என் வரையில் படைப்பு என்பது மழை பொழிவது போல, காற்று வீசுவது போல மிக இயல்பானது.
என்னுடைய முதல் கவிதைத்தொகுப்பு 2008 இல் உயிர் எழுத்து பதிப்பகத்தில் வெளியானது.
அப்போதிருந்து அந்தந்த காலத்தின் மனநிலைக்குத் தக்கத் தொடர்ந்து எழுதுகிறேன். இந்தப் பத்தாண்டுகளில் கவிதை தவிர, சங்கக் கவிதைகளை சமகாலத்தோடு ஒப்பீடு செய்து கட்டுரைகளும், என்னுடைய பயணங்களையும் அப்போது நான் சந்திக்கும் மனிதர்களையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எழுதத் தொடங்கிய காலத்தில் நான் மதிக்கிற மூத்த படைப்பாளர்கள் சிலரும் என்னுடைய கவிதைகள் குறித்து பேசியது இன்று வரையில் என்னை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.
ச.தமிழ் செல்வன் முதல் தொகுப்பு பற்றியும், கலாப்ரியா இரண்டாவது தொகுப்பில் உள்ள தவிப்பு என்கிற தலைப்பிலான ஒரு கவிதையைப் பற்றியும் வெவ்வேறு கூட்டங்களில் பேசியதை அறிந்து கொண்டபோது மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அந்த மன நிலையை இன்று வரையில் எனக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மேலும் யாராவது என்னுடைய படைப்புக் குறித்துப் விமர்சிக்கும் பொழுது அதை நான் நேர்மறையான பொருளில் எடுத்துக்கொள்வேன். அதுவே என்னைத் தொடர்ந்தியங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியான காலத்திலிருந்து சமூக வலைதளங்களில் மூலமாக சற்று கூடுதலான எண்ணிக்கையில் வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. என்றபோதிலும் பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகள் கூடுதல் கவனம் பெறவே செய்கிறது. விருப்பத்தின் பொருட்டுப் பலரும், விமர்சனத்தின் அடிப்படையில் சிலரும் என்னுடைய படைப்புக்களை வாசிப்பதை அறிகிறேன். தவிர, சில கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் என்னுடைய கவிதைகள் இருப்பதாலும், பல கல்லூரி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதாலும் இளம்வாசகர்களாக கல்லூரி மாணவர்களும் இருக்கிறார்கள். எனவே வாசகர்களோடு என்னுடைய அனுபவம் என்பதும் வெவ்வேறு தளத்திலிருந்து கிடைப்பவை. அவர்களின் பாராட்டுகள், கேள்விகள், விமர்சனங்கள் வழியாகவே எனக்கான தனித்த அடையாளத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
வாழ்நாள் முழுக்க ஒரு பெண் நேசிப்பை மட்டுமே வழங்க முடியுமா என்பதுதான் கடந்த பத்து ஆண்டுகளாக என்னுடைய கவிதைகளைப் படிக்கும் சிலருடைய கேள்வி. என்னுடைய பணி நிமித்தம் அதிக எண்ணிக்கையிலான பெண்களைத் தொடர்ந்து சந்திக்கவும் பேசவும் எனக்கு வாய்த்திருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் பகிர்ந்து கொள்கிற உணர்வுக்குள் என்னையும் பொருத்திப் பார்த்துக் கொள்வதுண்டு. நேசிப்பதையும், தான் நேசிக்கப்படுவதையும் விரும்புபவர்களுக்கு என்னுடைய கவிதைகளைப் பிடிக்கும் என்று என்னுடைய ஒரு கவிதைத் தொகுப்பில் எழுதியிருப்பேன். இப்போது வரை நான் அப்படியே இருக்கிறேன். என்னுடைய படைப்புகளை வாசிப்பவர்களும் அவ்வாறே இருக்கிறார்கள்.
ஜனவரி, 2018.