சிறப்புக்கட்டுரைகள்

எனக்காக இல்லை மகனே!

ராம்பாபு

இரும்புக்கட்டிலில் விரிக்கப்பட்ட துணிவிரிப்பின் மீது அந்த மூதாட்டி அமர்ந்திருந்தார். சிவந்த மேனி. அழகான முகத்தில் சுருக்கங்களை மீறி களை சொட்டியது. ஆனால் அதையும் தாண்டி ஒரு ஆழமான சோகம் திரைபோலப் படிந்திருந்தது. கையில் எவர்சில்வர் தட்டும், குவளையும் வைத்திருந்தார். மதிய நேரம் என்பதால் ஒவ்வொரு அசைவுக்கும் உணவை எதிர்பார்த்து அவர் கண்கள் அலைந்தன.

அந்த முதியோர் காப்பகத்துக்குச் சென்றிருந்த நான் சற்று நேரம் அந்த மூதாட்டியை கூர்ந்து கவனித்தேன். கணவனுடன் வாழ்ந்து, அவனுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சமைத்துப்போட்ட மூதாட்டி. மகனுக்கும் மகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கணக்குப் பார்க்காது சமைத்து அமுதூட்டிய மூதாட்டி. ஆயிரக்கணக்கான பேருக்கு உணவிட்ட அந்த பெண்மணி, இப்போது கையில் தட்டுடன் தன் தள்ளாத வயதில், தான் பெற்ற மக்களால் கைவிடப்பட்டு, உணவுக்காக காத்திருக்கிறார். அது வசதியானவர்களுக்காக நடத்தப்படும் முதியோர் இல்லம்தான்.  அவர்கள் பணம் கட்டித்தான் அங்கே தங்கி இருக்கிறார்கள். ஆனால் மகன்களால், மகள்களால் கைவிடப்பட்ட அனாதைகள்.

சமீபத்தில் பணி நிமித்தம் சென்னையில் உள்ள பல முதியோர் இல்லங்களுக்குச் சென்றிருந்தேன்.  அங்கு நான் கண்ட காட்சிகளில் ஒன்றுதான் அது. முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களின் நிலை இப்படித்தான் உள்ளது. இன்றைய சமூக அமைப்பில் பெற்றோரை ஒரு வயதுக்குப் பின் மதிக்காமல் தூக்கி எறியும் போக்கு வளர்வது கவலை அளிப்பதாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ ஆலோசனைகளை,  சிகிச்சைகளை குறிப்பிட்ட இடைவெளியில் செய்யக்கூடிய வாய்ப்பு உருவானது எனக்கு ஓரளவுக்கு நிம்மதியை அளித்தது.

அந்த மூதாட்டி மட்டுமல்ல; நகரங்களில் பெரும்பாலான பேரின் கதையும் இப்படித்தான் இருக்கிறது:

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அமெரிக்காவுக்கு வேலைக்குப்போகிறார்கள். அங்கே திருமணம் செய்துகொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆள் தேவை. அங்கே வேலைக்கு ஆள் வைப்பது மிகவும் செலவு பிடிக்கும். எனவே விமான டிக்கட் கொடுத்து தாயை அழைத்துக்கொள்கிறார்கள். குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார் தாய். சில வீடுகளில் முறைவைத்து கணவனின் தாய் கொஞ்சகாலம், மனைவியின் தாய் கொஞ்சகாலம் என்று சென்றுவருவார்கள்.

சம்பாதித்து சேர்த்த பணத்தில் பையன் வீடுகட்ட ஆசைப்படுவான். அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கட்டிய அவரது நினைவுகள் நிரம்பிய வீட்டை விற்பான். அல்லது இடிப்பான். அதுவே அந்த தாயால் தாங்க இயலாது. அம்மா உனக்கு புதிய வீட்டில் தனி அறை தருகிறேன் என்று சொல்வான். ஆனால் என்ன ஆகும்? சில காலம்தான். தனி அறையும் பிடுங்கப்பட்டு,  அந்த தாய், மகனின் வீட்டில் உபயோகமற்ற பொருளாக ஆகிவிடுவார். நீ நிம்மதியாக முதியோர் இல்லத்தின் உன் வயதையொத்தவர்களுடன் பழகிக்கொண்டு இரு.. என்று சொல்லி தாயைக் கொண்டுவந்து மகன் முதியோர் இல்லம் சேர்ப்பான். ஆரம்பத்தில் வாராவாரம் வந்து பார்ப்பார்கள். பின்னர் அது குறைந்து, ஆண்டுகளாகியும் விடும்.

இதுதான் யதார்த்தம். சமீபத்தில் நான் சென்றிருந்த ஓர் முதியோர் இல்லத்தில் மகள் அடுத்த தெருவில் இருந்தும் கூட ஆறு ஆண்டுகளாக அந்த இல்லத்தில் இருக்கும் தன் தாயை வந்து பார்க்கவில்லை என்று கேள்விப்பட்டு நொறுங்கிப்போனேன்.

ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. நாம் எல்லோரும அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கதை.

மகன் தன் தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினான். அங்கே பல ஆண்டுகள் தங்கி இருந்தார் அவர். அடிக்கடி வந்துபார்க்கவில்லையே தவிர மாதம் தோறும் அந்த இல்லத்துக்கு அவன் பணம் அனுப்பினான். அந்த தாய் தனிமையில் வாடி அன்புக்கு ஏங்கி உடைந்துபோய் மரணப்படுக்கையில் விழுந்தார்.

மகனுக்கு கடைசியாக வந்து பார்த்துப்போகுமாறு செய்தி அனுப்பினார்கள். மகனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தார் தாய். ‘அம்மா என்ன செய்யவேண்டும்?’ என்றான் மகன்.

‘இந்த அறையின் மின்விசிறி சரியாக இயங்கவில்லை. ஒரு குளிர்சாதனக்கருவி பொருத்திக்கொடு”

இன்னும் சில நாட்களில் இறக்கப்போகும் அம்மா ஏன் இதைக்கேட்கிறார் என்று மகனுக்குப் புரியவில்லை. தாயே தொடர்ந்தார்:

‘’எனக்காக இதைக் கேட்கவில்லை. நீ  குளிர் சாதன அறைகளுக்கே பழகிவிட்டாய். பிற்காலத்தில் உனக்கு வயதானபின் நீ இங்கே வந்து தங்க வேண்டி நேரிடும். அப்போது உனக்கு இந்த குளிர்சாதனக் கருவி பயனுள்ளதாக இருக்குமே என்றுதான் சொன்னேன்”

 (கட்டுரையாளர், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையின் பொதுமேலாளர்)

பிப்ரவரி, 2016.