சிறப்புக்கட்டுரைகள்

எக்ஸைல் - நாவல் எதைப் பற்றியது?

நாவல் முன்னோட்டம்

சாரு நிவேதிதா

மனிதர்களைப் பற்றியே எழுதி எழுதி அலுத்து விட்டதால் மண்ணைப் பற்றியும் அதில் வாழும் மரங்களைப் பற்றியும் செடி கொடிகளைப் பற்றியும் எழுதத் தோன்றியது.  கிருஷ்ணன் கோபிகைகளின் வஸ்திரங்களை ஒளித்து வைத்த மரம் எது,  அது இன்னமும் இருக்கிறதா என்று பல இடங்களில் தேடினேன்.  கடைசியில் ஈரோட்டில் பார்த்தேன்.  அதன் கன்றைக் கொண்டு வந்து வளர்த்தேன்.  அந்த மரத்தைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.  இந்தப் பூமியில் வாழ மனிதர்களுக்கு உள்ள உரிமையைப் போலவே விலங்குகளுக்கும் பிராணிகளுக்கும் உரிமை உண்டு தானே? எனவே நம்முடைய சக ஜீவராசிகளான அவற்றைப் பற்றியும் நாவலில் பார்க்கலாம்.  அதோடு, தமிழ் இனத்தின் 5000 ஆண்டு ஞான மரபின் வரலாறும் அதன் இன்றைய வீழ்ச்சியும் இதில் உண்டு.    

பாபியில் நரேந்தர் சஞ்சல் பாடிய பேஷாக் மாந்திர் என்ற பாடலில் டிம்பிள் சோகத்துடன் கட்டிலில் ஒரு காலை மடக்கி சற்றே ஒருக்களித்த நிலையில் மல்லாந்து படுத்துக் கிடக்கும் போது தொடைக்கு மேலே ஏறிய ஸ்கர்ட்டின் மூலம் வேறு ஏதாவது தெரிகிறதா என்று பார்ப்பதற்காகவே அந்தப் படத்தைப் பதினாறு முறை பார்த்த பையன்கள் எல்லாம் எங்களிடையே இருந்தார்கள். இதற்கிடையில் பல நண்பர்கள் ரிஷி கபூரின் அழகில் மயங்கினார்கள்.  அவரது ரோஜா நிற உதடுகளைப் போல் நாங்கள் தமிழ்நாட்டில் அதுவரை கண்டதில்லை.  அது உதட்டுச் சாயத்தால் வந்ததா அல்லது வட இந்தியர்களுக்கு இயல்பாகவே ரோஜா நிற உதடுகள்தானா என்ற வாதப் பிரதிவாதங்களும் எங்களுக்குள் நிகழ்வதுண்டு. (பின்னாளில் நான் தில்லி சிவில் சப்ளைஸில் சேர்ந்து எஸ்.கே. கபூரிடம் வேலை பார்த்த போது கபூரின் ரோஜா நிற உதடுகளைப் பார்த்து ரிஷி கபூரின் உதடுகளின் ரோஜா நிறம் உண்மையானதுதான் என்று தெரிந்து கொண்டேன்.)  

நரேந்தர் சஞ்சலுக்கு சினிமாவில் அதுதான் முதல் பாடல்.  ஆனால் அதற்குப் பிறகு அவர் பாடிய எந்தப் பாடலிலும் பேஷாக் மாந்திரில் தெரிந்த தனித்துவம் மிளிரவில்லை.  நம் ஆத்மாவில் அதிர்வுகளைக் கிளப்பக் கூடிய தனித்துவமான குரல் அந்தப் பாடலில் வெளிப்பட்டது.  இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாகூரில் நஸீர் என்ற என் நண்பன் ஒருவன் அந்தப் பாடலை நரேந்தர் சஞ்சலின் அதே குரலில் அதே அதிர்வுகளுடன் பாடக் கூடியவனாக இருந்தான்.  வயதில் என்னை விட நான்கு ஆண்டுகள் கம்மியான நஸீர் என் தம்பியின் வகுப்புத் தோழன்.  ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தான்.  திருச்சியில் எந்தக் கல்லூரியில் பாட்டுப் போட்டி நடந்தாலும் பேஷாக் மாந்திரை நரேந்தர் சஞ்சலின் குரலில் பாடி முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்து விடுவான். இவ்வளவுக்கும் இந்தி ஒரு வார்த்தை தெரியாது.  காரணம், நாகூர் முஸ்லீம்கள் உருது பேசுபவர்கள் அல்ல.  தமிழ் தான் அவர்களின் தாய்மொழி.  அதில் அரபியும் கொஞ்சம் கலந்து இருக்கும்.

நாகூர் மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதுமே இந்தி தெரியாமல் இருந்த காலம் அது.  1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து செத்த மாணவ சமுதாயம் எட்டே ஆண்டுகளில் இந்திப் படங்களை ஆரவாரமாக வரவேற்கத் தயாராகி விட்டது. சென்னையில் மிட்லண்ட் தியேட்டரிலும், திருச்சியில் கெயிட்டி   தியேட்டரிலும் பல மாதங்கள் ஓடியது பாபி.

அப்போது எனக்கு இந்தி தெரிந்திருந்த காரணத்தால் சக நண்பர்களுக்கு நானே மொழிபெயர்ப்பாளனாகவும் இருக்க நேர்ந்தது. ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ, அவ்ர் சாபி கோ ஜாயே என்ற புகழ்பெற்ற பாடலில் கம்ரா என்றால் என்ன, சாபி என்றால் என்ன என்பது பல நண்பர்களின் சந்தேகம்.  கம்ரா என்றால் பெண் குறி, சாபி என்றால் ஆண் குறி என்றார்கள் நண்பர்கள்.  இல்லை, கம்ரா என்றால் அறை, சாபி என்றால் சாவி என்று நான் சொன்னால் அதெல்லாம் குறியீடு என்று சொல்லி மிரட்டினார்கள். 

அந்தப் பாடலை மட்டும் நாங்கள் குறைந்த பட்சம் 5000 முறை கேட்டிருப்போம் என்றால் அதில் கொஞ்சமும் மிகையில்லை.  தினம் பத்து முறை என்றால் 365 து 10 = 3650.  இதேபோல் இரண்டு ஆண்டுகள் கேட்டோம். பைத்தியம் பிடித்துக் கிடந்தோம்.  அப்போதெல்லாம் ஆர்.டி. பர்மன் தான் எங்கள் கடவுள்.  ஆனாலும் பாபியில் கலக்கியிருந்ததால் லக்ஷ்மிகாந்த் பியாரேலாலையும் துணைக் கடவுளாகச் சேர்த்துக் கொண்டோம்.           

சென்னையில், மிட்லண்ட் தியேட்டரில், ராஜ்கபூரின் பாபி படம் 283 நாட்கள் ஓடி ரூ.14,51,782 வசூலித்தது. ஒரு தியேட்டரில் அதிக பணம் வசூலித்த படம் என்று பாபி ஏற்படுத்தியது ஒரு சாதனை.

 பாபி வெளிவருவதற்கு ஒரு மாதம் முன்னதாக வெளிவந்த யாதோங்கி பாராத்தில் பாபியில் இருந்த அளவு கிக் இல்லை என்றாலும் அதை ஒரு இசைக் கொண்டாட்டம் என்று சொல்லலாம்.  சுரா லியா ஹே தும்னே ஜோ தில் கோ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?  அந்தக் குரலுக்கு மகுடியைக் கேட்ட அரவத்தைப் போல் அடிமையாகிக் கிடந்திருக்கிறோம்.   டிம்பிளிடம் இருந்த கவர்ச்சி ஸீனத்திடம் இல்லை. ஸீனத் நீச்சல் உடையில் வரும் இடம் கூட அவ்வளவு சுவாரசியமாக இல்லை.  ஸீனத்தின் ஜோடியாக வரும் விஜய் அரோரா இளம் வயது ஜெய்சங்கர் மாதிரி இருந்தார்.  கதையும் ஒரு சாதாரண பழி வாங்கும் கதைதான். அதனால் யாதோங் கி பாராத்தை ஓரிரு முறைகளே பார்த்தோம்.  ம்ஹும்.  டிக்கட் வாங்கிக் கொண்டு போவோம்.  படத்தின் துவக்கத்திலேயே லதா மங்கேஷ்கர் பாடும் யாதோங் கி பாராத் என்ற அற்புதமான பாடல்.   அதை அடுத்து சுமார் பதினைந்து நிமிடங்களில் கிஷோர் குமாரும், ஆஷா போன்ஸ்லேவும், ஆர்.டி. பர்மனும் கலந்து கட்டிப் பாடும் ஆப் கே கம்ரே மே கோயி ரெஹ்தா ஹே?  என்ற ரகளையான பாடலும் ஆடலும் பத்து நிமிடங்களுக்கு மேல் போகும்.  எங்களைப் பொறுத்த வரை அந்தக் காட்சி அதுவரை சிறைப்பட்டிருந்த எங்கள் உணர்வுகளுக்குக் கிடைத்த ஒரு பெரும் விடுதலை என்றே சொல்ல வேண்டும்.  பிறந்ததிலிருந்து கூண்டுக்குள் சிறைப்பட்டிருந்த ஒரு பறவை கூண்டு திறந்து விடப் பட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்குமோ அப்படிப் பறந்தோம்.  தாரிக் என்ற இளம் நடிகர் ஒரு எலெக்ட்ரிக் கிதாரை வைத்துக் கொண்டு ஆர்.டி. பர்மனின் இசைக்கும் குரலுக்கும் ஏற்றவாறு ஆட்டத்தில் பின்னி எடுப்பார்.  அப்போதெல்லாம் கிதார் என்ற இசைக் கருவி விடுதலையின் குறியீடாகவே எங்களுக்கு அர்த்தமாகியது.  அடித் தொண்டையில் ஆர்.டி. பர்மன் எழுப்பிய மிருக ஒலிகள் சமூக ஒழுங்குக்கு எதிரான கலகக் குரலாகக் கேட்டது.  அன்றைய சமூகத்தில் மது கிடையாது.  ஆகவே ‘பப்’பும் கிடையாது.  அப்படிப்பட்ட சூழலில் இந்த ஆட்டமும் பாட்டமும் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அந்தப் பாடலில் பலவிதமான ராக தாள வேறுபாடுகள் ஊடாடி ஊடாடி வான வேடிக்கைக் காட்டிச் செல்லும்.  கடைசி கட்டத்தில் பாடல் வேறு தளத்துக்குப் போய் தம் மாரோ தம் என்ற பாடலாக மாறி விடும். பாடல் முடிந்ததும் நாங்கள் திரையரங்கை விட்டு வெளியேறி விடுவோம்.  ஒரே வாக்கியத்தில் சொன்னால் அந்தக் கால கட்டத்தில் ஆர்.டி. பர்மன் எங்கள் உயிர் மூச்சில் கலந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.  ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பாபி வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக வந்திருந்தது. எனக்கு அந்தப் படம் பார்க்க வாய்க்கவில்லை.   என்றாலும் தம் மாரோ தம் பாடலைப் பற்றி நான் எதுவும் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.  இளைஞர்களின் தேசிய கீதமாக விளங்கிய பாடலைக் கேட்காதவர்களே அந்தக் காலத்தில் இருந்திருக்க முடியாது.

(விரைவில் வெளிவர இருக்கும் சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல் நாவலில் இருந்து)

ஜனவரி, 2015.