அது 1983. என்னுடைய மகள் ஷர்மிளாவை பள்ளியில் சேர்ப்பதற்காக பிரபலமான தனியார் பள்ளியை அணுகினேன். நன்கொடையாக 10,000 ரூபாய் கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு தோன்றியது. நம்மிடம் பணம் இருக்கிறது.சேர்த்து விடலாம். ஆனால் வசதி குறைவான நடுத்தர குடும்பத்தினர் தரமான ஆங்கில கல்வியை பெறுவது எப்படி? இந்த எண்ணம் வலுப்பெற 1989 ல் மடிப்பாக்கத்தில் 135 மாணவர்களுடன் சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியை தொடங்கினேன். இன்று 2500 மாணவர்களுக்கு மேல் அதில் படிக்கிறார்கள். எங்களுடைய அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் அன்றிலிருந்து இன்றுவரை ‘ நன்கொடை’ வசூலிப்பதில்லை.” பெருமை பொங்க நினைவு கூர்கிறார் அரிமா. Mஒஊ லியோ முத்து. 22 கல்லூரிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவரான லியோ முத்து அவர்களை ஈக்காட்டுதாங்கலில் உள்ள அவரது இல்லத்தில் அந்திமழைக்காக சந்தித்தோம். தொழிலதிபருக்கு உண்டான எவ்வித ஆடம்பரமும் இன்றி நம்முடைய குடும்பத்தில் மூத்தவரைப் போன்று மிக சகஜமாக உரையாட தொடங்கினார்.
முதல் தலைமுறை தொழில் சாதனையாளர் என்ற நம்முடைய முன்னோட்ட வரிகளை மெல்லியதாக மறுக்கிறார். “சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி.என்னுடைய தந்தை மாணிக்கம் பல்துறை வல்லுனர்.
1960-களிலேயே கலை ஆர்வத்தில் லியோ தியேட்டர் என்ற நாடக கொட்டகை நடத்திவந்தார்.
ஆர்.எஸ்.மனோகர், எம்.ஆர்.ராதா போன்ற ஜாம்பவான்களை எல்லாம் அழைத்து வந்து எங்கள் ஊரில் நாடகம் நடத்தியிருக்கிறார். ஈ.வி.சரோஜா போன்றோரையெல்லாம் அழைத்து வந்திருக்கிறார். இது ஒரு புறம் என்றால் இன்னொருபக்கம் லியோ பிஸ்கட் பேக்டரி, பார் சோப்பு வியாபாரம்,சீயக்காய் பவுடர் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்தவர்.
சென்னையில் செய்திருக்க வேண்டிய பல விஷயங்களை அவர் திருத்துறைப்பூண்டியில் செய்தார். 1970-ல் அப்பா மறைந்த பிறகு குடும்ப சூழல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பை தொடர முடியாமல் பிழைப்பு தேடி நான் சென்னை வந்துவிட்டேன். முதல் வேலை என் சகோதரியின் கணவர் தொடங்கிய ‘அப்பலோ ரியல் எஸ்டேட்’ நிறுவனத்தில். அங்கு எல்லாமே நான் தான். பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த அந்த அலுவலகத்தில் ஆபீஸ் பாய் தொடங்கி மேனேஜர் வரை ஒற்றை ஆளாக நான் மட்டுமே.இரண்டு வருடம் அங்கு வேலை பார்த்தேன். சென்னை நிறைய கற்றுக் கொடுத்தது.
அரசாங்க வேலை மீது அப்போது பெரிய ஈர்ப்பு இருந்தது. அதனால் 1972-ல் நெடுஞ்சாலைத் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். 8 ஆண்டு கால அரசு வேலை அலுவலக மேலாண்மையை கற்றுக்கொடுத்தது. அரசு வேலையில் இருக்கும்போதே என்னுடைய மனைவி பெயரில் 1973 ல் ‘லியோ ரியல் எஸ்டேட்’ நிறுவனத்தை தொடங்கி விட்டேன். அலுவலக நேரம் போக 8 மணி நேரம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நிலை நிறுத்த கடுமையாக உழைத்தேன்” என்று திருத்துறைப்பூண்டி யிலிருந்து சென்னை வரையிலான பழைய நினைவுகளை சுவராஸ்யமாக அசை போடுகிறார்.
உள்ளே நுழைந்ததிலிருந்தே நம்மை குடைந்து கொண்டிருக்கும் அவருடைய பெயருக்கான காரணத்தை கேட்டோம்.“ஜோதிப்பிரகாசம் என்ற என்னுடைய பெயர் இன்றுவரை சான்றிதழ்களிலும், ஆவணங்களிலும் அப்படியேதான் உள்ளது. அப்பா சிம்ம ராசிக்காரர்.அதனால் ‘லியோ’ என்ற பெயரை அவருடைய பல தொழில்களுக்கு வைத்துள்ளார். நான் பிறக்கும்போது என்னுடைய அம்மாவுக்கும் எனக்கும் அம்மை போட்டிருந்தது. குழந்தைக்கு ‘முத்து’ போட்டிருக்கு என்று சொல்லி என்னுடைய செல்லப்பெயராக ‘முத்து’ வைத்தார்கள். அப்பாவிடமிருந்து லியோவையும்,செல்லப்பெயரான முத்துவையும் சேர்த்து ‘லியோ முத்து’ ஆகிவிட்டது” என்கிறார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும் பிற தொழில் நுட்ப கல்லூரிகளும் தொடங்கியது எப்படி?
“1983 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம்.தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான மாணவர்கள் தொழிற்படிப்பிற்காக கர்நாடகத்திற்கும், மகாராஷ்டிரத்திற்கும்போய்க் கொண்டிருந்தார்கள்.அப்போது தமிழ் நாட்டில் இருந்தது ஒன்பது பொறியியல் கல்லூரிகள் மட்டுமே. இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள எம்.ஜி.ஆர் அப்போதைய கல்வி அமைச்சரான திரு.அரங்க நாயகத்தை அழைத்து அண்டை மாநிலங்களைப் போல தமிழ் நாட்டிலும் நிறைய பொறியியல் கல்லூரிகள் அமைய வேண்டும்.
கர்நாடகா சென்று அதற்கான தகவல்களை பெற்று வாருங்கள் என்று அனுப்பிவைத்தார். இதைத் தொடர்ந்துதான் எம்.ஜி.ஆர் காலத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் பெருகியது.என்னால் கற்க முடியாத உயர்கல்வியை தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் உடனடியாக பொறியியல் கல்லூரியை தொடங்கிவிடவில்லை. ஏனென்றால் அப்போது தனியார் பொறியியல் கல்லூரி தொடங்க 150 ஏக்கர் நிலமும் பாலிடெக்னிக் தொடங்க 25 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஏ.ஐ.சிடி.இ அமைப்பும் உறுதியாக இல்லை. அதனால் முதலில் பாலிடெக்னிக் தொடங்கினேன். பிறகு விதிமுறைகளில் தெளிவான வரையறைகள் வந்த பிறகு 1995-ல் 78 வது தனியார் சுய நிதி கல்லூரியாக ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.”
பொறியியல் கல்லூரிகளைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிய காலத்தையும் விவரிக்கிறார். “ஆங்கில மருத்துவம் தன்னால் முடியாது என்று கைவிட்ட பல நோய்களுக்கு சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. நம்முடைய மண்ணின் பாரம்பரிய வைத்திய முறைகளான சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளை தொடங்க விரும்பினோம். பக்க விளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதிக்கு தனித்தனியாக மூன்று கல்லூரிகளை தொடங்கினோம். இந்தியாவிலேயே மூன்று விதமான மருத்துவ கல்லூரிகள் ஒரே வளாகத்திற்குள் அமைந்திருப்பது இங்கு மட்டும்தான். இதுமட்டுமல்ல தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழங்கிய தங்கப் பதக்கத்தை எங்கள் மூன்று கல்லூரி மாணவர்களே வாங்கி வருகிறார்கள்” உற்சாசகமாக சொல்கிறார்.
இன்றைய நிலையில் தர அடிப்படையில் தமிழகத்திலுள்ள 540 பொறியியல் கல்லூரிகளில்
ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி நான்காவது இடத்திலும் ஸ்ரீசாய்ராம் இஞ்சினியரிங் காலேஜ் ஆறாவது இடத்திலும் உள்ளது. இவருடைய மகன் திரு.சாய் பிரகாஷ் தற்போது பொறியியல் கல்லூரிகளின் சி.இ.ஓ. ஆக நிர்வகித்து வருகிறார்.
“ சாய்ராம் பொறியியல் கல்லூரிகள் தொடங்கி 19 வருடங்கள் ஆகின்றன. 15 வருடங்களுக்கு மேல் ஆனாலே நிகர் நிலை பல்கலைக்கழகமாக மாற்றலாம்.அப்படி செய்யும்போது அனைத்து இடங்களையும் நாங்களே நிரப்பிக்கொள்ளலாம். ஆனால் எங்களுக்கு அதில் விருப்பமில்லை.ஒருங்கிணைந்த அண்ணா பல்கலை கழக குடையின் கீழேயே இருக்க விரும்புகிறோம். இதிலிருக்கும் ஆரோக்கியமான போட்டி எங்களுக்கு பிடித்திருக்கிறது.எனக்கு முதலிடத்தை பிடிக்கும் ஆசை கூட கிடையாது.ஆனால் முதல் பத்து இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.” என்கிறார்.
“சாய்ராம் கல்வி நிறுவனங்களின் சிறப்பு என்றால் இங்கு படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகை வழங்கும் முறையை பயன்படுத்து கிறோம். இதன் மூலமாக மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மார்க் வாங்கினால் டியூசன் தொகையை முழுவதுமாக அப்படியே அவர்களுக்கு முதல் பரிசாக திருப்பி தரப்படுகிறது. (ரூ.70,000/40,000). அதேபோல 87 லிருந்து 90 சதவீதம் வரை மார்க் வாங்குபவர்களுக்கு ரூ.10,000மும் 85-87க்கு ரூ.5000 மும் ஆறுதல் பரிசாக வழங்குகிறோம்.” என்கிற தகவலையும் சொல்கிறார்.
கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, லியோ சூப்பர் பைபர் கிளாஸ் லிமிடட், சூப்பர் ஸீ புட் புராடக்ட்ஸ் லிமிடட், ஸ்ரீ சாய்ராஜ் ஆப்செட் பிரிண்டர்ஸ் மற்றும் சாய்ராம் பார்மா பிரைவேட் லிமிடட் என்று பன்முகம் கொண்ட நிறுவனங்களை நடத்திவருகிறார்.விரைவில் சாய்ராம் டி.வி என்ற பெயரில் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிற்கு தயாராக உள்ளது.
22 கல்லூரிகள், பல்வேறு தொழில் நிறுவனங்கள் இவற்றை திறம்பட நிர்வகிக்க அவர் மேற்கொள்ளும் நிர்வாக முறையைப் பற்றி கேட்டவுடனேயே தயங்காமல் பதில் வருகிறது அவரிடமிருந்து.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.- இந்த திருக்குறள் தான் என்னுடைய நிர்வாக மேலாண்மையின் சூத்திரம். ஒவ்வொரு பணிக்கும் சரியான நபரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொறுப்புகளையும்,அதிகாரங்களையும் வழங்கிவிட்டு பிறகு அவர்களின் கருத்துக்களை செவிமெடுத்து கேட்டால் போதுமானது. 1985-ல் அந்தமான் சென்றிருந்த போது இதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அந்தமான் தீவுகளிலுள்ள ரங்கத் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு ஜெயஸ்ரீ டிம்பர்ஸ் என்ற நிறுவனத்தை பார்வையிட்ட பிறகு அவர்களின் முதலாளியை பார்க்க முடியுமா என்று கேட்டோம். அப்போதுதான் தெரிந்தது 1967 ல் பஜாஜ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் அது என்பது. 18 ஆண்டுகளில் திரு.பஜாஜோ அவரது மகனோ அல்லது அவரது பேரப்பிள்ளைகளோ கூட அங்கு சென்று பார்த்ததில்லை. இன்று இந்தியாவில் இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.இன்றைய தொழில் நுட்ப காலகட்டத்தில் சரியான நிர்வாக முறையை உருவாக்கிவிட்டு வருடா வருடம் பேலன்ஸ் ஷீட்டை பார்த்தால் போதுமானது.” அதுபோலவே தூத்துக்குடியில் இவர் நடத்திவரும் சூப்பர் ஸீ புட் புராடக்ட்ஸ் நிறுவனத்தையும் இன்றுவரை நேரில் சென்று பார்த்ததே இல்லையாம். வியப்பாகத்தான் இருக்கிறது.
இறுதியாக இன்றைய தொழில் துறையில் வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் சொல்ல விரும்புவது பேராசிரியர் அன்பழகனின் வாசகம்: “மனித வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் பணத்திற்காகவே வாழ்கிற பைத்தியக்காரனாக எவனும் இருக்கக்கூடாது; பதவியில் அமரலாம், பதவிக்காக அலையும் நாயாக யாரும் மாறக்கூடாது.வெற்றிகள் பெறலாம்;வெற்றி நிலையானது என இறுமாப்பு கூடாது.
மார்ச், 2014.