சிறப்புக்கட்டுரைகள்

என் மரணம் என் கையில்

அசோகன்

நாற்பத்தியோரு ஆண்டுகளாக அருணா ஷன்பாக் அந்த மும்பை மருத்துவமனையின் வார்டு எண் 4-ல் இருக்கிறார். தான் ஒரு நர்சாகப் பணியாற்றிய அதே மருத்துவமனையில் ஒரு படுக்கையில் தன்னைச் சுற்றி நடப்பது எதையுமே அறியாமல் ஒரு தாவரத்தைப் போல் படுத்திருக்கிறார். யாருக்குமே நேரக்கூடாத ஒரு துயரம் அது.

1974-ல் 25 வயது இளம்பெண்ணாக இருந்த நர்ஸ் அருணாவுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அச்சமயத்தில் வார்டு பாய் ஒருவனால் கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். அந்த சம்பவத்தில்  மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை தொடர்கிறது.

அருணாவின் தோழியான எழுத்தாளர் பிங்கி விரானி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ’அருணாவுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட வேண்டாம். அவர் மரணம் அடைவதை அனுமதிக்கவேண்டும்’ என்பது வழக்கு. இதை 2011-ல் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்கள் இந்த 40 ஆண்டுகளில் அருணா மீது பெரும் அன்பை வளர்த்துக் கொண்டு அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதைச் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கருணைக்கொலை என்பதை அனுமதிக்க மறுத்த நீதிமன்றம் Passive Euthanasia என்ற பெயரில் நோயாளிக்கு மருத்துவ சிகிச்சைகளை நிறுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது.

இந்த வழக்குக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது. இந்த ஆண்டு சமீபத்தில் அருணா வழக்கில் கொடுத்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய ஐந்துபேர் கொண்ட பெஞ்சுக்கு அனுப்பிஉள்ளது நீதிமன்றம். இந்நிலையில்தான் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பவர்களையும் மிகமோசமான உடல்நிலையில் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்ற நிலையில் இருப்பவர்களையும் கௌரவமான மரணத்தை அடைய சட்டப்படி வழி செய்யவேண்டும் என்கிற விவாதம் உருவாகி உள்ளது.

மோசமான நிலையில் ஐசியுவில் படுத்திருக்கையில் நோயாளிக்கு ஆகும் செலவு அவரது குடும்பத்தை பல ஆண்டுகள் பொருளாதார ஏணிப்படியில் கீழ்நோக்கித் தள்ளிவிடும். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தபின்னும் அவர் எப்போது மரணத்தை அடைவார் என்று காத்திருக்கும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவேதான் தகுந்த கண்காணிப்புகளுடன் கௌரவமான மரணத்தை அடைய ஒரு வழிமுறையை இதுபோன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

வெளிநாடுகளில் எப்படி மரணம் அடையவேண்டும் என்பது பற்றி உயில் எழுதும் வழக்கம் உள்ளது.அதுமட்டுமல்லாமல் தற்கொலை சுற்றுலா என்று சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜுரிச் நகருக்குப் போய் இறந்துபோகிறவர்களும் இருக்கிறார்கள். அந்நாட்டில் சென்று தற்கொலை கிளினிக்கில் மரணத்தைத் தழுவுகிறார்கள். 2012-ல் இதுபோல் ஓர் இந்தியரும் அங்குசென்று மரணம் எய்தியிருக்கிறார். அந்நாட்டு சட்டம் இதுபோல் செய்யப்படும் தற்கொலைகளைத் தடுப்பதில்லை .

மரணமடைவதற்காக வயதானவர்கள் காசிக்குச் செல்வது இந்தியாவில் வழக்கம். அதற்கான சமய, கலாச்சார நம்பிக்கைகள் இங்கே இருக்கின்றன. அங்குள்ள மணிகர்ணிகா கட்டத்தில் எரிந்துகொண்டேயிருக்கும் சுடுகாடு பூமி தோன்றுகையில் தோன்றியதாகவும் இந்த உலகம் முடியும் வரைக்கும் எரிந்துகொண்டே இருக்கும் என்கிற  கவித்துவமான ஐதீகமும் உள்ளது. மரணம் அடைவதற்காக காசிக்கு வரும் முதியவர்கள் அதுவரை அங்கே தங்கியிருக்க இடங்களும் இருக்கின்றன.

மரணத்தை எப்படி அடைவது என்பதுபற்றி உறுதியான வழிகள் கிராமப்புற பெரிசுகளிடமும் சமூகத்திடமும் இருக்கின்றன. கிராமங்களில் நாட்கணக்கில் இழுத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு மண்ணைக் கரைத்து ஊற்றுவதும் பால் ஊற்றுவதுமாக பல்வேறு சடங்குகளாக உருப்பெற்ற ஆனால் நிஜத்தில் மரணத்துக்கு உதவக்கூடிய வழிமுறைகள் இருக்கின்றன.

ஆனால் நவீன கால கட்டத்தில் பெருகியிருக்கும் மருத்துவ முறைகள், ஓர் நாடாக நாம் உருவான பின்னால்  இருக்கும் சட்ட திட்டங்கள், மனித உரிமைகள் இதனுடன் முரண்படும் நேரம் உருவாகியிருக்கிறது.

“மூன்றுமாதங்களாக என்னுடைய பாட்டி படுத்த படுக்கையில் கிடந்தார். ஒவ்வொரு முறை விழிப்பு வந்து என்னைப் பார்க்கும்போதும் வேதனை தாங்கமுடியவில்லை என்னை எப்படியாவது விஷம் கொடுத்தாவது கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சுவார். அவரது தீனமான கெஞ்சலைத் தாங்க இயலாது. ஆனாலும் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. கடைசியில் பெருந்துன்பத்துக்கு ஆளாகி அவர் இறந்த பின்புதான் எங்களுக்கு மனநிம்மதி ஏற்பட்டது. இன்றும் நடு இரவுகளில் அவரது அவலக்குரல் கேட்டு விழித்துக்கொள்கிறேன்” என்கிறார் நண்பர் ஒருவர்.

 ஐசியூக்களில் தினமும் மரணத்தால் காலியாகும் படுக்கைகளைப் பார்த்தபடி நினைவு மீண்டபடியும் பிழைத்தபடியும் படுத்திருக்கும் நோயாளிகளின் நிலைமை மிக மோசம். மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் கூட வெண்டிலேட்டர் போன்ற கருவிகள் மூலம் உயிர்வாழ்வை நீட்டிக்கும் சிகிச்சைமுறைகளை எல்லா மருத்துவமனைகளும் கையாள்கின்றன. சிகிச்சையைத்  தொடர்வதா நிறுத்துவதா என்ற மிகப்பெரிய உணர்வுச்சிக்கலுக்கு அந்த குடும்பத்தினர் ஆளாகி ஐசியூ வாசலில் நிற்பார்கள்.

எந்த அளவுக்கு ஐசியூ வசதிகள் இந்தியர்களுக்கு சாத்தியம்? 120 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் 70,000 ஐசியூ படுக்கைகளும் 40,000 வெண்டிலேட்டர்களுமே உள்ளன. மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதால் பிழைக்க சாத்தியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரிகான் மாகாணத்தில் ஆறுமாதங்கள் தாண்டி உயிர்வாழ வாய்ப்பு இல்லை என்ற நிலையிலுள்ள நோயாளிகள் மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை அடையலாம் என்பது சட்டமாக உள்ளது. இருப்பினும் இப்படி விரும்பி மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாம். பத்தாயிரம் பேர் இப்படி இருந்தால் ஒரு நோயாளிதான் இந்த  மரணத்தை விரும்புகிறாராம்.

இந்தியா போன்ற நாட்டில் இதுபோன்ற மரணங்களை அனுமதித்தால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது இதை எதிர்ப்பவர்களின் வாதம். முதியவர்களை மிகமோசமாக மதிக்கும், நடத்தும் சமூகமாக, நாம் மாறிக்கொண்டுவரும் நிலையில் இந்த வாதத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

 மருத்துவக்குழுவின் அனுமதியுடன் மரணத்தைத் தேர்வு செய்யும் உரிமையை நோயாளிகளுக்குத் தரலாமா? அவர்களது கௌரவமான மரணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அவர்களின் உறவினர்களுக்குத் தரலாமா? இவை இரண்டும் கேள்விகள். இதற்கு சட்ட அங்கீகாரம் தருவதா இல்லையா என்பது உச்சநீதிமன்றத்திடம் இப்போது இருக்கிறது. இது பற்றிய பல கேள்விகளுக்கு அடுத்த பக்கத்தில் மருத்துவர் என்.ராமகிருஷ்ணனின் பதில் உள்ளது. வாசித்துப் பாருங்கள்!

(மூளைச் சாவு என்கிற நிலை, வெஜிடேட்டிவ் எனப்படும் கோமா நிலையில் இருந்து வேறானது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படும். ஆனால் கோமா நிலையில் இருப்பவர்கள் உறுப்புகளைத் தானம் செய்ய இயலாது. இந்த தகவல் ஒரு புரிதலுக்காக மட்டுமே).

செப்டெம்பர், 2014.