சிறப்புக்கட்டுரைகள்

ஊர்த்தலைவர்

Staff Writer

“யாரு அந்த ஊர்த்தலைவர்? கண்களும் முகமும் அவ்வளவு பவர்புல்லா இருக்கு” இப்படி கேட்டவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். மறுமுனையில் இயக்குநர் லிங்குசாமி. கும்கியில் கதாநாயகி அல்லியின் தந்தை மாத்தையனாக தாடியும் மீசையுமாக வெள்ளுடையில் முரட்டுப் பழங்குடி மனிதராக வந்த ஜோ மல்லூரிதான் சூப்பர்ஸ்டார் கேட்ட ஊர்த்தலைவர். சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக தேடலுடன் உழன்றுகொண்டிருந்த கலைஞனுக்கு கும்கியால் கிடைத்த அங்கீகாரம் அது சென்னை புத்தகக் கண்காட்சியில் தனது கவிதை நூல்களுக்கென பிரத்யேகமாக அரங்கு அமைத்து அனைவரின் கவனத்தையும் கவரும் கவிஞர்தான் ஜோசப் என்கிற இந்த ஜோ மல்லூரி.  தேனி மாவட்டத்தின் மலைகள் சூழ்ந்த பசுமைப் பள்ளத்தாக்கான ராயப்பன்பட்டிக்காரர். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு சென்னை கிறித்தவக் கல்லூரி நடத்திய திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கலை படித்தார். ஆனால் அந்தக் கல்வியை நடைமுறைப்படுத்த அவர் பல ஆண்டு-களைக் கடக்கவேண்டியிருந்தது.

நடிப்புப் படிப்பை முடித்ததும் கே.ஜே.யேசுதாஸ் நடத்திய  வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராக வேலை. ஜேசுதாஸ்தான் ஜோசப் என்கிற பெயரை ஜோ மல்லூரி என்று மாற்றியவர். பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற திரைப்பட விமர்சகரின் பெயர்  மல்லூரி. “இலக்கிய வாசிப்புதான் என்னை கவிஞனாக மாற்றியது. அடுத்து பேசத் தொடங்கினேன். நல்ல மனிதர்களின் அறிமுகமும் அன்பும் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டுதான் நகர வாழ்க்கையை சுவாரசியமாக உருவாக்கிக்கொண்டேன்” என்கிறார்.

லே அவுட் ஆர்டிஸ்ட், நிகழ்ச்சி வடிவமைப்பாளர், கவிஞர், பேச்சாளர், பதிப்பாளர், உதவி இயக்குநர், இன்டீரியர் டிசைனர் என அவர் பார்க்காத வேலைகள் இல்லை. வலம்புரிஜானிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். இளையராஜாவை வைத்து பால் நிலாப் பாதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். பொம்மலாட்டம் படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்.

இயக்குநர் பிரபுசாலமனிடம் கவிதை நூல்களை எடுத்துக்கொண்டு பாடல் எழுதும் வாய்ப்புக் கேட்டுத்தான் போனார் ஜோ மல்லூரி. கவிதை நூல்களில் அவருடைய ஆளுயர படங்களைப் பார்த்துவிட்டுத்தான் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் இயக்குநர். ‘

 “நாயகனாக நடிக்கும் வயதில் சென்னைக்கு வந்தேன். இன்று நாயகியின் தந்தையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். விட்டதை பிடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு  தொட்டதைத்தான் பிடித்திருக்கிறேன். இந்த அங்கீகாரத்துக்கு காரணமான இயக்குநர் பிரபுசாலமனுக்கு நன்றி சொல்லியாகவேண்டும். இனி எனக்கு நடிப்பு என்பது தொடங்கும் பயணமாகவும் இலக்கியம் என்பது தொடரும் பயணமாகவும் இருக்கும்” என்று கவிதையாக பேச்சை முடிக்கிறார்.

ஜனவரி, 2014.