சிறப்புக்கட்டுரைகள்

உழைக்காமல் வாழ்வது எப்படி?

நாகராஜசோழன்

உழைப்பே தெய்வம். உழைப்பே உயர்வு தரும்.

இந்த கட்டுரையை இப்படிச் சொல்லித்தான் ஆரம்பிக்க விரும்பினேன். ஆனால் கட்டுரை போகும் போக்கு உழைப்பே மனிதனின் எதிரி என்கிற திசையில் இருப்பதால் எழுத்தாளர் வளர்மதி மொழிபெயர்த்த ஒரு நூலின் தலைப்பை இக்கட்டுரையின் முதல் வரியாகக் கொள்க. அது: உழைப்பை ஒழிப்போம்.

நண்பர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார். சுமாரான சம்பளம் அமைதியான வாழ்க்கை. பிறகு அவருக்கு ஒரு வேலை தேடி வந்தது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நிர்வாகப் பொறுப்போடு கூடிய வேலை. சம்பளம் முன்பை விட இருமடங்கு. ஆகவே மகிழ்ச்சியோடு புதிய வேலைக்குப் போனார். காலையில் ஒன்பது மணிக்கு அலுவலம் தொடங்கும். ஆனால் இவர் எட்டரை மணிக்கே அலுவலகம் போய்விடு-வார். நிர்வாகப் பொறுப்பில் இருப்பதால் பிற ஊழியர்களை சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வைக்க வேண்டுமென்றால் இவர் முன்கூட்டியே போயாக வேண்டும். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து எல்லோரும் போனாலும் இவர் போக முடியாது. நிர்வாகி அல்லவா? அவருக்கு மேலே உள்ள இயக்குநர்களைச் சந்தித்துப் பேசிவிட்டுத்தான் போக வேண்டும். அவர்கள் ஏழு மணிக்கு இவரை அழைப்பார்கள். எட்டுமணி வரை பேசிவிட்டு, “ஹாய் இன்றைக்கு நாம் எல்லோரும் வீட்டுக்குச் சீக்கிரமாகப் போகிறோம்” என்று கூறிக் கலைவார்கள். இவர் ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவார். பிள்ளைகள் தூங்கிவிட்டிருப்பார்கள். மனைவி அலுத்துக்களைத்து இருப்பார். இவர் சாப்பிட்டுவிட்டு தூங்கத்தான் முடியும். சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறைதான். ஆனால் விடுமுறை நாளை நிர்வாகம் தன் ஊழியர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் பயன்படுத்த விரும்பியது. எனவே சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் யோகா, தியானம், பிக்னிக், மலையேற்றம், விளையாட்டு என்று பின்னி எடுத்தார்கள். நண்பரை குடும்பத்துடன் ஒரு வாரம் தாய்லாந்தில் உள்ள புக்கெட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் ஒரே கண்டிஷன் அவர் லேப்டாப், செல்போன் சகிதம் செல்லவேண்டும். போய் இறங்கிய உடன் அலுவலகத்திலிருந்து போன், மின்னஞ்சல். அந்த கோப்பு என்னாயிற்று? இது எங்கே என்று? விடுமுறை இப்படி தொலைபேசியிலேயே கழிந்தது.

இப்போது அவர் மனைவி கூறுகிறார்: நீங்கள் எப்போதும் அலுவலகமே கதி என்று கிடக்கிறீர்கள். நான் உங்கள் பார்ட் டைம் மனைவி ஆகிவிட்டேன். பிள்ளைகள் பார்ட் டைம் குழந்தைகள் ஆகிவிட்டார்கள்!

நண்பர் புதிய வேலையை விட்டுவிட்டு பழையபடி பேராசிரியர் வேலைக்கே வரவேண்டுமென முடிவெடுத்து-விட்டார்.

மானுட வரலாறு சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. ஆனால் அது உழைப்புக்கும் வேலைக்கும் அடிமையானது மிகக்குறைந்த காலமாகத்தான். நாகரீகங்கள் தோன்ற ஆரம்பித்தது சுமார் 5000 ஆண்டுகளாக இருக்கலாம். அதற்கு முன்பு வரை அவர்கள் வேட்டையாடி, தேடித் தின்பவர்களாக இருந்--தனர். எப்போது மனிதன் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்-தானோ அப்போதே அவனுடைய அடிமைத்தனம் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள் உழைப்பை மனித குலத்தின் எதிரியாகக் கருதும் சிந்தனையாளர்கள். ஆனால் இன்றும் வேட்டையாடி, ஓரிடத்தில் நில்லாது சுதந்திரமாக வாழ்ந்துவருகின்ற பழங்குடி இனத்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பணம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் நாகரீகம் பெற்ற நவீன சமூகத்தினர் பார்வையில் ‘காட்டுமிராண்டிகள்’.

நகரங்களில் வாழும் மனிதர்களின் வாழ்வை எடுத்துக்-கொள்ளுங்-கள். அறுபதுகளில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்குச் சென்றார். சுமார் எட்டுமணி நேரம் மட்டுமே அவர் வேலை செய்தார். இன்று ஒவ்வொரு குடும்பத்-திலும் கணவர் 10 மணிநேரம், மனைவி 8 மணி நேரம், பெரியவர்கள் சுமார் 3 மணி நேரம் என வேலை செய்கிறார்கள். சராசரியாக 20 மணி நேரம் ஒரு குடும்பம் வேலை செய்கிறது. இது என்னமாதிரியான வளர்ச்சி?

அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி- இதெல்லாம் மனிதனின் வேலை நேரத்தைக் குறைப்பதற்கானவை என்றுதான் சொல்லப்பட்டு நிகழ்த்தப்படுபவை. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?   இப்போது லேப்டாப்போடு பாத்ரூமில் கூட வேலை செய்கிறார்கள். எல்லோரிடமும் செல்பேசி வந்தபிறகு 24 மணிநேரமும் வேலை நேரம்தான்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிள்ளைகள் 60

சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே போதும். அது பிறகு 70 ஆகி, 80 ஆகி, 90 ஆகி, இன்று 100 சதவிகிதம் எடுத்தால் கூடப் போதாது என்கிற நிலை. அந்த அளவுக்கு போட்டி.

பிள்ளைகளை வளர்க்கிற பெற்றோர்கள் நெஞ்சில் கையை வைத்து யோசித்துப் பாருங்கள்! உங்கள் பிள்ளைகள் உங்களுடைய-வர்கள் என்று நீங்கள் நினைத்துக்-கொண்டிருக்-கலாம்.  ஆனால் அவர்களை நீங்கள் ஏதோ ஒரு நிறுவனத்தில், தொழிற்---சாலையில் வேலை செய்வதற்காக வளர்க்கிறீர்கள். அதற்குத் தகுதி வந்த பின்னர் அவர்கள் தொழிற்சாலைக்கு உரியவர்கள். உங்கள் பிள்ளைகளாக அவர்கள் பகுதி நேரத்துக்கு மட்டுமே இருக்க முடியும்.

உணவு தேடுவது என்பது ஆதி காலத்தில் வேலையாக இல்லாமல் செயல்பாடாக இருந்தது. ஆனால் இன்று மூன்று-வேளையும் உணவு இருந்தும் கூட சதா உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாகரீக வளர்ச்சி சமூகத்தைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இத்தனைக்கும் மனிதர்-களில் பெரும்பாலோர் ஒரு வாய்ப்பு இருப்பின் உழைக்-காமல்  இருப்பதையே விரும்புவர்.  இதைத்தானே வருகைப் பதிவேடுகளும் நிறுவனங்களின் கண்காணிப்பு காமிராக்-களும் நிறுவுகின்றன?

நம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒரு பழங்குடியினர் உண்டு. அவர்களிடையே ஒரு வழக்கம். தங்கள் குடிசையில் உள்ள தானியப் பானை காலியாகும் வரை அவர்கள் வேலைக்குச் செல்ல மாட்டார்கள். அது தீர்ந்திருக்கிறதா என்று தினமும் காலையில் காலால் உதைத்து ஆட்டிப் பார்ப்பார்களாம். அது காலியாகி நகர்ந்தால் மட்டுமே வேலைக்குச் செல்வார்கள்.

இன்று வாழ்க்கை வேகமயமாகி விட்டது. வாரக்கணக்கில் திருவிழாக்கள் இல்லை. சடங்குகள் இல்லை. பொங்கல் கூட பலருக்கு ஒரு நாளாகச் சுருங்கிவிட்டது. எதைத் தேடிக்-குவிப்பதற்காக இந்த உழைப்பு? இந்த வேகம்?

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று மனிதனின் உற்பத்தித் திறன் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அவனது வேலை நேரம் குறையவில்லை. ஒரு கணக்கெடுப்பின்படி இன்றைய தொழிற்சாலைகளில் ஒரு தொழிலாளி ஒரு நாள் 8 நிமிடம் வேலை பார்த்தால் போதும். அவன் சம்பளத்துக்-குரிய உழைப்பைத் தந்தவன் ஆகிறான். மிச்சமிருக்கும் நேரமெல்லாம் அவன் யாருக்காக உழைக்கிறான்? எங்கே சென்று பெருகுகிறது செல்வம்?

இவ்வளவு பெருமளவில் பொருளாதாரம்  திரட்டப்படுகிறது. ஆனால் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து-விட்ட-தா? ஒன்றரை ரூபாய் மாத்திரையில் குண-மாகி-விடக்-கூடிய நோயால் பாதிக்கப்பட்டு எவ்வளவு குழந்தைகள் இறந்து--போகிறார்கள்?

நாகரிகம் என்பது மனிதன் மீது உழைப்பைச் சுமத்தியது. இன்று நெடுந்தொலைவு நாம் வந்துவிட்டோம். சகமனிதன், சகோதரன் இன்று நமக்குப் போட்டியாளன் என்கிற உறவு நிலையில் இருக்கிறான். அன்பும் நட்பும் பெருக வேண்டிய சமூகத்தில் போட்டிதான் பெருகி ஓடுகிறது. இது பற்றி யோசிப்பதே இன்று நாம் செய்யக்கூடிய ஒன்று.

இந்த அபிரிமிதமான உழைப்பு என்ன செய்திருக்கிறது? சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ராஜராஜ சோழன் இருந்தார். இன்று சென்னையில் மட்டும் அவர் அளவுக்குச் செல்வ செழிப்பு கொண்ட மனிதர்கள் சுமார்  500 பேர் இருக்கக்கூடும். இவ்வளவு பேரை உருவாக்கியது இச்சமூகத்தின் உழைக்கும் திறன் இயந்திரங்களின், மென்பொருட்களின் உதவியால் பல்மடங்கு அதிகரிக்கப்பட்டதன் விளைவே. ஏன் இவ்வளவு செல்வத்தை மனிதன் குவிக்கவேண்டும்? இந்த குவிப்பு எதை நோக்கி இட்டுச் செல்லும்?

நவம்பர், 2012.