அந்த இளைஞர் ஐஏஎஸ் முடித்து முதல் பதவியை ஏற்றுக்கொள்ள 1972-ல் நாகாலாந்து போய்ச் சேர்ந்தபோதே பிரச்னையைத்தான் எதிர்கொண்டார். போய் இறங்கியவுடன் திரும்பிப்போகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். நாகாலாந்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதலில் அவரும் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் கேரள மாநிலப் பிரிவு அதிகாரியாகி, பல்வேறு அரசியல்வாதிகளுடன் மோதல்களைப் பார்த்தவர். அவர் பதவிக்காலத்தின் உச்சகட்ட பதவியில் இருந்தபோது அப்போதிருந்த மத்திய அரசையே ஆட்டம் காணவைக்கும் அளவுக்கு அறிக்கைகளை வெளிட்டார். அவர் வினோத் ராய், மத்தியத் தணிக்கைத்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். பொதுவாக தணிக்கைத் துறை அறிக்கைகளை அரசுகளும் கட்சிகளும் கண்டுகொள்ளாது. ஆனால் வினோத் ராய் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வெளியிட்ட பல அறிக்கைகள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்தன. அவற்றில் பெருமளவுக்கு முக்கியமானது தமிழக அரசியலைச் சூறாவளிக்குள்ளாக்கிய 2ஜி ஊழல். மத்தியில் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செய்த தவறான முடிவுகளால் 1,75,000 கோடி அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அவர் அறிக்கை கூறியது. இந்த எண்ணின் பிரம்மாண்டம் எல்லோரையும் உலுக்கியது. அந்த உலுக்கலைத் தொடர்ந்து ஆ.ராசா.பதவியை விட்டு விலகினார். கைது செய்யப்பட்டார். எம்பியாக இருந்த கனிமொழியும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமும் இதைத் தொடர்ந்து நடந்தது. ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இவை அனைத்தும் திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தபோதுதான் நடந்தது. தேசிய அளவில் திமுகவின் புகழ் சீர்குலைந்ததுடன் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் இருமுறை திமுக தொடர்ந்து தோல்வி அடையும் நிகழ்வையும் சந்தித்தது.
2008-ல் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் தணிக்கைத்துறைத்தலைவராக வினோத் ராய் பதவியில் நியமிக்கப்பட்டார். அவர் வெளிக்கொணர்ந்த ஊழல்களில் காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், கிருஷ்ணா கோதாவரி படுகையில் வாயு எடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், ஏர் இந்தியாவின் நிர்வாகக்குளறுபடிகள் என அவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைகள் ஒவ்வொன்றும் வெடிகுண்டுகளாகத் தாக்கின.
இவற்றில் 2ஜி வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்து அவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் வெகுவிரைவாக நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் சுப்ரமணியன் சுவாமியின் பங்கும் மிக முக்கியமானது. இந்த பின்னணியில் அமலாக்கத்துறையும் களமிறக்கப்பட்டு கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஊழல் மூலமாக பணம் பெறப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு முக்கியமான அம்சங்கள், தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு சலுகை காண்பிக்க, உரிமங்களுக்காக விண்ணப்பிக்கும் கடைசி தினத்தை திடீரென முன் தேதியாக மாற்றி அமைத்தது, கலைஞர் தொலைக்காட்சிக்கு செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் சிபிஐயின் தரப்பு வலிமையாக இருக்கும் என்றே கருதப்பட்டது. இப்போது வழக்கு விசாரணைகள் விவாதங்கள் நீதிமன்றத்தில் முடிவடைந்து ஏழாம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் திமுகவினர் எப்படியும் 2ஜி வழக்கில் ஆ.ராசா குற்றமற்றவராக அறிவிக்கப்படுவார் என்று கருதுகின்றனர். இந்த இடத்தில் சுக்ராம் என்ற மனிதரை நினைவில் கொள்வது பொருத்தம். அவர் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர். 1996-ல் சிபிஐ அவர் வீட்டில் இருந்து 3.6 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியது. தொலைபேசித்துறை ஒப்பந்தங்களை வழங்க லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் காங்கிரசை விட்டு விலக்கப்பட்டார். ஆனால் சொந்தமாநிலமான ஹிமாச்சலபிரதேசத்தில் தனிக்கட்சி தொடங்கி பாஜக கூட்டணியில் மாநில அமைச்சரவையில் இடம்பிடித்தார். 2004-ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். 2011-ல் அவருக்கு டெல்லி நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை வழங்கியது. இப்போது மேல் முறையீட்டு வழக்கு நடக்கிறது. 90 வயதைத் தாண்டிய சுக்ராம் இப்போது பாதுகாப்பாக பாஜகவில் சேர்ந்துவிட்டார்!
“ஆ.ராசா அமைச்சராக இருந்த போது, அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பிரதமர் அலுவலகம் என ஆலோசித்து, ஓப்புதல் பெற்றே செய்தார். ஆனால் அவர் யார் ஒப்புதலும் இல்லாமல் தன்னிச்சையாக அலைக்கற்றையை வழங்கியதாக, வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இத்தனைக்கும் லட்சக்கணக்கான பக்க ஆதாரத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் ராசா,” என்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரான எஸ்.எஸ். சிவசங்கர் (பார்க்க அவரது கருத்து-தனிப்பெட்டி).
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞரும் பொருளாதார நிபுணருமான ராமசுப்ரமணியனும் கூட, “இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆ.ராசாவோ கனிமொழியோ கலைஞர் டிவியோ யாரும் குற்றவாளி அல்ல என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து,” என்று ஆச்சரியமூட்டுகிறார்.
“2ஜி வழக்கில் ஏலம் எடுத்த நடைமுறையில் தவறு இருந்திருக்கிறது. ஆனால் இதில் ஆ.ராசா ஊழல் செய்துவிட்டார் என நிரூபிக்க முடியாது. உதாரணத்திற்கு 1982ல் பம்பாய் முதல்வராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சிமெண்ட் ஒதுக்கீட்டில் ஊழல் செய்தார் என ஒரு வழக்கு. இந்த வழக்கில் நடைமுறை தவறுதான். ஆனால் அதில் காலணா கூட அவர் லஞ்சம் பெறவில்லை. அதனால் சுப்ரீம் கோர்ட் அவரை விடுவித்தது. இந்த 2ஜி வழக்கும் அதே போல்தான்.
அப்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நடைமுறைகளைப் பின்பற்றித்தான் ஏலம் நடந்திருக்கிறது. இதில் அ.ராசாவைக் குற்றவாளி எனச் சொல்வது கஷ்டம்.
அடுத்ததாக கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் வந்த விஷயம். கலைஞர் டி.வி. பப்ளிக் லிமிடெட் ஆகக் கொண்டு வர முடிவு செய்கிறார்கள். அதனால் ஷேர் மூலம் வந்த பணம் எனச் சொல்கிறார்கள். பிறகு சில காரணங்களால் ஒத்து வரவில்லையெனப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தந்துவிடுகிறார்கள்.
ஆக கலைஞர் டி.வி மேல் போட்ட வழக்கும் தவறென்றாகிவிடுகிறது. எனவே இந்த வழக்கும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்,”என்கிறார் அவர்.
“இந்த ஊழலால் 1.76 லட்சம் கோடி ரூபாய் வரை நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவையும், அவமானத்தையும் தந்திருக்கிறது. எங்களைப் பொருத்தவரை இந்த வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். இன்னும் ஒருவார காலம் காத்திருப்போம். நீதிமன்றம் யாருடைய வாதத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பார்ப்போம். எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும்,” என்கிறார் பாஜகவின் மாநிலச்செயலர் கே.டி.ராகவன்.
ஆனால் வழக்கம்போல அச்சுறுத்துவது சுப்ரமண்யன் சுவாமிதான். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் மேற்கொண்டுள்ள பதிவில், “2ஜி முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்கிலும் நவம்பர் 7ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடும். புதிதாக வருபவர்களுக்காக திகார் சிறை எவ்வாறு தூசி தட்டி வைக்கப்படுகிறது என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்,”என்று நக்கலாக மிரட்டி உள்ளார்.
இந்த வழக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த விசாரணை அமைப்புகளால் பதியப்பட்டு நடத்தப்பட்டது. இப்போது திமுகவுக்கு முற்றிலும் எதிர்முகாமில் இருக்கும் பாஜக அரசால் வழிநடத்தப்படுகிறது. தீர்ப்பு எப்படிவேண்டுமானாலும் வரலாம். அந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் இருக்கும் தற்போதைய சர்ச்சைக்குரிய அரசியல் சூழலில் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் என்பது மிகவும் சுவாரசியமானது.
நவம்பர், 2017.