வீட்டில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை விட வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம். இது விவாகரத்து வரைக்கும் கொண்டு வந்து விடுகிறது. உழைக்கும் மகளிர் எதிர்கொள்ளும் விவாகரத்து தொடர்பான சட்டப் பிரச்னைகள் என்னென்ன? அவர்கள் எப்படி வாழ்க்கையை அணுகவேண்டும்? என்பது குறித்து வழக்கறிஞர் அஜிதா கூறுகிறார்.
“வேலைக்குப் போகும் பெண்கள் விவகாரத்து தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் முன் எந்தெந்த காரணங்களுக்காக விவாகரத்துப் பெற முடியும் என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் சட்டம் என்ன சொல்கிறதோ அதில்தான் விவாகரத்துப் பெற முடியும்.
மனரீதியாக, உடல் ரீதியாக கொடுமைகள் இழைக்கப்பட்டால் விவாகரத்துப் பெறலாம். அடுத்தது இரண்டு ஆண்டுகள் நியாயமற்ற காரணங்களுக்காக இணையை கைவிட்டுச் சென்றுவிடுவது. மூன்றாவது இணையைக் கேட்காமல் மதம் மாறுவது ஒரு காரணம். நான்காவது வாழ முடியாத அளவிற்கு மனநலம் சரியில்லாமல் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நீடித்தால் அதற்கு விவாகரத்து பெறலாம். ஐந்தாவது சந்நியாசம் போவது, அடுத்து பாலியல் வன்புணர்ச்சி, கொலை போன்ற குற்றங்களினால் சிறைக்குச் சென்றுவிடுதல். இந்த காரணங்களால் விவாகரத்து பெறலாம். இவைதான் பொதுவான காரணங்களாக சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
தற்போது அதிகளவில் நடக்கும் விவாகரத்துக்கான காரணங்களைப் பட்டியலிட்டுப்பார்த்தால் கொடுமையை இழைப்பது முதல் காரணமாகவும், இரண்டாண்டுகள் கைவிட்டுப்போவது அடுத்த காரணமாகவும், மனநிலை சரியில்லாதது மூன்றாவது காரணமாகவும் அதற்கடுத்த காரணங்களை அடுத்தடுத்தும் வரிசைப்படுத்தலாம்.
பெண்கள் முன்வரக்கூடிய அதிகபட்ச விவாகரத்து வழக்குகள் உடல் ரீதியாக, மனரீதியாக கொடுமைக்குள்ளாக்கப்படுவதால் வருகின்றன.
அடித்தல், உதைத்தல், இரத்த காயம் ஏற்படுத்துதல் என்பது மட்டுமே ஒரு காலத்தில் பெண்மீது நிகழ்த்தப்பட்ட திருமணத்திற்கு பிறகான வன்கொடுமைகளாகக் கருதப்பட்டன. ஆனால் 2005ல் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பிறகு குடும்ப வன்முறைகள் என்பது வார்த்தை ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், பொருளாதார ரீதியான துஷ்பிரயோகம், உடல்ரீதியான துஷ்பிரயோகம் என்று பார்க்கப்படுகிறது. சில குடும்பத்தில் ஒருவருக்கொருவர் வாய்திறந்து பேசவே மாட்டார்கள். ஏதாவது கேட்டால் கூட பிள்ளையிடம் சொல்லி ‘அம்மாவிடம் கேள்’ என்று சொல்வார்கள். சில வீடுகளில் ‘நகையும், பணமும் கொண்டுவரும் வரை என்னிடம் பேசாதே. அதுவரை நீ வேலைக்காரி, வேலை மட்டும் செய்’ என்று கூறுவார்கள். அந்த பெண்ணை மட்டுமின்றி அவளது குடும்ப உறுப்பினர்களையும் இழிவாகப் பேசுவது என்று நடந்துகொள்வார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று பார்த்தால் பெண்ணென்றால் வீட்டு வேலை செய்ய வேண்டும், வீட்டோடு இருக்க வேண்டும் என்ற காலம் மாறிப்போய், ‘எனக்கு மனைவியாக வருபவள் வேலைசெய்ய வேண்டும், சம்பாதிக்க வேண்டும்’ என்று கேட்பது இயல்பாகவும் அதிகரித்தும் இருக்கிறது. பல நடுத்தர குடும்பங்களில் இது நியதியாகவும் இருக்கிறது. சில குடும்பங்களில் மட்டும்தான் ‘திருமணத்திற்குப் பிறகு பார்க்கிற வேலையை விட்டுவிட வேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்னால் பெண்களும், பெண் வீட்டாரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ‘கணவர் வேலைக்குப் போக அனுமதிப்பாரா? அனுமதிக்க மாட்டாரா? தனக்கு திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போவதில் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்று தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு விரும்பினால் வேலைக்குப் போவேன் என்று சொல்லியிருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணிடம் ‘ஏன் சும்மாவே வீட்டுல இருக்க? தூங்குற? டிவி பாக்குற? வேலைக்கு போனா என்ன?’ என்றெல்லாம் கேட்கப்படுவதுண்டு. ஆனால் திருமணத்திற்கு முன்னே அந்த பெண் வேலைக்குப் போக விருப்பமில்லை. குடும்பத்தையும், பின்னர் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பார். மாப்பிள்ளை வீட்டாரும் முதலில் ஆமோதித்துவிட்டு பின் வேலைக்குப் போக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் கோரும் விவாகரத்து வழக்குகளில் இந்த பிரச்னைகள் ஒரு அம்சமாக இருக்கிறது.
அடுத்தது பல நேரங்களில் வேலைக்குப் போகும் பெண்களின் சம்பளத்தைக் கையாளும் உரிமை அந்த ஆணுக்குத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். அந்த கணவராய் பார்த்து கைச்செலவுக்கு சிறுதொகையைக் கொடுப்பார். ‘இதனால் தனக்கு ஒன்றும் பிரச்சினையோ, சங்கடமோ, தயக்கமோ இல்லை. என் கணவர் கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்வார்’ என்று அந்த பெண் நினைக்கும்வரை பிரச்சினை இல்லை. தன்னுடைய பணத்தை தனது அம்மா அப்பாவிற்காகவோ, தனது தோழி ஒருத்திக்கு கடன் கொடுப்பதற்காகவோ விரும்பிக் கேட்கும்போது இவ்வளவு பணத்தை சம்பாதிக்கும் பெண் தனது கணவரிடம் ‘ஒரு 500 ரூபாய் அம்மாவுக்கு அனுப்பட்டுமா’வென அனுமதி கேட்கவேண்டியிருக்கிறது. இப்படி சம்பாத்தியத்தில் அதனுடைய உரிமையைக் கோரும் விஷயத்தில் நிறைய சிக்கல்கள் வருகின்றன.
அடுத்து மேல் தட்டு வர்க்கத்தினர்களாக இருக்கக்கூடிய ஐடி தொழிலாளிகளைப் பொறுத்தவரையில் வீடு வாங்குவதாக இருந்தால் கணவன் மனைவி இருவருடைய பெயரிலும் வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் இருவருடைய உழைப்பும் இருக்கிறது. இருவரும் வங்கியில் கடன் வாங்குவதால் பெண் அவ்வாறு நினைக்கிறாள். ஆனால் பல நேரங்களில் ஒரு ஆணாதிக்கச் சிந்தனையோடு ‘உனது பங்கு இதில் இருக்கலாம், ஆனால் வீடு என் பெயரில்தான் இருக்கும்’ எனக் கூறுவது, இதனால் ‘என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்கும்போது அங்கு சண்டை வெடிக்கிறது. ‘ஏன் இருவர் பெயரிலும் வீடு வாங்கக்கூடாது?’ என்றால் ‘அப்படியானால் நீ என்னை நம்பவில்லை; நம்பிக்கை இல்லாத உன்னோடு இனி ஏன் வாழ வேண்டும்; வீடு வேண்டுமா? வாழ்க்கை வேண்டுமா, நீயே முடிவு செய்’ என்றெல்லாம் சமத்துவம் இல்லாத விஷயங்களை ஒப்புமைப்படுத்தி சண்டை போட்டு விவாகரத்தை நோக்கி நகர்கிறார்கள்.
அடுத்தது வேலைக்குப் போகும் பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஓய்வாக இருக்கும். அந்த பெண்ணுக்கும் உடல்வலி இருக்கும், ஓய்வு தேவைப்படும். ஆனால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களின் பகிர்வு என்பது மிக மோசமானதாக இருக்கும். ஏனெனில் சமையலறை இன்றைக்கும் பெண்களுக்கானதாகத்தான் இருக்கிறது. ஆண் பெண் இருவரும் பகிர்ந்து செய்வது என்பது இங்கு கலாசாரமாக மாறவில்லை. இதில் குழந்தைகள் பிறந்துவிட்டால் குழந்தைகளுக்கான சமையல், குழந்தைகளுக்காக ஓடுவது, வயதானவர்களை பராமரிப்பது என மேலும் சுமை அதிகரிப்பது என பாடாய்ப்படுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையிடங்களிலும் மதிப்பும், ஊதியமும் சமமாகக் கிடைப்பதில்லை. வீட்டிலும் மதிப்பற்ற ஊதியமற்ற வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம், அதிலும் குற்றங்குறை கூறுதல் என தொடர்ந்து இன்னலுக்குள்ளாகிறார்கள்.
இப்போது இருக்கும் இளந்தலைமுறையினர் பலர் வீட்டுவேலை செய்து பழக்கமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் பள்ளி முடித்ததும் கல்லூரி, கல்லூரி முடித்ததும் வேலைக்குப் போய்விடுகிறார்கள். ஆண்பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அதனால் சமைப்பதற்கான வாய்ப்பும், நேரமும், அதற்கான சிந்தனையும் இல்லாதபோது திருமணமான மறுநாளே மந்திரம் போட்டதுபோல் தலையில் ஈரத்துண்டுடன் காபி போட்டுக் கொண்டு கணவர் முன்னால் போய் நிற்கச் சொன்னால் அவர்களால் முடியாது. எப்போதும் போல் ஏழு மணிக்கு எழுந்து வழக்கமான வேலைகள் செய்யும்போது இதெல்லாம் திருமணமான பெண்ணுக்கு ஒத்துவராது என்று பெண்களைத் திட்டுகிறார்கள். பெண்கள் சுயமரியாதை உள்ளவர்களாகவும், தன்மானமிக்கவர்களாகவும் இருப்பதாலும், சம்பாதிப்பதாலும் தானும் கேள்வி கேட்கிறார்கள். ‘நான் ஆறு மணிக்கு எழுந்து காபி போடணுமா? அப்போ நீயும் எழுந்து காபி போடு’ என்று பெண்கள் கேட்கிறார்கள். ‘இது அடங்காத பிள்ளைங்க, வீட்டு வேலை செய்றதில்லை, சமைக்க கூட மாட்டேங்குறா, வீடு பெருக்கலை, ஹஸ்பெண்ட காபி போடச் சொல்றா’ என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். பல கணவர்கள் இதில் விட்டுக்கொடுத்து சென்றுவிடுகிறார்கள். அதுவும் சின்ன சின்ன விஷயங்களுக்குத்தான் விட்டுக்கொடுக்கிறார்களே தவிர சமையலறையும், வீட்டுப் பணிகளும் சமமானது என்கிற பொதுப்புத்திக்கு அவர்கள் வரவில்லை. இது ஒருநாள், இரண்டு நாள், ஆறு மாதம், ஒருவருடம், இரண்டு வருடம் என்றால் பரவாயில்லை. இதுவே ஒரு பத்து வருடங்கள் போகிறது என்றால் அந்தப் பெண்ணுக்கு ஒருசில நேரங்களில் சுமைகளைத் தாங்க முடிவதில்லை. அதனால் இது வேண்டவே வேண்டாம் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.
எந்தப் பெண்ணும் உணவில்லை, போடுவதற்கு துணியில்லை, இருப்பதற்கு வீடில்லை என்று திருமணமாகி செல்வதில்லை. இதெல்லாம் சாதரணமாக இருந்தாலும் கூட திருமண வாழ்க்கை என்பது ஒரு பெண்ணுக்கு அடுத்த வடிவத்துக்குப் போய் குடும்பத்தைக் கவனித்து சந்ததியைப் பெருக்குதல் எனும் உயர்வான சமூகப்பணியைத்தான் அவர்கள் ஆற்றுகிறார்கள். இதை வீட்டிலிருக்கும் ஒருவர் பகிர்ந்துகொள்ள முன்வராதபோது முரண்பாடுகள் வந்துவிடுகின்றது. இந்த முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போகும்போது தான் தனியாக இருந்துகொள்ளலாம் என்கிற எண்ணத்துக்கு பெண்கள் வந்துவிடுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை ஆராய்ந்து பார்த்தோம். அதில் நிறைய வழக்குகளில் எந்த குடும்ப பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்று பார்த்தால் கணிசமான எண்ணிக்கையில் கணினித்துறையில் இருக்கக்கூடிய ஆண்பெண்களிடமிருந்து வந்தது. திருமணமாகி ஆறு மாதம், ஒருவருடம் ஆனதும் என வருகிறார்கள். ஏனெனில் விவாகரத்து கோருவதற்கு திருமணமாகி ஒருவருடம் முடிந்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் இருக்கிறது. ஏனெனில் கணினித் துறையில் இருந்து வரக்கூடிய அனைவருமே சமத்துவத்தைக் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறார்கள். அது இல்லாத உறவு வேண்டாம் என மறுக்கிறார்கள். இது சமுதாயத்தின் பார்வையில் சம்பாதிக்கும் திமிராகவும், பொறுப்பில்லாத தன்மையாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையிலேயே பொறுப்பில்லாத தன்மை என்பதை விட 95 சதவீத வழக்குகளில் ஆண் -பெண் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இவர்கள் வளரும்போது பையனுக்குக் கொடுத்த அதே செல்லம்தான் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டது. பையனுக்குக் கொடுத்த அதே படிப்புதான் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டது. இன்னும் கூட பெண்ணுக்கான கவனிப்புகளும், உரிமைகளும் ஆணைவிட அதிகம் இருக்கும். அந்தக் காலம் போல் பெண்ணென்றால் இதைச் செய், வீட்டைப் பெருக்கு, பாத்திரம் துலக்கு, அதிகம் பேசாதே, வாயை மூடு என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடம் மலையேறிவிட்டது.
எங்கு சமத்துவம் இல்லையோ அங்கு உறவு நீடிக்காது. சமத்துவம் இல்லாத இடத்தில் வன்முறை இருக்கும். இதே ஆண் பணிபுரியும் இடத்தில் தன்னுடைய சீனியர் அலுவலர் சத்தம் போட்டால் அவர்களை அடிப்பதில்லையே, அதுவே மனைவியாக இருந்தால் என்னையே சத்தமாகப் பேசுகிறாயே என்று அடித்துவிடுகிறார்களே, ஏன்? ஏனெனில் இந்த உறவில் சமத்துவமில்லை, அதில் எந்த விதிகளுமில்லை. அலுவலகத்தில் பணியாளர் வேலை செய்யவில்லை என்றால் மெமோதான் கொடுக்கமுடியும் என்று பணி விதிகள் சொல்கிறது. அடிப்பதோ, கெட்ட வார்த்தை பேசுவதோ செய்ய முடியாது. ஆனால் இதெல்லாம் குடும்ப உறவுக்குள் இருக்கிறது. ஆனால் பெண்ணிடம் மட்டும் நீ இதையெல்லாம் அனுசரித்துதான் போக வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இல்லையென்றால் குடும்பம் குடும்பமாக இருக்காது என்று கூறுகிறார்கள். இது தொடரும்போது இந்த அறிவுரையை பெண்களால் ஏற்கமுடிவதில்லை.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதிகப் பிரச்சினை வருவதற்கு காரணம் சம்பாதிக்கும்போது அவர்களது மதிப்பும், சமத்துவமும், கௌரவமும், தன்னுடைய சுயமதிப்பும் பெண்களுக்குத் தெரியும். அடிப்படை மனித மாண்பு கூட குடும்பங்களுக்குள் இல்லாமல் இருக்கும்போது வேலைக்குப் போகும் பெண்கள் குடும்பத்தை விட்டு சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ‘கஞ்சியோ கூழோ புருஷன் வீட்டுல சாப்பிடு, வாழ்வோ சாவோ கணவனோட இரு’ என்று அந்தக் காலத்தில் அனுப்பியது போல் இந்தக்காலத்தில் இல்லை. கணவன் நாற்பதாயிரம் வாங்கினார் என்றால் மனைவி ஐம்பதாயிரம் கூட வாங்கும் நிலையில் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியான அடிமைத்தனம்தான் மற்ற எல்லா அடிமைத்தனத்தையும் காப்பாற்றிவருகிறது. போக்கிடம் இல்லாதவர்கள் அமைதியாக இருந்துதான் ஆகவேண்டும். ஏனெனில் பிச்சைக்காரர்கள் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது என்பார்கள். அப்படி ஒரு ஏதிலிகளாக ஒன்றுமற்றவர்களாக புகுந்தவீட்டுக்கு அனுப்பப்படும் காலம் இன்றில்லையாதலால் வேலைக்குப் போகும் பெண்களால் சமத்துவம் இல்லையெனில் தன்னிறைவோடு இருக்க முடியாது.
என்சிஆர்பி கணக்குப்படி வருடத்திற்கு இருபதாயிரம் பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். படித்த பெண்களும் கூட தற்கொலை செய்துகொள்வதற்கு இதுபோன்ற விஷயங்கள் காரணமாகின்றன. வார்த்தை ரீதியாக உளவியல் ரீதியாக ஒரு பெண்ணுக்கு தேற்றுதல் என்பது அம்மா வீட்டுக்குப் போவதும், பேசுவதுமாகத்தான் இருக்கும். அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போனால் அங்கேயே நிரந்தரமாகப் போய்விடு என்பார்கள். ஆண்களுக்கு அம்மா அப்பாவுடன் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது பெண்களுக்கு தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் நல்லுறவைப் பேணுவதற்கான வாய்ப்பாவது தரப்பட வேண்டும்.
பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு திருமணத்திற்கு முன்னரே எல்லாவற்றையும் தெளிவாகப் பேசிக்கொள்ள வேண்டும். சாதி, மதம், உயரம், நிறம் என கண்ணுக்குத் தெரிகிற விஷயங்களைவிட கண்ணுக்குத் தெரியாத சிந்தனை ரீதியான விஷயத்தைப் பேசி தெளிவடைவது அவசியம். திருமணம் என்பது இருமனம் இணைவதுதான். குழந்தைப் பெற்ற பின் விவாகரத்து என்பது குழந்தைகளைப் பாதிக்கும் என்றால் சமத்துவமில்லாத குடும்பத்தில் வளரும் குழந்தையை விட ஒரு பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் அதைவிட சிறப்பாகவே வளர்ந்துவருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு பெண் துணிந்து முடிவெடுக்கும்போது சமுதாயமோ, குடும்பமோ, நட்போ யார் தடுக்க முடியும்? எனவே சமத்துவப்போக்கைக் கடைபிடிப்பது ஒன்றுதான் குடும்பத்தில் விரிசல் விழாமல் இருக்க ஒரே வழி” என்று முடிக்கிறார் வழக்கறிஞர் அஜிதா.
-முதல்வி
மார்ச், 2017