சிறப்புக்கட்டுரைகள்

எந்த ராமச்சந்திரன்?

கே. வி. ஷைலஜா

மண்ணும் மனமும் குளிரக் கொட்டித் தீர்த்த மழையை இப்போது பார்க்க பயமாக இருக்கிறது. ஒரு சொட்டு மழைக்கான ஏக்கத்தோடு வாழ்ந்த நாட்கள் ஞாபகத்தில் தங்கி விட்டிருக்கிறது. இந்த மழை நின்றால்கூடப் பரவாயில்லையென மனதுக்குள் ஒரு நினைப்பு.

இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியவில்லை. அது திருப்பியடித்து மனிதத்தைத் தாக்குகிறதோ என்ற பயம் கவ்வுகிறது. நாம் செய்த பாவம்தான், துரோகம்தான், அசட்டைதான், அக்கறையின்மைதான். எல்லாமே புரிகிறது. ஆனாலும் பரிதவிப்பாக இருக்கிறது.

ஊரெல்லாம் வெள்ளக் காடாகிப் போனாலும் பல ஏரிகள் நிறையவில்லை. ஆனால் ஏரிகள் ஆறுகள் உடைந்து பல உயிர்கள் பள்ளிகளில் தஞ்சமடைந்து ஒரு வேளை சாப்பாட்டிற்காக நகரின் பெரிய மனிதர்களைக் கண்களில் பசியோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் தண்ணீர்ப் பஞ்சத்தில் வேறு தவிக்கப் போகிறார்கள். இந்த முரண்பாட்டை யார் என்ன செய்யப் போகிறார்கள்?

தன் வீட்டைச் சுற்றி, தன் நிலம் சுற்றி, தன் வரப்பு சுற்றியென மனிதன் வரைந்த கோடுகளில் அவனே சிக்குண்டு தவிக்கிறான். ஒவ்வொரு நாள் விடியலிலும் வாழ்வு சிக்கலாவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் புத்திக்கு உறைக்காமல் போய்க் கொண்டேயிருக்கிறோம்.

பணமும் சுயநலமும் விஷம் போல உச்சி மீதேறி வெறி கொண்டு ஆட, மனிதனின் ஆணவம் அடங்கவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியும், எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுவேன், என்னை யாரும் அசைக்க முடியாது என்ற எக்காளம் ஒரே ஒரு நெஞ்சு வலியில் முடிந்துவிடுகிறது.

எதற்காகச் சாலைகள் தோண்டப்படுகிறது, எதற்காக மூடப்படுகிறது, யார் தோண்டுகிறார்கள் எதுவும் யாரும் கேட்பதில்லை. யாருக்கும் அதற்கு நேரமில்லை. தோண்டப்பட்ட எந்தப் பள்ளத்திலும் யார் வேண்டுமானாலும் விழுந்து சாகலாம். அதெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். மரணங்கள் இலை உதிர்வதைப் போல மறக்கப்படுகின்றன.

இப்படித்தான் எங்கள் ஊரில் எதற்கு என்று கேட்க நேரமில்லாமல் போனதால் ஒரு பிஞ்சுக் குழந்தை இரண்டு வெறியர்களால் பிய்த்து எறியப்பட்டது. நாம் பார்த்திருக்கலாமே, கேட்டிருக்கலாமே என அதன் பிறகு எத்தனை அழுதும் பிரயோஜனம் இல்லை. நடந்தது நடந்துவிட்டது.

எதிரில் நடக்கும் அநியாயத்தை மட்டுமல்ல, எதையும் கேட்காத மொண்ணைத்தனத்தை நம் தலைமுறைக்கு யார் சொல்லிக் கொடுத்தது? எது நடந்தாலும் சட்டையில் சேறு ஒட்டிக் கொள்ளாமல் சௌகரியமாக வாழ எப்படிக் கற்றுக் கொண்டோம்? எந்த சலசலப்புக்கும் குரல் கொடுக்கும் தலைமுறையை,  முன்னால் வந்து நின்று தன் பிரச்சனையாய் ஏற்றெடுக்கும் தலைமுறையை நாம் தொலைத்து முதியோர் இல்லத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சேர்த்து விட்டோம். அங்கே அவர்கள் பூஞ்சைக் காளான்களாய் மக்கி மடிந்து கொண்டிருக்கிறார்கள். இதய அடுக்குகளில் மூச்சுக்காற்றை அழுத்தி முகவரி இல்லாமல் போகிறார்கள். நமக்கும் அங்கேதான் இடமென்பதை நம்மில் பலர் இன்னும் உணரவேயில்லை. நாமாவது ஒரு அற்புத தலைமுறையின் மிச்சம், பாச வலைகளில் இறுகக் கட்டின கண்ணிகள். ஆனால் எந்த உன்னதங்களும் தெரியாத சவசவத்துப் போன தலைமுறைகளின்  கைகளில் சிக்கி நாம் என்னவாகப் போகிறோம்?

நீண்ட நாட்களாகப் புரியாத நகுலனின் கவிதை வரிகளை இப்போது தெளிவாய் உணர முடிகிறது.

‘வந்தவன் சொன்னான்

என் பெயர் ராமச்சந்திரன் என்று

எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை

அவரும் சொல்லவில்லை’ 

  (கட்டுரையாளர்  ஒரு  மொழிபெயர்ப்பாளர்)

டிசம்பர், 2015.