எம்.எஸ்.சுப்புலெட்சுமி 
சிறப்புக்கட்டுரைகள்

“எனக்கு எதுவும் தெரியாது என்பது தெரியும்!”

மணா

எம். எஸ் -  என்று பலராலும் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்பு லெட்சுமியின் விரிவாக்கம் மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி.  

அவரை முதலில் சந்தித்தது வார இதழ்
சார்ந்த தொடர் ஒன்றிற்காக, சென்னையில்.

எண்பது வயதைக் கடந்திருந்தார் அப்போது. வெண்மையான தலை. நடுஉச்சியில் குங்குமம். புன்னகை ஒட்டி வைத்த மாதிரியான முகம். மிக மென்மையான குரல்.

எம்.எஸ். பிறந்த ஊரான மதுரைக்குச் சென்று அவருடைய வீடு, அவர் முதலில் பாடிய இடம், அங்கு சந்தித்த உறவினர்கள், இசைக் கலைஞர்கள் சிலர் அவரைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள்& எல்லாவற்றையும் முதலில் நான்  சொன்னபோது ஆர்வம் மேலோங்கிய பரவசம் மாறாத குழந்தையின் முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். உதட்டில் படர்ந்திருந்த புன்னகைக்கு வயதில்லை. அழகாக இருந்தது.

திருமணம் ஒன்றிற்கு வீணை வாசிக்கப் போனபோது அம்மாவின் வீணை நாதம். இடையில் எம்.எஸ்.தன் பட்டுக் குரலில் பாடியபோது அவருக்கு எட்டு வயது. அடுத்தடுத்து தன்னுடன் இசை நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு போக ஆரம்பித்துவிட்டார், அம்மா சண்முகவடிவு.

ஸ்ரீனிவாச அய்யங்காரிடம் வாய்ப்பாட்டு. பண்டிட் நாராயணராவிடம் ஹிந்துஸ்தானி என்று கற்றுக் கொண்டதும் இசையில் மெருகு கூடி பாடுவதில் தனித்துவம் மிளிர்ந்தது. மதுரை சோமு மாதிரியான பாடகர்கள் துவங்கி நாதஸ்வரக் கலைஞர்கள் வரை சுப்புலெட்சுமியின் குரலுக்கு வசியமானார்கள். மாயவரம் கிருஷ்ணய்யர், செம்மங்குடி என்று இசையைக் கற்றுக் கொண்டே இருந்தார், எம்.எஸ்.

பதினேழு வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் சுப்புலெட்சுமி பாடியபோது இசையுலகில் அபூர்வமான பூ பூத்ததைப் போலிருந்தது. மூத்த கலைஞர்கள் ஆசிர்வதித்தார்கள். இசைத்தட்டில் வெளிவந்து வலம் வந்தது அவருடைய இசை.

சேவாதனம்' என்கிற படத்தில் நடிக்கச் சம்மதித்து சென்னை கிண்டியில் படப்பிடிப்பு நடந்தபோது சதாசிவத்துடன் உருவான நட்பு  திருநீர்மலையில் திருமணத்தில் முடிந்தது. சகுந்தலை, சாவித்திரி, மீரா என்று அடுத்தடுத்து எம்.எஸ்.நடித்த படங்கள் அவரைப் பிரபலமாக்கின. இசையுலகிலும் உயர்த்தின. இந்தி மொழியில் வெளியான 'மீரா' கவிக்குயில் சரோஜினிதேவி போன்றவர்களையே  ரசிகைகளாக்கியது. காந்தியை மனம் நெகிழ வைத்திருக்கிறது. நேருவை வியக்க வைத்திருக்கிறது.

ஐ.நா.சபையில் பாடியபோதும், ரஷ்யாவில் பாடியபோதும் உலக அளவில் கவனம் பெற்றது இவருடைய இசைக்குரல். பத்மபூஷன். மகஸேஸே விருதுகள், கௌரவ டாக்டர் பட்டங்கள்,பாரத ரத்னா விருதுகள் என்று எத்தனையோ விருதுகள் அவரைத் தேடி வந்தாலும், சொந்த மண்ணான மதுரையில் செம்மங்குடிக்குப் பிறகு மதுர கலா பிரவீணா விருது கொடுக்கப்பட்டபோது நிறைவான சந்தோஷம் அவரிடம்.

தன்னுடைய வாழ்க்கையை திசை மாற்றி உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சதா
சிவத்தைப் பற்றி ஒரு மேடையில் இப்படிச்
சொன்னார் எம்.எஸ்.

'' எனக்கு இரண்டு விஷயங்கள் தெரியும். முதலாவது எனக்கு எதுவுமே தெரியாது என்பது தெரியும். இரண்டாவது, என் நலம் அனைத்தும் என் பதி தேவருக்குத் தெரியும்.''

தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத வெகுளித்தனம் நிரம்பிய மனதிடம் இருந்தே இப்படியொரு அடக்கமான வார்த்தைகள் வெளிவரமுடியும்.

நேரடியாக எம்.எஸ்.ஸைச் சந்தித்தபோது அருகில் அமர்ந்திருந்த சதாசிவமும் இளகிய குரலில்,
'' யாரையும் பாதிக்காத வெகுளித்தனத்துடன் இருக்கிற இவருக்கு இசைதான் எல்லாம். அதுதான் வாழ்க்கை'' என்று சொன்னபோது, பூரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தபடி புன்னகைத்தார்.

'' பொதுவா நான் பத்திரிகைக்காரங்ககிட்டே நிறையப் பேச மாட்டேம்ப்பா.. பாடறதோடு சரி.. எங்க ஊருக்கு, எங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்திருக்கீங்க.. அதனால் தான் இந்த அளவுக்காவது பேசுறேன். வெளியுலகமே தெரியாம வளர்ந்தவ நான்.. முன்னாடி எங்க அம்மா பார்த்துக்கிட்டாங்க.. அப்புறம் இவர் பார்த்துக்கிட்டார்..'' என்று சொல்லிக் கொண்டு போனவரிடம் மதுரையில் எடுத்த சில புகைப்படங்களைக் காண்பித்தபோது, அவருடைய  கண்களில் கசிவு.

'' எங்க அண்ணா சக்திவேல் படம்.. தங்கை வடிவு படத்தை எல்லாம் எப்படியோ எடுத்திருக்கீங்க.. அவ சின்ன வயசிலேயே இறந்துட்டா..எங்க அம்மா வீணையோட எப்படி இருக்காங்க..பாருங்க.. ஆனா ரொம்பவும் பொறுப்பா இருப்பாங்க.. எங்களை நல்லபடியா வளர்க்கச் சிரமப் பட்டாங்க.. இங்கே வந்தபிறகு மதுரைக்கு அதிகம் போறதில்லை..'' என்றவரிடம் மதுரையில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டின் உள்ளறையில் கலைஞரும், அவருடைய முதல் மனைவி பத்மாவதியும்( மு.க.முத்துவின் அம்மா)  இருக்கிற கருப்பு,வெள்ளைப் படத்தைப் பற்றிக் கேட்டதும் சிநேகிதமாய்ப் புன்னகைத்தார்.

வார இதழில் எழுதி, வெளிவந்த இதழை அவரிடம் கொடுக்கச் சென்றபோது, அசலான குழந்தையைப் போல சிறுசிறு வார்த்தைகளில் பிரியம் பொங்கப் பாராட்டினார். அருகே அழைத்துத் தலையில் கைகளை வைத்துச் சொன்னார்,'' நல்லாயிருக்கணும்!''

கணவர் சதாசிவம் மறைந்த பிறகு பார்க்கப் போயிருந்தபோது  தன்னை ஒடுக்கிக்கொண்ட மாதிரியான தோற்றத்துடன் இருந்தார். இழப்பின் கனத்தை அவரால் தாங்க முடியவில்லை.

அவர் மறைவின்போது அஞ்சலி செலுத்தச்
சென்றிருந்தேன். பாடி ஓய்ந்த பறவை
 சிறகைக் கீழிறக்கியதைப் போலிருந்தது.

ஆகஸ்ட், 2019.