ன்னு செட்டில் அவர் காதுபடவே பேச ஆரம்பிச்சுட்டாங்க. தூரத்தில் தம்பட்டம் அடிக்கிற சத்தம் கேட்டது தான் தாமதம். அப்படியே Bimk வந்தார் பாருங்க. பலரும் அசந்து போயிட்டாங்க. டி.ஆர்.சுந்தரம்  நீ பெரிய தொழிலாளி மேன்னு பாராட்டினார்.''

‘போஜன்' என்கிற படம் ரிலீஸ் ஆவதற்குள் 14 ஆயிரம் அடி எரிந்துபோய்விட்டது திரும்பவும் ரீ டேக் எடுத்தார்கள். எட்டு நாட்கள் அதற்காக மேக்கப் கலையாமல்  இதே ஜோடி நடித்துக் கொடுத்திருக்கிறது. 1946 வரைக்கும் தமிழ்த்திரையில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த அந்த ஜோடி பிரிந்துவிட்டது. ‘‘பிரிஞ்சதுக்குக் காரணம் சில பேருக்குத் தான் தெரியும்.வேணாம்.. உங்க கிட்டே சொன்னாலும் எழுத மாட்டீங்க..( கலங்குகிறார்) கையில் இருந்த சொத்து எல்லாத்தையும் அவர் பெயருக்கு எழுதிக் கொடுத்திட்டு வந்துட்டேன்''

உத்தமி, தயாளன், சூர்யபுத்திரி, அர்த்தநாரி என்று தனித்து நடிக்க ஆரம்பித்தவருக்குத் தொடர்ந்து படங்கள். நகைச்சுவைக்காகவே வெளிவந்த ஒரு படத்தின் பெயர் ‘சௌ சௌ'. ராஜமுக்தியில் தியாகராஜபாகதவருடன் நடித்திருக்கிறார். பூனாவில் நடந்த அதற்கான படப்பிடிப்பின்போது ‘வேதாள உலகம்' படத்திலும் ராணியாக நடிக்கிற வாய்ப்பு வர,விமானத்தில் தொடர்ந்து பறந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

எட்டு வருஷங்களாக தென்னிந்திய நடிகர் சங்கச் செயற்குழு உறுப்பினர். எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும்போது குரல் நெகிழ்கிறது. எம்.ஜி.ஆர் நடத்திய ‘இன்பக்கனவு' நாடகத்தில் குண்டுமணியை எம்.ஜி.ஆர் தூக்கிச் சுழற்றுகிற காட்சியில் குண்டுமணி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து கால் முறிந்த நேரம்.

‘' அப்பத் தான்  பாகவதர் இறந்துட்டார்னு நியூஸ் வருது. எம்.ஜி.ஆர் கட்டைகால் ஊனிக்கிட்டே நடிகர் சங்கத்திற்கு வந்து சோகமா விஷயத்தைச் சொன்னார். நடிகர் சங்கம் தான் சவ அடக்கம் செய்யணும்னார். நாங்க போய் பாகவதர் குடும்பத்துக்கிட்டே கேட்டுப் பார்த்தோம். மறுத்துட்டு அன்னைக்கே அவரோட சடலத்தை GkzxUQmk திருச்சிக்குப் போயிட்டாங்க. பின்னாடியே விரட்டிப் போய் மாலையைப் போட்டு மரியாதை பண்ணிட்டு வந்தார் எஸ்.எஸ்.ஆர்''

இப்படிச் சொல்வதற்கு எத்தனை சம்பவங்கள்!

எம்.ஜி.ஆர் இவரை ‘' ஆண்டவரே'' என்று கூப்பிட, பதிலுக்கு இவரும் அவரை ‘ஆண்டவரே' என்று அழைப்பதைச் சிரிப்புடன் நினைவுகூருகிறார். தியாகராஜ பாகவதர் மட்டும் உரிமையோடு ‘மதினி' என்று கூப்பிடுவாராம்.

‘‘அப்போ நாங்க ஆடிக்கிட்டே பாடுவோம். தபேலா, வயலின், சாக்ஸபோன், ஆர்மோனியம் வைச்சுக்கிட்டு ஒரு குருப்பே பின்னாடி வரும். அப்போ டப்பிங் கிடையாது.ஆட்டுரல் மாதிரி ஒரு மைக் இருக்கும். அது முன்னாடி தான்  பாடணும்''

அஞ்சலி தேவியிலிருந்து சரோஜாதேவி வரை பலருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். மாயாபஜாரில் கடோத்கஜனான ரங்காராவுக்கு அம்மா. சம்பூர்ண ராமாயணத்தில் கூனி. பாலும் பழமும், பாகப்பிரிவினையைத் தொடர்ந்து மகேந்திரனின் உதிரிப்பூக்கள், அழகிய கண்ணே வரை நடித்திருக்கிறார்.

‘‘ உதிரிப்பூக்களுக்குப் பிறகு ஒழுங்கா காசு வர்றதில்லை. பார்த்தேன். நம்ம சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு ஊரானுக்கு உழைக்கணும்னு இப்போ நடிக்கப் போறதில்லை. இப்போ ஷூட்டிங் நடக்கிற இடத்துக்குப் போனாலே ஒட்டலை. முன்பெல்லாம் நடிகைகளோடமேக்கப் ரூமுக்குள் யாரும் நுழைய முடியாது. டைரக்டரே கதவைத் umimkz தான் விஷயத்தைச் சொல்வார். இப்போ மேக்கப் ரூமில் தான் பெரிய கும்பலே இருக்கு.. செட்டில் சில சமயங்களில் நடிகர் நடிகைங்க பேசுற பேச்சைக் கேட்கிறப்போ, தப்பா நினைக்கக் கூடாது, நாம தான் துணியில்லாம உட்கார்ந்திருக்கோமான்னு தோணும்''

இவருக்கு ஒரே மகள். மகளின் கணவர் திருச்சி லோகநாதன். லோக நாதனின் பிள்ளைகள் தான் டி.எல்.மகராஜனும், தீபன் சக்கரவர்த்தியும்.

கடற்கரையை ஒட்டிய வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறபோது அறைக்குள் அலையைப் போல வந்து போகிறது கடல் காற்று. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வெற்றிலையை மடித்து மெல்லுகிறார். பக்கத்தில் சின்னதாக வெற்றிலைப் பெட்டி. ‘‘இந்த வெற்றிலைப் பெட்டி கூட ‘தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நடிச்சுட்டு வந்துருச்சு''.

எம்.ஜி.ஆர் குடும்பத்துடன் சிநேகம் நீடிக்கிறது. ஏதேனும் விசேஷம் என்றால் முதல்வர் வீட்டிலிருந்து கார் வந்து கூப்பிட்டுப் பேசுகிற அளவுக்கு நெருக்கம். அமெரிக்காவிலிருந்து எம்.ஜி.ஆர் சென்னைக்குத் திரும்பியபோது அவருக்கு ஆரத்தி எடுத்தவர் இவர்.

சில சினிமாக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகையில் உணர்ச்சி வசப்படுகிறார். கண் கலங்குகிறார்,

‘‘எஸ்.ஆர். ஜானகியம்மா தான் என்னை ஆளாக்கினவங்க, அவங்களோட சிஷ்யை நான். ஆனா.. அவங்க, துரைராஜ் அண்ணன் நிலைமை எல்லாம் கடைசிக்காலத்தில் இப்படி ஆகக் கூடாதுங்க..'' என்கிறார் புடவைத் தலைப்பில் கண்ணைத் துடைத்துக் கொண்டு.

முகபாவம் நிமிஷத்திற்கு நிமிஷம் மாறுகிறது. குரலில் தான் என்னவொரு ‘மாடுலேஷன்'?

‘‘இவ்வளவு வருஷம் வாழ்ந்தாச்சு.. இனி என்ன இருக்கு? ஆனா மேலே சென்டைத் தடவின மாதிரி அன்பு காட்டாம, உள்ளன்போடு பழகணும். அது போதும்'' என்கிறார் தன்னுடைய அடையாளத்தைப் போன்ற வெண்கலக் குரலில்.

கரடு முரடாகப் பேசுகிற மனசின் இன்னொரு பக்கத்தில் இப்படியொரு நெகிழ்வு.